maha-sivarathiri

“மகாசிவராத்திரி 2024” விரதம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்

“மகாசிவராத்திரி 2024” விரதம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்

“மகாசிவராத்திரி” தினத்தின் சிறப்புகள்:

சக்திக்கு நவராத்திரி, சிவனுக்கு ஒரே ராத்திரி என்ற சொல்வழக்கு உண்டு. அதற்கு ஏற்றபடி உலகெங்கும் உள்ள சிவாலயங்களில் ஒரு இரவு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாவே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் “மகா சிவராத்திரி” அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த இரவில்  சிவனுக்கு நான்கு சாமப் பூசைகள் நடைபெறுகின்றன. 

சிவனின் ஐந்து முகங்களை நினைவூட்டும் ஐந்து வகை சிவராத்திரிகள்:

ஊர்துவம் தவிர சிவனின் ஐந்து முகங்களை நினைவூட்டும் வகையில் ஐந்து வகை சிவராத்திரிகள் கொண்டாடப் படுகின்றன. அவை,

மாத சிவராத்திரி:

alayatra-membership1

ஒவ்வொரு மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரக்கூடிய சதுர்த்தசி திதியை, ‘மாத சிவராத்திரி’ஆகும்.

யோக சிவராத்திரி:

சதுர்த்தசி திதியானது  திங்கட்கிழமை அன்று பகலும், இரவும் சேர்த்து 60 நாழிகைகள் வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும்.

பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவது பட்ச சிவராத்திரி ஆகும். தைமாதம் தேய்பிறை பிரதமையில் தொடங்கி 13 நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, 14-ம் நாளான சிவராத்திரி அன்று முழு விரதம் இருந்து சிவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

நித்திய சிவராத்திரி: 

வருடம் முழுவதும் 12 தேய்பிறை சதுர்த்தசி, 12 வளர்பிறை என மொத்தம் இருபத்து நான்கு சிவராத்திரிகள் வரும்.அவை அனைத்தும் சேர்த்து ‘நித்திய சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி:

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் வருவது ‘மகா சிவராத்திரி’ ஆகும்.

இவற்றில் ஏதேனும் ஒரு சிவராத்திரி வழிபாடு செய்தாலே பிறவிப் பயனை அடைய முடியும் என்பது அகத்தியர் அருளிய வாக்கு. அதிலும் குறிப்பாக மகாசிவராத்திரி விரதம் இருப்பது மிகவும் சிறப்பான வரங்களை அருளி நல்வாழ்வும் வீடுபேறும் அருளும் என்பது ஐதீகம்.

why-maha-sivarathiri

மகா சிவராத்திரி வழிபாட்டு முறைகள்:

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் முந்தைய நாள் மதியம் ஒருவேளை மட்டுமே உணவு அருந்த வேண்டும். இரவு உணவை தவிர்த்துவிட வேண்டும். பின் மறுநாள் அதாவது சிவராத்திரி அன்று அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வணங்கி சிவபுராணம் பாராயணம் செய்து உண்ணா விரதத்தை துவங்க வேண்டும். நாள் முழுதும் விரதம் இருந்து சிவனை திருநாமத்தை தியானிக்க வேண்டும். மாலை மண்டும் நீராடி சிவாலயங்களில் அபிஷேக அலங்கார ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபட வேண்டும்.

அவ்வாறு வழிபாடு செய்யும் போது ஈசனை மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகம் செய்து, ‌வெல்லம் கலந்த பச்சரிசியை நெய்வேதியமாக படைத்து வழிபாட வேண்டும். முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையுமாவது சிவனுக்கு சமர்பித்து வழிபட வேண்டும். தவறாமல் ஓம் நமசிவாய – என்ற மந்திரத்தை  பாராயணம் செய்யவேண்டும். இவ்வாறு இரவு முழுவதும் உறங்காமலும் உண்ணாமலும்  வழிபடுபவர்கள் எழு பிறப்பு பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் சிவலோகப் பதவியும் பெறுவர் என்பது ஐதீகம். 

மகா சிவராத்திரி இரவு நான்கு கால பூஜைகளும் அதன் பலன்களும்:

ஆலயங்களில் பொதுவாக வேதாகமப்படி பகலில் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அதுபோல் சிறப்பு நாட்களில்  இரவிலும் கால பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை உள்ள 4 யாம காலத்தில் ஒவ்வொரு யாமத்திலும் கால பூஜைகள் நடைபெறும். அவை, 

தோஷங்கள் நீங்கும் முதல் யாம பூஜை:

சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் பூஜை முதல் யாம பூஜை எனப்படுகிறது. 

இந்த நேரத்தில் பிரம்மதேவன், சிவபெருமானை வழிபடுவதாத ஐதீகம். முதல் யாம பூஜையில் சிவனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்து சந்தனத்தால் அலங்கரித்து வில்வம் மற்றும் தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்து பச்சைப் பயறு பொங்கல் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். படைக்கும் கடவுளான பிரம்மன் வழிபட்ட இந்த முதல் யாம பூஜையில் திருவாசகம் ஓதி, ரிக்வேதம் பாராயணம் செய்து சிவபெருமானை வழிபட ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் பிறவா வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கடன் தீர்க்கும் இரண்டாம் யாம பூஜை:

சிவராத்திரி இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடக்கும் பூஜை இரண்டாம் யாம பூஜை எனப்படுகிறது. இந்த நேரத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். சிவராத்திரி நாளில், திருமாலின் நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் இணைந்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரண்டாம் யாம வேளையில் சிவபெருமானை சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பச்சைக்கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து அவரது திருமேனியில் பூசி, துளசியைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். மேலும் வில்வ அர்ச்சனை செய்து பாயாசம் நிவேதனம் படைக்க வேண்டும். மகாவிஷ்ணு வழிபாடு செய்த இந்த இரண்டாம் யாமத்தில் திருவாசகம் ஓதி, யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட தீராத கடன், வறுமை, தரித்திரம் நீங்கும். சந்திர தோஷத்தால் ஏற்படும் மனக்குழப்பம், மனப் பிறழ்வு போன்ற மன நோய்கள் குறையும். மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இந்த பூஜையின் அபிஷேக நீரைப் பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

maha-sivarathiri-worship

பாவங்கள் போக்கும் மூன்றாம் யாம பூஜை:

சிவராத்திரி நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை நடக்கும் இந்த பூஜை மூன்றாம் யாம பூஜை எனப்படுகிறது. இந்த நேரத்தில் தான் ஈசன் திருவண்ணாமலையில், மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் அடிமுடி இல்லாத லிங்க ரூபமாக காட்சியளித்தார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இது ‘லிங்கோத்பவ காலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த  நேரத்தில் பராசக்தி சிவ வழிபாடு செய்வதாக ஐதீகம். சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்த தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி தினத்தில் பார்வதி வழிபட்ட இந்த மூன்றாம் யாமத்தில் இறைவனுக்கு பசுநெய், தேன், வெந்நீரால் அபிஷேகம் செய்து பச்சைக் கற்பூரம் சாற்றி, கம்பளி ஆடை அணிவித்து மல்லிகை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். எள் அன்னம் நிவேதனம் செய்து, சிவ சகஸ்ர நாமம் சொல்லி வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும். சக்தி நிறைந்த இந்த மூன்றாம் யாம நேரத்தில் திருவாசகம் ஓதி, சாமவேத பாராயணம் செய்து வழிபட்டால் ஏழு பிறவிகளிலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களும் நீங்கும். மேலும் இப்பிறப்பில் எந்த பாவமும் செய்யாதபடி தீய சக்திகளிலிருந்து சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

ராஜபோகம் அருளும் நான்காம் யாம பூஜை: 

3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை செய்யப்படும் பூஜை நான்காம் யாம பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.பிரம்ம முகூர்த்தமான இந்த நான்காம் யாமத்தில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து அல்லி, நீலோற்பவம் ஆகிய மலர்களால் அலங்கரித்து நந்தியா வட்டம் மற்றும் வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். சுத்த அன்னம் நிவேதனம்‌ செய்ய வேண்டும். சகல உயிர்களும் சிவ வழிபாடு செய்யும் இந்த நான்காம் யாம வேளையில் திருவாசகம் ஓதி, அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.  இல்லறம் சிறக்கும், இராஜ போகம் கிட்டும். விரும்பிய உயர் பதவிகள், புகழ் என சகல சௌபாக்கியமும் சிவன் அருளும் கிடைக்கும்.

maha-sivrathiri

வேடனுக்கு மோட்சம் அளித்த மகா சிவராத்திரி பூஜை:

முன்னொரு காலத்தில் வனத்தில் மாலை வேளையில் புலி விரட்டிய வேடன் ஒருவன் உயிருக்கு பயந்து ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்தான். இரவாகியும் அந்த புலி மரத்தின் கீழேயே இருந்ததால் இரவு முழுவதும் உறங்கிவிடாமல் இருக்க, இறைவா இந்த துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று என்று எண்ணியபடியே மரத்தில் உள்ள ஒவ்வொரு இலையாக பறித்து கீழே வீசிக்கொண்டு இருந்தான். அந்த வில்வதளம் அனைத்தும் மரத்தின் கீழே இருந்த ஒரு சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஈசன் அந்த வேடனுக்கு தரிசனம் தந்து முக்தி அளித்தார். அறியாமையில் சிவ வழிபாடு செய்த வேடனுக்கே சிவலோக பதவி கிடைத்த இந்த நிகழ்வு நடந்தது ஒரு மகா சிவராத்திரி அன்று தஞ்சையில் உள்ள திருவைகாவூர் – வில்வவனேசுவரர் திருக்கோயிலில் தான். ஆண்டுதோறும் அத்திருத்தலத்தில்  மகா சிவராத்திரி அன்று வேடன் மோட்சம் வைபவம் நடைபெருகிறது. 

இயன்றவரை அடியார்கள் திருவைகாவூர் வில்வ வனேசுவரர் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும். இயலாதவர்கள் இல்லத்தில் இருந்தபடியே விரதமிருந்து அருகில் உள்ள சிவாலயங்களில் நடைபெரும் நான்கு கால பூஜைகளிலும் கலந்துகொண்டு வழிபட்டு கருணாசாகர மூர்த்தியான ஈசனின் அருள் பெற்று உய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். சிவராத்திரி வழிபாடு முழுமையாக செய்ய இயலாதவர்கள் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானம் செய்து அம்மையப்பனின் பூரண அருள் பெருங்கள்.

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp