magani-festival-karaikaal-ammaiyaar

ஆனி மாங்கனி திருவிழா சிறப்பு | வழிபாட்டு முறைகள் | காரைக்கால்

மாங்கனித்திருவிழா சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள்

ஆனி மாதத்தின் சிறப்புகள்

ஆனி மாதமானது கோடைகாலம் முடிந்து இளம் காற்று வீசத்துவங்கும் இளவேனிற் காலத்தின் துவக்கமாகும். இது

உத்தராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக திகழ்கிறது.  இம்மாதம் தேவர்களுக்கு மாலைப்பொழுது என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்றான்.

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்று பூமியை அவனிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்தது இந்த ஆனி மாதத்தில் தான் என்பது ஐதீகம். இதே வராக உருவில் தான் பிரம்மனுடன் ஏற்பட்ட போட்டியில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்து சிவபெருமானின் திருவடிகளைக் காண முடியவில்லை என்று வேதங்கள் கூறுகின்றன. 

alayatra-membership1

ஆனிமாத சிறப்பு வழிபாடுகள் 

• வைணவத்  திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

• மன்னார்குடி  ஸ்ரீ  ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி சிறப்பாக பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழா நடைபெறும்.

• ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு ஆனித்திருமஞ்சனம் சாற்றப்படுகிறது.

• திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். 

• திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் கோயிலில் சுவாமிக்கு பக்தர்கள் வாழைப்பழத் தார்கள் சமர்ப்பித்து, அவரவர் குடும்பம் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறா.

• ஆனி மாதம் பௌர்ணமி அன்று சிவாலயங்களில் மாங்கனி திருவிழா நடைபெறும்.  

காரைக்கால்  மாங்கனி திருவிழா

மாங்கனி திருவிழா என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான ஈடு இணையற்ற சிவனடியாராக வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையில் மாங்கனியைக் கொண்டு ஏம்பருமான் ஈசன் நிகழ்த்திய அதிசய திருவிளையாடலை இன்றும் மக்களுக்கு நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி நடத்தப்படும் திருவிழாவாகும். இத்திருவிழா  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சுந்தரம்பாள் உடனமர் ஸ்ரீகயிலாசநாத சுவாமி திருக்கோயிலில் 4 நாட்கள் விழாவாக நடைபெறுகிறது.

 காரைக்கால் அம்மையார் 

முன்பு காரைவனம் என்றழைக்கப்பட்ட  தற்போதைய காரைக்கால் மாநகரில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்து இளம் வயதிலேயே சிவவழிபாட்டில் சிறந்து விளங்கியவர் புனிதவதி.  இவர் வணிகக் குடும்பத்தில் பிறந்த பரமதத்தன் என்பவரை மணந்து சைவ நெறியில் இல்லறம் நடத்தி வந்தார். 

இவர் முதன்முதலாக இறைவனைப் பற்றி இசைத்தமிழில் பாடிய பெருமைக்கு உரியவராவார்.  இவரே, ஒரு செய்யுளின் முடியும் வார்த்தையில் இருந்து அடுத்த செய்யுளின் முதல் வார்த்தை துவங்கும் அந்தாதி எனும் இலக்கண முறையை தமிழுக்கு அறிமுகம் செய்தவரார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.

காரைக்கால் அம்மையார் இயற்றிய சில  நூல்கள்: அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்றவையாகும். 

காரைக்கால் கைலாசநாதர் திருக்கோயில் இவருக்கென தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பெறுகிறது.

மாங்கனித் திருவிளையாடல்

ஒரு சமயம் புனிதவதியாரின் கணவன் பரமதத்தன் தனது கடையிக்கு வந்த ஒரு வியாபாரி அன்பளிப்பாக வழங்கிய இரண்டு மாங்கனிகளைக் மனைவியிடம் தரும்படி பணியாளிடம் கொடுத்தனுப்பினார். அப்போது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வரவே அவரை வரவேற்ற அம்மையார் மதிய உணவு இன்னும் தயாராகாததால், அவருக்கு தயிர் கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றைப்  பரிமாறி உபசரித்தார். மனமகிழ்ந்த சிவனடியார் ஆசிவழங்கி வெளியேறிய சற்று நேரத்தில் பரமதத்தன் 

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார். கணவனுக்கு பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியையும் பரிமாறினார்.

இறைவன் தந்ந மாங்கனி 

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். கடவுள் பக்தியற்ற கணவன் மாம்பழத்தை அடியார்க்கு பரிமாறியதை அறிந்தால் கோபம் கொள்வாரோ என பயந்த அம்மையார் செய்வதறியாது திகைத்தார்.  சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் ஒரு மாங்கனி வேண்டி வேண்டினார். பக்தியால் உருகி நம்பிக்கையோடு வேண்டிய அவரது கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதீத சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அப்படியேனும் கணவருக்கு இறைநம்பிக்கை வரட்டும் என்ற நோக்கில் அம்மையார் நடந்ததைக் கூறினார். ஆனால் பரமதத்தனோ அக்காரணத்தை நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக் கண்டு வியந்த பரமதத்தன் அவருடன் வாழ அஞ்சி வாணிபம் செய்ய செல்வதாக கூறி கடல் பயணம் சென்றார். 

தன்னைத் தேடிவந்த மனைவி

பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். அவளுக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். சிலகாலம் கழித்து பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி  தெரிய வந்தது. அவரை அழைத்துவந்து இல்லறம் நடத்தும் நோக்கில் அம்மையாரை அழைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் பாண்டி நாட்டை வந்தடைந்தனர். 

தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். தெய்வத்தன்மை பொருந்திய பெண்ணுடன் இல்லறம் நடத்த இயலாது என்றும் கூறினார். அதிர்ச்சி அடைந்த அம்மையார், “கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, பேய்வடிவத்தை அடியேனுக்கு அருளவேண்டும்” என்று இறைவனிடம் வேண்டி நின்றார். அவ்வாறே தசையும் அதனால் உண்டான அழகையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

ஈசனுக்கே அன்னையாதல்

இல்லறம் துறந்து பூத உடல் துறந்து  புனிதவதி அம்மையார் கணவன் துறந்துவிட்டார்  குழந்தைகளும் இல்லை இனி வாழ்வது எதற்கு என்று எண்ணி இறைவனை நேரில் கண்டு பிறவிப்பயனான  கதி அடையும் நோக்கில் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் வாழும் புனிதமான இடம் என்பதால், அங்கு தன் கால் படக்கூடாது எனக்கருதி கைகளால் தலைகீழாக நடந்து சென்றார்.

தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்ட பார்வதி தேவி இவர் யாரென இறைவனைக் கேட்க “நம்மைப் பேணும் அம்மை காண்” எனக் கூறி “அம்மையே வருக” என்றழைத்தார் “வேண்டுவன கேள்” என விளித்தார், அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவரை திருவாலங்காட்டிற்கு வரவைத்து அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி   அருளியதோடு இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார்.

விழா நிகழ்வு – சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில்

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவிற்கு வந்திருக்கும்ஸபக்த்தர்கள் அவற்றைப் பிடித்து பிரசாதமாக எடுத்துக்கொள்கின்றனர். சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் தம் கையில் மாம்பழத்துடன் பவளக்கால் சப்பரத்தில் உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தந்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

வழிபாட்டு பலன்கள் – குழந்தை பாக்கியம், வீடு பேறு

ஆனி மாத பௌர்ணமி தினத்தில் சிவாலயம் சென்று மாங்கனி படைத்து வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம், வீடு பேறு பெற்று இறைவனை மறவாத பெருவாழ்வுகிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் பொதுவாக பௌர்ணமி விரதம் மேற்கொண்டு இறைவனை தரிசித்தால் சகல விதமான வளங்களும் நலங்களும் இறையருளும் கிடைக்கும் என்பது உறுதி. உள்ளன்போடு இறைவனை வணங்கி உய்வோமாக.

திருச்சிற்றம்பலம் 🙏

Copyright by ALAYATRA.COM