adi-pournami-fasting-benefits

Aadi full moon pooja and benefits -ஆடி பௌர்ணமி வழிபாடு மற்றும் பலன்கள்

ஆடி பௌர்ணமி வழிபாடு மற்றும் அதன் பலன்கள்

பொதுவாக அமாவாசை வழிபாடு நமது முன்னோர் வழிபாட்டிற்கு உகந்ததாகவும் பௌர்ணமி வழிபாடு நமது குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தப் பெருமைமிகுந்த பௌர்ணமி வழிபாடு பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் விரிவாகக் காணலாம்.

பௌர்ணமி என்றால் என்ன?

பௌர்ணமி சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி வரும் நாளாகும். அன்று சூரிய வெளிச்சம் நிலவின் முன் பகுதியில் முழுமையாகப் பதிவதால் அது ஒளிர்ந்து பூமியில் இருந்து பார்க்கும் போது வட்ட வடிவில் முழுமையாக  காட்சி அளிக்கிறது. மேலும் அன்று நிலவின் பின்பக்கம் இருளாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு முறை முழு நிலவை தரிசிக்கலாம். ‘நிலவு வழிபாடு நிம்மதி தரும்’ அதாவது, பூமியில் மட்டுமின்றி மனித உடலிலும் 70% நீர் இருப்பதால் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மனிதர்களின் உடல் நிலையும் மனநிலையும் அதன் அதிகபட்ச சக்தி நிலையில் இருக்கும். எனவே அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் இறை வழிபாடு செய்வதும் மந்திர உச்சாடனம் செய்வதும் மிகச்சிறந்த பலனைத் தரும் என்று முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

alayatra-membership1

அவ்வாறு மாதம் ஒருமுறை வரும்  சிறப்பு வாய்ந்த பௌர்ணமி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அவை வெவ்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன. அவை,

தமிழ் மாதங்களும், பௌர்ணமியும் அதன் பெயர்களும்

சித்திரை மாதம் – சித்ரா பௌர்ணமி

வைகாசி மாதம் – வைகாசி விசாகம்

ஆனி மாதம் – சாவித்திரி விரதம்.

ஆடி மாதம் – குரு பூர்ணிமா 

ஆவணி மாதம் – ஆவணி அவிட்டம்

புரட்டாசி மாதம் – உமாமகேஸ்வர விரதம்

ஐப்பசி மாதம் – அன்னாபிஷேகம்

கார்த்திகை மாதம் – கார்த்திகை தீபம் 

மார்கழி மாதம் – திருவாதிரை விரதம்

தை மாதம் – தைப்பூசம்

மாசி மாதம் – மகாமகம்

பங்குனி மாதம் – பங்குனி உத்திரம்.

*ஒவ்வொரு பௌர்ணமியிலும் என்ன வழிபாடு செய்ய வேண்டும் அதன் பலன்கள் என்ன என்பதை நமது ஆலயத்ராவின் மற்றொரு பதிவில் விரிவாக காணலாம்.

ஆடிப் பௌர்ணமி சிறப்புகள்:

பொதுவாகவே ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகும். அதிலும் ஆடி மாதம் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றவையாகும். குறிப்பாக இந்தத் திதிகள் அம்மனுக்கு உகந்த வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் வருமானால் மிகவும் சிறப்பானது.  பௌர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வெள்ளை சாதத்தில் செவ்வாழைப்பழம் கலந்து நைவேத்தியமாக படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. 

ஆடி மாத பௌர்ணமியானது  உத்திராட நட்சத்திரத்தில் வருவதால் பெருமாள் வழிபாடு செய்வதும் சகல நலங்களையும் வளங்களையும் தரும் என நம்பப்படுகிறது.

சாவித்திரி விரதம்:

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி சாவித்திரி விரதம் என்று வழிபடப்படுகிறது. மகாலட்சுமி நோன்பு, மாங்கல்ய நோன்பு, காரடையான் நோன்பு என்ற பெயர்களிலும் வெவ்வேறு தினங்களில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக சத்தியவானின் மனைவி சாவித்திரி தனது கணவனின் மரணத்திற்கு பிறகு எமனிடம் போராடி கணவனை மீட்ட வரலாற்றை நினைவு கூறும் விதமாகவும் தனது கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்திற்காக பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் சாவித்திரி விரதம் என்று அழைக்கப்படுகிறது. பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் அம்மன் வழிபாடு செய்து திருமாங்கல்ய கயிறு மாற்றி பொட்டிட்டு இந்த பூஜையை மேற்கொள்கின்றனர். இதனால் தீர்க்க சுமங்கலித் தன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பௌர்ணமியும் சிவ வழிபாடும்:

பௌர்ணமியில் பலவிதமான வழிபாடுகள் செய்யப்பட்டாலும் தலைமைச் சித்தன் என போற்றப்படும் சிவபெருமான் வழிபாடு மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக பௌர்ணமி தினங்களில் மலை மீது அமைந்திருக்கும் சிவாலயங்களில் வழிபாடு செய்வதும் கிரிவலம் செய்வதும் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில், சாதாரண நாட்களை விட பௌர்ணமி அன்று தான் மலை உச்சிகளில் சக்தி நிலை மிகவும் அதிகமாக இருக்கும். எனவே ஆத்ம ஞானம் அடைய விரும்பிய சித்தர்களும் முனிவர்களும் கூட பௌர்ணமி வழிபாட்டை மிக முக்கியமாக கடைப்பிடித்தனர்.

ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்வது விசேஷமாகும். மேலும் பல சிவாலயங்களில் ஈசனுக்கு கருப்பு பட்டாடை சாற்றி, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை அணிவித்து, கருப்பு ஊமத்தம் மலர்களால் அர்ச்சனை செய்து, மூங்கில் அரிசி பாயாசம் நைவேத்தியம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனால் நீங்காத பாவங்களும், பகையும் விலகும் என்பது ஐதீகம்.  

பௌத்தமும் பௌர்ணமியும்:

இந்து மதம் தவிர உலகளாவிய பல மார்க்கங்களிலும் பல மகான்கள் பௌர்ணமி தினத்தன்றே ஞானம் அடைந்துள்ளனர் என அறியப்படுகிறது. பௌத்த மதத்தில், புத்தர் “பரிநிர்வாணம்” அடைந்தது பௌர்ணமி தினத்தில் தான் என்பதால், இன்றும் பலர் ஞான உபதேசம் பெறுதல், தியான துவக்கம் ஆகியவற்றை பௌர்ணமி தினங்களில் துவங்குகின்றனர். மேலும் பெரும்பான்மையாக புத்த மதத்தை தழுவியுள்ள இலங்கையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அரசு விடுமுறையாக நடைமுறையில் உள்ளது. இலங்கை அரசு, பௌர்ணமியின் முக்கியத்துவத்தையும் பௌர்ணமி அன்று முழுமையாக இறைவழிபாட்டிலும் தியானத்திலும் செலவிட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் மக்களுக்கு உணர்த்துகின்றனர். 

அமாவாசை பௌர்ணமி தினங்களில் பாராயணம் செய்யப்படும் மந்திரங்கள் பல மடங்கு பலன்களைத் தரும் என்பதால் அன்றைய தினம் வேறு எந்த சிந்தனையும் இன்றி முழுமையாக இறை சிந்தனையிலும் மந்திர உச்சாடனங்களிலும் செலவிட வேண்டும். 

பௌர்ணமியில் கடைப்பிடிக்கப்படும் மற்ற விசேஷங்கள்:

பௌர்ணமி தினத்தில் தான் குபேர பூஜை, மகாலட்சுமி பூஜை, குருபூஜை,  திருவிளக்கு பூஜை போன்ற பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.( சிறப்பு நாட்களில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் விளக்கேற்றும் முறைகள் குறித்து நமது ஆலயத்ராவில் விரிவான பதிவு இடப்பட்டுள்ளது. பக்தர்கள் அதையும் படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்) குறிப்பாக சித்தர்கள் வழிபாடு, மகான்களின் ஜீவசமாதி வழிபாடு போன்றவை இந்த நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது. 

மேலும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடும் அம்பிகை வழிபாடும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இன்றைய தினத்தில் சர்க்கரை பொங்கல் வைத்துப் படைத்தல் மிகவும் சிறப்பானதாகும். இன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது கோடி புண்ணியத்தை தரும். இதனாலேயே ஐப்பசியில் வரும் பௌர்ணமி அன்று பெரும்பாலான சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் ஞான மார்க்கத்தை துவங்க பௌர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஞானம் மட்டுமின்றி, புது தொழில், கல்வி மற்றும் சுப காரியங்களை பௌர்ணமி அன்று துவங்குவதால்  பல நன்மைகளை அடையலாம் என நம்பப்படுகிறது. 

சந்திரன் பரிகார வழிபாடு

ஜாதகத்தில் சந்திர தோஷம் இருப்பவர்கள்,  சந்திரன் பலவீனமாக இருப்பவர்கள் மேலும் மக்கள் தொடர்பு, மாடலிங், அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிலவொளி தன் மீது படும்படி  சுகாசனத்தில் அமர்ந்து உள்ளங்கையில் பச்சரிசியை வைத்துக்கொண்டு நிலவைப் பார்த்தபடி, சந்திரன் மந்திரங்களை பாராயணம் செய்யலாம். மந்திரங்கள் தெரியாதவர்கள் “ஓம் ஹ்ரீம் வம் சந்ராய நமக” என்ற சந்திரனின் மூல மந்திரத்தை 108 முறை உச்சாடனம் செய்து சந்திரனை வழிபட்டு அந்த அரிசியை பறவைகளுக்கு தானமாக கொடுக்கலாம். இது ஒரு எளிய சந்திரன் பரிகாரமாக அமையும். இதனால் உடல் நலக் கோளாறுகள், மன நலக் கோளாறுகள் சரியாகும். முக வசீகரம் கூடும் மற்றும் மக்கள் வசியம் ஏற்படும்.

பௌர்ணமி விரதம் கடைப்பிடிக்கும் முறைகள்:

பெரும்பாலும் பௌர்ணமி விரதம் உண்ணா விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி தூய்மையான ஆடையை உடுத்தி இல்லத்தை சுத்தம் செய்து அகல் விளக்கில் நெய் விளக்கேற்றி சந்திரனை தியானித்து குல தெய்வத்தையும் வழிபட வேண்டும். முடிந்தால் சிவாலயத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு விரதத்தை துவங்கலாம். அன்றைய நாள் முழுவதும் ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் மாலையில் சந்திர தரிசனம் செய்துவிட்டு நிலவுக்கு தீப ஆராதனைகள் காட்டி வீட்டில் நெய்யில் அகல் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம். சந்திர மந்திரங்களை குறைந்தபட்சம் 108 முறை உச்சாடனம் செய்து வழிபட்டு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மௌன விரதம் கடைப்பிடிக்கும் முறை:

அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் நமது ஆன்ம சக்தி அதிகமாக இருப்பதால் சிலர் மௌன விரதம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பேசாமல் இருப்பதால் நமது சக்தி நிலை மேலும் அதிகரிக்கிறது. மௌன விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நீரு பூசி வீட்டில் விளக்கேற்றி வைத்து ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து விரதத்தை துவங்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் எதுவும் பேசாமல் தேவையில்லாதவற்றை சிந்திக்காமல் மனதிற்குள் இறைநாமத்தையும் துதிகளையும் தியானிக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சந்திர தரிசனம் செய்து நிலவிற்கு தீப ஆராதனை காட்டி இல்லத்தில் விளக்கேற்றி வைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

ஆடி பௌர்ணமி வழிபாட்டு பலன்கள்:

பௌர்ணமி தினங்களில் சந்திர தரிசனம் செய்து, சந்திரன் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வதால் மன அமைதி, உடல் ஹார்மோன்களின் சமநிலை, அழகு பொலிவு,  ஜன வசியம், குடும்பத்தில் தம்பதியினர் இடையே ஒற்றுமை, புகழ் போன்றவை சித்திக்கும். நிலவு நீர் நிலைகளை கட்டுப்படுத்தும் கிரகமான சந்திரன், சூரியன், பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும் நிகழ்வே அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களாகும். இந்த நாட்களில் தல தீர்த்தங்கள், புனித நதிகள், கடல் போன்ற தீர்த்தங்களில் நீராடி வழிபாடு செய்வது நமது கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு அம்சமாக விளங்குகிறது. அமாவாசை அன்று புண்ணிய தீர்த்தங்கள் நீராடி வழிபடுவதால் பல ஜென்ம பாவங்கள் நீங்க முக்தி அடைவோம் என்றும் பௌர்ணமிகளில் புண்ணிய நீராடினால் இப்பிறவியில் சகல செல்வங்களுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்வும், புகழும், அறிவுத் தெளிவும், மன அமைதியும், அழகும், கிடைக்கும் கிடைக்கும்,  நம் சந்ததியினருக்கும் அழியாத செல்வம் நிலைக்கும் என்பது ஐதீகம்.  

பௌர்ணமியில் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுதல் வாழ்வில் சகல செல்வங்களையும் வழங்குவதோடு அம்மனின் பரிபூரண அருளை பெற்று தரும் என்பது ஐதீகம். மேலும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று அம்மனுக்கு விரதம் இருந்து மாலையில் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து பெண் குழந்தைகளுக்கு புத்தாடை தானம் செய்தல், செந்நிற பழங்களை தானமாக தருதல், செந்நிற மலர்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்தல் சிவப்பு திரியிட்டு நெய் விளக்கு ஏற்றுதல் போன்றவை சிறப்பான பலன்களைத் தரும். இதனால் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகி, கடன், தீராத நோய், முற்பிறவிப் பாவம் என அனைத்தும் நீங்கி அம்மன் அருளால் நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி பௌர்ணமி வழிபாட்டை அனைவரும் மேற்கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

🙏 திருச்சிற்றம்பலம் 🙏

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp