thiruvarur-chariot-festival

ஆசியாவிலேயே மிக உயரமான ஆழித்தேர் -திருவாரூர்  தியாகராஜ சுவாமிகள் திருக்கோவில்

ஆசியாவிலேயே மிக உயரமான ஆழித்தேர் -திருவாரூர்  தியாகராஜ சுவாமிகள் திருக்கோவில்

பிறக்க முத்தி தரும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோவில் பங்கு உத்திரத் திருவிழாவின்‌ மிக முக்கியமான அங்கம் ஆழித்தேரோட்டம் எனப்படும் திருவாரூர் தேர் திருவிழாவாகும். பங்குனி உத்திரத் திருவிழாவானது ஆண்டு தோறும் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆழித்தேரோட்டமானது, “ஆரூரா தியாகேசா” என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை  முட்ட, பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திர நன்நாளில் சிறப்புற நடைபெரும். ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தேர்,  பெரிய கோவிலின் தேரோடும் நான்கு மாட வீதிகளில் உலாவரும்‌ அழகையும் ஒவ்வொரு வீதியில் அது திரும்பும் அழகையும் ‌காணக் கண் கோடி வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவானது பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஆழித்தேரோட்டமானது மார்ச் 21 ம் தேதி நடைபெறும்.

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தேரின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம்.

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தேரின் திருக்கோவில் சிறப்பு:

உலகெங்கும் உள்ள சிவாலயங்களில் மிக முக்கியமானதும் மிகப் பெரியதுமான சிவாலயம் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோவிலாகும். பஞ்ச பூத்த தலங்களில் மண் தலமான  இத்திருத்தலம் திருவாரூர் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரூர் எனப் பெயர் பெற்ற இத்தலம் ‌பாடல் பெற்ற சிவாலயம் உள்ள காரணத்தாலேயே திரு ஆரூர் ‌என்று அழைக்கப்படுகிறது.  கோவில், குளம், மாடவீதி மற்றும் தேரைப் பற்றியெல்லாம் தேவாரப்பாடல் பெற்ற ஒரே திருத்தலம்‌ என்ற சிறப்பு இத்திருத்தலத்திற்கு மட்டுமே உள்ளது. 5ஆம் நூற்றாண்டில் தேரைப்பற்றிய பாடல்‌ இயற்றப் பட்டுள்ளதால் இத்தலம் மற்றும் ஆழித் தேரானது அதற்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்தது எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

alayatra-membership1

திருவாரூர் தியாகராஜ சுவாமியின் திருப்பாதங்களை ஆண்டிற்கு இருமுறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திர திருவிழாவின் போது இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழாவின் போது வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சுவாமியின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும். சிதம்பர இரகசியம் போல இது ஆரூர் இரகசியம் என்று போற்றப்படுகிறது. இது போன்ற பல சிறப்புகள் நிறைந்த திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோவில் பற்றி மற்றொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

thiruvarur-chariot-festival

திருவாரூர் தேரின் வரலாற்று சிறப்பு:

முற்காலச் சோழர்களின் ஆரூர், ஆவூர், கருவூர், புகார், உறந்தை எனும் ஐந்து தலைநகரங்களுள் முதன்மையானதாக விளங்கிய இந்தத்  திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன்,  தேர்க்காலில் சிக்கி உயிர் நீத்த பசுங் கன்றுக்கு  நீதி வழங்க தன் சொந்த மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்றான். நீதி காத்த அந்த சோழப் பேரரசின் புகழை உலகில் நிலைநாட்ட  தலைநகரான திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் திருக்கோவிலின் வடகிழக்கில் கல்தேர் ஒன்றை சோழர்கள் நிறுவினர். அந்த கல்தேரை இன்றும் தியாகராஜ சுவாமி திருக்கோவில் அருகில் காணலாம். 

சப்தவிடங்க மூர்த்தங்கள்: ஆழித்தேர் பெயர்க்காரணம்

முசுகுந்தச் சக்கரவர்த்தி அசுர்களுக்கு எதிரான போரில் இந்திரனுக்கு உதவ தேவலோகம் சென்றார். அதற்கு கைமாறாக மகாவிஷ்ணு தனது நெஞ்சில் வைத்து பூஜித்த லிங்கத்தைக் கேட்டார். ஆனால் தேவர்கள் மட்டுமே பூஜை செய்யும் அந்த லிங்கத்தை ஒரு மனிதனுக்குக் கொடுக்க மனம் வராத இந்திரன் தேவ சிற்பியான மயனை வரவழைத்து தாம் வைத்திருந்த லிங்கத்தை போலவே போலி லிங்கம் தயார் செய்து முசுகுந்த சக்கரவர்த்திக்குக் கொடுத்தான். இந்திரனின் சூழ்ச்சியை முசுகுந்த சக்ரவர்த்தி அறிந்து சிவபெருமானிடம் முறையிட்டார். வேறு வழியின்றி தற்போது திருவாரூர் தியாகராஜ சுவாமி சன்னதியில் இருக்கும் மூல விடங்கரான திருமால் பூஜித்த லிங்கத்தையும் உடன் 6 லிங்கங்களையும் சேர்த்து சப்தவிடங்க மூர்த்தங்கள் சன்மானமாகக் வழங்கினான் இந்திரன்.

அந்த மூர்த்தங்களை பூமிக்கு கொண்டு வர தேவலோக ஸ்தபதியான பிரமனால் ஒரு தேர் செய்யப்பட்டது.  அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்த போது பல பொருட்கள்‌ வெளிப்பட்டன. அவற்றுள் சில தேவ விருட்சங்களும் அடங்கும். அவ்வாறு ஆழியில் இருந்து கிடைத்த தெய்வீக ஆற்றல் கொண்ட தேவதருக்களை கொண்டு மாயன் இந்தத் தேரை வடிவமைத்தார். அதனாலேயே இத்தேர் ஆழித்தேர் என்று அழைக்கப்பட்டது. மேலும் ஆழி என்ற சொல்லுக்குப் பழந்தமிழில் கடல், சக்கரம், பரந்து விரிந்த என்ற பல பொருள் உண்டு. எனவே பரந்து விரிந்த சக்கரங்களை உடைய தேர் என்ற குறிப்பிலும் திருவாரூர்த் தேரானது ஆழித் தேர் என்று அழைக்கப்படுகிறது. 

thiruvarur-azhi-ther-alayatra

பிரம்மன் செய்த ஆழித் தேரின் அமைப்பு: 

வேதகாலத்நில் 9 லட்சம் கிலோ எடையுடன் பிரம்மாண்டமாக மாயன் வடிவமைத்த ஆழித்தேரானது 10 தேர்க்கால்களைக் கொண்டிருந்தது. இந்தத் தேர்க்கால்களின் அச்சாக தேவர்களும் தேரின் அடித்தளமாக காலதேவனும் இருந்தார்கள். அஷ்ட திக் பாலகர்களும் 8 குதிரைகளாக இருந்தனர். தேர் பிரம்மனால் வடிவமைக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. உலகில் முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட அந்தத் தேரின் பேரழகு வார்த்தையால் விவரிக்க இயலாத அழகிய சிற்பங்களும்  ஓவியங்களும் தேவர்களையே மயக்கங்கொள்ள வைத்ததாம். இந்தத் தேரைக் கொண்டே ‘ரத ஸ்தாபன சாஸ்திரம்’ என்னும் புதிய இலக்கணமே  உருவானதாக ஐதீகம்.

சப்த விடங்க மூர்த்தங்களும் பூலோகம் வர உருவாக்கப்பட்ட இந்த ஆழித்தேரில் திரு மூர்த்தங்களுடன் சேர்த்து ஈசனை பூஜிக்க 70 வகை சிவ வாத்தியங்கள், ஈராயிரம் வகை தேவ மலர்கள், ஐந்து வகை புண்ணியத் தீர்த்தங்கள் என பல தேவ லோக வஸ்துகளும் கொண்டுவரப்பட்டன என திருவாரூர்ப் புராணம் கூறுகிறது.

தேவ லோகத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஆழித்தேர் பூமியில் நல்லூர் என்னும் புண்ணிய தலத்தை வந்தடைந்தது. 

முசுகுந்த சக்ரவர்த்தி நல்லூர் திருத்தலத்தின் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் சப்த விடங்க மூர்த்தங்களையும் மூன்று நாட்கள் வைத்து வழிபட்டார். பிறகு ஈசனின் ஆணைப்படி ஆழித்தேர் திருவாரூரை நோக்கிப் புறப்பட்டது. சப்த விடங்க மூர்த்தங்களின் மூல விடங்கரான தியாகராஜ பெருமான் முதன்முதலில்  ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் தான் ஆழித் தேரில் எழுந்தருளி  பவனி வந்தார். அப்போது முசுகுந்த சக்கரவர்த்தி, திருத்தேர் உலா வருகையில் பொன் மற்றும் வெள்ளி மலர்களை வாரி இறைக்குமாறு ஆணையிட்டாராம். அதனால் திருவாரூர் தேரோடும் மாடவீதிகள் நான்கும் பொன்பரப்பிய திருவீதிகள் என இன்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பல இலக்கியங்களில் இதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது திருவாரூரில் தங்கி இருந்து ஆழித்தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை நடத்துகின்றனர் என்றும், பிரம்மன் தேரை செலுத்துவதாகவும், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆழித்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஈசன் தியாகேசப் பெருமானையும் பூலோக அதிசயமான இத்தேரையும் வணங்குவதாக  ஐதீகம்.

விக்கிரம சோழன் என்ற சோழ மன்னன் காலத்தில் இந்த தேரானது ஓடாமல் நின்று போனது. பின் திருவாரூரச் சேர்ந்த ருத்ர கணிகை கொண்டி என்பவள் ஓடவைத்தாள் என்ற தகவல் தல வரலாற்றில் கிடைத்துள்ளது.

தற்போதைய திருவாரூர்  ஆழித்தேர் அமைப்பு:

திருவாரூர் தியாகராஜசுவாமி திருத்தலத்தின் பழமையான ஆழித்தேர் 1927ம் ஆண்டு தேரோட்டத்தில் நடந்த தீ விபத்தில் முற்றிலும் சிதைந்து போனது. பின்பு 1930இல் கடின முயற்சி செய்து புதிய தேர் கட்டப்பட்டது. 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட இந்த புதுத் தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  நான்கு நிலைகளை உடைய இத்தேரின் முன் பகுதியில் 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 தூண்களும், 4 வேதங்களை குறிக்கும் விதமாக 4 குதிரைகளும் பிரமன் சாரதியாக இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. 30 அடி உயரம் 30 அடி அகலம் கொண்ட ‘மரத்தேர் நிலை’, 48 அடி உயர (மரத்தேர் நிலையிலிருந்து விமான கலசம் வரையிலான இரண்டாம் நிலை) வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்படும் ‘நிலை வரை’, 12அடி ‘விமானம், 6 அடி ‘தேர் கலசம்’ என நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது. திருவாரூர் தியாகேசப் பெருமான் நான்காவது நிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பூதப்பார், சிறு உருதளம், பெரிய உருதளம், நடகாசனம், விமாசனம்,  தேவாசனம், சிம்மாசன பீடம் என்னும் ஏழு அடுக்குகளைக் கொண்டது. 

அழகிய கலை வேலைப்பாடுகள் பொருந்திய இத்தேரின் கலசத்தில் 2 வெள்ளிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் தேரின் நான்கு இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் ப்ரேக் தொழில்நுட்பம்  பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழித் தேரினை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளமும் 21 அங்குலம் சுற்றளவும் கொண்டதாகும்.

திருவாரூர் ஆழித்தேர் பவனி:

தேர் பீடத்தை மூங்கில் கழிகள் மற்றும் பனைமரக் கட்டைகள், 500 கிலோ வண்ணசத் துணிகள்‌, சிறு சிறு சிற்பங்கள், ஆலவட்டங்கள், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கின்றனர். திருத்தேரானது உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. தேரோட்டத்தின் போது தியாகராஜர் எழுதருளி வலம்‌ வரும் இந்த பிரம்மாண்டமான ஆழித்தேரின் முன் விநாயகர் தேர் முதலாகவும், சுப்பிரமணியர் தேர் இரண்டாவதாகவும் வரும். மூன்றாவதாக நடுநாயகமாக ஆழித்தேரும் அதன் பின் நீலோத்பல அம்பாளின் தேரும் கடைசியாக சண்டிகேஸ்வரர் தேரும் பவனி வரும். தியாகராஜப் பெருமான் முன் இருவரும், பின் இருவருமாகச் சேர்த்து பஞ்ச மூர்த்தியாக பவனி வருகிறார். தேர்த்திருவிழா நடைபெறும் மூன்று நாட்கள் முன்னதாக தியாகேசர் அஜபா நடனம் ஆடி திருத்தேரில் எழுந்தருளுகிறார்.

முற்காலத்தில் சுமார் 12,000 பேர் கொண்டு ஆழித்தேர் இழுக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. யானைகளும் தேரை இழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்பு 1988 ல் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டு 2000 பேர் கொண்டு தேர் இழுக்கப்பட்டது.

தேர்த்தடம் பார்த்தல் – தேர் நிலைக்கு வருதல்

தற்போது 2 ஜேசிபி இயந்திரங்கள் தேரின் பின்னால் இருந்து சக்கரங்களை முன்புறம் தள்ளி விட மெதுவாக ஆடி அசைந்து அழகிய ஆழித் தேர் நிலையை விட்டுப் புறப்படுகிறது. ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பவர்கள் சிறந்த வாழ்க்கையும் முடிவில் சிவலோக பதவியும் பெறுவர் என்பது நம்பிக்கை. இந்த ஆழித்தேர் திருவிழா முடிந்த அடுத்த நாள் தேர்க்கால் தடம் பதிந்த இடம் முழுவதும் பக்தர்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் முறையிடுகின்றனர். இந்நிகழ்ச்சி “தேர்த்தடம் பார்த்தல்” என்று அழைக்கப்படுகிறது. 

தேர் பவனி துவங்கி மாடவீதிகளில் கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து, துவங்கிய இடத்திலேயே முடிப்பதை தேர் “நிலைக்கு வருதல்” என்கின்றனர்.

முன்பு தேர் நிலைக்கு வர மாத கணக்காகும். ஆனால் இப்போது நான்கு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஓரிரு நாட்களில் தேரை நிலைக்குக் கொண்டு வந்துவிடுகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான நகரும் தேரான திருவாரூர் கோவிலா ஆழித்தேரைக் காணவும் வடம்பிடித்து இழுக்கவும் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து திரளான பக்தர்கள் கூடுகின்றனர்.  

ஆழித்தேர் வீதிகளில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.  எனவே பக்தர்கள் ஒருமுறையேனும் திருவாரூர் தேர் திருவிழாவை நேரில் கண்டுகளித்து ஆரூரன் அருள்பெற அன்புடன் வேண்டுகிறோம்.

🙏திருச்சிற்றம்பலம் 🙏

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp