உயிர்பெற்ற மன்மதனுக்கு உடல் கிடைத்த திருத்தலம் திருக்காமேஸ்வரர் திருக்கோவில்

Table of Contents

உயிர்பெற்ற மன்மதனுக்கு உடல் கிடைத்த திருத்தலம் திருக்காமேஸ்வரர் திருக்கோவில்

அன்பான ஆலயாத்ரா நண்பர்களே, 6-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வெள்ளூர் என்னும் அழகிய காவிரிக்கரை கிராமத்தில் அமைந்துள்ள புராண சிறப்புகள் நிறைந்த அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வர சுவாமி திருக்கோயில் பற்றியும் அக்கோவிலின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் குறித்தும் இப்பதிவில் விரிவாக காண்போம். 

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து சாகாத வரம் அருளும் அமிர்தத்தை அடைந்தனர். அந்த அமிர்தத்தை அசுரர்கள் மட்டுமே அருந்த வேண்டும் என்று விரும்பிய சிமிகா என்னும் மாயையின் புத்திரனான சுரபானு, அமிர்த கலசத்தை கவர்ந்து சென்று பாதாளத்தில் மறைத்து வைத்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து அமிர்தத்தை மீட்டு வந்தார். மஹாவிஷ்ணுவான மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகித்ததால் ஹரிஹர அம்சமான சுவாமி ஐயப்பன் அவதரித்தார்.

மகாவிஷ்ணு பெண்ணாக மாறியதற்காக கோபம் கொண்ட அவரது மனைவி மகாலட்சுமி, வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்துவிட்டார். மன அமைதி இல்லாமல் தவித்த அவர் பூலோகத்தில் பல இடங்களில் தவம் செய்தார். எங்கும் சிவ தரிசனம் கிடைக்காததால், வில்வ மரங்கள் அடர்ந்த ஒரு வனத்தில் அவரே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தானும் அந்த வில்வ மரங்களில் ஒன்றாக மாறி தவம் செய்தார். சிவபெருமானுக்கு தினமும் வில்வ இலைகளை மழைபோல் பொழிந்து பல யுகங்களாக தவம் செய்ததார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் மகாலட்சுமி முன் தோன்றி ஐயப்பனின் அவதார நோக்கத்தையும் திருமாலின் மோகினி அவதார நோக்கத்தையும் விளக்கி அவளது சினத்தை போக்கி மன அமைதியை தந்தார். அதோடு அவளது தவ பலனாக ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த, சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய கிரீடத்தை பரிசாக வழங்கினார். அதோடு மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமரச் செய்து, அவரது இதயத்தில் நிரந்தரமாக இடம் பெறச்செய்தார். மேலும் சகல செல்வத்துக்கும் அதிபதியாக ஆக்கினார். அதனால் இத்தல மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்றே அழைக்கப்படுகிறார். 

alayatra-membership1

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் பெயர்க்காரணம்:

தட்சன் யாகத்தில் பங்கேற்றதன் விளைவாக அன்னை பராசக்தி நெருப்பில் இறங்கி மடிந்ததும் சிவபெருமான் பல யுகங்கள் தியான நிலையில் இருந்தார். இதனால் உலகில் சிருஷ்டி எதுவும் நிகழவில்லை. அதோடு சூரபதுமனின் கொடுமைகள் ஏழு உலகிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. இப்படியே போனால் அந்த பிரபஞ்சமே அழிந்துவிடும் என்று பயந்த தேவர்களும் முனிவர்களும் குமரக்கடவுள் அவதரிக்கவும் பிரபஞ்சம் மீண்டும் சிருஷ்டியை துவங்கவும் வேண்டி, ஈசனின் தவம் கலைக்க மன்மதனை அனுப்பி வைத்தார்கள். இதனால் கோபம்கொண்ட சிவபெருமான் மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தார். அவ்வாறு அழிந்த மன்மதனின் மனைவி ரதிதேவி சிவபெருமானை நோக்கி

சேலம் ஆரகளூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயதில் தவம் செய்தாள். மனமிறங்கிய ஈசன் மன்மதனை ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி ஸ்தூல வடிவில் உயிர் கொடுத்தார். (இந்த வரலாறு இன்னும் விரிவாக அருள்மிகு ஆரகளூர் காமநாதேஸ்வரர் திருக்கோயில் கட்டுரையில் விரிவாக பதிவிட்டுள்ளோம். ஆலயாத்ரா அன்பர்கள் அந்த பதிவையும் முழுமையாக படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.)  அதன் பின் மன்மதன் மற்றும் ரதி இருவரும் சேர்ந்து தவம் செய்து மன்மதனுக்கு உடல் கிடைத்த திருத்தலம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் ஆலயம். இதனாலேயே இத்தல இறைவன் திருக்கமேஸ்வர் என்று அழைக்கப்படுகிறார். 

 மேலும் மன்மதன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பே ஈசன் அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணால் எரித்து விட்டார். அதனால் மன்மதன் விட்ட மலரம்பு திசைமாறி பூலோகத்தில் சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அன்னை பார்வதியின் மீது பட்டு அவர் பருவம் எய்தினார். அதன் பின் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட பாவம் நீங்கி சிவபெருமானை வந்தடைந்தார். இதனால் அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது.

காமம் என்றால் ஆசை என்று பொருள் உண்டு. பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் இத்தல இறைவன் நிறைவேற்றுவார் என்பதாலும் சுவாமி காமேஸ்வரர் என்று திருநாமம் கொண்டுள்ளார்.

இந்திரனின் நண்பனான முசுகுந்த சக்கரவர்த்திக்கு யாராலும் வெல்ல முடியாத ஆயுதங்களை இத்தல இறைவன் வழங்கியதோடு இத்தல பைரவர் அவனது படைத்தளபதியாக விளங்கினார் என்று தல வரலாறு கூறுகிறது. இதனாலேயே முசுகுந்தன் யாராலும் வெல்ல முடியாத வீரனாக திகழ்ந்தான். யாராலும் வெல்ல முடியாத வரமருளிய தலம் என்பதால் இத்தலம் வெல்லூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மறுவி வெள்ளூர் என்றானது.

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்:

  • இத்திருத்தலத்தில் மகாலட்சுமி தனி சன்னதியில் அருள்புரிவது வெறேந்த சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
  • மஹாலட்சுமி ஆலயத்தின் குபேர மூலையில் ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தில் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
  • லட்சுமி தேவி சிவபெருமானிடம் தவப்பயனாக, அழியாத செலவத்தையும் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தையும் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இந்த மகுடத்தை தலையில் சூட்டியவாறு மகாலட்சுமி அருள்புரிவது மிகசிறப்பு வாய்ந்தது.
  • இத்தலத்தில் திருமகள் வில்வ மரமாக தவம் பிரிந்து இறைவனுக்கு வில்வ இலைகளை மழையாக பொழிந்ததாக கூறப்படுகிறது.
  • மோக்ஷ விநாயகர் சன்னதிக்குள் சிவலிங்கம் அமைந்திருப்பது இத்தல சிறப்புகளில் ஒன்றாகும்.
  • சுக்கிரன் வழிபட்டு சுக போகங்களுக்கு அதிபதியான தலம்.
  • குபேரன் வழிபட்டு தனாதிபதி ஆன தலம்.
  • தினமும் ஆகாய மார்க்கமாக வந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபடுவதாக தல வரலாறு கூறுகிறது. 
  • ராவணன் சிவவழிபாடு செய்து கைலாய மலையை அசைத்த பாவம் நீங்கி இழந்த தனது சக்தியையும் ஈஸ்வரப் பட்டமும் பெற்றது இத்தலத்தில்தான்.
  • போகருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கிய தலம். மகாமண்டபத்தில் போகர் சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.
  • இத்தலத்தில் கால பைரவர் மட்டுமின்றி ஞான பைரவர் சன்னிதி அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பு.
  • நவகிரகங்களில் சனிபகவான் காக வாகனத்தின் மீது ஒரு காலை மடக்கி வைத்து மறு காலை கீழே வைத்து அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது வேறெங்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும். 
  • மன்மத தகனத்திற்கு பிறகு ரதி வேண்டியதால் உயிர்பெற்ற மன்மதனுக்கு உடல் கிடைத்த திருத்தலம்.
  • முசுகுந்த சக்கரவர்த்தி யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற திருத்தலம்.
  • போகருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

திருத்தல இறைவன்: திருக்காமேஸ்வரர், திருத்தல இறைவி:சிவகாமசுந்தரி.

தலவிருட்சம்: வில்வம் 

தலதீர்த்தம்: ஐஸ்வரிய தீர்த்தம்

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் அமைப்பு: 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தை முதலாம் விஜயாதித்த சோழன் கி.பி. 6-ம் நூற்றாண்டில் புனரமைத்து 

குடமுழுக்கு செய்ததாக ஆலய கல்வெட்டுகள் கூறுகின்றன. திருக்கோவில் கிழக்கு வாயில் வழியாக வரும் போது இடதுபுறம் நான்கு கல் தூண்கள் கூரை இன்றி அரசமரத்தடியில் அமைந்துள்ளது. மரத்தடியில் சன்னிதி பிள்ளையார் இருபுறமும் நவ நாகர்கள் வரிசையாக நின்ற அருள் புரிய அழகுற அமர்ந்து அருள்பாலிக்கிறார். அவரை வணங்கி முன்னேற இடதுபுறம் தீபம் ஏற்றும் இடம் வலதுபுறம் தேர்நிலை. திருக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது. கோவில் முன் மண்டபத்தின் மேல் உள்ள கல்லால் ஆன காவல் நந்திகள் இக்கோவிலின் தொன்மையை உணர்த்துகின்றன. 

பிரகாரம்:

ராஜ கோபுர வாயிலில் உள்ளே நுழைந்தால் மூலவருக்கு எதிரே கொடிமரம், பலி பீடம். இரண்டிலும் கணபதி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரதோஷ நந்தி. இடமிருந்து வலமாக பிரகாரத்தை சுற்றி வர, இடதுபுறம் வாகன மண்டபம். தெற்குப் பிரகாரத்தில் ஆலயத்திற்கு இன்னொரு வாயில் அமைந்துள்ளது. அதன் வழியே வெளியேறினால் பசுமடம் உள்ளது. பிரகாரத்தின் தெற்கு மூலையில் மோக்ஷ கணபதி மூஷிக வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் உலக துன்பங்களில் இருந்து விடுபட ஞானம் தந்து முக்தி அருளும் மூர்த்தியாவார். இவரது சன்னிதி உள்ளே ஈசன் சிவலிங்க ஸ்வரூபமாக சிறிய பலிபீடமும் நந்திவாகனதுடன் காட்சி தருகிறார். மேற்கு பிரகார மண்டபத்தில் மூலவருக்கு பின்புறம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். வடாக்கு மூலையில் கஜா லக்ஷ்மி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அருகே ரதியும் மன்மதனும் வணங்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தி வழிபாடு செய்த இடமும் பிரகாரத்தில் உள்ளது. ஆலயத்தின் குபேர மூலையில் தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது. மஹாலக்ஷ்மி இந்த மர ரூபத்தில் தான் தவம் செய்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. மிகப்பழமையான இந்த மரம் சிதைந்துவிடாமல் இருக்க பாதுகாக்கப்பட்டுள்ளது. அருகே ஈசனால் சகல ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியாக்கப்பட்ட ஐஸ்வர்யா மஹாலக்ஷ்மி தனி சன்னதியில் கிரீடத்துடன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார். எதிரே தல தீர்த்தமான ஐஸ்வர்ய தீர்த்தம் அமைந்துள்ளது. அடுத்து பைரவர் சன்னதி. 

காலபைரவர்:

இத்தலத்தில் உள்ள காலபைரவர் விஜய பைரவ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வாலசுரனை எதிர்த்து தேவர்கள் போர் புரிந்த போது இந்திரனின் மன்னனான முசுகுந்தனை தேவர்கள் போரில் உதவி செய்ய அழைத்தனர். அப்போது வேண்டியதெல்லாம் அருளும் திருக்காமேஸ்வர சுவாமியை நோக்கி அனைவரையும் வெல்லும் ஆற்றல் வேண்டி முசுகுந்தன் தவம் செய்தான். மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு எப்போதும் எவரையும் வெல்லக்கூடிய ஆயுதங்களையும் பூலோக சக்கரவர்த்தி பதவியையும் அருளினார். அதோடு அந்த தேவாசுர போரில் தானே பைரவர் வடிவில் முசுகுந்தனுக்கு போர்ப்படைத் தளபதியாக சென்று தேவர்களை வெற்றி பெற செய்தார். 

ஞான பைரவர்: 

மன்மதன் சிவபெருமானிடம் மீண்டும் தன் காம பானத்தை பெற்றும் அதை எந்த உயிர்களின் மீது எந்த விகிதத்தில் என்பதை அறியாது தவித்தான். எனவே பைரவரின் பாதங்களில் மலர் மாறி பொழிந்து தனக்கு ஞானம் தரும்படி வேண்டிக்கொண்டான். மனமிறங்கிய பைரவர் மலர் ஆவுடை மீது வீற்றிருந்து மன்மதனுடைய ஞான உபதேசம் செய்தார். இவ்வாறே வேறெங்கும் இல்லாத படி இந்த ஆலயத்தில் கால பைரவர் மட்டுமின்றி ஞான பைரவரும் அருள்புரிகிறார். அடுத்து நவகிரக சன்னதி. இங்கு உள்ள சனிபகவான் காக வாகனத்தில் ஒருகாலை மேலே வைத்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 

போகர் சன்னதி: பைரவர் சன்னதிக்கும் நவகிரக சன்னதிக்கும் நடுவே போகர் தவம் செய்த இடம் பாதாளத்தில் அமைந்துள்ளது. இங்கு அவருக்கு சுதை சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கு சென்று தவம் செய்தாலும் சித்திக்காத காரியங்கள் திருக்காமேஸ்வர் சன்னதியில் சித்தி ஆகும் என்பதால் போகர் சிவபோக சக்கரத்தை மூலவர் முன்பு பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்வது அஷ்டமா சித்திகளை அடைந்தார் என்றும் அதன் பின்னரே பழனியில் நிகரில்லா ஞான தண்டாயுதபாணியின் நவபாஷான சிலையை பிரதிஷ்டை செய்தார் என்றும் “போகர் ஏழாயிரம்” ஆன்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போகர்,பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் திருக்கோயிலைச் சூழ்ந்து தவம் செய்வதாக ஐதீகம்.

மூலவர் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, குரு தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். 

மூலவர்

மூலவர் சன்னதி மஹா மண்டபத்தில் இடது புறம் மஹா கணபதி எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் நடராஜ பெருமான் சிவகாமி அம்மன் சன்னதி. உற்சவர்கள் சன்னதி அமைந்துள்ளது. கருவறை வாயிலில்  துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை உள்ளே இத்தல இறைவன் திருகாமேஸ்வர சுவாமி திருமகள் பிரதிஷ்டை செய்த லிங்கவடிவில் அனைத்தும் அருளும் அருள் ஸ்வரூபமாக அருள் பாலிக்கிறார். மூலவரை தரிசிக்கும் போது ஆண்கள் மேல்சட்டை அணியாமல் இருப்பது அவசியம். மன்மதனுக்கு உடல் தந்த இறைவன் ஆதலால் இத்தல இறைவன் பார்வை உடம்பில் படும்போது சகல உடல் உபாதைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இறைவனை வணங்கி வெளியே வந்தால் அம்பாள் சிவகாம சுந்தரி தனி சன்னதியில் நந்தி வாகனத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்:

தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் வழிபாட்டிற்காக நடை திறந்திருக்கும்.

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் திருவிழாக்கள்:

மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் போன்ற சிவாலயங்களில் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். வரலக்ஷ்மி விரதம் நவராத்திரி போன்ற அம்மனின் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சுக்கிர பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் விமர்சியாக நடத்தப்படும். இவை தவிர மாதாந்திர பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி பூஜை, சுக்கிரவார வழிபாடுகள், ராகுகால பூஜை மற்றும் சோமவார சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:

சுக்கிர தோஷங்கள் விலக சுக்கிரனின் அதிபதியான மஹாலக்ஷ்மிக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று சுக்கிர ஹோரையான காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் 16 நெய் விளக்கேற்றி, 16 வகை அபிஷேகங்கள் செய்து. 16 செந்தாமரை மலர்களால் சாற்றி 16 முறை வலம் வந்து வழிபட வேண்டும். 

கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை ராகுகாலத்தில் இத்தல ஞான பைரவரை பலவித மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுபவர்கள் இத்தல கால பைரவரை வாசனை திரவியகளால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 

ஆபரண தொழில் செய்பவர்கள் தங்கம் வெள்ளி போன்ற ஐஸ்வர்யங்களை உருக்குவதால் உண்டாகும் தோஷங்கள் நீங்க இத்தல ஐஸ்வர்ய லட்சுமியை வழிபடுகின்றனர்.

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:

இத்திருத்தலத்தில் வழிபட்டால் சுக்கிர தோஷங்கள் நீங்கும். தொழில் விருத்தியடைந்து ஐஸ்வர்யம் பெருகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்ககும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். முக்திக்கான ஞானம் கிடைக்கும். சுருக்கமாக சொன்னால் இம்மைக்கும் மறுமைக்குமான அனைத்து அருளையும் பெற வெள்ளூர் திருக்காமேஸ்வர சுவாமியை வழிபட்டாலே போதுமானது. இத்தல இறைவன் தன் பக்தர்கள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அருள்வார் என்பதில் ஐயமில்லை. 

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்:

திருச்சியில் இருந்து சரியாக 32 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி நாமக்கல் செல்லும் வழியில் குணசீலத்தை அடுத்து முசிறிக்கு  6 கி.மீ. அருகே வெள்ளூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் முகவரி:

அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில்,
வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி- 621202
தொலைப்பேசி: 9443780719

alayatra-donate-support-banner

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright by ALAYATRA.COM