Aatkondeeshwarar-temple-pethanayakkanpalayam-salem

தூய்மையான திருநீறு | விபூதி எது? விபூதி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

தூய்மையான திருநீறு, விபூதி எது? விபூதி அணிவதால் ஏற்படும் நன்மைகள்

திருநீறு / விபூதி என்றால் என்ன? திருநீறு / விபூதி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? திருநீறு / விபூதியின் மகிமைகள் என்ன?  தூய்மையான திருநீறு / விபூதி எது? என்பன போன்ற உங்களின் பல கேள்விகளுக்கான பதிலை இப்பதிவில் விரிவாக காணலாம்.

 “மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு”

செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே”

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.  

ஆதி அந்தம் இல்லா பரம்பொருளான ஈசனை வணங்கும் சைவ நெறியின் மிகத் தலையாய அங்கமாக திருநீறு விளங்குகிறது. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலில், இவ்வுலகில் ஈசனுக்கு இணையான பலம் பொருந்தியது திருநீறு என்று குறிப்பிடுகிறார்.  நீறு என்றால் சாம்பல். சிறப்புகள் வாய்ந்த சாம்பல் என்பதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. காலை மாலை இரு வேலைகளிலும் உடல் சுத்தி செய்து ஈசனை தியானித்து உடலில் திருநீறு பூசிக்கொள்ளுதல் சைவர்களின் முதற்கடமையாக பார்க்கப்படுகிறது. திருநீறை பிரசாதமாக வழங்குபவர்கள் செய்த தானம், தவம், வேள்வி, யாகம் போன்ற நற்செயல்களின் பலன் பெற்றுக் கொள்பவர்களுக்கும் சென்று சேர்கிறது என்று கூறப்படுகிறது. வேத மந்திரங்களுக்கு உரிய பலம் திருநீற்றுக்கும் உள்ளதாக ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர். எனவே மந்திரங்கள் ஓதத்தெரியாத பாமரனாயினும் திருநீறு பூசி கொள்வதால் வேத மந்திரங்களை ஓதிய பலன் கிடைக்கும். மேலும் மந்திரங்களை ஓதி திருநீறும் பூசிக்கொள்வதால் மிகச் சிறந்த பலனை அடையலாம் என்பது ஐதீகம். 

alayatra-membership1
meditation-quotes-alayatra

மறை நூல்களில் திருநீறு / விபூதி

திருநீறு/விபூதியின் மகிமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க திருஞான சம்பந்தர் “வெண்ணீற்றுப் பதிகம்” என்று திருநீருக்கென தனிப்பதிகமே பாடியுள்ளார். அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் திருநீற்றின் மகிமைகளையும் அதை பூசிக்கொள்ளும் முறைகள் பற்றியும் விரிவாக கூறியுள்ளார். அதில் `ரூம் றீம் சிம்ரா’ என்று சொல்லி பெரியவர்களிடம் திருநீறு பெற்றுக்கொள்வதால் அவர்களின் பரிபூரண ஆசியை பெறலாம் என்றும் குறிப்பிடுகிறார்.  திருநீறு பிறப்பு இறப்பு என்ற பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும்  மந்திரமாக விளங்குவதாக திருநீற்றுப் பதிகம் குறிப்பிடுகிறது. நெருப்பு அசுத்தமான அனைத்தையும் எரித்து இருதியில் சாம்பலாக்கக் கூடியது. அவ்வாறே பக்தி எனும் நெருப்பால் ஆணவம், மாயை, கன்மம்  ஆகிய மும்மலங்களையும் எரித்து அழித்து சாம்பலாக்கியபின் எஞ்சுவது திருநீறு. நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பல்தான் எனவே மும்மலங்கள் இன்றி அறநெறி தவறாமல்  இறை சிந்தனையோடு மண் பயனுற வாழ வேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் திருநீறு உணர்த்துகிறது. மேலும் திருநீறு அணிவது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமாகவும் கருதப்படுகிறது.

திருமூலர் தனது திருமந்திரத்தில்

“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே!”  என்று குறிப்பிடுகிறார். 

நீறில்லா நெற்றி பாழ்.

“நீறில்லா நெற்றி பாழ்” என்பது தமிழ் மூதாட்டி ஔவையின் வாக்காகும். அவரின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு கதை உண்டு.

ஒருமுறை ஒரு மனிதன் சைவ நெறி தவறி முறையற்று வாழ்ந்து இறந்து போனார்‌. ஒரு முறை கூட திருநீறு பூசிக் கொள்ளாத அவரின் மேல், எங்கோ எவ்வாறோ விபூதியில் புரண்ட நாய் ஒன்று ஒருமுறை உரசிச்சென்றது. அதனால் அவர் மேலும் திருநீறு ஒரேமுறை பட்டது.  இதனால் அவர் இறந்தபின் அவரின் ஆன்மா சிவலோகம் சென்ற போது, எந்த தடையும் செய்யாமல் சொர்க்கம் செல்ல சிவகணங்கள் வழி விட்டன என்று ஒரு கதை உண்டு. திருநீறு / விபூதியின் மகிமைகளை அறிந்து அதனை முறைப்படி அணிபவர்களின தீவினைகள் அனைத்தும் அகன்று முக்தி கிடைக்கும் என்றும் திருநீறின் மகத்துவத்தை அறியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் கூட நன்மைகள் நடக்கும் என்றும் சைவ நூல்கள் எடுத்துரைக்கிறன.  மேலும் திருநீறு சைவ அடையாளமாக கருதப்பட்டாலும் இந்த அறிவியல் யுகத்திலும் ஆரோக்கியம் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது. 

 திருநீறு / விபூதி வகைகள்:

ஐந்து வகை திருநீறு

ஈசன் தனது ஐந்து முகங்களான ஈசானியம், தத் புருஷன், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகியவற்றின் மூலமாக தோற்றுவித்த ஐந்து வகையான பசுக்களின் சாணங்களில் இருந்து தயாரிக்கப்படும் விபூதியே இந்த ஐந்து வகையான விபூதிகள் என சாஸ்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை முறையே 1.இரட்சை, 2.சாரம், 3.பஸ்மம், 4.பசிதம், 5.விபூதி என்னவாகும். இவற்றில் 

இரட்சை

 சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றிய சுமனை என்ற சிவப்பு நிறப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.

சாரம்

சிவனது தத்புருச முகத்திலிருந்து தோன்றிய சுசீலை என்ற வெண்ணிறப் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.

பஸ்மம்

சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றிய சுரபி என்ற வெண்ணிறப் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.

பசிதம்

சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய பத்திரை என்ற வெண்ணிறப் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.

விபூதி

சிவனது சத்தியோஜாத முகத்திலிருந்து தோன்றிய தத்தை என்ற கபிலநிறப் பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.

இவைதவிர திருநீறு / விபூதியானது தயாரிப்பு முறைகளின்படி,

கல்பம்

அணுகல்பம்

உபகல்பம்

அகல்பம்

என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

கல்பம்

கன்றுடன் உள்ள நோயற்ற தாய்ப்பசுவின் சாணத்தைப் பூமியில் விழாமல் தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி தரையில் படாமல் சூரிய ஒளியில் காயவைத்து பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு கல்பம் என்று அழைக்கப்படுகிறது.

அணுகல்பம்

மனிதர்கள் புழங்காத காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணத்தைக் கொண்டு முறைப்படி மந்திரங்களை ஓதி சிவாக்கினியில் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு அணுகல்பம் என்று அழைக்கப்படுகிறது.

உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தை சிவாக்கினியில் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு உபகல்பம் என்று அழைக்கப்படுகிறது.

அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை சுள்ளிகளால் காட்டுத் தீயில் எரித்து தயாரிக்கப்படும் திருநீறு அகல்பம் என்று அழைக்கப்படுகிறது.

(*இரசாயன கலப்பு இல்லாத தூய்மையான திருநீறு/விபூதி நமது ஆலயாத்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.)

