kodumudi-temple-pariharam-magudeswarar

கொடுமுடி மகுடேஸ்வரர் -kodumudi temple -kodumudi temple pariharam – Magudeswarar temple

Table of Contents

கொடுமுடி மகுடேஸ்வரர் -kodumudi temple -kodumudi temple pariharam – Magudeswarar temple

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அடியார்களுக்கு வணக்கம். இந்த பதிவில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றின் மேற்குக் கரையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள மும்மூர்த்திகள் திருத்தலமான பழமைவாய்ந்த தென் கைலாயம் என்ற புகழ் பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பெயர்க்காரணம்:

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பிரம்மன் வந்து வழிபட்ட தலமாகும். இதனால் புராண காலங்களில் ‘பிரம்மபுரி’ என்றும் திருமால் வழிபட்டதால் ‘அரிகரபுரம்’ என்றும் வழங்கப்பட்டது.  கருடன் இத்தல இறைவனை வணங்கி தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி’ என்றும் பெயர்பெற்றது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதுபோல ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் நொருங்கி விழுந்த மேரு மலையின் சிகரமே இங்கு சிவலிங்கமாகக் காட்சியளிப்பதால் இது கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. கொடுமுடி என்றால் பெரிய சிகரம் என்று பொருள்.

alayatra-membership1

மேலும் இத்தலத்திற்கு கன்மாடபுரம், கறையூர், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச சேத்திரம் என பல பெயர்களும் உண்டு. 

இத்தல இறைவன் மகுடேஸ்வரர் என்ற நாமத்தில் அருள் புரிகிறார். மேலும் கொடுமுடிநாதர் மலைக்கொழுந்தீஸ்வரர், மகுடலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். 

இத்தல இறைவி திரிபுர சுந்தரி, மதுரபாஷினி, பண்மொழியம்மை, வடிவுடைநாயகி, சௌந்திராம்பிகை என்ற நாமங்களில் வழங்கப்படுகிறார்.

தல விருட்சம்:

வன்னி மரம்.தல தீர்த்தம்:

தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்றும் இக்கோவிலின் தல தீர்த்தங்களாகும். 

நான்காவது தீர்த்தம் காவிரி-

மூன்று தல தீர்த்தங்கள் தவிர காவிரி இத்தலத்தின் நான்காவது தீர்த்தமாகவே போற்றப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களின் திருவிழாக்களின் போதும் கும்பாபிஷேகம், குடமுழுக்கின் போதும் கொடுமுடி மகுடேசுவரர் – வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு, காவிரித் தீர்த்தம் கொண்டு செல்வது இன்றும் வழக்கத்தில் உள்ள ஐதீகமாகும். மேலும் பங்குனி உத்திரத்திற்கு பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கொடுமுடித் திருத்தலத்து காவிரியில் நீராடி, தாரை, தப்பட்டம், பதலைப்பறை, சிறுபறை, உடுக்கை, பம்பை, உறுமி, பேரிகை, ஊதுகொம்பு, திருச்சின்னம், துத்தாரி ஆகிய வாத்தியங்களின் இசை முழங்க காவிரி தீர்த்தம் எடுத்து அதில் இத்தல விருட்சமான வன்னி இலையைப் போட்டு தீர்த்தகலசம் முத்திரித்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துச்செல்கின்றனர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் சிறப்புகள்:

• மும்மூர்த்தித் தலம் – கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக விளங்குகிறது. 

அகத்தியருக்கு அருளிய மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு கூறுகிறது. 

• இத்தல இறைவி வடிவுடை நாயகி திருமணக்கோலத்தில் காட்சியளக்கிறார்

தேவாரப் பாடல் பெற்ற 247 தலங்களில் இது 210 வது திருத்தலமாகும்.

• இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடல் பெற்றது. இது சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும்.

• திருமால், பிரம்ம தேவர், அகத்தியர்,   பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர் ஆகியோரால் வழிபடப்பட்ட ஆலயமாகும். 

• இக்கோவிலில் கற்சிலையான மூலவர் மேல் அபூர்வமாக கைவிரல் தடங்கள் உள்ளன. 

• பொதுவாக மூலவருக்கு இடப்பக்கமாக அம்பாள் சன்னதி அமைந்திருக்கும். ஆனால் இங்கு சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இது ஒரு சிறப்பான அமைப்பாகும். இதுபோன்று அமைப்புள்ள தலங்கள் கல்யாணத் தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

• வயதை கணக்கிட முடியாத பழமையான வன்னிமரம் ஒன்று இங்கு உள்ளது.  பிரம்மனே வன்னிமர வடிவில் காட்சியளிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

• கர்நாடகாவில் தோன்றி வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இத்தலத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.

ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால் இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.

• அகத்தியருக்கு இத்தல இறைவன் தன் திருமணக்காட்சியை காண அருளியதால் பலரும் இத்திருத்தலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு காவிரியில் நீராடி, பரிகார பூஜைகளை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நிகழும் அதிசயம் நாள்தோறும் நிகழ்கிறது.

பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் இருந்த போது இத்திருத்தலத்தில் உள்ள வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், தினமும் காவிரியில் நீராடி கொடுமுடி நாதரை வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தல வரலாறு:

மேரு சிகரம் சிதறிய வரலாறு-

முற்காலத்தில் இந்திரனது சபையில் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. பந்தையமாக மேரு மலையை யார் தன்பக்கம் நகர்த்துகின்றாரோ அவரே பலசாலி என முடிவாகும் என விதிமுறை வைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் மேருமலையை ஆதிசேஷன் தன் கைகளால் கட்டி அணைத்து இழுக்கத் துவங்கினார். வாயு பகவானோ அவரது காற்றின் வேகத்தால் ஆதிசேஷனை மலையை விட்டு கீழே தள்ள முயன்றார். இருவரும் பலம் கொண்டமட்டும் மேருவைத் தன் பக்கம் இழுக்க, அழுத்தம் தாங்காமல் அது ஐந்து துண்டுகளாக வெடித்தது. சிதறிய பாகங்கள் ஐந்தும் ஐந்துமணிகளாக மாறி வெவ்வேரு இடத்தில் விழுந்தன. சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கமணி விழுந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி விழுந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி விழுந்த இடம் பொதிகை மலையாகவும், ஐந்தாவதாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. கிருத யுகத்தில் இத்தல இறைவன் வைரலிங்கமாக விளங்கினார். மேருவில் இருந்து சிதறிய மற்ற நான்கு பாகங்களும் இன்றும் மலைகளாகவே இருக்க வைரம் மட்டும் கொடுமுடி தலத்தின் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் இத்தல இறைவன் கொடுமுடிநாதர் என்ற திருநாமம் கொண்டுள்ளார். 

கொடுமுடி ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ ஆன வரலாறு

புகழ்பெற்ற பாண்டிய மன்னனான மலையத்துவச பாண்டியனின் (6ஆம் நூற்றாண்டு) மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. எத்தனையோ வைத்தியம் செய்தும் சரியாகாத நிலையில்  கொடுமுடிநாதரை வந்து வணங்கி வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று இராஜகோபுரங்களையும், கல்மண்டபங்களையும் கட்டி தந்ததோடு மேலும் பல திருப்பணிகளையும் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று. கல்வெட்டுகளில் அதிராஜராஜ மண்டலத்து காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அகத்தியர் வரலாறு 

தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் விளங்கும் அகத்தியர் சிவபெருமானிடம் தமிழ் மொழியைக்கற்று முதன்முதலில் அம்மொழிக்கு இலக்கணம் எழுதினார். அகத்தியரால் எழுதப்பட்ட அந்த இலக்கண நூலே அகத்தியம் எனப்படுகிறது. கயிலாயத்தில் நிகழ்ந்த சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் அங்கு ஒன்றுகூடியதால் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்து அதன் சமநிலையை இழந்தது. அதை சரி செய்ய  சிவனின் வேண்டுகோளின்படி அகத்தியர் தென்திசைக்குப் பயணப்பட்டார். வழியில் சிவ பூஜை செய்ய சிவனின் சடையிலிருந்து பூவுலகில் பாய்ந்த ஆகாய கங்கை நீரைத் தன் கமண்டலத்தில் எடுத்து வந்தார்.  

அவ்வாறு உலக நன்மைக்காக சிவசக்தி திருமணத்தை நேரில் காணும் பாக்கியத்தை தியாகம் செய்து தமிழகத்திற்கு வந்த அகத்தியர் இங்கிருந்தபடியே அம்மையப்பர் திருமண விழாவைக் காணவேண்டுமென ஈசன் திருவுளம் கொண்டு அகத்தியருக்குத் தன் கல்யாணத் திருக்கோலத்தைக் கொடுமுடியில் காட்டினார்.

காவிரி உருவான கதை

பூமியைச் சமன் செய்ய தென்திசைக்கு வந்த அகத்தியர், நீண்ட பயணத்தின் களைப்பாற பொதிகை மலையில் சிறிது காலம் தங்கி ஓய்வெடுத்தார். மேலும் முருகக் கடவுளின் ஆணைப்படி முருகனுக்கும் அங்கிருந்த மக்களுக்கும் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்தார். அப்பொழுது சிவபூசை செய்வதற்காகக் கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக்கொண்டு சாய்த்துவிட்டார். கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய அந்த புனித கங்கையே குடகு மலை கூர்க் பகுதியைச் சேர்ந்த தலைக்காவிரி என்னும் இடத்திலிருந்து, காவிரி நதியாகத் தமிழகத்தில் ஓடிக் கடலில் கலக்கிறது.

கொடுமுடியில் காவிரி நதியானது தெற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பி சோழநாட்டில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இத்தலத்தில் காவிரியின் நடுவில் அகத்தியர் பாறை அமைந்துள்ளது. பரிசல் மூலமாகக் காவிரியைக் கடந்து சென்றால், அகத்தியர் பாறையில் இந்த வரலாறு குறித்த ஓவியங்களைக் காண முடியும்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைப்பு:

காவிரிக் கரையில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாக இக்கோவில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி சன்னதிகளும் கோபுரங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மிகப்பெரிய மதிற்சுவர்களும் கிழக்கு நோக்கிய மூன்று வாயில்களும் உள்ளன. 

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் இராஐகோபுரம்: 

இத்திருத்தலம் மலையத்துவச பாண்டியனால் எழுப்பப்பட்ட 3 அழகிய  இராஜகோபுரங்களைக்கொண்டது. நடு இராஜகோபுரம் 3 நிலைகளையும் மற்றவை 5 நிலைகளையும் கொண்டு மிக பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றன.

ஆலயத்தின் மத்திய கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சன்னிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு இடபுறம் உள்ள (வடக்கு இராஜகோபுரம்) கோபுரவாயில் வழியே உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சன்னதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வலப்புறம்  உள்ள (தெற்கு இராஜ கோபுரம்) கோபுர வாயில் வழியாகச் சென்றால் இறைவி வடிவுடை நாயகியின் சன்னிதிக்குச் செல்லலாம்.

பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் சன்னதி உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர்  வீரநாரயணப் பெருமாள். ஆதி நாராயணப்பெருமாள் மற்றும்  பள்ளிகொண்ட பெருமாள் என்ற பெயர்களும் உண்டு. 

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பிரகாரம்:

வெளிப்பிரகாரம்-

இங்கு மும்மூர்த்திகளுக்கும் தனிச் சன்னதிகள் இருப்பதால் இத்திருத்தலம் மிகவும் பெரியதாகும். எனவே ஒரு பெரிய வெளிப்பிரகாரமும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கும் அவரவர் தேவியருக்குமான தனிச்சன்னதிகளில் உட்பிரகாரங்களும் அமைந்துள்ளன.

 மூலவர் சன்னிதி இராஜ கோபுரத்தில் நுழைந்ததும் வாயிலின் இருபுறமும் மேற்கு நோக்கி சூரியன் மற்றும் சந்திரன் சன்னதிகள் உள்ளன.

kodumudi-temple-pariharam

கோவில் பிரகாரத்தை மூலவருக்கு வலம் இடமாகச் சுற்றி வர , மத்திய கோபுரத்தின் அருகில் வடிவுடை நாயகி அம்மன் சன்னதிக்கு எதிரே தேவ தீர்த்தம் அமைந்துள்ளது. தேவ தீர்த்தம் தேவர்களால் உருவாக்கப்பட்டு கருடனால் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீ அனுமான் இதில் நீராடியதால் வஜ்ஜிராயுதத்தால் அடிபட்ட கன்னம் சரியானது. பாண்டு மன்னனின் வெண்குட்ட நோய் விலகியது. ஆலகால விஷத்தால் தேவர்களின் உடலில் உண்டான கருமை நீங்கியது. சூர்ய வம்சத்தை சேர்ந்த மன்னன் சகரனின் உடலில் ஏற்பட்ட கறை நீங்கியது என தல புராணம் கூறுகிறது. 

அடுத்து தென்கிழக்கு மூலையில் சிவனின் மடப்பள்ளி அமைந்துள்ளது. அதனருகில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்மதேவரால் சிவபூஜைக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்த தீர்த்தத்தில் நீராட குருவின் அருள் முழமையாகக் கிடைக்கும். கல்வியறிவு, கலை ஞானம், வாக்கு வன்மை மற்றும் ஆயுள் விருத்தி அடைவர் எனத் தலபுராணம் கூறுகிறது.

வன்னிமரம்

vannimaram

பிரம்மதீர்த்தத்தை தரிசித்து முன்னேற அம்பாள் சன்னதிக்கு பின்புறம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு பழமையான வன்னிமரம் உள்ளது. இதுவே இத்தலத்தின் தல மரமாகும். பொதுவாக வன்னி மரம் சனிபகவானுக்கு உகந்ததாகும். அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருட்சமாகவும் வன்னி மரம் போற்றப்படுகிறது.  இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும் மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த மரத்தில் பூக்கள் பூக்கிறது. ஆனால் காய் காய்ப்பதில்லை. அழிந்து விடும் தருவாயில் இருந்த மரத்தை தமிழ்நாடு வேளாண் துறையின் முயற்சியால் மீண்டும் துளிர்க்க வைத்துள்ளனர். அறிவியல் முறையில் இந்த மரத்திலிருந்து சில நாற்றுகளைத் தோற்றுவித்து கோவில் வளாகத்திற்குள் வளர்த்து வருகின்றனர்.  இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை. 

பிரம்மா சன்னதி-

வடிவுடை நாயகி அம்மன் சன்னதிக்கு பின்புறம் உள்ள வன்னி மரத்தடியில் திறந்தவெளியில் நான்கு கரங்களுடன் அட்சர மாலை, கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்ட பிரம்மா அருள்பாலிக்கிறார்.

பொய்யுரைத்த பிரம்மன்- முன்னொரு காலத்தில் இந்திரன் சபையில் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி வந்தது. அப்பொழுது நாரத முனிவர் சிவபிரான் ஒரு நெருப்பு மலையாக வான் வரை உயர்ந்து நிற்கிறார், “உங்களில் யார் அந்த நெருப்பு மலையின் அடிமுடி காண்கிறீரோ அவரே உயர்ந்தவராவார்” என்று கூறினார். உடனே பிரம்மதேவர் நான் முடி காணச்செல்கிறேன் என்று அன்ன வடிவமாய் ஆகாயத்திற்குப் பறந்தார். திருமால் தான் அடி காணச்செல்கிறேன்” என்று வராக வடிவமாய் நிலத்தை தோண்டிச்சென்றார். முடிவில் அவ்விருவருமே  தோற்றனர். ஆனால் பிரம்மதேவரோ தான் சிவனின் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார். இதற்குத்  தாழம்பூவை சிவபெருமான் மற்றும் திருமாலின் முன்பு வந்து பொய்சாட்சி கூறவைத்தார். 

சிவனின் கோபம்- பிரம்மனின் இந்த செயலால் கோபம் கொண்ட சிவனிடமிருந்து பைரவர் தோன்றி பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி எறிந்தார். பிரம்மா உயிரற்றுச் சாய்ந்தார். இதனால் தேவர்கள் வருந்தினர். எனவே தன் புத்திரனாகிய பிரம்மாவை மீட்க வேண்டித் திருமால் சிவபூஜை செய்தார். இதில் மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மாவை நான்முகனாக எழச்செய்தார். பிரம்மா பொய் உரைத்த காரணத்தால் இந்த துன்பம் வந்ததென்றும், மேலும் பூமியில் பிரம்மாவிற்கு கோயிலும், பூஜையும் இல்லாமல் போகும் என்றும் சிவன் கட்டளையிட்டார். 

பிரம்மனின் தவம்- பிரம்மதேவன் தான் செய்த இந்தக் குற்றம் நீங்க கொடுமுடி சென்று காவிரியில் நீராடி சிவாலயம் ஒன்றை எழுப்பி அங்கு வன்னி மரத்தின் உருவாய் தவம் செய்தார். எனவே இந்த தலத்திற்கு பிரம்மபுரி என்ற பெயரும் உண்டு. மேலும் பிரம்மன் திருமேனிக்கு அருகிலேயே வன்னி மரத்தடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

வன்னி மரத்தை வணங்கி நகர்ந்தால் தென்மேற்கு மூலையில் வீர ஆஞ்சநேய சுவாமி தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பெருமாள் சன்னதி:

பெருமாள் சன்னதி உட்பிரகாரம்

வீர ஆஞ்சநேயரைக் கடந்து வெளிப்பிரகாரம் சுற்றும் போது திருத்தலத்தின் வடமேற்குப் பகுதியில்  மகுடேஸ்வரர் சன்னிதிக்கும் வடிவுடையநாயகி சன்னிதிக்கு நடுவில், வீரநாராயணப் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. 

பெருமாள் சன்னிதி

உட்பிரகாரத்தின் உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், இராமானுசர், உடையவர், வெங்கடாசலபதி ஆகியோர் அருள்புரிகின்றனர். இவர்களுக்கு எதிரே உள்ள தூண் ஒன்றில் வியாக்ரபாத விநாயகர் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது இது மிகவும் அரிதான ஒன்றாகும். 

மூலவர் வீரநாராயணப் பெருமாள் 

கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் திருவரங்கத்தில் உள்ளது போல் அனந்த சயன கோலத்தில் அருள்புரிவதால் பள்ளிகொண்ட பெருமாள் என்ற நாமத்திலும் வழங்கப்படுகிறார். வீரநாரயணப் பெருமாளுக்கு ஆதி நாராயணப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. இவரது காலடியில் பெருமாளை நோக்கியவாரு அன்னை மகாலட்சுமி வீற்றிருக்கிறார்.

பெருமாள் சன்னதியின் வெளியே மூலவருக்கு எதிரில் சிறு கல் மண்டபத்தில் கருடன் சன்னிதி, பலிபீடம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ளன. திருமங்கை நாச்சியாருக்கு தனிச்சன்னிதி உள்ளது.

மகாலட்சுமி சன்னதி-

வீர நாராயணப் பெருமாளை வணங்கி வெளியில் வந்ததும் வலதுபுறம் அன்னை மகாலட்சுமி தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். அழகே உருவான அன்னையை தரிசித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெருவோம்.

மகாலட்சுமி சன்னிதியில் தரிசனம் செய்து வெளிப்பிரகாரத்தை சுற்றிவர வடக்கு பகுதியில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி சனிபகவான் மற்றும் கால பைரவர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

பரத்வாஜ தீர்த்தம்

பைரவருக்கு அருகே வடகிழக்கு மூலையில் பரத்வாஜ தீர்த்தம் அமைந்துள்ளது. இது பரத்வாஜ  மகரிஷியால் உருவாக்கப்பட்ட தெய்வீக அருட்சக்தி கொண்ட புண்ணிய தீர்த்தமாகும். இதனை வழிபடுவோர் மன அமைதி, ஸ்திர புத்தி, ஆன்ம ஞானம் பெற்று சிவகடாட்சம் திருவருள் அடைவர்  என்பது தல வரலாறு.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில்  மூலவர் சன்னதி.

மூலவர் சன்னதி உட்பிரகாரம்-

மூலவர் உட்பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், மேற்கில் காவிரி கண்ட விநாயகரும், உமா மகேசுவரர், அகத்தீசுவரர், கஜலட்சுமி தனிச்சன்னதிகளில் எழுந்தருளுகின்றனர். பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் அருள் பொழிகிறார். வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர்.

மூலவர் கோஷ்டம்- கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், குரு தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சண்டிகேஷ்வரர் ஆகிய கோஷ்ட தெய்வங்கள் அருள் புரிகின்றனர். 

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் மூலவர்:

உட்பிரகாரம் சுற்றி துவாரபாலகர்களைத் தாண்டி உள்ளே நுழைந்தால்  கொடுமுடி கோவிலின் பிரதான தெய்வமான கொடுமுடி நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் சிறிய சிவலிங்கமாக காட்சியளிக்கிறார் இந்த லிங்கத்தின் ஆவுடை சதுர வடிவில் அமைந்துள்ளது. சிறிய பாணம். அதன் மீது அகத்தியர் பூஜை செய்த அடையாளமாக  விரல் தடயங்கள் காணப்படுகின்றன. மானுட வாழ்வின் சகல தோஷங்களையும் நீக்கி இம்மைக்கும் மறுமைக்குமான அனைத்து அருளையும் வாரி வழங்கும் கருணைக் கடலான சிவபெருமான் அமைதியாக அருள்புரிகிறார். எதிரில் கொடிமரம் பலிபீடத்துடன் பெரிய பிரதோஷ நந்தி எழுந்தருளியுள்ளார். 

அம்பாள் சன்னதி:

அம்பாள் சன்னதி உட்பிரகாரம்– அம்மையப்பனின் அருள் பெற்று அன்னையை தரிசிக்கச் செல்லலாம்.  அன்னை திரிபுர சுந்தரி தனி கோபுரம், பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரத்துடன் மகுடேஸ்வரர் சன்னதிக்கு வலபுறம் எழுந்தருளியுள்ளார். இது கல்யாண அமைப்பாகும்.  இத்தலத்தின் மத்திய கோபுரத்திற்கு தென்புறம் உள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் நேரே அன்னை வடிவுடை நாயகியை முதலில் தரிசிக்கலாம். அம்பாள் சன்னதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோர் எழுதியுள்ளனர். அம்பாள் சன்னிதியில் பிரம்மனின் தேவியான சரஸ்வதிக்கு தனிச் சன்னதி உள்ளது.  

மூலவர்

உட்பிரகாரம் சுற்றிவந்து துவாரபாலகிகளைக் கடந்து கருவரைக்குள் நுழைந்தால் கோவில் மூலவருக்கு வலதுபுறத்தில் கொடுமுடி மகுடேஸ்வரர் தல நாயகி அன்னை வடிவுடை நாயகி நின்ற திருக்கோலத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்னையை வணங்குவதால் திருமணத் தடைகள் நீங்குவதோடு நிம்மதியா இல்லறம் வாய்க்கும் என்பது ஐதீகம்.

கல்வெட்டுகள்

இத்தலம் பாண்டிய, பல்லவ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டது. பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ளது. இத்தலத்தின் கல்வெட்டுகள் பெருமாள் சன்னதியிலும் வெளியிடங்களிலும் செப்பேட்டிலும் காணப்படுகின்றன.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் திருவிழாக்கள்: 

ஆடிப்பெருக்கு விழா

இத்திருத்தலத்து சிறப்பு விழாவான ஆடி 18 திருவிழாவின்போது மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். காவிரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய இரவில், பச்சை மண்ணில் தாலி செய்து அதில் மாவிளக்கு, பொட்டு, விளக்கு காரை, காதோலை, கருகமணி, சிற்றாடை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து காவிரி ஆற்றில் விடுவர். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், லட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நிகழும்.

சைவ விழாக்கள்

கார்த்திகை அன்னாபிஷேகம், சோமவார சங்காபிஷேகம், ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் சிவராத்திரி போன்ற சிவ வழிபாடுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரிகளில் இரவில் நான்கு காலங்களிலும் அபிஷேக ஆராதனை நடைபெறும். 

சித்திரை திருவிழா

கொடுமுடி மகுடேஸ்வரர் – வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சித்திரை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கினறனர். சித்திரைத் திருவிழாவின் 10ம் நாள் மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள், விநாயகர்  தனித்தனித் தேர்களில் திருவீதி உலா வருவர். 

மார்கழி பூஜைகள் 

மார்கழி மாதம் திருவாதிரை நாளிலும், வைகுண்ட ஏகாதசி நாளிலும் சிவன், பெருமாள் புறப்பாடு விமரிசையாக நடந்தேறும். மார்கழி  திருவாதிரை நாளில் வீரநாராயணப் பெருமாள், திருமங்கல நாண் நோன்புக்காக, தங்கை வடிவுடைநாயகிக்கு ஊஞ்சலிட்டுத் தேங்காய், சந்தனம், பூ, பட்டாடை, மஞ்சள், குங்குமம் எனச் சீர்வரிசைகளை மேள வாத்தியங்களுடன் கொண்டு சேர்க்கும் வைபவம் நடைபெறும். அதேபோல், தை முதல் நாளில் மகுடேஸ்வரரிடம் இருந்து மைத்துனர் வீரநாராயணப் பெருமாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படும்.

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி , கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி, தை  அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, மாதாந்திர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, பிரதோஷ நாட்களிலும், ஏகாதசி, திருவோணம் ஆகிய நாட்களிலும் தமிழ், தெலுங்கு புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் ஆராதனைகள் சுவாமிகளுக்கு நடைபெருகின்றன. 

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:

• பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 நாட்கள் (கால் மண்டலம்), 24 நாட்கள் (அரை மண்டலம்), 48 நாட்கள் (ஒரு மண்டலம்) என்ற முறையிலோ, அவரவர் வயதின் எண்ணிக்கையிலோ அல்லது 108 முறையோ வலம் வந்து அருள் பெறுகின்றனர்.

• பிரம்மனே வன்னி மரமாக இங்கு அருள்புரிவதாக நம்பப்படுகிறது. இம்மரத்தின் இலைகளை 11 ரூபாய் காணிக்கையுடன் சேர்த்து மஞ்சள் துணியில் கட்டி வேண்டிக்கொண்டு வீட்டில் வைத்தால் 90 நாட்களில் வேண்டுதல் நிறைவேறுகிறது.

• சனியால் துயரப்படுவோரும் அவிட்ட நட்சத்திரக்காரர்களும் காவிரியில் நீராடி நீர் எடுத்துவந்து இத்தலத்து வன்னி மரத்திற்கு ஊற்றினால் சனி தோஷங்கள் நீங்குகின்றன. இம்மரத்தினை பிரதட்சிணம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக தோஷங்களில் நிவாரணம் பெறுகின்றனர்.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தோஷ பரிகார தலம்: 

சகல தோஷங்களும் தடைகளும் நீக்கும் தமிழகத்தின் மிகச்சிறந்த பரிகார தலமாக கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. பரிகார பூஜை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தை நேரில் அணுகி, ரூ. 200 கட்டணம் செலுத்தினால் அர்ச்சகர்கள் அமர்த்தித்தரப்படுவர். பரிகார பூஜைகளுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை பக்தர்களே வாங்கி செல்ல வேண்டும்

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், மற்றும் குழந்தைப்பேறு அடையப்பெறுகிறார்கள்.

• வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் காவிரியிலிருந்து எடுத்துவந்து ஊற்றினால் திருமணத்தடை, குழந்தையின்மை, வியாபாரம், உத்தியோகம், அரசு காரியங்கள், வழக்குகள், உயர்கல்வி போன்றவற்றில் உள்ள காரிய தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கிறது. 

• ஒருவர் ஜாதகத்தில் உள்ள நாகதோஷங்கள் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்யது வழிபடுகின்றனர்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரமாக வாழை மரத்திற்கு தாலி கட்டி பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் மாங்கல்ய தோஷம் இரு தார அமைப்பு போன்ற தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

மகாளய அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு காவிரிக்கரையில் தர்ப்பணம் வழங்கப்படுகிறது. மேலும் அமாவாசைகளில் பித்ரு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இதனால் துர்மரணம் குடும்பத்தில் ஒற்றுமை இன்மை, நிம்மதி இன்மை போன்ற பிரச்சனைகள் தீர்வதாக ஐதீகம்.

• ஆடி அமாவாசை நாட்களன்று பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். பித்ரு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் மற்றும் யாகங்கள் நடத்தப்படுகின்றன.

• அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் உடல் ஆரோக்கியத்திற்காகத் தன்வந்திரி பகவானுக்கான ஹோமம், தொழில் வளர்ச்சி, குழந்தைகள் கல்வி எனப் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வழிபாட்டுப் பலன்கள்:

• மகுடேஸ்வரரை வழிபட்டால் சகல பிணிகளும் நீங்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற பாதிப்புகளும் விலகும் என்பது நம்பிக்கை.

• வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி மகுடேஸ்வரர் சன்னதி வாசலில் தான் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. எனவே இங்கு காவிரி ஆற்றில் புனித நீராடி கொடுமுடி நாதரை வணங்கினால் நம் வாழ்க்கைப் பாதையும் திசை மாறும் என்பது ஐதீகம். 

• காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இத்தல நாதரையும், மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் மற்றும் மனநோய் நீங்கும்.

• நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். நாக தோஷம் நீங்குவதற்கு, ஒருவருக்கு எத்தனை வயது ஆகிறதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக வன்னி மரத்திற்கு அடியில், கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

• இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரம்மாவை வழிபடுவதால், பூர்வ புண்ணிய தோஷம், பசு, பட்சி மற்றும் பிராமண சாபம் நீங்கப்பெருவதோடு பல்வேறு கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற முடியும். ஒவ்வொரு வாரமும் திங்களன்று அபிஷேக ஆராதனை செய்வதற்கும், பிரம்மாவின் முன் அமர்ந்து தியானம் செய்வதற்கும், புனர்ஜன்ம பூஜை வழிபாட்டிற்காகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் 

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் நடை திறக்கப்படும் நேரம்:

காலை 06.30 முதல் 12.00 வரை.

மாலை 04.30 முதல் 09.00வரை.

தினப் பூஜை நேரங்கள்:

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நாள்தோறும் காலை 6 மணிக்கு உஷைக்கால பூஜை (பால் பூஜை), காலை 6.30 மணிக்கு காலசாந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை என ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. இங்கு, பிரதோஷ கால பூஜை விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைவிடம்:

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது. திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, கேரள மாநிலம் மங்களூர், கர்நாடக மாநிலம் மைசூர் போன்ற இடங்களிலிருந்து ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. 

அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி, கோவை, சேலம் ஆகிய விமான நிலையங்கள். 

அருகில் உள்ள இரயில் நிலையம்: ஈரோடு மற்றும்  கொடுமுடி இரயில் நிலையங்கள்.

அருகில் உள்ள பேருந்து நிலையம்: கொடுமுடி பேருந்து நிலையம்.

குறிப்பு*

கோயில் அருகிலேயே தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்திற்கு வெளியில் கட்டணம் செலுத்தித் தங்கும் பக்தர்கள் விடுதியும் உள்ளது.

கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் முகவரி:

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பாண்டிக் கொடுமுடி,
ஈரோடு-638 151.
தொலைபேசி எண்: 04204-222375

திருச்சிற்றம்பலம்

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp