kabalishwarar-temple-mylapore-chennai

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்

Table of Contents

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்

“கயிலையே மயிலை” “மயிலையே கயிலை” என்று போற்றப்படும் திரு‌மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 257 வது தலமாகும். இத்தலம் வேதகாலத்தில் பிரம்மனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட தலமாகும். முற்காலத்தில் செல்வச் செழிப்பு மிக்க கடற்கரை நகரமாக இருந்த இங்கு வணிகம் நன்கு வளர்ந்து, உலகப் புகழ்பெற்று விளங்கியது. இந்நகரத்தின் மத்தியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் பல்லவர்களால் 7ஆம் நூற்றாண்டில் கற்கோவிலாக எழுப்பப்பட்டது. பின் போர்த்துக்கீசியர்கள் படையெடுப்பின் பிறகு(கி.பி.1566) சிதைக்கப்பட்டது. தற்பொது உள்ள திராவிடக் கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடிய கோவில் 300 ஆண்டகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பெயர்க்காரணம்: 

கபாலீச்சரம்– முக்காலத்தில் பிரம்மதேவன் கயிலாயம் சென்றபோது சிவனுக்கு தக்க மரியாதை தர தவறினார். தானும் ஐந்தி முகன் தான்.எனவே சிவனை வணங்கத் தேவை இல்லை என, ஆணவம் கொண்டார். படைப்புத் தொழில் செய்பவர் அகங்காரத்துடன் இருக்கக் கூடாது என்பதால், அவரது ஆணவத்தை அழிக்க எண்ணிய ஈசன் பிரம்மனின் நடுச்சிரத்தைக் கிள்ளி கையில்  ஏந்தினார். எனவே இத்தல இறைவன் கபாலீசுவரன் என்று அழைக்கப்படுகிறார்.  இத்தலம் கபாலீசுவரம் என்றும் பெற்றது.

திருமயிலை- இத்தலம் முன்பு மயில்கள் ஆர்த்தெழுந்து (நிறையப் பெருகி) இருந்த அடர்ந்தவனமாக இருந்ததால், ‘மயில் ஆர்ப்பூர்’ என்று பெயர்பெற்றது. பின்பு வழக்கு மொழிரில் மயிலாப்பூர் என்றானது. மேலும் அன்னை பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததார். அதனால் இத்தலம் திருமயிலை என்று வழங்கப்படுகிறது. வேண்டிய வரங்களை தரும் மரமாகவும் பார்வதியே இருப்பதால் இத்தல இறைவி கற்பகாம்பிகை என்ற நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

alayatra-membership1
mylapore-kabalishwarar-temple-chennai

சுக்கிரபுரி- மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக பெறும் போது, விஷ்ணுவின் சூழ்ச்சியை அறிந்த சுக்கிரன் வண்டாக மாறி மாபலியின் கமண்டலத்தில் நீர் வார்க்கும்குழாயை அடைத்துக்கொண்டார். இதை அறிந்த வாமனன் தர்பை புல்லை எடுத்து கமண்டலத்தின் நீர் குழாயை குத்தும்படி மாபலிக்கு ஆலோசனை கூறினார். அவ்வாறு செய்தபோது வண்டாக இருந்த சுக்கிரனின் கண்ணில் தர்பை புல் குத்தி பார்வையை இழந்தார். தானம்‌செய்வதைத் தடுத்த பாவந்தால் கண்ணை இழந்த சுக்கிரன் கபாலீஸ்வரரை வணங்கி மீண்டும் பார்வை பெற்ற தலம் இது என்பதால் சுக்கிரபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மபுரி- ஆணவத்தால் தன் ஐந்தாவது முகத்தையும் படைப்புத் தொழிலையும்‌ இழந்த பிரம்மன் இத்தலம் வந்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட கோவிலுக்கு எதிரே ஒரு நீர்த்த குளத்தையும் உருவாக்கினார். இத்தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இவ்வாறு பலகாலம் சிவனை நோக்கி தவம் செய்து தன் ஆணவம் அழிந்து மீண்டும் படைப்புத் தொழிலை பெற்றார்.  எனவே‌ இத்தலம் ‌பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் நான்மறைகளும் இத்தல இறைவனை பூசித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்றது. 

வரலாற்றில் மயிலாப்பூர் 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்(கி.பி.90-168) இந்தியா வந்த தாலமி என்னும் கிரேக்கப் பயணி இந்த ஊரை மல்லியார்பா எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மயில்களின் வாழ்விடம் என்று பொருள். 

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் வரலாறு:

பார்வதி தேவி மயிலாக தவமிருந்த வரலாறு:

பார்வதி தேவி ஒருமுறை ஈசனிடம் ஐந்தெழுத்தின் பொருளையும் திருநீற்றின் சிறப்புகளையும் உபதேசிக்கும்படி வேண்டினார். சிவபெருமானும் பஞ்சாக்ஷர விளக்கத்தை உபதேசிக்கத் துவங்கினார். அதுபோது திருக்கயிலாய நந்த வனத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடியது. அன்னையின் கண்ணில் மயில் படவே அவரின் கவனம் சிதறியது. கோபமுற்ற சிவபெருமான், நீ பூதலத்தில் மயிலாகப் பிறப்பாய் என சபித்தார். அவ்வாறு மயிலாகப் பிறந்த அன்னை பார்வதி ஈசனின் பிரிவைத்தாங்காமல் பாவ விமோசனம் வேண்டி, மயில்கள் நிறைய வாழும் கபாலீச்சரம் என்ற திருத்தலம் சென்று அங்கு இருந்த கற்பகத்தருவாம் புன்னை மரத்தடியில் இருந்து கபாலீஸ்வரரை நோக்கித் தவம் புரிந்தார்.

தேவியின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவர் முன்பு தோன்றி சாப விமோச்சனம் அளித்தார். மேலும் தன்னை போலவே இத்தலம் வந்து இறைவனை தரிசித்து வன்னி மரத்தடியில் நின்று யார் வேண்டிக்கொண்டாலும் அவர்களுக்கு கேட்டதை அருள வேண்டும் என்று கபாலீஸ்வரரை கேட்டுக்கொண்டார். அவ்வாறே இன்றும் பக்தர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் பெருமானாக இத்தல இறைவன் விளங்குகிறார்.

kabalishwarar-temple

பூம்பாவைக்கு உயிர் தந்த கபாலீஸ்வரர்:

முற்காலத்தில், சிவனேசர் என்பவர் சைவ நெறிப்படி சிவபக்தி சீலராக வாழ்ந்து வந்தார். அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். அவளை சிவனடியாரான சம்பந்தருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசை கொண்டார்.. ஆனால் அப்பெண் ஒரு நாள் பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். சிவநேசரால் தன் மகளின் இறப்பை தாங்க இயலவில்லை. அவளது அஸ்தியை கங்கையில் கரைக்க மனமின்றி வீட்டிலேயே வைத்திருந்தார். அப்போது சம்பந்தர் திருமயிலை வந்திருந்தார். புத்திர சோகத்தில் இருந்த சிவனேசர் இதைக் கேள்விப்பட்டு சம்பந்தரை சந்திக்க ஓடிவந்தார்.  நிகழ்ந்த அசம்பாவிதத்தை கூறி பூம்பாவையின் அஸ்தியை அவரிடம் கொடுத்து, உங்களின் மணமகளாக இருந்திருக்க வேண்டிய என் பெண் பிடிசாம்பலாய் ஆகிவிட்டாள் அய்யனே என்று கதறி அழுதார். 

சிவநேசரைக்கண்டு உள்ளம் கலங்கிய சம்பந்தர் பூம்பாவையின் அஸ்தியை அவரிடம் இருந்து வாங்கி மயிலை கபாலீசுவரர் முன் வைத்து, மனமுருகி தேவாரப் பதிகம் பாடினார். கருணாசாகரமூர்த்தியான சிவபெருமான் சம்ந்தரின் பாடலுக்கு இறங்கி பூம்பாவைக்கு மீண்டும் உயிர்தந்தார். இதற்கு சான்றாக இன்றும் ஆலயத்தில் பூம்பாவைக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மேலும் திருத்தல நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுதைச்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்றது.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்:

7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட திருத்தலமாகும்.

*அப்பர், சுந்தரர் மற்றும் ஞானசம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். மேலும் இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

*அன்னை பார்வதி இத்திருத்தலத்தில் மயில் உருக்கொண்டு காபலீசுவரரைப் பூசித்ததால் இப்பகுதி மயிலாப்பூர் என்று பெயர்பெற்றது.

*முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் முன்பு, இத்திருத்தல  இறைவன் கபாலீஸ்வரரை நோக்கி தவமிருந்தார்   சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து சக்தி வேல் வழங்கியதாக தலபுராணம் கூறுகிறது. 

வெற்றி பரிசாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார் சீதனமாக அவரது வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானையையும் வழங்கினார். வள்ளி  தெய்வானை இருவரும் யானை மீது அமர்ந்த கோலத்தில் அருள்புரிவது வேறெந்த தலத்திலும் இல்லாத சிறப்பாகும். 

*பிரம்மன் இத்தல இறைவனை பூசித்து தனது பாவங்கள் நீங்கப் பெற்றார்

*இராமபிரான் இத்தலத்தில் தங்கியிருந்து  திருவிழா நடத்தியதாக புராணங்கள் கூறுகின்றன.

*திருஞானசம்பந்தரின் பாடலுக்கு இறங்கி சாம்பலான பூம்பாவைக்கு இறைவன் மீண்டும் உயிர் தந்ததலம்.

*அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனாரும் பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வாரும்  அவதரித்த திருத்தலம்.

*பொய்யாமொழிப் புலவரான வள்ளுவர் தோன்றிய தலம்.

தல விருட்சம் – புன்னை மரம்.

தல தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம்.

இது கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம் என்று பல பெயர்களாலும் வழங்கப்படுகிறது.

kabalishwarar-temple-chennai

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் திருக்கோவில் அமைப்பு:

இராஜகோபுரம் மற்றும் தெப்பக்குளம்:

இத்தலத்தில் ஏழு நிலை கொண்ட 120அடி  இராஜகோபுரம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு கோபுரம் நான்கு நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரத்திற்கு அருகே கற்பக விநாயகர் அருள்பாலிக்கிறார். கோபுரத்தை கடந்தால் உள்ளே பிரகாரத்தில் இடதுபுறம் திருஞானசம்பந்தர் மற்றும் அஸ்தியிலிருந்து உயித்தெழுந்த பூம்பாவை சன்னதிகள் அமைந்துள்ளன. 

மேற்கு கோபுரத்திற்கு எதிரே தீர்த்த குளமும் அதன் மத்தியில் 16 கால் நீராழி மண்டபமும் அமைந்துள்ளன. இந்தக் குளம் 190 மீ நீளமும், 143 மீ அகலமும், 119,000 கன மீட்டர் நீரை சேமிக்கும் அளவு ஆழமும் கொண்ட பிரம்மாண்டமான தெப்பக்குளமாம். இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது விசேஷம். தீர்த்த குளத்தின் நாலாபுறமும் சுவாமி பவனிக்காக நான்கு மாட வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெப்ப உற்சவத்தின் போது உற்சவ மூர்த்திகள் இக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த தெப்பகுளத்தை விரிவுபடுத்த 18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப் நிலம் வழங்கினார்.  இதற்கு நன்றிக்கடன் செலுத்த சமய நல்லிணக்கத்தை போற்றும் வகையில், மொகரம் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் இக்குளத்தைப் பயன்பாடுத்த அனுமதிக்கப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் பிரகாரம்:
இராஜகோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் திருக்கோவில் பிரகாரம் அமைந்துள்ளது . பிரகாரத்தில் இடது பறம் உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார்  அருள்பாலிக்கிறார். நர்தன கணபதி சன்னதி அமைந்துள்ளது. இவரே இத்தல விநாயகராவார். அவரை வணங்கி முன்னேற ஜகதீஸ்வரர் ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்ஆலயம் அமைந்துள்ளது.  பிரகாரத்தின் தெற்கு மூலையில் நின்று பார்த்தால் இராஜ கோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். 

அடுத்து தலவிருட்சம் புன்னை மரம் உள்ளது. அருகே கேட்ட வரம் கேட்டபடி அருளும் புன்னை வன நாதர் அருள்பாலிக்கிறார். அங்கே அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வரலாறு  கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் மடப்பள்ளி , அன்னதானக்கூடம், கோசாலை ஆகியவையும் அமைந்துள்ளது. வடகிழக்கில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். மேலும் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் பழநி ஆண்டவர் சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் நவக்கிரகங்களும் பைரவர் சன்னதியும் உள்ளது.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மண்டபங்கள்: 

அடுத்து திருமுறை மண்டபம் காணப்படுகிறது. பங்குனித் திருவிழாவின்போது  கபாலீஸ்வரர் இங்கு தான் எழுந்தருளுகிறார். அதன் எதிரே நவராத்திரி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் அன்னை கற்பகாம்பாள் நவராத்திரி கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அடுத்து இத்தலத்தில் அவதரித்த அருள்மிகு வாயிலார் நாயனார் சன்னதி அமைந்துள்ளது. அடுத்து சதுர்வேத மண்டபம். வெள்ளி கிழமைகளில் அன்னைக்கு இங்குதான் ஊஞ்சல் சேவை நடைபருகிறது. மேலும் சிறப்பு நாட்களில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பிகையும் சப்பரத்தில் உலா வரும்போது இம்மண்டபத்தில் சிறப்பு ஆரத்தி காட்டப்படுகிறது. மேற்கு மற்றும் வடக்கு மண்டபத்தில் யானை, யாழி, மயில், நாகர், ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு. குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோபுர தரிசனம்: 

பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் மிகப்பெரிய ஆலயமணி அமைந்துள்ள இடத்தில நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் விமானகோபுரம், மூலவர்  விமானகோபுரம், சிங்காரவேலர் விமானகோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களையும் தரிசிக்கலாம்.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் உட்பிரகாரம்: 

மேற்கு கோபுரத்திற்கு உள்ளே நெடிதுயர்ந்த கொடிமரம் காணப்படுகிறது. தொடர்ந்து பலிபீடமும் நந்திமண்டபமும் காணப்படுகிறது. அவற்றை தாண்டி கபாலீஸ்வரர் மூலவர் சன்னதியின் உட்பிரகாரத்தில் உள்ளே நுழைந்தால் நடராஜர், சந்திரசேகரர், சிங்காரவேலர் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவர் திரு மேனிகள் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகிய கோஷ்ட தேவதைகளும் சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலவர்:

கோயிலின் மேற்கு கோபுரத்தின் எதிரேதான் இத்தல இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார், பொதுவாக மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கருவறைக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே சிவனைபார்த்தபடி திருஞானசம்பந்தரும், திருவுருவம் அமைந்துள்ளது. துவார பாலகராகளைக்கடந்து மூலவர் கபாலீஸ்வரரை கண்குளிர தரிசித்து பிறவிப் பயனை அடைவோம்.

கற்பகாம்பிகை சன்னதி:

மூலவரை தரிசித்து விட்டு வெளியேறினால் வர கருவறைக்கு வலது புறம் அன்னை கற்பகாம்பாள் தனிவிமானம் கொடிமரத்துடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகைக்கு எதிரே நந்தி தேவருக்கு பதில் சிம்மவாகனம் இருப்பது இத்தல சிறப்பாகும்.

சிங்காரவேலர் சன்னதி:

இங்குள்ள முருகப்பெருமான்‌ பிரமாண்டமான விமானத்துடன் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்களுடன் கூடிய தனிச்சன்னதியில், அசுர மயில் வாகனத்துடன் சிங்கரவேலராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கெனத் தனி கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்து முருகனைப் புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 10 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார். முருகனுக்கு எதிரில் அருணகிரிநாதருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்: 

தினசரி திருத்தலத்தில் அபிஷேகம், அலங்காரம், நைவேதனம் மற்றும் தீப ஆராதனையுடன் ஆகமவிப்படி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை மற்றும் அம்மனுக்கு உகந்த வெள்ளிகிழமை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் அந்தந்த மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வெள்ளி கிழமைகளில் கற்பகாம்பாள் தங்க காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

மாதந்தோரும் பௌர்ணமி நாட்களில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் தமிழ் மாத முதல் நாள், பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, கிருத்திகை, ஷஷ்டி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இது தவிர வருடத்திற்கு நான்கு விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாதம் பவுர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு 10 நாள் பங்குனி உற்சவம், நவராத்திரி, கந்தர் சஷ்டி, திருவாதிரை விழா ஆகியவையாகும். 

kabaleeshwarar-mayilapur

கபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா: 

பங்குனி உற்சவத்தின் அங்கமாக கொடியேற்றம், பிரம்மோற்சவம், அறுபத்திமூவர் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யாணம் ஆகியவை கோலாகலமாக நடைபெருகின்றன. இந்த ஆண்டு பங்குனி உற்சவம் 16.4.2024 அன்று முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. மூன்றாம் அதிகார நந்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும். ஐந்தாம் நாள் நள்ளிரவில் ரிஷப வாகன சேவை நடைபெரும். ஏழாம் நாள் காலை தேர்த்திருவிழா நடைபெறும்.

கபாலீஸ்வரர் திருத்தேர் சுமார் 13 மீட்டர் உயரம் கொண்டது. இறைவன் இத்தேரில் பவனி வரும்‌போது  அறுபத்துமூவர் உற்சவ மூர்த்திகளும் நான்கு மாட வீதிகளில் இறைவனுக்கு பின் ஊர்வலமாக வருகின்றனர். இதுவே அறுபத்து மூவர் திருவிழா என்று வழங்கப்படுகிறது. எட்டாவது நாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பிரமன் தேரோட்ட, கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் சிம்மாசனத்தில் வில் ஏந்தி, அமர்ந்த நிலையில் வலம் வருவர். விழாவின் ஒன்பது நாட்களும் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் இறைவன் இறைவி இருவரும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர் 

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்:

சிவனும் பார்வதியும், விஷ்ணு, பிரமன், வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் ஆனந்தநடனக்காட்சி அருளிய நாளே தைப்பூசத் திருநாளாகும். இந்நாளில் கபாலீஸ்வரரை தரிசித்தால், பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம் விழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும் என்பத திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம். தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார்.

பூசத்தன்று கபாலீஸ்வரருக்கு செய்யப்படும் தேன் அபிஷேகத்திற்கு தேன் கொடுத்தால் மன அமைதி கிடைக்கும். இந்நாளில் இத்தல முருகனை தரிசிக்க பகை அழிந்து வெற்றி உண்டாகும். செல்வமும் புகழும் ஒருங்கே கிடைக்கும்.

கபாலீஸ்வரரை வழிபடுவோர்க்கு மனநிம்மதியும்  ஞானமும் கிடைக்கும். பாவ விமோசனம் கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வணங்கினால் எல்லாப் பிணிகளும் குணமடைந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.

கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

குழந்தைபாக்கியம், தாலிபாக்கியம் வேண்டி தல விருட்சத்தில் மஞ்சள் கயிறு மற்றும் தோட்டில் கட்டி பெண்கள் சிறப்ப வழிபாடு செய்கின்றனர்.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம் மற்றும் பூஜைகள்.

வேதாகமப்படி ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கோவில் தினசரி காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்
மாலை 4 மணி முதல் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.
(விழாக்காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது).

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்:

தமிழகத்தின் தலை நகரமாம் சிங்காரச் சென்னையின், சென்னைசென்ட்ரலில் இருந்து சுமார்  5.5 கிமீ தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும் மயிலாப்பூர் கடற்கரைக்கு அருகில் குட்சேரி சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கம்பீரமாக அமைந்துள்ளது திருமயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்.

அருகில் உள்ள விமான நிலையம்: சென்னை சர்வதேச விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்: சென்னை  மத்தியில் இரயில் நிலையம், மயிலாப்பூர் இரயில் நிலையம். 

அருகில் உள்ள பேருந்து நிலையம்: சென்னை மத்திய பேருந்து நிலையம், மயிலாப்பூர் பேருந்து நிலையம்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மயிலாப்பூர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

கற்பகாம்பிகை உடனமர் கபாலீஸ்வரர் திருக்கோவில் முகவரி:

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்,
வடக்கு மாட வீதி, மயிலாப்பூர்,
விநாயக நகர் காலனி, மயிலாப்பூர் ,
சென்னை , தமிழ்நாடு – 600004.
தொலைபேசி – +914424641670.

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp