kamannatheswarar-temple-salem

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem

Table of Contents

Kamanatheeswarar temple History & Pooja timings – Aragalur Salem

அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி உடனமர் காமநாதீஸ்வரர்- திருக்கோயில் ஆறகளூர், ஆறகளூர் பைரவர் கோவில் சேலம்

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அடியார்களுக்கு வணக்கம். இந்த பதிவில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் பற்றியும் இக்கோவிலின் வரலாறு பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் காமநாதீஸ்வரர். அம்பிகையின் பெயர் பெரியநாயகியம்மன்.

தலவிருட்சம்: மகிழ மரம்.

alayatra-membership1

ஆறகளூர் காமநாதீஸ்வரர் திருக்கோவில் பெயர்க்காரணம்: 

அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாக் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறகளூர் காமநாதீஸ்வர் ஆலயத்தின் மூலவரை காமன் வழிபட்டு உயிர் பெற்றதால் காமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காமம் என்றால் ஆசை. தன்னை மெய்யன்போடு வணங்கும் பக்தர்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதாலும் காமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தன்னை வணங்குபவர்களுக்கு முடிவிலாத ஆனந்தத்தை வழங்குவதால், சுவாமிக்கு “அனந்தீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு

இத்தலத்து சிவன் மிகவும் பரிசுத்தமான உடலமைப்புடன், காண்போரை வசீகரிக்கும் பளபளப்பு மேனியை உடையவராக காட்சி தருகிறார். எனவே, இவரை “காயநிர்மாலேஸ்வரர்‘ என்கின்றனர். “காயம்’ என்றால் உடல், “நிர்மலம்’ என்றால் பரிசுத்தம் என்று பொருள். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் “ஆற்றூர்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் “ஆத்தூர்‘ என்று மருவியுள்ளது.

kamannatheswarar-temple-arakalur-salem

காமநாதீஸ்வரர் தல வரலாறு:

இத்திருத்தலம் வசிஷ்டர் உருவாக்கியது என்றும் காமன் வழிபட்ட திருத்தலம் என்றும் நம்பப்படுகிறது.

மன்மதன் வழிபட்டதலம்:

உலக உயிர்கள் அச்சம்- முன்பொரு காலத்தில் சிவபெருமான் பல யுகங்களாக தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ஆகையால் இப்பிரபஞ்சம் தன் உயிர்ப்புத் தன்மையை இழந்து கெண்டே போனது. இதனால் உலக உயிர்கள் அனைத்தும் அச்சமுற்றன. மேலும் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

பார்வதி தேவி வேண்டுகோள்

அன்னை பார்வதி, தேவர்களும் முனிவர்களும் சிவனை எழுப்புமாறு விடுத்த வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணினார். எனினும் சிவனின் தியானத்தை கலைத்தால் என்னவாகும் என்றும் அறிந்திருந்தார். ஆகவே, வேறொரு நோக்கத்திற்காக முருகப்பெருமான் திரு அவதாரம் எடுக்கவேண்டி இருந்ததால், மன்மதனிடம் சிவபெருமானின் மேல் மலரம்புகள் தொடுத்து மென்மையாக அவரை எழும்பும் படி கேட்டுக் கொண்டார்.

மன்மத தகனம்

மன்மதனும் பார்வதி தேவி கேட்டுக் கொண்டதன்படி சிவனின் தியானத்தை கலைத்தார். தன் தியானம் கலைந்ததில் கோபம் கொண்ட சிவபெருமான் மன்மதனை தன் நெற்றிக்கண் திறந்து கோபாக்னியால் தகனம் செய்தார்.

ரதி தேவியின் வேண்டுதல்

சிவனின் சினத்தால் மன்மதன் பஸ்பமனதால் ரதிதேவி மிகவும் துன்புற்றாள். உலக நன்மைக்காகவே மன்மதன் இந்த தவரை இழத்தார் எனவும் அவரை உயிருடன் மீட்டுத்தர வேண்டும் எனவும் இறைவனிடம் வருந்தி வேண்டிக் கொண்டாள். 

இறைவனின் கருணை

நெற்றிக்கண் நெருப்பில் எவரொருவர் சாம்பலானாலும் அவர் மீண்டுவர இயலாது என்றாலும், ரதியின் துயரத்தால் மனம் இறங்கிய இறைவன், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க செய்து அருள் புரிந்தார். 

மன்மதன் வழிபாடு

சிவனருளால் மீண்டும் உயிர்பெற்ற மன்மதன் தன் மனைவி சகிதமாய் சிவபெருமானை இங்கு வழிபாடு செய்ததாக தல வரலாறு கூறுகிறது. 

வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம்

சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர் , வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவ்வாறு வசிஷ்ட நதிக்கரையில் நான்காவதாக அமைந்த திருத்தலமே காமநாதீஸ்வர சுவாமி‌‌ திருக்கோவிலாகும்.

ஜோதி லிங்கம்

வசிஷ்ட முனிவர் இத்தலத்தில் தவம் செய்தபோது இறைவன் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். ஆகவே சகருணைக் கடலான சிவ பெருமான் வசிஷ்டர் விருப்பப்படி அவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவாக நிலைகொண்டார்.

புதைந்த லிங்கம் – புதிய கோவில்

காலப்போக்கில் இந்த ஜோதி லிங்கம் மண்ணில் புதைந்தது.

பல்லாண்டுகளுக்குப்பின், இப்பகுதியை கெட்டிமுதலி எனும் குறுநில மன்னன் ஆட்சி செய்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகே எந்த செயலையும் செய்வான். ஒருநாள் அவனது கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறினார். அதன்படி, மன்னன் இவ்விடத்தில் மண்ணைத் தோண்டினான். அப்போது லிங்கத்தையும், அதனருகில் பெரும் புதையலையும் எடுத்தான். புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டி முடித்தான்.

இத்திருத்தலம் 12ஆம் நூற்றாண்டில் 1206ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

kamannatheswarar-temple-history-arakalur-salem

காமநாதீஷ்வரர் திருத்தல சிறப்புகள்:

ஆறகளூர் பைரவர் கோவில் -அஷ்ட பைரவர்கள்

காமநாதீஸ்வரர் திருக்கோவில் அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள் பாலிப்பதால் தமிழகத்தின் பைரவர் தலமாகவும் விளங்குகிறது. அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால பைரவர் ஆகியோர் எட்டு திசைகளில் இருந்து அருள்புரிகிறார்கள். இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. 

அம்மனுக்கு தனி ராஜகோபுரம்:

பொதுவாக சிவாலயங்களில் அம்பிகைக்கு தனி சந்நிதி, விமானம், நந்தி, கொடிமரம், மண்டபம் பலிபீடம் போன்றவை இருக்கும் இத்திருத்தலத்தின் தேவியான பெரியநாயகி அம்மனுக்கு இவற்றுடன் தனி ராஜகோபுரமும் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

லிங்கத்தின் மேல் விழும் சூரிய ஒளி:

இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது சூரிய கதிர்கள் நேரடியாக கருவறை லிங்கத் திருமேனியின் மேல் விழுவது காண்பதற்கு அறிய சிறப்பாகும். 

தலையாட்டி பிள்ளையார்:

இத்தலத்திற்கு வெளியே “தலையாட்டி பிள்ளையார்’ சன்னதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து “பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டான் மன்னன். அதற்கு இவர், “நன்றாகவே கட்டியிருக்கிறாய்’ என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு “தலையாட்டி பிள்ளையார்’ என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.

சிறப்பு குரு தெட்சிணாமூர்த்தி:

சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும்.

தம்பதி சமேத முருகர்:

murugar-thambathi-kamannatheswarar-temple

இத்திருத்தலத்தின் உட்பிரகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிராக மயில்மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வள்ளி தேவயானை சமேதராய் முருகன் அருள்பாலிக்கிறார். இச்சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த சிலைக்கு மயிலின் மெல்லிய கால்பகுதியை மட்டுமே ஆதாரம் என்பது மேலும் தனி சிறப்பாகும்.

காமநாதீஷ்வரர் ஆலய அமைப்பு :

நுழைவாயில்:

இத்திருத்தலத்தின் வெளிப்புறம் இராஜகோபுரத்திற்கு முன்னதாக கல்மண்டப நுழைவாயில் ஒன்று உள்ளது. அது ஒரு அரிய அமைப்பாகும்.

இந்த மண்டபத்தின் மேற்புறம், மத்தியில் சிவனும் பார்வதியும் நந்தி வாகனத்தின் மேலும் இடதுபுறம் முருகன் வள்ளி தெய்வானையுடனும் பிள்ளையார் திரு உருவமும் வலது புறத்தில் பிரம்மனும் கோவமுடன் கிருஷ்ணரும் இருப்பது போன்ற திருஉருவங்கள் சுதை சிற்பங்களாகக் காணப்படுகின்றன.

இரட்டைப் பிள்ளையார் சன்னிதி: 

இச்சன்னதியின் முன்னே இருபுறமும் விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகர் தன் தம்பியான ஐயப்பனை தன் நிழல் வடிவிலும் காப்பதாக கூறப்படுவதால் இரண்டு விநாயகர் சன்னதி இருப்பதாக சொல்கிறார்கள்.

இராஜகோபுரம்:

கொடிமரத்தருகே வீற்றிருக்கும் நந்தியம் பெருமானை வணங்கி மேலே செல்ல மூன்று நிலைகளுடன் ராஜகோபுரம் அழகுடன் விளங்குகிறது. இந்த ராஜகோபுரத்தின் மேல் அஷ்ட பைரவர்களில் ஒருவரான கபால பைரவர்(6) சன்னதி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தில் பைரவர் சன்னதி அமைந்திருப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். 

வெளிப்பிரகாரம்: 

நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் இடது புறமாக மரத்தடியில் மூலப்பிள்ளையார் அருள்பாலிக்கிறார். வலது புறம் பழமையான உற்சவ மண்டபம் ஒன்று காணப்படுகிறது. இது சிதிலமடைந்த நிலையில் உள்ளது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிப்பிரகார சுற்றுப் பாதை: வெளிப்பிரகார சுற்றுப் பாதையில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிராக ஒரு மண்டபத்தில் நந்தியும் கொடி மரமும் காணப்படுகின்றன. இதுதவிர கோவில் திருக்குளம், தலவிருட்சம், போன்றவையும் உள்ளன. 

sornakasna-bairavar

பீஷன பைரவர்:

வெளிப்பிரகாரத்தில் ராஜகோபுரத்திற்கு இடது புறமாக தீப மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பீஷணபைரவர்(7) பலிபீடமாக அருள்பாலிக்கிறார். காபால பைரவர் ராஜகோபுரத்திற்கு மேல் எழுந்தருளியிருக்கிறார்.

கோவில் பிரகாரம்:

பைரவர் சன்னதிகள்-

ராஜகோபுரத்திற்கு உள்ளே நுழைந்ததும் அதன் மண்டபத்தில் இடப்பக்கம் நர்த்தன கணபதியும் கணபதிக்கு எதிராக உன்மத்த பைரவரும்(5) வலப்பக்கம் குரோதன பைரவரும்(4) அமைந்துள்ளனர்.

கருவறை சுற்று பிரகாரம்:

arakalur-salem-kamannatheswarar-temple-timings

ராஜகோபுர நிலைப்படியைத் தாண்டியதும் தாழ்வறையில் இடது புறமாக வானவராயர் மற்றும் அவரது மனைவி புண்ணியவாட்டி நாச்சியாருக்கு தனி சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதையடுத்து சூரியன், அண்ணாமலையார், நான்கு சமயக்குரவர்கள் மற்றும் அறுபத்து நான்கு நாயன்மார்களும் அருள்பாலிக்கின்றனர்.  

அடுத்து சூரிய தேவரும் ருரு பைரவரும் அருகருகே அருட்காட்சியளிக்கின்றனர். 

சப்தகன்னியர், கருப்பண்ணசாமி, ஐயப்பன் மற்றும் கன்னிமூல கணபதி எழுந்தருளியுள்ளனர்.  

அடுத்து பஞ்சலிங்கங்களும் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

முருகன் மயில் வாகனத்தில் தம்பதிசமேத சுப்பிரமணியராய் எழுந்தருளி இருக்க்கிறார்.

கஜலட்சுமி அன்னைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

ஆஞ்சநேயர் மற்றும் மாங்கல்ய பாக்கியம்தரும் விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதிகள் வரிசையாக அமைந்துள்ளன.

அடுத்தாக சன்னதிக்கு இடது புறமாக அஷ்டபுஜ காலபைரவர் அருள்பாலிக்கிறார். 

வடகிழக்கு மூலையில்சண்ட/ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சன்னதியும் பின் நவகிரக சன்னதியும் வரிசையாக அமைந்துள்ளன. 

நடராஜர் மற்றும் சனி பகவான் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

மூலவர் கோஷ்டம்

கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மா, மகிஷாசுரமர்த்தினி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் தீர்த்தக் கிணறுஉள்ளது. அருகே சண்டிகேஸ்வரர் தனி சன்னதியில் அருள்புரிகிறார்.

மூலவர் சன்னதி:

பிரகாரம் சுற்றி சாமி தரிசனத்திற்காக உள்ளே நுழையும் பொழுது இடதுபுறம் வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகரும் துவார பாலகர்களும் வீற்றிருக்க வலப்புறம் இறைவனை நோக்கியவாறு அசிதாங்க பைரவர் அருள்பாலிக்கிறார். 

துவார பாலகர்களைத்தாண்டி உள்ளே நுழைந்தால் ஆனந்த விமானம் அமைக்கப்பட்ட சதுரவடிவமான கருவறையில் இத்திருத்தலத்தில் மூலவர் கருணைக்கடலான காமநாதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அக்னி தலமான இங்கு கற்பூர ஆராதனையின்போது லிங்கம் பிரகாசமான ஜோதிவடிவில் அருட்பேரொளியாய் காட்சியளிக்கிறது. 

பெரியநாயகி அம்மன் சன்னதி:

இறைவனின் கருவறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் யாகசாலை அமைந்துள்ளது. 

ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் திருவிழாக்கள் :

ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை ஜோதி, தேய்பிறை பைரவாஷ்டமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி மகாமகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும். 

சிறப்பு பைரவர் வழிபாடுகள்

மாதந்தோறும், தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது. இந்த பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் வெள்ளிக் கவசம் சந்தனகாப்பு, புஷ்ப அலங்காரம் உள்ளிட்ட சர்வ அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

ராகுகாலங்களில் அஷ்டபுஜ மகா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு அஷ்டமியன்றும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு பைரவருக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

காமநாதீஸ்வரர் வழிபாட்டின் பலன்கள்:

nandhi-kamannatheswarar-temple-salem

ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் பக்தர்களின் நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 

மன்மதன் வழிபட்ட தலம் என்பதால் காதல் கைகூடும். திருமணத்தடை நீங்கும். மணமான தம்பதியருக்கு இல்வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து தாம்பத்தியம் சிறக்கும். ரதியும் மன்மதனையும் போன்ற பேரின்பப் பெருவாழ்வு பெறுவர் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கி நன்மக்கட் பேறு வாய்க்கும். இத்திருத்தலம் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்கும் தலம் என்பதால் பயம் அழியும். நமது எதிரிகள் பயந்து விலகுவர். காரியத்தடை, பகை, நோய், அறியாமை, கடன் தொல்லைகள், திருமணத்தடை, நவக்கிரக தோஷம் முற்பிறவி வினைகள் என அனைத்துத் தொல்லைகளும் நீங்கி 

 பக்தர்கள் நிம்மதியான நிறைவான வாழ்க்கை பெறுவர். 

கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

காமநாதீஸ்வரர் தரிசன நேரம்:

இந்த ஆலயம் தினமும்
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும்,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

காமநாதீஸ்வரர் திருத்தல அமைவிடம்:

ஆத்தூர் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தென்கிழக்கில் ஆறகளூர் என்னும் அழகிய ஊரில் காமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 

ஆத்தூர் சேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆத்தூரில் இருந்தும் தலைவாசலில் இருந்தும் ஆறகளூருக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆத்தூர் மற்றும் சேலத்தில் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. மேலும் திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் விமான நிலையங்கள் அமைந்துள்ளது. தலைவாசல், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் ஆத்தூரில் இருந்து அரசு பேருந்துகளும் சில தனியார் மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வழித்தடப் பேருந்து எண்கள் 6 மற்றும் 31. அறகளூருக்கு பெரும்பாலும் தனியார் வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அறகளூர் காமநாதீஸ்வரர் கோயில் முகவரி:

அருள்மிகு காமநாத ஈஸ்வரர் திருக்கோயில்,
ஆறகளூர், சேலம் மாவட்டம். – 636 101

தொலைபேசி எண்: 
9047514844
9894025312
9894025312

(திருக்கோவிலில் தொலைபேசி வசதி இல்லாததால் அருகில் உள்ள கடைகளின் எண்கள் உரிமையாளர்களின் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன.)


திருச்சிற்றம்பலம்

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp