kuchanur-saneeswara-bhagavan-theni

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம்

குச்சனூர் சனீஸ்வரன் – சுயம்பு சனி பகவான்

ஆன்மாவை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தன் சிந்தனை சொல் செயல் ஆகிய மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் நல்வாழ்வு வாழ்ந்து இறைவன் அடி சேர்வதும் இழி பிறப்பு எடுத்து மீளா துயரத்தில் ஆழ்வதும் அவரவர் கர்ம பலன்களால் நிகழ்கிறது. ஒருவரது கர்மா அவரவர் சிந்தனையில் துவங்கி சொல்‌ செயலாக மாறி அவரது வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கிறது. ஆக ஒருவரது வாழ்வு அவரவர் கர்மாவால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அத்தகைய கர்மாவின் கடவுளும் நவகிரகங்களில் ஒருவருமான சனிபகவான் மூலவராக எழுந்தருளி அருள்புரியும் குச்சனூர் சனீஸ்வரன் திருகோயில் பற்றியும் சனி வழிபாடு மற்றும் அதன் பலன்கள் பற்றியும் விரிவாகக் காண்போம்.

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல சிறப்புகள்:

பெரும்பாலான சைவத் திருத்தலங்களில் தனியாக அமைந்துள்ள நவக்கிரகங்கள் சன்னதியில் சனிபகவான்னும் ஒருவராக எழுந்தருளி காட்சி தருவார். ஒருசில தலங்களில் தனிச்சன்னதி கொண்டிருப்பார். திருநள்ளாறு திருத்தலத்தில் உபதெய்வமாக அருள்பாலிக்கிறார். ஆனால் சனி பகவான் முழுமுதற் கடவுளாக சனிபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரியும் ஒரேதலம் குச்சனூர் மட்டுமே.

உலகிலேயே சனி பகவான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள ஒரே தலம் இதுவே. இந்த சுயம்பு லிங்கமானது வளர்ந்து கொண்டேயிருப்பதால் மூலவருக்கு மஞ்சள் காப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

alayatra-membership1

 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த சுயம்பு சனி பகவான் இருப்பதால் மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

இது சனி பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கிய தலம் எனத் தலவரலாறு கூறுகிறது. 

இத்தலத்தில் காகத்திற்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. பூஜை முடிந்தபின் சனி பகவானுக்கு உகந்த எள்பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டு காகத்திற்கு வைக்கப்படுகிறது. தளிகையை காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி, பகவானிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகை வைப்படுகிறது. படையலை காகம் உண்டபின்தான் பக்தர்களுக்கு பரிமாறுகின்றனர். இது இத்தலத்தின் சிறப்பாகும். 

சுயம்பு மூர்த்தி என்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக மூலவருக்கு அருகில் எழுந்தருளும் உற்சவர் திருமேனிக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு:

குழந்தை வரம் வேண்டிய அரசன் தினகரன்– செண்பக நல்லூர் என்ற பகுதியை தினகரன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அவன் குழந்தை வரம் வேண்டி இறைவனை தினமும் மனமுருகி வேண்டி வந்தான். ஒருநாள் அவ்வாறு அவன் இறைவனை வேண்டி தியானித்துக் கொண்டு இருந்த போது, அவனது வீட்டிற்கு ஒரு அனாதை சிறுவன் வருவான் என்றும் அவனைத் தத்தெடுத்து வளர்த்து வர வேண்டும் என்றும் அவன் வந்த சில காலத்தில் தினகரனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அசரீரி கேட்டது.

தேடிவந்த பிள்ளை– சில நாட்களிலேயே அந்த அசரீரியில் கூறியபடி ஒரு அனாதைச் சிறுவன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். தினகரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஒளிவீசும் அழகுடன் சந்திரன் போல் காணப்பட்ட அந்த சிறுவனை தத்தெடுத்த மன்னன் அவனுக்கு சந்திரவதனன் என்றே பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான். சில மாதங்களுக்கு பிறகு அரசிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தான்.

அரசனும் அரசியும் அக்குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டினர். இரண்டு குழந்தைகளுமே நன்கு வளர்ந்து சகல கலைகளையும் கல்வியையும் கற்றுத் தேர்ந்தனர். ஆனால் அரச குமாரனை விட சந்திரவதனன் அறிவிலும் ஆற்றலிலும் மிகவும் சிறந்து விளங்கினான். இதைக்கண்ட மன்னன், வளர்ப்பு மகனாக இருந்தாலும் சந்திரவதனனுக்கே முடிசூட்டி அடுத்த அரசனாக அறிவித்தான்.

அரசனுக்கு சனி தோசம்– சந்திரவதனன் செண்பகநல்லூரில் நல்லாட்சி புரிந்துவந்த நிலையில் அவனது வளர்ப்புத் தந்தையான தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. அதனால் தினகரன் நாள்தோறும் பல துன்பங்களை அனுபவித்தான். தன்னை அன்புடன் வளர்த்து அரசனாக்கிய தந்தை அடையும் துன்பங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத சந்திரவதனன் தன் தேசத்தில் பாயும் சுரபி நதிக்கரைக்குச் சென்று அங்கு சனிபகவானின் இரும்பால் ஆன உருவத்தைப் பிரதிஷ்டை செய்து தனது தந்தைக்கு வரும் சோதனைகளை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

தப்பிக்க இயலாத தண்டனை– இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனிபகவான் அவன் முன் தோன்றி, “ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்றபடியே, இப்பிறவியில் ஒருவருக்கு சனி திசை நடக்கும் காலகட்டத்தில் தண்டனை கிடைக்கிறது. அவரவர் வினைகளுக்கேற்ப இந்த ஏழரை ஆண்டுகள் பல துன்பங்களை அவர் அனுபவித்தே தீரவேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. ஆனால் சனி தோஷம் பீடித்த இந்த 71/2 ஆண்டுகளிலும் எத்தகைய சோதனைகள் வந்தாலும், எத்தனை துன்பங்கள் வந்தாலும், எவர் ஒருவர் தங்கள் கடமையில் இருந்து தவறாமல் ஒழுக்க நெறி பிறழாமல் பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் வாழ்கிறார்களோ அவர்களின் முற்பிறவி தீவினைகள் அனைத்தும் கழிந்து ஏழரைச்சனி தோஷ முடிவில் அவர்களது நற்செயல்களுக்கு ஏற்ப மிகப்பெரிய நற்பலன்களையும் நிச்சயம் அடைவர். உன் தந்தை தினகரன் அவரது முற்பிறவி பாவ வினைகளுக்கான தண்டனையை தற்போது அனுபவித்து வருகிறார். அதை உன்னால் மாற்ற இயலாது. எனவே வேறேதும் வரம் வேண்டுமானால் கேள் ” என்றார்.

தந்தையின் துன்பங்களை தான் ஏற்ற சந்திரவதனன்-சந்திரவதனனோ தந்தை மேல் இருந்த அளவற்ற அன்பினாலும் நன்றி உணர்வாலும் சனி தோஷ காலத்தில் அவருக்கு வரும் துன்பங்கள் அனைத்தையும் தனக்கு அளிக்கும்படி சனிபகவானிடம் வேண்டினான். ஒரு மகனாக அவரது தேசம், செல்வம் மட்டுமின்றி அவரது முற்பிறவி வினைகளையும் தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று மனமுருக மன்றாடினான். அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனிபகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை பீடிப்பதாக ஏற்றுக்கொண்டார். மேலும் அவனது உயர்ந்த அன்பினால் ஏழரை ஆண்டு துயரம் ஏழரை நாழிகைக் காலமாக குறைக்கப்பட்டது. ஆனால் சனி தோசம் பிடிக்கும் அந்த ஏழரை நாழிகை காலம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்றும் தாங்கமுடியாத பல துன்பங்கள் வரும் என்றும் அந்தத் துன்பங்களை எல்லாம் அவன் அனுபவித்தே தீரவேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனன் மகிழ்ச்சியோடு அதற்கு சம்மதித்தான்.

சனிபகவான் அருள்-அவனது வேண்டுதலின்படியே ஏழரை நாழிகை காலத்திற்கு சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்கள் கொடுக்கப்பட்டன. அத்தனை துன்பங்களையும் தன் வளர்ப்பு தந்தைக்காக மனமுவந்து ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் சனிபகவான் மீண்டும் தோன்றி, “உன் தந்தையின் துயர் நீக்க வேண்டும் என்ற உன் உயர்ந்த நோக்கத்தினாலும் பக்தியினாலும் அவரின் முற்பிறவி வினைகளும் சனிதோசமும் நீங்கப் பெற்றன. உனது நல்ல வினையினால் நீ சகல நன்மைகளையும் அடைவாய்” என வாழ்த்தினார். மேலும், சனி தோஷம் பீடித்த எவரேனும் இங்கு வந்து தங்கள் குற்றங்களை உணர்ந்து அதற்கான தண்டனைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டு இனி எந்த பாவமும் செய்யாமலிருக்க வேண்டிக் கோண்டார்களானால், அவர்களுக்கு சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்” என்று அருளிய சனிபகவான் அந்த இடத்தில் சுயம்பு லிங்கமாக மாறினார் எனத் தல வரலாறு கூறுகிறது. இத்தல வரலாறு மிகவும் தொன்மையான நூலான “தினகரன் மான்மியம்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kuchanur-Sri-Saneeswara-Baghwan-Temple-Theni

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல பெயர் காரணம்:

சந்திரவதனன் ஆட்சி செய்த செண்பகநல்லூரில், என்றும் வற்றாமல் ஊற்றெடுத்ததால் சுரபிநதி என்று புராண காலத்தில் வழங்கப்பட்டு இன்று சுருளி நதி என்று அழைக்கப்படும் புனித நதியின் ஒரு கிளை ஓடை கரையில், தன் வேண்டுதலுக்கு மனமிரங்கி அருள்புரிந்து, தன் தந்தை தினகரன் துன்பங்களைத் தீர்த்த சனிபகவான் பின் அதே இடத்தில் சுயம்பு வடிவாக நிலைகொண்டதால், தன்னைப் போலவே சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கு வழிகாட்டி நம்பிக்கையூட்டும் நோக்கத்தோடு அந்த சுயம்பிற்கு சிறிய கோவில் அமைத்து அதற்கு குச்சுப்புல்லினால் கூரை அமைத்தான். குச்சுப்புல் கூரையில் குடிகொண்ட சனி பகவான் சனி தோஷத்தால் துயர்படும் மக்களுக்கு அருள்புரிந்து அவர்கள் குறை தீர்ப்பதால், இன்று வரை செண்பகநல்லூர் குச்சனூர் என்று வழங்கப்படுகிறது.

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல அமைப்பு:

பழமையான திருத்தலம் என்றாலும் இத்தலத்தில் இராஜ கோபுரமோ கொடிமரமோ இல்லை. சுரபி நதியின் கிளை ஓடைக் கரையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. கோவில் வாசலில் ஓடும் கிளை நதியைப் பார்த்தவாறு, இரு ஓடைக்கரைப் பிள்ளையார் சன்னதிகள் அமைந்துள்ளன. அதில் ஆலமரத்தடியில் உள்ள பிள்ளையார் சன்னதியில் பரிகார விளக்கேற்றும் மண்டபம் அமைந்துள்ளது. சுருளி நதியில் நீராடி ஆலயத்துள் நுழைந்தால் இருபுறமும் பெரிய கல்த்தூண் மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் 12 இராசிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

மண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் கல்லால் ஆன காக வாகனம் சுவாமிக்கு எதிர் திசை நோக்கி சுரபி நதியைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. அருகே கொடிமரம். கொடிமரத்திற்கு நேராக சுயம்பு சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. மூலவரான சனி பகவான், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரது அம்சமாக அமைந்துள்ளதால் 3 ஜோடி கண்களுடன், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும் 2 பாதங்களுடனும் கிழக்கு முகமாகக் காட்சியளிக்கிறார். திருக்கரங்களில் சக்தி ஆயுதம், வில் ஆயுதம் தரித்துள்ளார். மூலவரை தரிசித்து பிரகாரத்தை சுற்றிவர, தெற்கு மூலையில் பிள்ளையார் அருள்புரிகிறார். மூலவருக்கு பின்புறம் தலவிருட்சமான விடத்தலை மற்றும் வன்னி மரம் அமைந்துள்ளன. மூலவருக்கு பின்புறம் வடக்கு மூலையில் திருமலைக்குமரன் என்ற திருநாமத்துடன் மயில் வாகனத்தோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அடுத்து மூலவருக்கு அருகில் இடதுபுறம் லாடசன்னாசி சன்னதி முட்பாதுகை மற்றும் புத்தகம் தாங்கியுடன் அமைந்துள்ளது.

சுவாமி சன்னதிக்கு வெளியே ஆற்றங்கரையில் சோணமுத்துக் கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் தனிச்சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவர் இத்தலத்தின் உபதெய்வமாவார். அருகே கன்னிமார் சன்னதி அமைந்துள்ளது.

Kuchanur-Sri-Saneeswara-Baghwan-Temple

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல திருவிழாக்கள்:

இத்திருத்தலத்தில் திருவிழாவானது ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் 5 வார விழாவாக மிக விமரிசையாக நடைபெறும். கலிப்பணம் கழித்து சுத்த நீர் தெளித்துக் கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழாவில் சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம், உற்சவர் திருவீதி உலா, சக்தி கரகம் எடுத்தல், திருமஞ்சனக்காப்பு சாத்துதல், லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, மஞ்சள் நீராட்டு எனப் பல நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. 

திருவிழாவின் நான்காம் வாரத்தின் முக்கிய நிகழ்வாக கருப்பண சாமிக்கு நேர்த்திக்கடனா ஆடு, கோழிகளை பலியிட்டுப் பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் நள்ளிரவு 11 மணியளவில் கருப்பணசாமியின் குதிரைக்கு கீழே இருக்கும் துளையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த அனைத்து மதுபானங்களும் உடைத்து ஊற்றி பூஜை நடைபெறும். கருப்பசாமிக்கு மதுபாணம் படைத்து பின் நள்ளிரவில் பக்தர்களுக்குக் கறி விருந்து வழங்கப்படுகிறது. 

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல சிறப்பு வழிபாடுகள்:

*சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவானுக்கு சிறப்பு யாகங்கள் பூஜைகள் மற்றும்‌ஆராதனைகள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

*சனி தோஷம் முடிந்து குச்சனூர் சனிபகவானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சுருளி ஆற்றில் நீராடி ஆடைகளை ஆற்றில் விடுகின்றனர். 

*மூலவருக்கு எதிர் திசை நோக்கி சுருளி நிதியைப் பார்த்தவாறு முன் மண்டபத்தில் அமைந்திருக்கும் காக வாகனத்தின் அருகே நின்று பொரி மற்றும் உப்பு கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தலையை சுற்றி போடுகின்றனர்.‌ மேலும் மண்ணால் ஆன சிறிய காக வாகனத்தை அடுத்துள்ள கொடி மரத்தின் முன்பாக சமர்ப்பிக்கின்றனர். 

*சனி தோசத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சனிபகவானுக்கு கருப்பு ஆடை, தேங்காய், பழம், பூ, நல்லெண்ணெய் காணிக்கையாக தருகின்றனர். மேலும் சுருளி நதியைப் பார்த்தவாறு அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு முன்பாக எள் தீபம் மற்றும் நல்லெண்ணெய் விளக்கேற்றி வணங்குகின்றனர். காகத்திற்கு எள்ளன்னம், தயிர் சாதம் ஆகியவற்றை வழங்கி வழிபடுகின்றனர்.

*திருமண தடை நீங்க கோயிலின் பின்புறத்திலுள்ள விடத்தலை மரத்தில் மஞ்சள் கயிறும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டிலும் கட்டி வழிபாடு செய்கின்றனர்.

குச்சனூர் சனீஸ்வரன் வழிபாட்டு பலன்கள்:

பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, தொழில் தடை, திருமணத் தடை, உயர் கல்வி தடை, வெளிநாடு செல்லத் தடை, மறைமுக எதிரிகளால் தொல்லை நாள்பட்ட நோய், தீராத கடன் உள்ளிட்ட சகல துன்பங்களும் இத்தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய சகல தோஷங்களும் நீங்கி சௌபாக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.

தல விருட்சம்: விடத்தை, வன்னி, கருங்குவளை.

தல தீர்த்தம்: சுரபி எனப்படும்‌ சுருளி நதி

Kuchanur-Sri-Saneeswara-Baghwan-Temple-timings

குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நடை திறக்கும் நேரம்:

நாள்தோறும் மூன்று கால பூஜை தவறாமல் நடைபெறுகிறது.
ஞாயிறு முதல் வெள்ளி வரை,
காலை 7 முதல் பகல் 1 மணி வரையும்
மாலை 4.30 முதல் இரவு 8 வரையும் நடை திறந்திருக்கும். 

சனிக்கிழமைகளில் மட்டும்
காலை 6 முதல் பகல் 3 வரை
மாலை 4.30 முதல் இரவு 9 வரையும் நடை திறந்திருக்கும். 

குச்சனூர் சனிபகவான் திருக்கோயில் அமைவிடம்:

இத்திருத்தலம் தேனி மாவட்டம் குச்சனூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. தேனியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேனி , உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, சின்னமனூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் மூலமாகவும் குச்சனூர் கோயிலை அடையலாம். 

திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அருகில் உள்ள விமானம் நிலையம்:  மதுரை விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்: திண்டுக்கல் மற்றும் மதுரை இரயில் நிலையங்கள்.

அருகில் உள்ள பேருந்து நிலையம்: தேனி மத்திய பேருந்து நிலையம்.

குச்சனூர் சனிபகவான் திருக்கோயில் முகவரி

அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் திருக்கோயில்,
குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் அருகே,
உத்தமபாளையம் வட்டம்.
தேனி மாவட்டம்.

தொடர்புக்கு:
செயல் அலுவலர்,
செல்லிடப்பேசி : 98420-39080

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright by ALAYATRA.COM