masaniamman-temple-anaimalai-pollachi

கலியுக நீதி தேவதை ஆனைமலை, பொள்ளாச்சி மாசாணியம்மன்

Table of Contents

கலியுக நீதி தேவதை ஆனைமலை மாசாணியம்மன் அரிய உண்மை வரலாறு

அநியாயம் அதிகரித்துவிட்ட இந்த கலியுகத்திலும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி வழங்கும் நீதி தேவதையாகவும் கொங்கு நாட்டில் பெண்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காணலாம். இத்திருத்தலத்தில் அம்மன் வேறெங்கும் இல்லாதபடி  சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்து அம்மன் பல பல அற்புதங்களை இன்றும் பலரது வாழ்வில் நிகழ்த்திவருகிறாள்.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் பெயர்க்காரணம்: 

மாசானம் என்றால் மயானம் என்று பொருள். சயனம் என்றால் உறங்குதல் என்று பொருள். மயானத்தில் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெய்வம் என்பதால் ‘மாசன சயனி அம்மன்’ என்றழைக்கப்பட்டு மாசாணியம்மன் என்றானது. மேலும் ஒரு வரலாற்றுப்படி இத்தலத்து அம்மன், மன்னன் ஒருவனால் மாம்பழத்திற்காகக் அநியாயமாக கொலை செய்யப்பட்டாள். இறக்கும் போது அவள் அந்த மயானத்திலேயே தெய்வமாக இருந்து எந்தப் பெண்ணுக்கும் இனி அநீதி நிகழாமல் காப்பேன் என சத்தியம் செய்தாள். அப்படி மாசானத்திலேயே குடிகொண்டதால் மாசானி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். மேலும் “மசானி” என்றால் பழந்தமிழில் மாம்பழம் என்று பொருள். எனவே மாம்பழத்திற்காக கொல்லப்பட்ட பெண் என்பதால் மசானி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

masaniamman-temple

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் வரலாறு:

ஆனைமலை மாசாணியம்மன் அம்மன் திருக்கோவில் பற்றி பல கதைகள் உலவுகின்றன. 

alayatra-membership1

முதலில் இராமபிரான் வழிபட்ட வரலாற்றை காண்போம். 

இராமபிரான் பிரதிஷ்டை செய்த அம்மன்:

முனிவர்களின் தவ யாகங்களை குலைத்து வந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய விசுவாமித்திரரின் வேண்டுகோளின்படி இராம இலக்குமணர்கள் சென்றனர். முற்காலத்தில் போருக்கு செல்லும் முன் மயானத்தில் அருள்புரியும் காளி கொற்றவை போன்ற பெண் தெய்வங்களை வணங்கிவிட்டுப் போருக்கு செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் வழியில் எந்த பெண்தெய்வ வடிவமும் தென்படாததால் அன்னை பார்வதியை மனதில் எண்ணி இராமபிரான் மானசீகமாகப் பிரார்த்தனை செய்ததார், அப்போது காட்சி கொடுத்த ஆதிசக்தி தன்னை மண்ணால் சிலை செய்து வழிபட்டும்படி கூறினார். வழிபாடு செய்ததும் போருக்கு செல்லும்போது உருவத்தை சிதைத்துவிட்டு கிளம்பும்படி கட்டளையிட்டார். அவ்வாறே உப்பாற்றங் கரையில் அம்மன் சிலை ஒன்றை வடிவமைத்தார் இராமன். மண்சிலை என்பதால் வடிவமைக்கும்போதே சிதைந்துவிடாமல் இருக்க தரையில் பதிந்தபடி வடிவமைத்தார்.

பூஜைகள் முடிந்து அன்னையின் திரு உருவத்தை கலைக்க மனம் இன்றி அப்படியே விட்டுவிட்டார். இராமபிரான் பல இடங்களில் மணலால் லிங்கம் செய்து ஈசனை வணங்கியது போல, தன் கரங்களாலேயே தேவிக்கு மண்ணால் சிலைசெய்து வணங்கிய தெய்வமே இந்த மாசான சயனி அம்மன்.  தாடகையை வதம்‌ செய்து முனிவர்களும் நிகழ்ந்த அநீதியை தடுத்து போலவே இன்றும் தன் பக்தர்களுக்கு நிகழும் அநீதியை தடுத்து அருள்கிறாள் அன்னை.

மாங்கனிக்காக கொலை செய்த மன்னன்: 

முன்னொரு காலத்தில் நன்னன் என்ற மன்னன் ஆனைமலையை ஆண்டு வந்தான். ஒருமுறை அவனது அரண்மனைக்கு ஒரு துறவி வந்தார். அரசன் அவரை வரவேற்று நன்கு உபசரித்தான். நன்னனின் உபசரனையில் மகிழ்ச்சி அடைந்த துறவி அவருக்கு பரிசாக தவவலிமையால் பெற்ற ஓரு மாங்கனியை அளித்தார். மேலும் அந்த மாங்கனியை அரசன் மட்டுமே உண்ண வேண்டும் என்றும் அதை உண்டதும் அதன் கொட்டையை ஆற்றில் விட்டுவிட  என்றும் நிபந்தனை விதித்தார். மீறினால் ராஜியம் அழிந்துவிடும் எனவும் எச்சரித்ததார்.

ஆனால் அந்த மாங்கனியை சுவைத்தபின் நன்னனுக்கு அதன் விதையை ஆற்றில் விட மனமில்லாமல் போனது. அதன் தேவலோக சுவையில் மதிமயங்கி மீண்டும் அந்த சுவையை அனுபவிக்க எண்ணினான். அந்த கொட்டையை ஆற்றங்கரையில் உள்ள தன் நந்தவனத்தில் விதைத்து வளர்த்தான்.  பருவம் வந்ததும் அதன் கனிக்காக ஆவலுடன் காத்திருந்தான். அதன் கனிகளை வேறு யாரும் பறித்து ருசித்துவிட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என நாட்டுமக்களுக்கு அறிவித்தான். இதை அறிந்து மீண்டும் அரண்மனைக்கு ஓடிவந்தார் அந்த துறவி. தவறு செய்துவிட்டாய் மன்னா. என் எச்சரிக்கையை மீறி தவத்தால் கிடைத்த, மண்ணில் விளையாத மாங்கனியை விதைத்து வம்பை வளர்த்துவிட்டாய். நீ நினைப்பதுபோல அந்த மரம் நிறைய கனிமங்கள் தராது. ஒரே பழம்தான் தரும். அதையும் நீ சுவைக்க கூடாது. பெருந்தன்மையுடன் அனைவருக்கும் பயன்படும் படி நல்லவர் யாராவது ஒருவருக்கு நீயே அதை பரிசளிக்க வேண்டும். இல்லையேல் தெய்வீக சக்திகள் நிறைந்த ஒருவரிடம் அது தானே சென்றுவிடும். அதைத் தடுத்துவிடாதே. தானாக கனி யாரிடம் செல்கிறதோ அவரே உண்ணவேண்டும். மீறினால் மிகப்பெரிய ஆபத்து நிகழும் என மீண்டும் எச்சரித்தார்.

சிறிது நாட்களில் அம்மரத்தில் ஒரு மாங்கனி பழுத்தது. ஆனால் அதை மன்னன் பறிக்கும் முன்னரே கனிந்து ஆற்றில் விழுந்துவிட்டது.  அப்போது வேறு நாட்டில் இருந்து வியாபாரம் செய்ய வந்திருந்த தாரகன் என்பவரது மகள் தாரணி ஆழியாற்றில் தோழிகளுடன் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றில் மிதந்து வந்த மாம்பழத்தை எடுத்து உண்டுவிட்டாள். தோழிகள் எச்சரிக்கை செய்யும் முன் அதைக் கடித்துவிட்டாள். மாங்கனிக்கு காவல் அமர்த்தப்பட்ட வீரர்கள் வந்து நடந்ததை மன்னரிடம் தெரிவிக்க நன்னன் தாரணிக்கு மரண தண்டனை விதித்தான். 

அறியாமல் நிகழ்ந்த தவறுக்காக கொலை செய்யப்பட்ட தாரணி இறக்கும் தருவாயில் தனக்கு நிகழ்ந்த அநீதியால் இந்த தேசமே அழிந்து போகும் என சாபமிட்டாள். இறந்தாலும் இந்த மயானத்தில்லேயே இருந்து இனி யாருக்கும் எப்போதும் எந்த ஒரு சின்ன அநீதி கூட நிகழாமல் காப்பேன் என்று சத்தியம் செய்து உயிர்விட்டாள். அவ்வாறே இன்றும் பக்தர்களுக்கு அநீதி நேராத வண்ணம் காத்து வருகிறாள் தாரணி என்னும் ‌மாசாணி.

masaniamman-temple-coimbatore

கர்ப்பிணிகளை காக்கும் ஆனைமலை மாசாணியம்மன்:

முன்பொரு காலத்தில் ஆனைமலையின் ஓர் அழகிய கிராமத்தில் மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். தாய் தந்தையர் இல்லாத அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசம் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து. வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த கணவன் வீடுதிரும்பும் முன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே உதவிக்கு ஆளில்லாத நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண் தானே மருத்துவச்சி இல்லத்திற்கு செல்ல முடிவு செய்தாள். அவ்வாறு அவள் செல்லும்போது பிரசவ வேதனை காரணமாக மெதுவாக இளைப்பாறிய சென்றாள். இதனால் பக்கத்து கிராமத்திற்கு செல்லும் முன் இருட்டிவிட்டது. அப்போது வலி அதிகமாகவே அப்பெண் மயானம் என்று அறியாமல் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டாள். அப்போது பிள்ளை தின்னும் புழக்கடை முனி அவளை தாக்கி அவள் வயிற்றில் இருந்த பிள்ளையை தின்ன முயற்சித்தது.

ஆனால் தெய்வாம்சம் பொருந்திய அந்தப் பெண் அந்த முனியை வதம் செய்து காலடியில் மிதித்தாள். அதோடு தனக்குத் தானே பிரசவம் பார்த்து தன் பிள்ளையை காப்பாற்றினாள். மேலும் மயானத்தை காவல் காக்கும் மயான கருப்பு சாமியை வேண்டி தன் கணவன் வரும் வரை தன் பிள்ளையை காக்கும்படி வேண்டிக் கொண்டு அந்த மயானத்திலேயே உயிர்விட்டாள். மயான கருப்புசாமியும் அவள் கணவன் வரும் வரை அவள் காலடியில் மண்டியிட்டு அவள் பிள்ளையை காத்தார். பின் ஊர்மக்கள் கூடி அந்தப் பெண்ணுக்கு சிலை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இன்றும் கர்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குழந்தையின்மை, சுகப்பிரசவம் வேண்டுவோர் குழந்தை நலன் வேண்டுவோரெல்லாம் இந்த அம்மனை வழிபடுகின்றனர்.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் ஆகும் வரை இந்த கோவிலுக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

masaniamman-anaimalai-pollachi

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் சிறப்புகள்:

*இத்திருத்தல அம்மன் இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்தாக நம்பப்படுகிறது. 

*மற்ற அம்மன் சிலைகளை போல் கருங்கல் அல்லது உலோகத்தால் செய்யப்படாமல் சுதை மண்ணால் செய்யப்பட்ட சிலையாகும். 

*தேவி பிற ஆலயங்களில் உள்ளது போல் நின்ற கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ இல்லாமல் சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

*கருவரைக்கு வெளியே வலதுபுறம் அமைந்துள்ள நீதிக்கல்  இத்தலத்தின் சிறப்பாகும். 

தல விருட்சம், தல தீர்த்தம்: மாசாணியம்மன் திருக்கோவில் மயான பூமியில் அமைந்திருப்பதால் தல விருட்சமோ தல தீர்த்தமோ இவ்லை. ஆனால் இக்கோயில், முன்பு உப்பாறு என்றழைக்கப்பட்ட ஆழியாற்றங் கரையில் தான் அமைந்துள்ளது.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் அமைப்பு: 

அம்மன் கோவில் வாசலில் திரிசூலங்களும் பலி பீடமும் காணப்படுகிறது. பில்லி சூனியம், கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாசாணி அம்மனை வேண்டிக்கொண்டு இந்த சூலங்களில் எலுமிச்சம் பழங்களை குத்திச் செல்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை சக்திகளிலிருந்து விடுபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சூலங்களுக்கு எதிரே தீ மிதிக்கும் குண்டம் காணப்படுகிறது. 

நான்கு வாயில்களுடன் அமைந்துள்ள  இக்கோயிலில் மிக அழகிய நான்கு நிலை  ராஜகோபுரம் வடக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வெண்கலத்தால் ஆன கொடிமரம் காணப்டுகிறது. அதையொட்டி பலிபீடமும் சிம்ம வாகனமும் காட்சியளிக்கிறது.

maasaniamman-pollachi-anamalai

அடுத்து, மிக விலாசமான பிரகாரம் அமைந்துள்ளது. பிரகாரச்சுற்றில் பேச்சியம்மன், துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், புவனேஸ்வரி விநாயகர் ஆகியோரது தனி சன்னதிகள் அமைந்துள்ளன. பிரகாரச் சுற்று முடிவில்  இராஜ கோபுரத்தின் உட்புறத்தில் வலதுபறம் கருப்பசாமியும் இடதுபுறம் பைரவரும்  அருள்பாலிக்கின்றனர்.

உப்பாற்றங்கரை சன்னதிகள்:

மாசானிஅம்மன் சன்னதியில் இருந்து உப்பாற்றுக்குச் செல்லும் வழியில் வலதுபுறம் அரசமரத்தடியில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. அதை அடுத்து சப்த கன்னியர், துர்க்கை, நாகர்கள் மற்றும் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது.

மூலவர் சன்னிதி:

பிரகாரவலம் வந்து தேவியை தரிசனம் செய்ய பலிபீடம் மற்றும் சிம்மவாகனத்தைத் தாண்டி பலகைகளால் அமைக்கப்பட்டுள்ள மேடை மீது ஏற்றிச் செல்ல வேண்டும். தேவிக்கு எதிரே கோயிலின் காவல் தெய்வமாக பெரிய மீசையும் ஆளை மிரட்டும் கண்களும் கையில் திரு ஓடுமாக மகாமுனி மண்டியிட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவருக்கு நேர் எதிரே கருவரைக்குள் மாசாணியம்மன் 15 அடி நீளத்தில் தெற்கில் தலைவைத்து சயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அசுரனை காலடியில் போட்டு மிதித்தவாறு நான்கு திருக்கரங்களிலும் திரிசூலம், உடுக்கை, பாம்பு, கபாலம் ஆகியவற்றை ஏந்திக் காட்சியளிக்கிறார்.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்:

பொதுவாக செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் அமாவாசை பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தை அமாவாசை, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். சிறப்பு பூஜைகளும் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மாசாணியம்மன் குண்டம் திருவிழா 10 நாள் விழாவாக கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும்

*இத்திருவிழாவில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

*திருவிழாவின் முக்கிய நிகழ்வு பூக்குண்டம் எனப்படும் தீமிதித்திருவிழா ஆகும். இந்த பூகுண்டம் சுமார் 41 அடி நீளம் 11 அடி அகலமும் கொண்டது. இந்த மிக நீண்ட குண்டத்தின் பூவுக்கு தேவையான விறகுகளை காணிக்கையாக கொடுத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

*குண்டம் இறங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மயான கொள்ளை என்ற சிறப்பு பூஜை ஆற்றங்கரையில் நடைபெருகிறது. 

* இது தவிர பூவோடு என்று அழைக்கப்படும் தீச்சட்டி எடுக்கும் வேண்டுதலும் பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.

*இத்திருவிழாவின் மற்றோரு சிறப்பு குண்டம் இறங்கியதற்குப் பின் நடைபெறும் சக்திகும்பம் ஸ்தாபித்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து மகி பூஜை நடைபெறும்.

விழா முடிவில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் நிகழ்வும் நடைபெருகிறது. பொதுவாக கொடிகட்டியதிலிருந்து கொடி இறக்கப்படும் வரை உள்ளூர் வாசிகள் இரவு வெளியூரில் தங்குவதில்லை.

*கருவரைக்கு வெளியே வலதுபுறம் உள்ள நீதிக்கல்லில் அநீதி இழைக்கப்பட்டவர்களும் பொருளை தொலைத்தவர்களும் காய்ந்த மிளகாய் அரைத்து பூசித் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு மிளகாய் அரைத்து பூசி வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் ( 90 நாட்களுக்குள் ) நியாயம் கிடைக்கிறது. தொலைந்த பொருட்களும் கிடைக்கின்றன. 

*வேண்டுதல் நிறைவேறிய உடன் எண்ணைக் காப்பு செய்து தேவியைக் குளிர்விக்கிறார்கள்.

*மேலும் சிறப்பு வேண்டுதலுக்காக பக்தர்கள் அம்மனுக்கு புடவைகள் சாற்றுகின்றனர். அவ்வாறு சாற்றும் புடவைகளை ஒவ்வொரு அமாவாசையன்றும் ஏலமிடப்படுகிறது. அம்மனுக்கு சாற்றிய புடவையை வாங்கி வீட்டில் வைத்தால் சௌபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் அம்மனுக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபடுகின்றனர்.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்:

காலை 6 மணியில் இருந்து 12 மணி வரை. 

மாலை 4 மணியில் இருந்து 8.30 மணி வரை. 

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் அமைவிடம்:

இத்திருத்தலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் ஆனைமலை என்ற அழகிய  ஊரில், ஆழியாறு ஆற்றங்கரையில் மயானத்தில் அமைந்துள்ளது. 

அருகில் உள்ள விமான நிலையம்: கோவை விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்:  பொள்ளாச்சி இரயில் நிலையம் 

அருகில் உள்ள பேருந்து நிலையம்: பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம்.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:

மாசாணிஅம்மனை வணங்கினால் கண்திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், மாந்திரீகக் கட்டு போன்றவைற்றிலிருந்து விடுபடலாம். சகல விதமான நோய்நொடிகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், குழந்தை இன்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். சுகப்பிரசவம் ஏற்பட இந்த அம்மனை வழிபடுகின்றனர். ஆனால்‌ கர்ப்பிணிப் பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை.

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவில் முகவரி:

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில்,

ஆனைமலை, பொள்ளாச்சி, – 642104 தமிழ்நாடு.

தொலைபேசி: 04253 282337, 283173

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp