palani-murugan-temple-kumbabishegam

பழனி கோவில், பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்-கும்பாபிஷேக விழா

Table of Contents

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கலியுக வரதனாய் கண்கண்ட தெய்வம் பாலதண்டாயுத சுவாமி குடிகொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழநித் திருக்கோவில் பற்றி விரிவாகக் காணலாம். 

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பெயரக்காரணம்: 

திரு ஆவினன்குடி- பழநி பால தண்டாயுதபாணி திருக்கோவில் ஆதி மூலவர் அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி முருகனே என்றும் பின்னாளில் போகரால் மலைமேல் பிரதிஷ்டை செய்யப்பட்டவரே தற்போது நாம் வணங்கும் நவபாஷாண மூலவர் என்றும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. திருமுருகாற்றுப்படை நூலில் நக்கீரர் ஆவினன்குடி முருகனையே மூன்றாம் படைவீடான பழநி முருகன் எனப் பாடியுள்ளார். போகர் திருமுருகாற்றுப்படை நூலிற்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவராவார். எனவே படைவீடுகள் அமைத்து முருகன் வழிபாடு துவங்கிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உருவானதே பழநி மலை என்று நம்பப்படுகிறது. இடும்பன் கயிலாயத்திலிருந்து சுமந்து வந்ததே பழநி மலை என்றும் தலவரலாறு கூறுகிறது.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் ஆவியன் குடி என்றாகி பின் ஆவினன்குடி என மருவியது என்று வரலாறு கூறுகிறது. 

alayatra-membership1

பழநி- புராணங்களின்படி பழத்திற்காக கோபம் கொண்டு மலைமீது அமர்ந்த குமரனின் கோபம் தணிக்க அன்னை பார்வதி, அப்பனுக்கு பாடம் சொன்ன ஞானப்பழம் நீயப்பா. ஒரு பழத்திற்காக கோபம் கொண்டு தென்னகம் வந்து தங்கலாமா.. என சமாதானம் செய்தார். மேலும் தாயார் குமரனை பழம் நீ அமர்ந்ததனால் இந்த இடம் பழநி என்று வழங்கப்படும் என அருளினார்.

தண்டாயுதபாணி – பெயர் காரணம்:

இடும்பன்

இடும்பன் சூரபத்மனின் குரு. மாவீரனான சூரபத்மனின் இழப்பால் பெரிதும் துயருற்ற இடும்பன் ஒரு குருவாக தான் தோற்றுவிட்டதாக வருந்தினார். அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய தன் சீடனை சிறு பிள்ளையான முருகன் வென்றார் என்றால் அவரது குருவான அகத்தியரின் திறமையை வியந்து போன்ற விரும்பினார். எனவே இடும்பன் அகத்தியரைச் சந்தித்து தன் கடைசி காலத்தை அகத்தியருக்கு சேவை செய்து கழிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். ஆனால் அகத்தியரோ இடும்பனும் தனக்கு சமமானவரே என்றும் ஒரு நல்ல குரு என்றும் தன் கடமையை சரியாகவே செய்கிறார் என்றும் அவரது சீடர்களின் நோக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் கற்ற கலைகள் சித்தி அடைகின்றன என்றும் அவரைத்தேற்றினார்.

சிவகிரி சக்திகிரி: இடும்பனின் தொடர் வற்புறுத்தலால் அகத்தியர் தனக்கு ஒரு உதவி மட்டும் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அகத்தியர் சிவசக்தி திருமணத்தின்போது சமநிலை இழந்த பூமியை சரிசெய்ய பூமியின் தென்கோடிக்கு வந்தார்‌. தனது திருமண விழாவைக் காணாமல் உலக நன்மைக்காக தியாகம் செய்த அகத்தியருக்கு இறைவன் கொடுமுடியில் தன் மணக்கோலத்தை காட்டி அருளினார். அத்தோடு அகத்தியரே தங்கள் ஒப்பற்ற இந்த செயலால் மனம் மகிழ்ந்தோம் என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்” என திருவாய்மலர்ந்தார். அதற்கு அகத்தியர் கயிலாயத்தில் நிகழ்ந்த திருமண விழாவை தெற்கில் காட்டியருளியது போல நானும் என் மக்களும் ஈசனையும் அன்னையையும் இங்கிருந்தே வழிபட தெற்கில் ஒரு கயிலாயம் வேண்டும் என வேண்டினார். கருணைக்கடலான ஈசன், தானும் அன்னையும் சிவகிரி சக்திகிரி எனும் இருமலைகள் வடிவில் இருப்பதாகவும் அந்த மலைகளை அகத்தியர் தென்திசைக்கு எடுத்துச்செல்லலாம் எனவும் வரம் தந்தார். ஆனால் எடுத்துச் செல்லும் மலைகளை வழியில் எங்கும் இறக்கி வைக்கக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் தாம் அங்கேயே தங்கிவிடுவோம் என்றும் அருளினார். 

இடும்பன் உதவி:

உருவத்தில் சிறியவரான அகத்தியர் ஈசனிடம் வரம்பெற்றும் அந்த மலைகளை தன் இருப்பிடமான பொதிகை மலைக்கு ஒரேமூச்சாக எடுத்துவர இயலாமல் இருந்தார். அபொழுது தான் மிகப்பெரிய பலசாலியான இடும்பன் தனக்கு பணிவிடை செய்ய வேண்டி வற்புறுத்தியதால் சிவசக்தி வடிவான அந்த மலைகளைத் தென்திசைக்கு கொண்டுவந்து சேர்க்கும்படி வேண்டிக்கொண்டார். இடும்பனும் தேவேந்திரனின் வஜ்ஜிராயுதத்தை தண்டாகக் கொண்டு அவ்விரு மலைகளையும் காவடியாக சுமந்து  தென்பொதிகைக்கு எடுத்து சென்றார். தன் சீடனை வென்ற முருகனின் குருவான அகத்தியருக்கே தன் உதவி தேவைப்பட்டதென மனதில் சிறு கர்வம் கொண்டார். இருமலைகளையும் சுமந்துகொண்டு இடும்பனும் அவரது மனைவி இடும்பியும் தென்திசை வந்தனர். வழியில் பொதிகை மலை எங்கு உள்ளதெனத் தெரியாததால் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் வழிகேட்டனர்.

முருகனின் திருவிளையாடல்: ஏற்கனவே ஞானப்பழத்திற்காக தாய் தந்தையரிடம் கோபம் கொண்டு அவர்களைப் பிரிந்து பழநியில் தனித்திருக்கும் முருகப்பெருமான், இடும்பனின் கர்வம் போக்கவும் சிவசக்தி வடிவான அந்த மலைகளைத் தன் இடத்திலேயே வைத்து தினமும் பெற்றோரை தரிசிக்கவும் திருவுளம் கொண்டார். எனவே இடும்பன் வழிகேட்ட இடமான சென்னிமலையில் மாடு மேய்க்கும் சிறுவனாக நின்று, தெற்கே சரவணப்பொய்கை என்ற ஒரு நதி பாயும் அங்குதான் பொதிகை மலை உள்ளது என பழநிக்கு வழிகாட்டினார். அங்குவந்து மலைகளை இறக்கி வைத்து இளைப்பாரிய இடும்பனைப்பார்த்து அவருக்கு வழிகாட்டிய அந்த சிறுவன் சிரித்தார். ஒரு சிறுவனின் பேச்சை கேட்டு தவறான இடத்தில் மலைகளை இறக்கிவைத்தாயே இடும்பா இதுதான் நீ அகத்தியருக்கு உதவும் அழகா? எனக் கேட்டு நகைத்தார். ஏமாற்றப்பட்டதை அறிந்த இடும்பன் கடும் கோபம் கொண்டார். தான் மிகப்பெரிய பலசாலி என்றும் சரியான இடத்தில் மலைகளைச் சேர்த்துவிட்டு பிறகு உன்னைச் சந்திக்கிறேன் என்றும் சபதமிட்டு மலைகளைத்தூக்க முயன்றார். ஈசனின் வாக்கால் அகில உலகையும் ஒரு கையால் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்ட இடும்பனால் கூட மலைகளை அசைக்க இயலவில்லை. முருகப்பெருமான் மீண்டும் இடும்பனைக்கண்டு நகைத்தார்.

இடும்பன் மலை: 

அவமானத்தாலும் எடுத்த காரியத்தை முடிக்க இயலாத குற்ற உணர்வாலும் மேலும் கோபம் கொண்ட இடும்பன், ”அடே சிறுவனே நான் யாரென்று அறியாமல் என்னுடன் விளையாடிவிட்டாய் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று முருகன் மேல் பானங்களைத் தொடுத்தார். முருகன் தடுத்தார். ஒருகட்டத்தில் போர் கடுமையானது. ஈசன் மகனின் வேலுக்கு இடும்பன் மாண்டார். வெகு நேரம் கணவனைக் காணாது அங்கு வந்து சேர்ந்த இடும்பி இறந்து கிடந்த இடும்பனைக்கண்டு அழுதாள். மாவீரனான தன் கனவனை ஒரு சிறுவன் வதைத்தானென்றால் அது சூரபத்மனையே சம்காரம் செய்த முருகனாகத்தான் இருக்கவேண்டும். சிவசக்தி மலையை தென்னகம் கொண்டுசேர்த்த என கணவனை ஏன் வதைத்தாய் முருகா என இடும்பி கதரி அழ, கருணையே வடிவான குமரன், “ இடும்பி நான் வதைத்தது இடும்பனின் கர்வத்தையே. இடும்பனை அல்ல. அவரின் பெயர் சொல்லி அழைத்துப்பார்” என அருளினார். அவ்வாரே இடும்பி அழைக்க இடும்பன் உயிர்த்தெழுந்தார். முருகனை வணங்கி நின்ற அவரைத்தடுத்து தாங்கள் என் குருவுக்கு இணையானவர், என்னை வணங்கலாகாது, நான் தான் தங்களை வணங்க வேண்டும் என தன்னை வணங்கியவரை திருப்பி வணங்கிய பால குமாரனாக் காட்சியளித்தார். மேலும் தன் தாய் தந்தையரைத் தனக்காக தென்னகம் கொண்டு சேர்த்ததால் அந்த மலைகளில் உயரமான மலையில் தாங்கள் எழுந்தருள வேண்டும். என்னைக்கான வரும் பக்தர்கள் முதலில் தங்களை தரிசித்து பிறகே என்னை வணங்க வேண்டும் என்று அருள்புரிந்தார். இவ்வாறு இடும்பன் சுமந்து வந்த மலைகளில் உயரமானமலை இடும்பன் மலையானது.

தென் பொதிகை பெயர்க்காரணம்: 

பழனிக்கு தென்பொதிகை என்ற புராணப் பெயரும் உண்டு.

அகத்தியருக்காக மலைகளைச்சுமந்து வந்து பொதிகை மலை எதுவெனத் தெரியாமல் வழிகேட்ட இடும்பனுக்கு ஆதிப் பழநியான சென்னிமலையில் மாடு மேய்க்கும் சிறுவனாக கையில் தண்டுடன் கோவணம் கட்டி வழிகாட்டிய முருகப்பெருமான் அதே கோலத்தில் சிறிய மலையான சிவகிரி மலைமீது நின்று அருள்புரிகிறார். எனவேதான் இவர் பழநி சிவகிரி வாழ் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார். இம்மலை தென்பொதிகை என்று போற்றப்படுகிறது. சிவசக்தி மலைகளைக் காவடியாக இடும்பன் சுமந்து கொண்டு வந்ததால் இன்றும் பழநி முருகனுக்கு பக்தர்கள் காவடி சுமந்து வருகின்றனர். மேலும் காவடி சுமந்து பாத யாத்திரை வரும் பக்தர்கள் முருகனின் வாக்குப்படி இடும்பனை தரிசித்த பிறகே முருகனை தரிசிக்க வேண்டும். அப்பொழுது தான் வேண்டுதல் முழுமையடையும் என்பது ஐதீகம்.

பழனி பெயர்க்காரணம் – இப்படியாகப் புராணங்களில் பழநிக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டாலும் ‘பழனம்’ என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழனம் என்ற சொல்லுக்கு அதிக விளைச்சலைத் தருகின்ற நல்ல நிலம் என்பது பொருளாகும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது. இன்றும் பழனி மலையைச்சுற்றி செழுமையான வயல்கள் இருப்பதை பக்தர்கள் கண்டிருப்பீர்கள்.

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு:

பழநித் திருத்தல புராணவரலாறு அனைவரும் அறிந்ததே, இருப்பினும் சுருக்கமாக காண்போம்.

பழத்தால் கோபம் கொண்ட முருகன்:

ஒருசமயம் நாரத முனிவருக்கு மிக அரிய மாம்பழம் ஒன்று கிடைத்தது‌. ஞானப்பழமான அந்த மாம்பழத்தை பரம்பொருளான ஈசனுக்குத் தர எண்ணிக் கயிலாயம் கொண்டு வந்தார் நாரதர். அப்பொழுது அங்கிருந்த முருகனுக்கும் விநாயகனும் பழத்தை பார்வதி பகிர்ந்து கொடுக்க எண்ணினார். ஆனால் நாரதரோ பழத்தைப் பகிர்ந்தால் அதன் மகிமை போய்விடும் எனக்கூறி இருவரில் எவரேனும் ஒருவருக்கு தான் தரவேண்டும் என வேண்டிக்கொண்டார். யாருக்கு தருவது யாரைத் தவிர்ப்பது என்று அன்னை குழம்பித்தவித்தார். முக்காலமும் உணர்ந்த சிவபெருமான், யாருக்கு ஞானப்பழம் என்பதை அவரே தீர்மானிக்கட்டும் எனக்கூறி அன்னையின் சங்கடத்தைத் தீர்த்துவைத்தார். அதற்காக இந்த உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்கள் என்ற போட்டியை அறிவித்தார். வெற்றிபெருபவர்களுக்கு அந்த ஞானப்பழம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

குமரனோ நொடியில் தன் மயில்மீது ஏறி உலகத்தைச் சுற்றி வரச்சென்றார். விநாயகனோ தனது பெற்றோரே தனது உலகம் எனக்கூறி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் முருகப்பெருமான் கோபமடைந்தார். “இது, உங்கள் உலகம் எதுவோ அதைச் சுற்றிவரவேண்டும் என்ற போட்டி இல்லையே. உண்மையில் உலகத்தை தானே சுற்றிவரக் கூறினீர்கள். எனில், இது நியாயமற்ற தீர்ப்பாகும். எனவே, நான் இதை எதிர்க்கிறேன். இனி இந்தக் கயிலாயத்தில் நான் இருக்கப்போவதில்லை. எனக்கெனப் பொய்யுரைக்காத ஏமாற்றாத மக்களைக் கொண்டு ஒரு தேசத்தை உருவாக்கி தனியாக வாழப்போகிறேன்” என்று தென்னகம் வந்து திருவாவினங்குடியில் அமர்ந்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.

போகர் வரலாறு 

போகர் பழநி வைகாவூர் எனும் இடத்தில் பிறந்து தனது பெற்றோர் மற்றும் பாட்டனிடம் கல்வி பயின்றார். இவர் கி.மு 100 முதல் 500  வரையிலான காலகட்டத்தைச் சார்ந்தவர்.  பதினென் சித்தர்களில் ஒருவரான இவர் இரசவாதம் செய்வதில் வல்லவர். அதுமட்டுமின்றி தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியுள்ளார்.  இவர் நவசித்தர்களுள் ஒருவரான கஞ்சமலைக் காலங்கி நாதரின் சீடனாவார். சீனாவில் இவர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் ஆகியவற்றிற்கு தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார். மேலும் அறிவியல் ரீதியிலான கண்டுபிடிப்புகள், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகள் போன்ற எண்ணற்ற குறிப்புகளை எழுதிவைத்துள்ளார். 

நவபாஷாண மூலவர் சிலை

அதே காலகட்டத்தில் வாழ்ந்த அகத்தியர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் அளித்து குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணத்தால் செய்த மருந்துகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்து வந்தார். அகத்தியரின் மருந்துகளால் மெதுவாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகள் வீரியம் மிகுந்ததாக இருந்தது. சிலர் உடனடியாக குணமடைந்தனர். சிலர் உயிரிழந்தனர். இதனால் தனது மருந்துகளின் வீரியத்தைக் குறைக்க போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி இரவெல்லாம் விட்டு அதிகாலையில் அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக எடுத்து தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தினார். அதற்காக அவர் செய்த சிலையை பழநி மலைமேல் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் சிறப்புகள்:

பழநியில் மட்டும் தான் அடிவாரத்தில் கிழக்கு நோக்கி மயில் மீது அமர்ந்த குழந்தை முருகனாக ஒரு மூலவரும் மலை உச்சியில் ஆண்டியாக மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஒரு மூலவருமாக இரண்டு சன்னிதிகளில் இரண்டு மூலவர்கள் ஒரே தலத்தில் உள்ளனர்.

பழநி மலை மேல் உள்ள மூலவர் சிலை 

1.சாதிலிங்கம் ( ரசம் ), 2 மனோசிலை, 3 தாரம் (அரிதாரம், மால்தேவி)

4 வீரம், 5 கந்தகம், 6 பூரம்

7 வெள்ளை பாசாணம், 8 கௌரி பாசாணம், 9 தொட்டி பாசாணம்
ஆகிய ஒன்பது வகையான வேதியல் பொருட்களைக் கொண்டு பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த மூலவர் சிலை தொடுவதற்கு மீன் செதில் போன்று இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 இரவு பூஜைக்குப் பிறகு மூலவர் மீது முழுவதுமாக சந்தனக்காப்பு இடப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் அந்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தன பிரசாதம் “இராக்கால சந்தனம்” என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இதை உட்கொள்கின்றனர்.

இராக்கால சந்தன பிரசாதம் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் அருமருந்தாகும். மேலும் இந்த நவபாஷாண சிலை மீது அபிஷேகம் செய்யப்பட்டதாலேயே பழநி பஞ்சாமிர்தம் மருத்துவ குணம் கொண்டதாக போற்றப்படுகிறது.

இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்” தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதரும் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம். 

பழநியில்தான் முதன்முதலில் தங்கரதம் ஓட்டப்பட்டது.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமந்து வந்த முதல் காவடியை மலை உச்சியில் போகர் சமாதி அருகே தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காவடியின் ஒருபுறம் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மறுபுறம் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர். 

இத்தலத்தில் பாண்டியர்கள் திருப்பணி செய்த கல்வெட்டுக்கள் காட்சியளிக்கின்றன. ஒரு நாளில் முருகனுக்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை. 

தல விருட்சம்

திரு ஆவினன்குடி- நெல்லி மரம்.

பழநிமலை – நாகலிங்கம் 

தல தீர்த்தம்

திரு ஆவினன்குடி- சரவணப் பொய்கை 

பழநிமலை – தண்டாயுதபாணி தீர்த்தம். 

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைப்பு:

திரு அவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதி-

பழநி முருகன் கோவில் திரு ஆவினன்குடி தலத்தையும் சேர்த்ததே என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த சன்னிதி குழந்தை வேலாயுதசுவாமி கோவில் எனப்படுகிறது. பழமையான இந்த சன்னிதியில் ஒரு குளம் உள்ளது. இங்கு முருகன் நெல்லி மர நிழலில் எழுந்தருளியுள்ளார். பழத்திற்காக கோபம் கொண்டு கயிலாயம் விட்டு வந்த முருகன் இங்கு  குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.  கருவரை உயரமாக உள்ளதால் பக்தர்கள் சிறப்பாக தரிசிக்க முடிகிறது. திரு ஆவினன்குடி திருத்தலத்தை மற்றொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

பாத விநாயகர் சன்னதி: திரு ஆவினன்குடியில் இருந்து நேரே பழநி மலையடிவாரத்தை அடைந்தால் வடக்கு நோக்கி பாத வினாயகர் எழுந்தருளியுள்ளார். எதிரில் வலது புறம் மயில் வாகனம் அமைந்துள்ளது இடதுபுறம் மீனாட்சி அம்மன் தனிச்சன்னதி அமைந்துள்ளது. பாத வினாயகர் சன்னதியில் கற்பூரம் ஏற்றி வணங்கி  பக்தர்கள் மலை ஏறத்துவங்குகின்றனர்

பழநி மலைப்பாதை

 பாதவினாயகர் கோவிலில்  இருந்து மேல் கோபுர வாயிலுக்கு உள்ளே பிள்ளையார், மயில்வாகனம், நாயக்கர் மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நதிகள் உள்ளன. பதினெட்டாம் படியில் காவல் தெய்வம் கருப்பசாமியும் எதிரில் கன்னிமார் தேவிகளும் அருள்புரிகின்றனர்.  அடுத்து இடும்பன், கடம்பன், விநாயகர், குமாரவடிவேலர், சேத்ரபாலர், சண்டிகாதேவி, கும்மினி வேலாயுத சுவாமி,சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் அருள்பாலிக்கின்றனர்.

 அடுத்து, வைசியர் மண்டபத்தைக் கடந்தவுடன் ஐந்து நிலை மாடங்கள் பொருந்திய ராஜகோபுர வாயில் உள்ளது. இதன் பின்னே 12 கல்தூண்கள் தாங்கிய வேலைப்பாடு நிறைந்த பாரவேல் மண்டபமும் நவரங்க மண்டபமும் உள்ளன. 

வாத்திய மண்டபத்திற்கு எதிரே மலைக்கொழுந்தீஸ்வரர் சன்னதி உள்ளது. அதன் முன்புற தூண்கள், ரதங்களின் வடிவில்  செதுக்கப்பட்டுள்ளன. பழநியின் கொடுமுடி சிகரம் என்று இப்பகுதியை கூறுவர். இதன் வழியாக உள்ளே நுழைந்தால், மகா மண்டபத்தை அடையலாம். இதனையடுத்த அர்த்த மண்டபத்தின் இடது பக்க கல்மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்களை தரிசிக்கலாம்.

தொடர்ந்து பழநியாண்டவரின் பள்ளியறை, சண்முகநாதர் சந்நதி, திருவுலா செல்லும் சின்னக்குமாரர் சந்நதி ஆகியன உள்ளன. இதற்கு அருகில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவரை சதுர வடிவில் சுற்றிலும் நீராழிப்பத்தியுடன் அமைந்துள்ளது. கருவறை பின்புற சுவரில் அதிஷ்டானத்திலிருந்து மேற்பகுதி வரை ஏழு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கருவறையினுள்ள முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது. தரிசனம் செய்து வெளியேறுகையில் கிழக்கு நோக்கி பிளையார் சன்னிதியும் பதினென் சித்தர்களின் சுதை சிற்பங்களும் அமைந்துள்ளன. 

எதிரில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது‌. இங்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 20000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இக்கோவிலுக்கு வி.வி.சி.ஆர். முருகேசன் என்பவர் தேவஸ்தான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் மின் இழுவை வாகனம் ஆகியவற்றை நன்கொடையாக செய்து கொடுத்தார்.

.

பழநி பாலதண்டாயுதபாணி திருவிழாக்கள்:

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

தைப்பூசம்  ஆண்டுதோறும் தமிழில் பத்தாவது மாதமான தை மாதப் பௌர்ணமி திதி மற்றும் பூச நட்சத்திரம்  கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவே தைப்பூசமாகும். இவ்விழாவின் போது  நாடெங்கும் இருந்து பக்தர்கள் காவடி சுமந்தும் பாத யாத்திரையாகவும் பழநிக்கு வருகின்றனர். கேரளாவில் இந்த விழா தைப்பூயம் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.

பங்குனி உத்திரம் ஆண்டுதோறும் தமிழில் 12ம் மாதமான பங்குனி மாதத்தில் 12ம் நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் பன்னிரு கை வேலவனுக்கு  நடைபெரும் சிறப்பு விழாவே பங்குனி உத்திரப் பெருவிழாவாகும். பெரும்பாலான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்திர மஹோற்சவங்கள் நடைபெறுகின்றன. அறுபடைவீடுகள் அனைத்திலும் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் திருவிழாவும் தேரோட்டமும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கொடுமுடிக்குச் சென்று காவிரித் தீர்த்தம் கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண மூலவருக்கு அபிஷேகம் செய்கின்றனர். பங்குனி வெயிலின் கடுமையால் நவபாசாண சிலை சிதைந்துவிடாமலும்  வெப்பத்தால் இரசாயன மாற்றம் அடைந்து எதிர்விளைவுகள் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டி மூலிகைகள் கலந்த காவிரி நதியின் குளிர்நீரால் நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய ஏற்படுத்தப்பட்டதே பழநி பங்குனி உத்திரத் திருவிழாவாகும்.

சூரசம்காரம்: சூரபத்மனை முருகப்பெருமான் திருச்செந்தூரில் சம்காரம் செய்ததன் நினைவாக பெரும்பாலான முருகன் ஆலயங்களில் சூரசம்காரம் விழா சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக பழநியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பழநி பாலதண்டாயுதபாணி சிறப்பு வழிபாடுகள்:

தினமும் அதிகாலை 6 மணிக்கு நடைபெரும் விஸ்வரூப தரிசனம் இத்திருத்தலத்தின் சிறப்பாகும். தொடர்ந்து 6 கால பூஜைகளும் நடைபெறுகின்றன. தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது முதலில் துவார விநாயகருக்கே முதல் தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து பள்ளியறை தீபாராதனையும் அதன்பிறகே மூலவரான பழநியாண்டவருக்கு மஹா தீபாராதனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சூரசம்காரத்தின்போதும் மாலை பூஜைக்குப்பின் உற்சவர் மலையடிவாரத்திற்கு எடுத்துவரப்படுகிறார். கிரிவலப்பாதையில் சூரசம்காரம் நடந்து முடியும் வரை மூலவர் நடை சாத்தப்படும். மேலே வழக்கமான பூஜைகள் எதுவும் நடைபெருவதில்லை. சூரசம்காரம் முடிந்ததும் பாதவினாயகர் சன்னதியில் தேவயானியை தாரை வார்த்துக் கொடுக்கும் வைபவம் சிறப்பாக நடைபெரும். அப்பொழுது நடைபெரும் பூஜை மிகவும் சிறப்பானதாகும். மேலும் சூரசம்காரம் முடிந்த பின்னர் உற்சவரை மலைமேல் எடுத்துச்செல்லும் முன்பு 18ஆம் படி கருப்பசாமி முன்பாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பூஜை நடைபெரும். இதுவும் வெற்றி வாகை சூடிவரும் முருகனுக்குச் செய்யப்படும் சிறப்பு பூஜையாகும். இந்த பூஜை முடிந்த பிறகு மலைமேல் கோவில் மொத்தமும் கழுவி சுத்தம் செய்தபின்னரே உற்சவர் மேலே கொண்டு செல்லப்படுவார். 

பழனி தங்கரதம்

ஒவ்வொரு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் இரவு 7 மணிக்கு மலைக் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை முழங்க கோவில் பரிவாரங்களுடன் ஓட்டப்படுகிறது.. பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக தங்கரதம் இழுக்கிறார்கள். தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் சித்ராபவுர்ணமி அன்று  கிரிவலம் வருவது போல அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் பழநி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மற்ற அபிஷேகப் பொருட்களை எல்லாம் முருகனின் தலை மீது வைத்து எடுத்துவிடுகின்றனர். முருகன் சிரசின் மேல் அபிஷேகமாக வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி” பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும். பொதுவாக சிவாலயங்களில் தான் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் பழனி முருகன் கோவிலில் விசேஷ நட்சத்திர தினங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

பழநி பாலதண்டாயுதபாணி திருத்தல சிறப்பம்சங்கள்:

மலைக்கு செல்ல படிகளைத்தவிர  வயதானவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு யானைப்பாதை உள்ளது. மேலும் ரோப் கார் மற்றும் வின்ச் வசதிகள் உள்ளன.  

தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. 

பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் நடைதிறக்கும் நேரம் மற்றும் பூஜைகள்.

திருக்கோவில் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும். ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

1.விஸ்வரூப தரிசனம் – காலை 5 மணிக்கு நடைபெரும் முதல் பூஜையாகும். தன் திருக்கோலத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காட்டி நிற்கும் சன்யாசி அலங்கார தரிசனமாகும். கருணைக்கடலான முருகப்பெருமான் இத்தரிசனத்தை பகைவனாகிய சூரபத்மனுக்கு போர்க்களத்தில் காட்டி அருளினார் எனவும் அதைக் காண, நாரதரும் மஹாவிஷ்ணுவும் திருச்செந்தூருக்கு வந்தனர் என செந்தூர்த் தலபுராணம் கூறுகிறது.

பழநியில் துவார விநாயகருக்கு முதல் தீபாராதனையும் பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னரே மூலவருக்கு தீபாராதனை செய்யப்படுகிறது. பின்னர் இறைவன் திருமேனியில் சாத்தப்பட்டிருக்கும் ராக்கால சந்தனமும், கௌபீன தீர்த்தமும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பூஜைமுடிந்து திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை ஓதுவார்கள் பாடுகின்றனர்.

2.விழா பூஜை: காலை 7.15 மணிக்கு நடைபெரும் விழா பூஜையின் போது பழநி ஆண்டவர் சிவபெருமானை பூஜித்து வழிபடுவதாக நம்பப்படுகிறது. எனவே முருகனுக்கு காவி உடை அணிவித்து சன்யாசி திருக்கோலத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது.  ஒரு பேழையில் மூலவருக்கு இடது பக்கத்தில் ஸ்படிகலிங்க வடிவில் சிவனும் அம்பிகையும், சாளக்கிராமமும் இறைவனின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளனர். இக்காலபூஜையில் முருகனின் ஆத்மார்த்த மூர்த்தியான சிவனுக்கு பஞ்சபுராணங்கள் பாடப்பட்டு அபிஷேகங்கள், தூப, தீப, நைவேத்தியமும், ஏக தீபாராதனையும் செய்யப்படுகிறது. மற்ற கால பூஜைகளில்

ஆத்மார்த்த மூர்த்திக்குத் தனி அபிஷேகம் நடைபெறுவதில்லை. 

3.சிறுகாலசாந்தி பூஜை: சிறுகால சந்தி காலை 8 மணிக்கு நடைபெரும். இந்த பூஜையில் அப்பன் முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைக்குப் பின் நைவேத்தியம், ஏகதீபாராதனை காட்டப்படுகிறது. இப்பூஜையின் போது பழநி ஆண்டவருக்கு வேடன் அலங்காரம் செய்யப்படுகிறது.

4.கால சந்தி பூஜை: காலை 9 மணி நடைபெறும் இந்த பூஜை சிறுகால  சந்தியினைப் போலவே வழிபாடுகளும் அர்ச்சனை ஆராதனைகளும் நிகழும். பாலசுப்பிரமணியராக முருகப்பெருமானுக்கு குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படும். பெருமானின் திருக்கோலங்களில் இந்த குழந்தைக் கோலம் தனிச் சிறப்புடையது.

5.உச்சிக்கால பூஜை: உச்சி கால பூஜை பகல் 12 மணிக்கு நடைபெறும் பூஜையாகும். இந்த பூஜையில்  முருகப்பெருமானுக்கு கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்த பின்பு நைவேத்தியம் செய்து 

1.அலங்கார தீபம், 2.நட்சத்திர தீபம், 3.ஐந்துமுக தீபம், 4. கைலாச தீபம், 5. பாம்பு வடிவ தீபம்

6.மயில் தீபம், 7.சேவல் தீபம், 8. யானை தீபம், 9. ஆடு வடிவ தீபம், 10.புருஷாமிருக தீபம் , 11. பூரணகும்ப தீபம்

12. நான்குமுக தீபம், 13. மூன்று முக தீபம், 14. இரண்டு முக தீபம், 15. ஈசான தீபம், 16. கற்பூர தீபம்.

ஆகிய பதினாறு வகையான தீபாராதனைகள் செய்யப்படுகிறது. தீபாராதனைக்குப் பின்னர் தேவாரம் இசைத்து கட்டியம் கூறப்படும். சிறப்பு தினங்களில் இவற்றோடு கந்தபுராணமும் ஓதப்படும். பின்னர் வெண்சாமரம், கண்ணாடி, சேவற்கொடி, விசிறி, ஆலவட்டம் கட்டப்படும். 

6.சாயரட்சை:  சாயாரட்சை என்பது மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பூஜையாகும். பெருமானுக்கு இராஜ அலங்காரம் செய்யப்பட்டு உச்சிகால பூஜை போலவே அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நைவேத்யம் மற்றும் பதினாறு வகை தீபாராதனைகளும் செய்யப்படும். அதன்பின்னர் சிறப்பு உபசாரங்களும் நடைபெரும். 

7.இராக்கால பூஜை: இராக்கால பூஜை இரவு 8 மணிக்கு நடைபெறும் பூஜையாகும். பெருமானுக்கு வயோதிகன் அலங்காரம் செய்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெரும். பின் நைவேத்யம் செய்து, ஏக தீபாராதனை காட்டப்படும். ஷண்முகர், உற்சவரான சின்னக் குமரர் ஆகியோருக்கு புஷ்ப அலங்காரம செய்து நைவேத்யமும் தீப ஆராதனையும் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு தினை மாவு பிரசாதம் வழங்கப்படும். இராக்கால பூஜையில் தூய சந்தனம் இறைவன் திருமேனியில் பூசப்படுகிறது. மேலும் அலங்காரம் ஏதுமின்றி கோவணம் மட்டுமே சுவாமிக்கு உடுத்தப்பட்டு அதன் நுனி ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்கப்படுகிறது. நவபாஷாண மூலவர் சிலை மிகவும் வெப்பமானதாகும் எனவே மூலவருக்கு வியர்ககும் என்பது ஐதீகம். அப்படி மூலவர் திருமேனியில் உருவாகும் வியர்வையே கோவணத்தீர்த்தம் என அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தீர்த்தத்தில் கலந்து இராக்காலசந்தனப் பிரசாதத்துடன் வழங்கப்படுகிறது.

இது உடற்பிணியும் உள்ளப் பிணியும் நீக்கும் அருமருந்தாகும்.

8.பள்ளியறை பூஜை: இராக்கால தீபாராதனைக்குப் பின்னர் முருகப்பெருமான் பள்ளியறைக்குத் தங்கம் அல்லது வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளுவார். பள்ளியறை செல்லும் முன் இறைவன் பக்தர்களின் அரோகரா கோஷம் வின்னை முட்ட மலைமேல் வாத்தியங்கள் முழங்க வெளிச்சுற்றில் வலம் வருகிறார். பள்ளியறையில் பெருமானை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சல் பாட்டு, தாலாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன. மகாதீபாராதனை காட்டி திருக்கோவிலின் அன்றாட வரவு செலவு கணக்கு பார்த்து பைரவ பூஜை நடைபெருகிறது.  பின் சன்னிதி திருக்காப்பிடப்படுகிறது. விஸ்வரூப தரிசனத்திற்கு திறக்கப்படும் நடை, பள்ளியறை பூஜைக்கு முன் சாத்தப்படுவதில்லை.

பழனி கும்பாபிஷேக விழா

பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஜனவரி 27 ம் தேதி கும்பாபிஷேக விழா, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. பழனி முருகன் மலைக்கோவிலான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் 2023 ஜனவரி 16 ம் தேதி துவங்கி நடைபெற்றன. ஏராளமான சிவாச்சாரியார்கள் மந்திர, வேதங்கள் முழங்க ஜனவரி 23 ம் தேதி முதல் யாக சாலை பூஜைகளும் துவங்கி நடத்தப்பட்டு வந்தன. சரவண நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அமைவிடம்:

பழனி முருகன் மலைக்கோயில், மேற்கு தொடர்ச்சி மலைகளில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே திண்டுக்கல் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது.  690 படிகள் உள்ளன. 

கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அருகில் உள்ள விமான நிலையம்: கோவை, மதுரை  விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்: பழநி இரயில் நிலையம்.

அருகில் உள்ள பேருந்து நிலையம்: பழநி பேருந்து நிலையம்.

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:

கலியுக தெய்வமான பழநி முருகனை வழிபட்டால் உலக நன்மைகள் அனைத்தும் கைகூடும். தீராத நோய் தீரும். கிடைத்தற்கரிய மெய் ஞானம் கிட்டும். குறைகள் அனைத்தும் நீங்கும். கல்வி, செல்வம், இளமை, இல்லறம், புகழ், வீடுபேறு அனைத்தும் கிட்டும். முருகன் அருள் முன்னிற்கும்.

பழநி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முகவரி:

இணை ஆணையர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம், அடிவாரம், பழனி – 624 601.

தொலைபேசி: +91-4545-241417 / 242236

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

Copyright by ALAYATRA.COM

error

Enjoy www.ALAYATRA.COM? Please spread the word :)

WhatsApp