உடலில் திருநீறு / விபூதி பூசிக்கொள்ள வேண்டிய இடங்கள்:

சைவ ஆகமங்களின்படி,

1. உச்சந்தலை

2. நெற்றி

3. கண்டம்

4. மார்பு நடுவில்

5. தொப்புளுக்கு மேல்

6. இடது தோள்

7. வலது தோள்

8. இடது கை நடுவில்

9. வலது கை நடுவில்

10. இடது மணிக்கட்டு

11. வலது மணிக்கட்டு 

12. இடது இடுப்பு

13. வலது இடுப்பு 

14. இடது கால் நடுவில்

15. வலது கால் நடுவில்

16. முதுகுக் கீழ் தண்டுவடம்

17. வலது காதில் ஒரு பொட்டு, 

18. இடது காதில் ஒரு பொட்டு 

என மொத்தம் 18 இடங்களில் திருநீறு அணியவேண்டும்.  இவ்வாறு 

ஒவ்வோர் இடத்தில் திருநீறு பூசும்போதும் ஒவ்வொரு வகையான பலன்களைப் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

திருநீறு/விபூதி அணியும் போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

• மனித உடலின் புனிதமான அங்கமாக கருதப்படும் மோதிர விரலில் திருநீறை எடுத்து கட்டை விரலால் நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலில் பரப்பி மேலே பார்த்தபடி மூன்று கோடுகளாக நெற்றியில் இட்டுக் கொள்வதே சிறப்பானதாகும்.

• கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று விபூதியை பூசிக்கொள்ள வேண்டும்.

• திருநீறு அணியும்போது நமச்சிவாய, சிவாய நம, திருச்சிற்றம்பலம், சிவசிவா போன்ற இறை நாமத்தை உச்சரிக்க வேண்டும். அல்லது திருநீற்று மந்திரத்தை ஓத வேண்டும்.

• விபூதியை கீழே சிந்தக்கூடாது.

• காலை, மாலை, உறங்கப் போவதற்கு முன்பு திருநீறு / விபூதி தரிக்க வேண்டும். 

• ஆலயம் செல்வதற்கு முன், பூஜை செய்யும் முன்பு பூஜை செய்த பிறகு திருநீறு / விபூதி தரிக்க வேண்டும். 

திருநீறு / விபூதி பூசிக்கொள்ளும் முறைகள்

உள் தூளனம் –  திருநீற்றை கைகளால் அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை `உள் தூளனம்.’ என்று குறிப்பிடப்படுகிறது.

திரிபுண்டரீகம் – ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரலால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக  இட்டுக்கொள்ளும் கொள்ளும் முறை திரிபுண்டரீகம் என்று குறிப்பிடப்படுகிறது. முறையே இம்மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று கருதப்படுகிறது.

திருநீறு / விபூதி அணிவதன் அறிவியல் நன்மைகள்

தூய்மையான திருநீறு பூசுவது பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்வதாகவும்,  சூரியக் கதிர்களின் சக்தியை உடல் தோலில் வழியே உள்ளே உள்ளே ஈர்க்க உதவுவதாகவும், பல நோய்களைத் தடுக்கும் கிருமி நாசினியாக செயல்படுவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும்  பசுஞ்சாணத்தால் செய்த தூய திருநீறை நெற்றியில் பூசுவதால் தலையில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் திருநீறு அணிவதால் இறையருள், நல்ல கல்வி, உயர்ந்த குணங்கள், ஆன்மீக நாட்டம், புகழ், செல்வாக்கு, நிறைந்த செல்வம், நல்லோர் நட்பு, எதிலும் வெற்றி, உடல் ஆரோக்கியம், அமைதியான மனநிலை, அன்பான சுற்றம் போன்ற எல்லா விதமான நன்மைகளும் கிடைக்கும் எனவும் பிறவிப் பிணி அகன்று மோக்ஷம் செல்ல வழிகாட்டும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே ஈசனுக்கு இணையான மகிமை வாய்ந்த திருநீறு / விபூதியை பரிசுத்தமான மனதுடன் இறைவனை நியானித்து  உடலில் அணிந்து உய்வோமாக.

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp