vaikunda-egathasi-fasting-pooja-benefits

2023 vaikunda ekadesi pooja & benefits – வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்-வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை

வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்-வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை

வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன பெயர் காரணம் என்ன? 

ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது முன்னோர்கள் வகுத்துள்ளனர். எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு வழங்கும் விதமாக ஏகாதசி விரதத்தை கடைபிடித்தனர் நம் முன்னோர்கள். உண்ணா நோன்பிருக்கும்போது உடல் தன்னைத்தானே தூய்மை செய்துகொள்கிறது. மேலும் மனம் அமைதியடைகிறது.

பிரதி மாத ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் இருப்பினும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. பீஷ்மர் இந்த தினத்தில் முக்தி அடைந்ததால் இது பீஷ்மர் ஏகாதசி என்றும் உத்பன்ன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. 

alayatra-membership1

இந்த தினத்தில் தான் காக்கும் கடவுளான திருமால் தன் இருப்பிடமான வைகுண்ட வாயிற் கதவுகளை மது, கைடபன் ஆகிய அசுரர்களுக்காக திறந்ததாக நம்பப்படுகிறது. 

Aandaal

முரனாசுரனை வீழ்த்த ஏகாதசி பிறந்த கதை

கிருதாயுகத்தில் முரன் என்றொரு அசுரன் ஆணவத்தால் அக்கிரமம் செய்துகொண்டிருந்தான்.  அவனை அழிக்க நினைத்த மகா விஷ்ணு மாபெரும் யுத்தம் நிகழ்த்தினார். முரனின் படைகள் எல்லாம் அழிந்தன. அவன் மனம் மாற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த விஷ்ணு பத்ரிகா ஆசிரமத்தில் உள்ள குகை ஒன்றில் யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

உறக்கமும் விழிப்பும் இல்லா இறைவனின் இந்த நித்திரை பாவனையை அறியாத அசுரன்  இறைவன் உறங்குவதாக எண்ணி மகிழ்ந்தான். அறியாமையால் இப்போது இறைவனைத் தாக்கினால் அழித்துவிடலாம் என்று நினைத்து அவரை நோக்கி வாளை ஓங்கினான்.

அப்போது விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகிய பெண் வெளிப்பட்டாள். அவள் அசுரனை நோக்கி ஓர் ஓங்காரம் எழுப்பினாள். அந்த ஓங்கார ஒலியில் எழுந்த அக்னி அசுரனை பொசுக்கியது. இதைக்கண்டு மகிழ்ந்த விஷ்ணு, அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்டு அப்பெண் தோன்றிய இந்தத் திதியில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்’ என அருளினார். அன்று முதல் பெருமாளை வழிபட உகந்த நாளாக ஏகாதசி திதி மாறியது.

அசுரர்களுக்கும் வைகுண்டத்தில் இடம் தந்த இறைவன்

மது, கைடபன் ஆகிய அசுரர்கள் பகவான் விஷ்ணுவோடு யுத்தம் செய்து முடிவில் அவரின் பராக்கிரமத்தை அறிந்து அவரைச் சரணடைந்து தங்களுக்கு வைகுண்ட பதவி வேண்டும் என்று கேட்டனர். விஷ்ணுவும் மகிழ்ந்து சொர்க்க வாசலைத் திறந்து அவர்களை வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார்.

அப்போது, அவர்கள் “எங்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து அருளியது போன்றே இந்நாளில் யாரெல்லாம் தங்களின் ஆலயத்துக்கு வந்து உங்களை வணங்குகிறார்களோ அவர்களுக்கும் சொர்க்க வாசலைத் திறந்து வைகுண்டப் பதவியை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர். மகாவிஷ்ணுவும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் தந்தார்.

அதனாலேயே இன்றும் பெருமாள் ஆலயங்களில் மார்கழி ஏகாதசியன்று வைகுண்ட வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நுழைந்து சென்று வைகுண்ட வாசனான பெருமாளை கண்டு, தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது ஐதிகம்.

வைகுண்ட ஏகாதசி விழா

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமாக பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கி ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களில் “பகல்பத்து” என்றும் பிந்தைய பத்து நாட்களில் “இராப்பத்து” என்றும் இவ்விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி விழாவின்போது ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுருவங்கள் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறன.

ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ‘ரத்னாங்கி‘ எனப்படும் உடையில் ரங்கநாதர் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருப்பார். அப்பொழுது “பரமபத வாசல்”, சொர்க்க வாசல்” என்றெல்லாம் அழைக்கப்படும் வடக்கு வாயில் அதிகாலையில் திறக்கப்படும். இந்த நாளில் மட்டுமே திறக்கப்படும் இந்த சொர்க்க வாசல் வழியே சுவாமி உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும். இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் முறை

பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று திதிகளில் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்பது தான் முழுமையான விரத முறை. இந்த 2023 ம் ஆண்டின் முதல் நிகழ்வாக ஜனவரி 02 ம் தேதியே வைகுண்ட ஏகாதசி வருகிறது. 

முதல் நாள் விரதம் துவங்கும் முறை 

ஏகாதசிக்கு முதல் நாள் பகல் உணவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அதன் பின் விரதத்தை துவக்க வேண்டும். முழுமையான விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் அன்று இரவு பால் பழம் போன்ற எளிமையான உணவை எடுத்துக்கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 3 மணியளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரதமபத வாசல் திறக்கப்படும்.  இந்நிகழ்வை நேரில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் தொலைக்காட்சி நேரலையில் தரிசிக்கலாம்.

இரண்டாம் நாள் விரதம்

ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் குடிக்கலாம். தண்ணீரில் துளசி இலைகள் போட்டு தீர்த்தமாக பருகலாம். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள், வயதானவர்களாக இருந்தால் அவல், பொரி, கடலை, பழச்சாறு போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். அன்று மாலை அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும்.

ஏகாதசிக்கு கண்விழித்தல்

வைகுண்ட ஏகாதசி என்றாலே இரவு விழித்திருப்பது என்பது பிரசித்தம். உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்கள் ஏகாதசி அன்று உறங்காமல் இருந்து மட்டுமாவது பெருமாளை வழிபட வேண்டும். தமிழ் மறைகளான நாலாயிரம் திவ்யப் பிரபந்தப் பாராயணம் மற்றும் பஜனை செய்ய வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு நாமாவளி, ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாடிப் பெருமாளை வழிபடுவது விசேஷம். பாசுரங்கள் பாடத்தெரியாதவர்கள் ராமா, கிருஷ்ணா, நாராயணா என்று தெய்வ நாமங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. அல்லது “ஓம் நமோ நாராயணாய“ என்ற எட்டெழுத்து மந்திரத்தை மட்டுமாவது எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம். அதிகாலை வேளையில் ஹரிநாம ஜபம் செய்வதன் மூலம் பெருமாளின் அருளுக்குப் பாத்திரம் ஆகலாம். 

பாரனை – விரதம் முடிக்கும் முறை

மூன்றாம் நாள் அதாவது ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு, துளசி தீர்த்தம் அருந்தி, உப்பு – புளிப்பு இல்லாத உணவை சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து பற்களில் படாமல் கோவிந்தா கோவிந்தா’ என்று மூன்று முறை கூறி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இதற்குப் பாரனை என்று பெயர்.

சிலர் 21 வகை காய்கறிகளை பயன்படுத்தி சமைத்து, பெருமாளுக்கு தலிகை போட்டு நைவேத்தியம் செய்த பிறகு சாப்பிடுவார்கள். இயலாதவர்கள் தங்களால் இயன்ற சைவ உணவை சமைத்து இறைவனுக்குப் படைக்கலாம்.

vaikunta-ekadesi-balaji

மூன்றாம் நாள் விரதம்

மூன்றாம் நாள் பால் பழம் கஞ்சி உப்புமா போன்ற இலகுவாக உணவு உடகொள்ளலாம் ஆனால் பகலில் உறக்கம் கூடவேகூடாது. இரவெல்லாம் விழித்திருந்தோமே என்று பகலில் உறங்குவது முறையல்ல. பகலிலும் இறைவழிபாட்டிலேயே செலவிட வேண்டும். பணிக்குச் செல்லும் பக்தர்கள் முழு நேரமும் இறைவழிபாடு செய்ய முடியாவிட்டாலும் தவறாமல் சந்தி வேளைகளான நண்பகல், பிரதோஷ வேளைகளில் இறைவனை நினைத்து மனதுக்குள் வழிபட வேண்டியது அவசியம். பின் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு தான் உறங்க வேண்டும். இவ்வாறு வைகுண்டஏகாதசி விரதத்தை நிறைவு செய்யலாம்.

பொன்மாரி பொழியும் வைகுண்ட ஏகாதசி தானம்

மறுநாள் துவாதசி அன்று பாரனை முடிந்து உணவருந்தும் முன்பாக தானம் செய்வது சிறப்பு. துவாதசி அன்று தன் வீட்டு வாசலுக்கு வந்து பிக்ஷை கேட்ட ஆதிசங்கரருக்குக் கொடுக்க ஏதும் இல்லையே அன்று வருந்தித் தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை தானம் செய்தாள் ஒரு பெண். அந்தப் பெண்ணின் வறுமையை உணர்ந்த சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னை மகாலட்சுமி பொன்மாரிப் பொழிந்தாள். இது உணர்த்தும் செய்தி, துவாதசி அன்று கட்டாயம் தேவையிருப்போருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதுதான். அவ்வாறு ஏகாதசி விரதம் இருந்து தானம் செய்து இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் உரியவர்களாக ஆவோம்.
ஓம் நமோ நாராயணா!

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp