thai-amavasai

2023 தை அமாவாசை சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள் – what is Thai amavasai?

தை அமாவாசை சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள்

அமாவாசை மகிமை

பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன.  (அதே 15 திதிகள் வளர்பிறையிலும் உண்டு.) இதில் அமாவாசை திதி முக்கியமானது ஏனெனில், தை மாதத்தில் அமாவாசையன்று மகர ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்று கூடுகின்றனர். மேலும் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடைவதில்லை. ஆனால் மற்ற திதிகளில் நிச்சயம் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷத்திற்கு ஆளாகிறது. அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் பூமிக்கு ஒரே நேர்கோட்டில் இணைகிறது.  அவ்வாறு இணைவதால் பூமியில் ஒருவித காந்த சக்தி உருவாகி அதன் அதிர்வு நிலை உச்சத்தில் இருக்கும். அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகள் அதீத புத்தி கூர்மை உடையவராக விளங்குகின்றனர் என ஒரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

 அமாவாசையன்று எந்தச் செயலைச் செய்தாலும் அது வெற்றி பெறுகிறது. இதனாலேயே நமக்கும் நம் சந்ததியினருக்குமான நன்மையைத் தேடிக்கொள்ளவும், மூதாதையர்களை மகிழ்விக்கும் விதமாகவும் அமாவாசையன்று பிதுர் வழிபாடு செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.  இம்மைக்கும் மறுமைக்குமான புண்ணிய காரியங்கள் செய்ய மிகவும் ஏற்ற நாளாக அமாவாசை கருதப்படுகிறது. எனவேதான் சித்தர்கள், ரிஷிகள், மகான்கள் போன்றோர் அமாவாசையன்று சிறப்பாக இறைவழிபாட்டை மேற்கொண்டனர். பூவுலகில் உள்ள சித்தர்கள் அனைவரும், சித்தர்கள் பூமியான சேலம், கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமாவாசை அன்று அருவமாக வந்து வழிபாடு செய்வதாக இன்றும் நம்பப்படுகிறது. இக்கோவில் அமாவாசைக் கோவில் என்றே போற்றப்படுகிறது. ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக்கான பரிகாரங்களையும், களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றிற்கான பரிகாரங்களையும் அமாவாசை அன்று செய்வது சிறப்பான பலனைத் தரும்.

alayatra-membership1

தை அமாவாசை சிறப்பு:

பொதுவாக அனைத்து அமாவாசையும் சிறப்பானது என்றாலும், தட்சிணாயண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பிதுர் லோகத்தில் உள்ள நமது மறைந்த முன்னோர்கள் பூவுலகத்திற்கு திரும்பி வருவதாகவும், புரட்டாசி மாத மகாளாய பட்ச அமாவாசையன்று நம்முடனே இருப்பதாகவும், உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் முதல் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக நம்பப்படுகிறது. 

எனவே நமது மூதாதையர்கள் நம்மிடம் விடைபெற்று பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளன்று தர்ப்பணம் செய்து அவர்களை மகிழ்வித்தால் 21 தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் சகல தோஷங்களும் நீங்கி காரிய வெற்றிகள் உண்டாகும். அவ்வாறு பித்ருக்களுக்கு தர்ப்பணம்  செய்யாதவர்கள் தங்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன‌ என்றும், ஜாதகத்தில் ராகு கேது தோஷங்கள் தோன்றுகின்றன என்றும் காரியத்தடைகளும் அகால மரணங்ககளும் ஏற்படுகின்றன என்றும் கருடபுராணம் கூறுகிறது.

பித்ருக்கள் என்றால் யார்?

பித்ரு என்றால் இறந்து போன நமது முன்னோர்கள் என்று பொருள். தந்தை  மற்றும் தாய் வழியில் இறந்து போன அனைவருமே நமது பித்ருக்களே. நம்முடைய இந்த உடல், பொருள் ஆவி அனைத்தும் நம் முன்னோர்கள் அளித்ததே. எனவே அவர்கள் அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருளை  அனுபவிக்கும் நாம் அறியாமலேயே அவர்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலன்களையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். பித்ரு லோகம் என்பது, சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம். நமது முன்னோர்கள் நம்முடன் வாழும் போதே முன்னோர்களை மதித்து பசிக்கொடுமை இன்றிப்  பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதையே பிதுர்கடன் என்கின்றனர் பெரியோர். நமது பழமையான வாழ்வியல் நெறிகளில் மூதாதையர் வழிபாடு முக்கிய அங்கமாக இருந்துள்ளது. இதைத் திருவள்ளுவரும், நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். 

பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள் என்பது இயல்பானது. எனினும்

நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை ஒவ்வொரு அமாவாசை அன்றும் பூமிக்கு வந்து நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் தங்குவர் என்பது நம்பிக்கை. எனவே அன்றைய தினம் பித்ருக்களுக்கு படையலிட்டு அவர்களது பசியைப் போக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பசியுடனும் வருத்தத்துடனும் பிதுர்லோகம் திரும்பிச்செல்வர். இதனால் அவர்களது கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக நேரிடும். இந்த சாபம் இறையருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். இது ஜோதிடத்தில் ராகு கேது தோஷம் என்றும் வழங்கப்படுகிறது. 

ராகு தந்தை வழிப்பாட்டனாரைக் குறிக்கும் கிரகம். அதே போல கேது தாய் வழிப்பாட்டனாரைக் குறிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் முற்பிறவிகளில் அவர்களும், அவரவர் முன்னோர்களும் செய்த பாவ-புண்ணியக் கணக்கினைத் தெளிவாகக் காட்டுபவை. அதோடு அந்த பாவங்களைத் தீர்க்க முடியுமா முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்களாகும். அவரவர் செய்த புண்ணியங்கள் ஒருவரது ஜாதகத்தில் யோகங்களாகவும், பாவங்கள் தோஷங்களாகவும், அமைகின்றன. மற்ற கிரகங்கள் ஒருவரது வாழ்வில் நடக்கும் நன்மை தீமைகளை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தான் ஒருவரது வாழ்க்கையே எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கும் வலிமையுடையவை. 

ஒருவரின் சுகபோகங்களுக்கும் உறவுகளுக்கும் காரணமாவதால் ராகுவை போகக்காரகன் என்றும் ஞானம் மற்றும் முக்திக்கு காரணமாக அமைவதால் கேதுவை ஞானக்காரகன் என்றும் அழைக்கின்றனர். எனவே ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது மோசமான நிலையில் அமைந்திருந்தால் அவரின் தந்தை, தாய், சகோதரம், சுற்றம், நட்பு, படிப்பு, வேலை, திருமணம், மணவாழ்க்கை, குழந்தைப்பேறு, உடல் உபாதைகள், புகழ் என அன்றாட வாழ்க்கை முதல் அவரது மரணம் வரை அனைத்திலும் பிரச்சனைகள் வருகின்றன. 

இந்த பிதுர்தோஷம் இருந்தால் அவர்களால் குலதெய்வ வழிபாடு செய்ய இயலாது என்றும் சிலருக்கு குலதெய்வமே எதுவென்று தெரியாது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த தோஷம்  உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருந்தேதீரும். இத்தகைய பிதுர்தோஷம் நீங்காமல் மற்ற எந்தப் பரிகாரங்களைச் செய்தாலும் அவை பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர உச்சாடனங்களும் சித்தியடைவதில்லை. ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் மற்ற கிரகங்களும் தன்னுடைய பலனைத் தருவதில்லை.  குலதேய்வ வழிபாடும்கூட பலன் தருவதில்லை.  எனவே தை அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கி அவர்களின் ஆசியை முழுமையாக அடைந்து நன்மை பெருவோம்.

thai-amavasai-benefits

தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள்:

“ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை” என்று பகவான் கிருஷ்ண பரமாத்மா  கூறியுள்ளார் எனவே பித்ரு தர்ப்பணம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாய் தந்தையர் இறந்த தேதி திதி தெரியாதவர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை அன்று திதி கொடுக்க வேண்டும்.

அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் புனித நீராட வேண்டும். தாய் தந்தையரை இழந்தவர்கள் கட்டாயம் நீராட வேண்டும்.   அவ்வாறு கடல் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடி முழங்கால் அளவு நீரில் சூரியனை நோக்கி நின்று சூரியனை வணங்கி  குலம் கோத்திரம் சொல்லி, 21 தலைமுறை முன்னோர்களை நினைத்து, மூன்று முறை நீரைக் கைகளில் எடுத்து, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் என மூன்று தலைமுறையினரின் பெயரையேனும் கூறி கையில் எடுத்த நீரை சூரியனுக்கு சமரப்பித்து கீழே விடவேண்டும். இதை  அர்க்கியம் என்று கூறுவர். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல் வழக்கும் உண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குகிறார் என்றும் அந்த தேவதைகள் நம் பிதுர் கடனை மறைந்த முன்னோரிடம் சேர்க்கின்றனர் என்றும் நம்பப்படுகிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் தந்தை ஸ்தானத்தில் உள்ள சூரியனின் அருளையும் பூரணமாகப் பெறலாம்.  

அமாவாசை வழிபாட்டு முறைகள்:

அமாவாசையன்று அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் விளக்கேற்றி சைவப்படையலுக்குத் தேவையானவற்றை சமைக்க வேண்டும். பின் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பச்சரிசி சாதம் எள் கலந்து 6 உருண்டைகள் செய்து தர்ப்பை, துளசி தீர்த்தம் தெளித்து முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.  தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டிற்கு வந்து மறைந்த முன்னோர்களின் உருவப்படத்தை வீட்டின் வடகிழக்கு திசையில், தெற்கு பார்த்தவாறு வைத்து சந்தனம், குங்குமம் துளசி,மலர் மாலையால் அலங்கரித்து, விளக்கேற்ற வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து தலை வாழை இலைப் படையல் போட்டு, எச்சில் படாமல் சமைத்த உணவு மற்று அவர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைத்து பூஜை செய்ய வேண்டும். பின் காகத்திற்கு அந்த படையலை வைத்து காகம் உணவெடுத்த பிறகே நாம் உண்ண வேண்டும். நம் முன்னோர் காகம் வடிவில் பூமிக்கு வருகின்றனர் என்பது ஐதீகம். 

காகத்துக்கு உணவு படைப்பது ஏன்?

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது

தை அமாவாசை அன்று தானம் தரவேண்டிய பொருட்கள்:

அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பிறகு நம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக பசுவுக்கு அகத்திக்கீரை, கோதுமை தவிடு மற்றும் பழம் தானம் செய்வது, ஏழைகளுக்கு உணவு மற்றும் புத்தாடை தானம் செய்வது, தூய்மை பணிசெய்வோர், தாய்-தந்தை இல்லாதவர்கள் ஆகியோருக்கு தானம் வழங்குதல் சிறப்பானதாகும். 

இந்த தை அமாவாசை சனிக்கிழமையில் வருவதால் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், நல்லெண்ணெய், கருப்பு ஆடைகள் ஆகியவற்றை தானம் அளித்தால் மிகவும் நல்லது. அன்னதானம்,

கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த பானம் கொடுப்பது மிகவும் சிறந்தது.

அரிசி, பருப்பு, நெய், காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, பார்லி, புத்தாடைகள், காலணி, கால்நடைகள் ஆகியவற்றைத் தன் சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூற வேண்டும்.

தை அமாவாசை அன்று செய்யகூடாத செயல்கள்:

அமாவாசை நாட்களில் நாம்‌ செய்யும் செயல்களின் பலன் பலமடங்காக கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவேதான் அமாவாசை அன்று மந்திர உச்சாடனங்கள் செய்கின்றனர். எனவே ஒருபோதும் அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை, உடல் குறைபாடுகள் உள்ளவர்களை மற்றும் தூய்மைப்பணி செய்பவர்களை  அவமதிப்பதோ துன்புறுத்துவதோ கூடாது. ஏனெனில் அத்தகைய மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார் என்பது ஐதீகம். எனவே அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலமும் சனி பகவானின் ஆசியை பெறலாம்.

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையிலும், கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் செய்யும் அன்றாட பூஜைகளை செய்யக்கூடாது. ராகுகாலம், எமகண்டத்தில் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணம் செய்யும் நாளில் வாசலில் கோலம் போடக்கூடாது. வீட்டில் சண்டை சச்சரவு செய்யக்கூடாது. 

தை அமாவாசை அன்று வழிபட வேண்டிய தலங்கள்:

முக்கடல் கூடும் இடங்கள், புனித நதிகள், மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடலாம். குறிப்பாக, காசி, ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திலதர்பணபுரி, பவானி கூடுதுறை, கொடுமுடி, பேரூர் ஆகிய திருத்தலங்கள் முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் சிறந்த தலங்களாகும். இங்கு செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள நீர்நிலைக் கோவில்களிலோ வீட்டிலேயோ தர்ப்பணம் தரலாம்.

தை அமாவாசை சிறப்பு வழிபாடுகள்:

புனித நதிகள், கடல்கள் போன்ற நீர்நிலைகள் உள்ள கோவில்களில் அனைத்திலும் தை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சித்தர்கள் கோவில்களில் அமாவாசை வழிபாடு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக, இராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு தை அமாவாசை தினத்தன்றும் சுவாமி மற்றும் அம்மன் உற்சவர் திருமேனிகள் அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர் முக்தி அடையஸவேண்டி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் தீபம் ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோவிலில் அபிராம பட்டருக்காக அன்னை அபிராமி அமாவாசை அன்று முழு நிலவை வானில் தோன்ற வைத்ததை நினைவுகூறும் விதமாக சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னை எழுந்தருளும் உற்சவம் நடக்கிறது.

தை அமாவாசை கடைபிடிப்பதன் பலன்கள்:

அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் தர்ப்பணமானது, நம்முடைய சந்ததியினருக்கு மிகப்பெரிய நன்மைகளைப் பெற்றுத்தரும். ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களும் நீங்கும். காரியத் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதிலும் வெற்றி ஏற்படும். தொடர்ந்து நடக்கும் விபத்துகள் துர்மரணங்கள் போன்ற பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். திருமணத்தடை நீக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வம்சாவளியாக வரும் நோய் தீரும்.

பித்ரு தோஷம் நீக்கும் தை அமாவாசை வழிபாடு செய்து அனைவரும் பயன்பெற இறைவனை வேண்டுகிறோம்.

திருச்சிற்றம்பலம்

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp