suriyanar-temple-thiruvidaimaruthur

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர்

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர்

சகல உயிர்களுக்கும் பொதுவானீவரும் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவருமான சூரிய பகவான்  நவ கோள்களில் முதன்மையானவர். சூரிய ஒளியில் தான் இந்த பிரபஞ்சமும் மற்ற கிரகங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே சூரிய பகவான் ஒரு மனிதனின் தந்தை ஸ்தானத்துக்கு உரியவராவராகிறார். இக்கோவில் குலோத்துங்க சோழனால் திராவிட கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அத்தகைய சூரியனுக்கு என்றே அமைந்துள்ள சூரிய நாராயணர் திருக்கோயில் பற்றி இப்பதிவில் காணலாம்.

suriyanar-temple

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் பெயரக்காரணம்

சூரிய பகவான் தலைமையில் நவகிரகங்கள் தவம் செய்த தலம். மேலும் ‌சிவபெருமானே இத்தல சூரியனை சிவ சூரியன் ‌எனப் பெயரிட்டு இத்தலம் சூரிய தலம் என்று வழங்கப்படும் என வரம் தந்தார்.எனவே இத்தலத்தின் பெயராலேயே இவ்வூர் சூரியன் கோவில் என்று வழங்கப்படுகிறது.

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் வரலாறு

காலவமுனி என்ற முனிவர் கொடுமையான தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.  அவர் தனது நோய் நீங்க வேண்டி நவகிரகங்களை நோக்கி தவம் செய்தார். காலவ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த நவகிரகங்கள் அவரது நோய் நீங்க அருள்புரிந்தனர். இதனால் படைக்கும் கடவுளான பிரம்மா கடும் கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு ஒருவரது காலம் மற்றும் கர்மாவின்  அடிப்படையில், அவற்றின் பலன்களை வழங்கும் அதிகாரம் மட்டுமே உண்டு, ஒருவரின் ஆயுள், வாழ்க்கை ஆகியவற்றை மாற்றும் வரங்களை அளிக்கும் அதிகாரம் இல்லை. எனவே ஒரு மானுடனுக்கு  தொழுநோய் போக வரமளித்து தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த கிரகங்கள், பூலோகத்திற்கு சென்று தாங்களும் தொழுநோயால் கஷ்டப்படட்டும் என  சபித்தார்.

alayatra-membership1

அதன்படி பூலோகத்தில் நவகிரகங்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துயர்பட்டன. விமோசனம் வேண்டி, சூரியன் தலைமையில் தற்போது திருமங்கலகுடி என்று அழைக்கப்படும் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து,  சூரியனாரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கிரகங்களின் நோய் நீக்கி வரமளித்தார். மேலும் நவகிரகங்கள் தவம் ஏற்றிய இத்தலம் நவக்கிரக தலமாக விளங்கும் என்று வரமளித்தார். குறிப்பாக கிரகங்களின் தோஷம் நீங்க நல்வழி காட்டிய சூரிய பகவான் இத்தலத்தில் சிவ சூரியன் என்று  வணங்கப்படுவார் என்றும், இங்கு வந்து சூரியனையும் மற்ற கிரகங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் அருள் புரிந்தார் என தல வரலாறு கூறுகிறது.

தல விருட்சம்: வெள்ளெறுக்கு 

தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம் 

thirumangalangudi-suriyanar-temple-thiruvidaimaruthur

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் அமைப்பு

இத்திருத்தலம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி தெய்வீகமாக அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் நேராக கொடிமரம், பலிபீடம், குதிரை வாகனம் உள்ளது. உள்ளே கருவரை மண்டபத்தில் நுழைந்ததும். இடதுபுறம்  விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், சிவன் பார்வதி, நந்தியம்பெருமான்,  நடராஜர், சிவகாமி, விநாயகர், முருகன் ஆகியோர்களின் சன்னதிகளும் பள்ளியறையும் அமைந்துள்ளன. கருவறையில் மூலவர் சிவபசூரியநாராயணர்  என்ற திருநாமத்தோடு திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். நின்ற திருக்கோலத்தில் மனைவியர் உஷாதேவி, சாயாதேவி வலம் இடமாக அருள்பாலிக்கின்றனர்.

மூலவர் மண்டபத்தில்  குரு பகவான் மூலவரை நோக்கி காட்சியளிக்கிறார். அவர் முன் யானை வாகனம் மற்றும் பலி பீடம் அமைந்துள்ளது. மூலவரை தரிசித்து வெளியேறும் போது பிரகாரத்தில்  தேஜஸ் சண்டிகேஸ்வரர் அருள் புரிகிறார். 

பிரகாரத்தில் புதன், சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய எட்டு கிரகங்களும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். மேலும் இடது மூலையில் கோள்வினை தீர்த்த விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. பிரகாரத்தின் இருபுறமும் மண்டபம் அமைந்துள்ளது. 

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் சிறப்புகள்

*சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருத்தலம்.

*சூரியன் பரிகார திருத்தலம்.

*இத்தலத்தில் சூரிய பகவான் சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

*மூலவரான சூரியனை சுற்றி பிரகாரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ள ஒரே கோவில் இது மட்டும் தான். இது இத்தலத்தின் தனிச்சிறப்பு. 

*இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. 

thiruvidaimaruthur-suriyanar-temple

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் திருவிழாக்கள்

ஆண்டு தோறும் தை மாதத்தில் வரும் ரதசப்தமி விழா 10 நாட்கள் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, வருடபிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்

மக்கள் சூரியனால் ஏற்படும் ‌ஜாதக ரீதியான குறைபாடுகள் நீங்க ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன மேலும், இத்திருத்தலத்தில் உள்ள கோள் வினை தீர்த்த விநாயகரை வழிபட்டால், நவ கிரகங்களால் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது ‌ஐதீகம். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடுகள். மாதாந்திர பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி, சதுர்த்தி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிகப்பு வஸ்திரம் சாத்தியும் தானியங்கள், நகைகள்,  செம்மலர்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொதுவாக பெரும்பாலும் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

suriyanar-temple-tanjore

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்

காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்
தரிசனம் செய்வதற்கு நடை திறந்திருக்கும்.

அருள்மிகு சூரியனார் திருக்கோவில் அமைவிடம்

கும்பகோணம்-பூம்புகார் சாலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது சூரியன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது சூரியன் கோவில். 

அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்:  ஆடுதுறை, தஞ்சை, கும்பகோணம் இரயில் நிலையங்கள்.

அருகில் உள்ள பேருந்து நிலையம்: திருவிடைமருதூர் பேருந்து நிலையம் மற்றும் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்.

சூரியனார் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்

இத்தலத்தில் உள்ள சூரியனை வழிபட்டால் உடல் ஆரோக்கியம், தந்தை மகன் நல்லுறவு, ஞானம், அரசியல் பதவி, அரசு வேலை, தலைமைப்பதவி, தந்தை வழி யோகம் ஆகியவற்றை அடையலாம். மேலும் ஜாதக ரீதியான தோஷங்கள் ‌நீங்கும்.  

சூரியனார் திருக்கோயில் முகவரி

அருள்மிகு சூரியனார் திருகோவில்,
சூரியன் கோவில்,
திருமங்கலக்குடி, திருவிடைமருதூர்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612102

தொலைபேசி: +91-0435 247 2349

Copyright by ALAYATRA.COM