“மாசி மகம்” -தீர்த்தமாடும் விழா, மாசி மகம் தினத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்
“மாசி மகம்” தினத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள்.
மாசி மாதம் சூரிய பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். மக நட்சத்திரத்தின் அதிபதி சூரியபகவான் ஆவார். அவ்வாறு கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது மக நட்சத்திரத்தில் நீரைக் கட்டுப்படுத்தும் கிரகமான சந்திரன் சஞ்சரிக்கும் நாள் பௌர்ணமி நாளாகும். இந்நாளையே மாசி மகம் என்று கொண்டாடுகிறோம். அதேபோல கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது சிம்ம ராசியில் சந்திரனும் குருவும் சேர்ந்து சஞ்சரிக்கும் நாள் “மாசி மகாமகம்” என்றும் “மாமாங்கம்” என்றும் போற்றப்படுகிறது. இந்நாள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். சில சமயங்களில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “இளைய மாமாங்கம்” என்று அழைக்கப்படுகிறது. இந்நாள் உடல் மற்றும் ஆன்மாவை புனித நீரால் கழுவி தூய்மைப்படுத்தும் நாளாகும். இது “கடலாடும் விழா”, “தீர்த்தமாடும் விழா”, “தீர்த்தவாரி” என்றெல்லாம் வழங்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை “கும்பமேளா” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
மாசி மகம் நாளின் சிறப்புகள்:
மாசிமகம் தமிழர்களின் ஒரு பழமையான வழிபாட்டு விழாவாகும். சங்க காலத்திற்கு முன்பிருந்தே இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டுள்ளது என்பதற்கான சான்றுகள் பல இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த மாசிமக தினத்தில் ஞான உபதேசம் பெறுவது, குலதெய்வ வழிபாடு செய்வது, மாங்கல்ய சரடு மாற்றுவது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, புதிய காரியங்களைத் துவங்குவது போன்றவை விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் துவங்கும் எந்த செயலும் இரட்டிப்பு பலன் தரும். இன்றைய தினத்தில் விரதம் இருந்து இறைவனை வணங்கினால் மறுபிறவி இல்லை எனப் புராணங்கள் கூறுகின்றன. மாசி மகத்தன்று சரஸ்வதி அந்தாதி பாடி வழிபட்டால் தேவியின் பரிபூரண அருள் கிடைத்து கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மாதம் முழுவதும் தினமும் விரதமிருந்து வழிபடுவதும் மிகச் சிறப்பானதாகும். தீராத பாவங்கள் தீர இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது முக்கியமான வழிபாடாகும். மேலும் மாசிமகம் பௌர்ணமி நாள் என்பதால் ஈசன் எழுந்தருளும் மலைகளை கிரிவலம் வந்தால் தீராத பாவமும் தீரும்.
மாசி மகம் – புனித நீராடும் விழா:
பொதுவாகவே பௌர்ணமி நாட்களில் புனித நீராடல் சிறப்பானது. குறிப்பாக இந்த மாசி மகம் நாளில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தீர்த்தங்களில் நீராடுவது தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகளையும், ஏழு பிறவிப் பாவங்களும் பிணிகளும் போகும் என்பது நம்பிக்கை. ஏனெனில் மன்னுயிர்களின் பாவங்களைப் போக்கும் கங்கை, யமுனை, சரசுவதி, காவேரி, சிந்து, கோதாவரி, நர்மதா, போன்ற புண்ணிய நதிகளே தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்ள மாசி மகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில் வந்து நீராடி புனிதம் பெறுவதாக புராணங்கள் கூறுகின்றன. முடியாதவர்கள் அருகில் உள்ள புண்ணிய நதிகளிலோ கடலிலோ நீராடி வழிபடலாம். அதுவும் இயலாதவர்கள், உலகிலுள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இறைவன் அருளால் நம் வீட்டு நீரில் கலந்ததாக எண்ணி, நாம் செய்த வினைகள் யாவையும் நீக்கி நல்வாழ்வும் நற்பேறும் கிடைக்க அருள்புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு நீராட வேண்டும்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள்:
கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில் குளத்தில் 20 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவை,
1.நோய் தீர்க்கும் வாயு தீர்த்தம்.
2.கயிலைப்பதவி அளிக்கும் கங்கை தீர்த்தம்.
3.பித்ருக்களை சாந்தி படுத்தும் பிரம்ம தீர்த்தம்.
4.பொருள் சேர்க்கை தரும் யமுனை தீர்த்தம்.
5.சகல செல்வங்களும் தரும் குபேர தீர்த்தம்.
6.எண்ணியது நிறைவேற்றும் கோதாவரி தீர்த்தம்.
7.சிவனடி சேர்க்கும் ஈசான்ய தீர்த்தம்.
8.உடல் வலிமை தரும் நர்மதை தீர்த்தம்.
9.மோட்சம் தரும் இந்திர தீர்த்தம்.
10.ஞானம் தரும் சரஸ்வதி தீர்த்தம்.
11. பிரம்மகத்தி தோஷம் நீக்கும் அக்னி தீர்த்தம்.
12. புத்தியை மேம்படுத்தும் காவிரி தீர்த்தம்
13.மரண பயம் போக்கும் யம தீர்த்தம்.
14.கால்நடைகள்/வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன் கொடுக்கும் குமாரி தீர்த்தம்.
15.அமானுஷ்ய பயம் போக்கும் நிருதி தீர்த்தம்.
16.கோலாகலம் தரும் பாலாறு தீர்த்தம்.
17.துன்பம் போக்கி இன்பம் தரும் அறுபத்தாறு கோடி தீர்த்தம்.
18.ஆயுள் விருத்தி தரும் வருண தீர்த்தம்.
19.மனக்கவலை தீர்க்கும் சரயு தீர்த்தம்.
20.சகல பாவங்களையும் போக்கி இந்திர பதவி தரும் தேவ தீர்த்தம்.
புண்ணிய தீர்த்தங்களில் எவ்வாறு நீராட வேண்டும்?
*புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது அதிகாலையில் நீராட வேண்டும்.
*இரவில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்றே நீராட வேண்டும்.
*ஒற்றை ஆடையுடன் நீராடக்கூடாது.
*பாரம்பரிய முறைப்படி உடையணிந்து நீராட வேண்டும்.
*முதலில் தீர்த்தத்தில் பாதங்களை நனைத்து தீர்த்தத்தை சிறிது உள்ளங்கையில் எடுத்து, பாவங்களைப் போக்கும்படி தியானித்து தலைக்கு மேல் மூன்று முறைகள் தெளிக்க வேண்டும்.
*அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி தூய மனதுடன் நீராட வேண்டும்.
*தீர்த்தத்தில் குதிக்கக்கூடாது.
*பாதங்களில் இருந்து மெல்ல மேல் நோக்கி நீர் உயர இறுதியில் நாசியை பிடித்துக்கொண்டு தலையை நீரில் மூழ்க வேண்டும்.
*ஒருமுறை மூழ்கி நீராடினால் செய்த பாவங்கள் போகும்.
*இரண்டு முறை மூழ்க முக்தி கிடைக்கும்.
*மூன்று முறைகள் மூழ்க புண்ணியங்கள் பெருகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாசி மகம் – வழிபாடும் பலன்களும்:
மாசி மகம் சைவம், வைணவம், கௌமாரம் மற்றும் சாக்தம் போன்ற பல நெறிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் – வருண பகவானுக்கு விமோசனம் அளித்த தினம்: ஒரு மாசி மகம் நாளில் தான் ஈசன் பிரம்மகத்தி தோஷத்தால் கடலுக்கடியில் புதைந்து கிடந்த வருணபகவாணுக்கு கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோவிலில் சாபவிமோசனம் அளித்து மீட்டார். வருணனும் தன்னைப் போலவே மாசி மகத்தன்று கும்பேஸ்வரரை தவமிருந்து வணங்கும் அனைவரது பாவத்தையும் போக்கியருள வேண்டினார். சிவபெருமான் அவ்வாறே அருள்புரிந்தார். எனவே இத்தலத்தில் தீர்த்தவாரி மிக முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவில் புனித நீராட வருகின்றனர்.
மாசிமகம் – அன்னை தாட்சாயணி அவதார நாள்:
மாசிமகம் நாளில் அம்பிகையை வழிபட்டு திருமாங்கல்யக்கயிறு மாற்றிக் கொண்டால் மாங்கல்யம் நிலைத்திருக்குமாம்.
உலகம் இயங்க தானே காரணம் என்று கர்வம் கொண்ட சக்தி சிவனின் கோபத்தால் அவரைப் பிரிந்தார். குற்றத்தை உணர்ந்த பார்வதி, ஈசனை மீண்டும் கணவனாக அடைய வேண்டி அவரின் கட்டளைப்படி, யமுனை நதியில் ஒருதாமரை மேல் வலம்புரிச் சங்காக தவமிருந்தார். ஈசன், முன்பு தக்கனுக்கு கொடுத்த வரத்தின்படி வெண்சங்காக தவமிருந்த அன்னை தக்கனின் மனைவி வேதவல்லி கையில் எடுத்ததும் பெண் குழந்தையாக மாறினார். அவ்வாறு தாட்சாயணியாக அன்னை அவதரித்த தினம் ஒரு மாசி மகம் நந்நாளே. எனவே இன்றைய நாளில் விரதமிருந்து அம்பாளை வேண்டினால் மனம் போல் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும் என்றும் மாங்கல்ய பலம் கூடும் என்று நம்பப்படுகிறது. பல அம்மன் ஆலயங்களில் இந்நாளில் தேவிக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் அன்னை பார்வதி மனிதப் பெண்ணாக அவதரித்த மாசி மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் தலைமைப் பதவிகளில் இருப்பர் என்பது நம்பிக்கை. அதனாலேயே “மகத்துப் பெண் ஜகம் ஆளும்”“மாசிக்கயிறு பாசியேறும்” என்றெல்லாம் பழமொழிகள் வழங்கப்படுகின்றன.
மாசிமகம் – ஈசனே உபதேசம் பெற்ற தினம்:
வேதத்தின் பொருள் மறந்த நான்முகனை முருகப்பெருமான் தண்டித்து படைக்கும் தொழிலை அவரிடம் இருந்து பறித்தார். பிரம்மனை தண்டித்த முருகனுக்கு பிரணவத்தின் பொருள் தெரியுமா எனக்கேட்ட ஈசனுக்கு குருவாக அமர்ந்து சுவாமிமலையில் முருகப்பெருமான், ஓம் என்ற பிரணவத்தின் பொருளை உபதேசித்தது ஒரு மாசி மகம் நன்நாளில் தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே இந்நாளில் ஆன்மீக வாழ்க்கையை துவக்க நினைப்பவர்கள் முருகப்பெருமானை ஞான குருவாக ஏற்றுக் கொண்டு ஓம் என்ற மந்திரத்தை ஓதத் துவங்கினால் நிச்சயம் முக்தி உண்டாகும். மேலும், பள்ளி மாணவர்கள், உயர்கல்வி கற்க விரும்புவோர் அப்பன் முருகனை மனமுருகி வேண்டிக்கொள்ள கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.
மாசிமகம் – விஷ்ணு வராக அவதாரம் எடுத்த தினம்:
இரணியனின் அண்ணன் இரணியாட்சன் என்பவன் கடும் தவம் இருந்து பிரம்மனிடம் மூவுலகையும் வென்று ஆளவேண்டும், தனக்கு எந்த ஒரு ஆயுதத்தாலும் மரணம் வரக்கூடாது என்ற வரங்களைப் பெற்றான். இதனால் ஆணவம் கொண்ட அவன் பூமியைக் கவர்ந்து பாதாள லோகத்தில் கடலுக்கடியில் மறைத்து வைத்தான். இரணியாட்சனின் கொடுமைகளைத் தாங்காத பூமா தேவி தன்னைக் காக்கும்படி மகா விஷ்ணுவிடம் வேண்டினார். அவர் வராக உருவம் எடுத்து அவனை அழித்து தன் இரு தந்தங்கலாலும் உலகத்தை கடலுக்கு அடியில் இருந்து மேலே கொண்டு வந்தார். அன்றுமுதல் பூமியில் ஒரு புதிய சுழற்சி துவங்கியது.
வராக அவதாரத்தால் பூமி கடலில் இருந்து வெளியே வந்தது ஒரு மாசி மகம் நாளில் தான். எனவே மாசி மகம் பெருமாள் வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்நாளில் எந்த ஒரு புதிய காரியங்களையும் துவங்க அது சிறந்து வளரும்.
மாசிமகம் – புண்டரீக மகரிஷிக்கு பெருமாள் அருளிய தினம்:
பெருமாள் மேல் கொண்ட பேரன்பால் புண்டரீக மகரிஷி என்பவர் பாற்கடலில் துயிலும் பெருமாளில் பாதக்கமலங்களில் தாமரைமலர்களை வைத்து வணங்க எண்ணினார். அதற்காக மல்லைக்கடற்கறையில் கடல் நீரை இறைத்து பாற்கடலுக்குச் செல்ல பாதை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். முனிவரின் பேரன்பைக் கண்ட பெருமாள் முதியவர் உருவெடுத்து முனிவரிடம் வந்தார். எனக்கு மிகவும் பசிக்கிறது உணவு தாருங்கள் எனக்கேட்டார். அதற்கு முனிவர் தனக்கு பாற்கடலுக்கு பாதை அமைக்கும் வேலை இருப்பதாகவும் மேலும் உணவு எதுவும் இல்லை என்றும் கூறினார். அதற்கு முதியவராக இருந்த விஷ்ணு, ஊருக்குள் சென்று ஏதேனும் உண்ண வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இறைக்கிறேன். வருந்த வேண்டாம். என்று கூறி அனுப்பிவைத்தார்.
முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடலில் பாதை இருந்தது. முதியவரைக் காணவில்லை. அப்போது ஒரு குரல் அவரை அழைக்க, அப்பாதையில் சென்று பார்த்தார். அங்கே புண்டரீக மகரிஷி வைத்திருந்த தாமரை மலர்களை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டிருந்தார். ஸ்ரீமன் நாராயணனே தனக்காக வந்ததை அறிந்து ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார் முனிவர். இந்த அற்புதம் நிகழ்ந்ததும் ஒரு மாசி மக நாளில் தான். எனவே உள்ளன்போடு பெருமாளை இன்றைய தினத்தில் வணங்கினால் சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனே நேரில் வந்து வேண்டியதைத் தருவான்.
மாசிமகம் – வல்லாளருக்கு ஈசன் இருதிச்சடங்கு செய்த தினம் :
முற்காலத்தில் திருவண்ணாமலையை வல்லாளர் என்ற அரசன் ஆண்டு வந்தார். தலைசிறந்த சிவபக்தனான அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர் இறக்கும் தருவாயில் ஈசனை மனமுருகி வேண்டி தனக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூட குழந்தை இல்லையே என அழுதார். மனமிரங்கி எம்பெருமான் ஈசன் ஒரு சிறுவனாக அவர்முன் தோன்றி, அவரின் ஈமச் சடங்குகளைத் தானே செய்வதாக வாக்களித்தார்.
அவ்வாறே, அவர் இறந்ததும், சிவ பெருமான் தோன்றி வல்லாளரின் ஈமச் சடங்குகளை செய்தார் எனப் புராணங்கள் கூறுகின்றன. இன்றும், மாசி மகம் அன்று சிவ பெருமான் பூமிக்கு வந்து மகனின் ஸ்தானத்தில் இருந்து அந்த அரசருக்கு உரிய சடங்குகளைச் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே மாசி மகத்தன்று பித்ரு தர்ப்பணம் தருவது மிகவும் விசேஷமானதாகும்.
மாசிமகம் – மீண்டும் உலகம் படைக்கப்பட்ட தினம்:
இவ்வுலகில் அதர்மம் அதிகரித்ததால் எம்பெருமான் ஈசன் உலகத்தை அழித்து மீண்டும் புதிதாகப் படைக்க பிரம்மனுக்கு கட்டளையிட்டார். மீண்டும் முதலில் இருந்து படைக்க பயந்த பிரம்மன் ஈசனிடம் உதவி கேட்டார். சிவனும், பிரம்மாவிடம், ஒரு கும்பத்தில் அம்ருதத்தை நிரப்பி அதனுள்ளே உலகப் பொருட்கள் அனைத்தும் வைத்து, அதை மேரு மலையின் உச்சியில் வைக்குபம்படி கூறினார். பிரளயத்தால் உலகைத் தான் அழித்த பிறகு, மீண்டும் உலகை உருவாக்க, நீரில் மிதந்து வந்த அந்த அமிர்த கலசத்தை அம்பு எய்தி உடைத்தார் சிவபெருமான். அப்போது கலசத்தின் மேல் மூடியிருந்த முக்கோண வடிவப் பகுதி பூமியில் உடைந்து விழுந்தது. அதுவே “கும்ப கோணம்” என்றழைக்கப்படுகிறது.
இவ்வாறு கும்பகோணத்தில் பூமி மீண்டும் படைக்கப்பட்டது ஒரு மாசி மகம் நாளில் தான். இன்றும் மாசி மகத்தன்று ஈரேழு உலகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும் அமிர்த கும்பத்தில் இருந்து கொட்டிய புண்ணிய தீர்த்தத்தில் நீராட இங்கு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் இன்றைய தினம் உலகில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் இங்கு வருவதால் அனைத்திலும் நீராடிய நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து கும்பேஷ்வரரை வழிபட்டால் பழைய பாவ வினைகள் முற்றிலும் நீங்கி அவனருளால் புது வாழ்வு துவங்கும்.
மண்ணில் மனிதராய் பிறந்த ஒவ்வெருவரும் ஒருமுறையாவது, மகத்தான வரங்களைத் தரும் மாசிமகம் வழிபாட்டை தவறாமல் செய்து கும்பகோணம் சென்று புனித நீராடி இறைவனை வணங்கி சிறப்புகள் பலவும் பெற வேண்டும்