பிரதோஷ விரத மகிமை மற்றும் கடைபிடிக்கும் முறை
பிரதோஷம் என்றால் என்ன?
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்காக அனுசரிக்கப்படும் விரதங்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சகல உயிர்களுக்கும் உறைவிடமான ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியதால் மூர்ச்சை அடைய, விஷத்தைக் காளிதேவி சிவனின் கண்டத்தில் அழுத்தி நிருத்தி விளையவிருந்த பேரழிவைத் தடுத்துக் காத்தருளிய நேரமே பிரதோஷ நேரம் எனப்படுகிறது.
பிரதியுஷா என்பது சூரியபகவானின் மற்றொரு மனைவியின் பெயராகும். இவர் சூரியனின் மனைவியான உஷாவின் நிழலாவார். இரவு முடிந்து பகல் துவங்கும் நேரம் அதாவது ஒளி துவங்கும் காலம் உஷத் காலம் என்றும் பகல் முடிந்து இரவு துவங்கும் நேரம், அதாவது இருள் துவங்கும் நேரம் பிரத்யுஷ் காலம் என்றும் வழங்கப்படுகிறது. நிழல் காலம் என்று பொருள்படும் பிரத்யுஷ் காலம் என்ற சொல் மருவி காலப்போக்கில் பிரதோஷ காலம் என்றானது. தோஷம் என்றால் தீங்கு, பிரதோஷம் என்றால் தோஷம் அற்ற என்றொரு பொருளும் உண்டு.
அதாவது தோஷங்கள் யாவையும் நீங்க ஈசனை வணங்க வேண்டிய நேரம் பிரதோஷ நேரம். மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சரியாக 4:30 மணி முதல் 6:00 மணி வரைக்கும் பிரதோஷ நேரம். இதை தினசரி பிரதோஷம் என்பர். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசித் திதியில் அனுசரிக்கப்படும் பிரதோஷம் மாதாந்திர பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இது தவிர,
1.பட்ச பிரதோஷம்,
2.நட்சத்திரப் பிரதோஷம்,
3.பூரண பிரதோஷம்,
4.திவ்யப் பிரதோஷம்,
5.தீபப் பிரதோஷம்,
6.அபய பிரதோஷம் எனப்படும் சப்தரிஷி பிரதோஷம்,
7.மகா பிரதோஷம்,
8.உத்தம மகா பிரதோஷம்,
9.ஏகாட்சர பிரதோஷம்,
10.அர்த்தநாரி பிரதோஷம்,
11. திரிகரண பிரதோஷம்,
12. பிரம்மப் பிரதோஷம்,
13. அட்சரப் பிரதோஷம்,
14. கந்தப் பிரதோஷம்,
15. சட்ஜ பிரபா பிரதோஷம்,
16. அஷ்ட திக் பிரதோஷம்,
17. நவக்கிரகப் பிரதோஷம்,
18. துத்தப் பிரதோஷம் என 18 வகை பிரதோஷங்கள் உள்ள.
சோமவாரப் பிரதோஷம் எனப்படும் திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோஷமும், சனிமகாபிரதோஷம் எனப்படும் சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷமும் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து மாலை பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் பூரண அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவதே பிரதோஷ விரதம் எனப்படுகிறது.
பிரதோஷ வழிபாடு உருவான கதை:
கடம்பவன புராணம் என்னும் மதுரைத் தலபுராணத்தின்படி,
துர்வாச முனிவரின் சாபத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழந்த தேவேந்திரன் பாற்கடலிலைக் கடைந்து அனைத்தையும் மீட்க எண்ணினான். அவ்வாறு கடையும் போது பாற்கடலில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை அடைய எண்ணி அசுரர்களும் தேவர்களுடன் பாற்கடலைக் கடைய சம்மதித்தனர். வாசுகிப் பாம்பை கயிராக்கி மேரு மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்து தயாராகினர். மேருமலை கடலுக்குள் அமிழ்ந்து விடாமல் இருக்க மகாவிஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்து அதனைத் தன் முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலை புறமாகவும் தேவர்கள் வால் புறமாகவும் நின்று பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பாற்கடலில் இருந்து அமிர்தம் வருவதற்கு முன்பாக பல பொருட்களும் தேவதைகளும் வெளிப்பட்டன. அவற்றை ஆளுக்கு ஒன்றாக தேவர்களும் அசுரர்களும் பகிர்ந்து கொண்டனர். வலி தாங்க முடியாமல் துயரப்பட்ட வாசுகி பாம்பின் மூச்சு காற்றிலிருந்து ஆலம் என்ற விஷமும் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷமும் வெளிப்பட்டது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் என்ற கொடிய விஷம் உருவானது. அதனை ஏற்க அசுரர்களும் தேவர்களும் மறுத்தனர். ஆலகாலமோ வலதும் இடதுமாக அவர்களை விரட்டியது.
ஆலகால விஷத்தின் உக்கிரம் ஏழுலகத்திலும் உள்ள அனைத்து உயிரினங்களையும் வதைக்கத் துவங்கியது. ஆலகாலத்தை நீர், நெருப்பு, மண் என எதனால் அழித்தாலும் விளைவுகள் இன்னும் மோசமாக மாறிவிடும். ஏதும் செய்யாமல் விட்டாலும் காற்றில் கலந்து ஜீவராசிகளை அழித்துவிடும். ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களையும் அசுரர்களையும் அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்று பிரபஞ்சத்தைக் காக்கும்படி வேண்டினர். வேறு வழியின்றி பிரபஞ்சத்தை காக்க வேண்டி சிவபெருமான் அதைத் தானே அருந்தினார். இக்கொடிய விஷமானது சிவபெருமானையே மூற்சை அடைய வைத்தது. சிவபெருமான் மயங்கியதால் உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.
செய்வதறியாது திகைத்த அனைவரும், படைப்புகளின் ஆதித் தாயான காளி தேவியிடம் சென்று முறையிட்டனர். உடனே காளிதேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்திப்பிடித்து அவரது கண்டத்திலேயே விஷத்தை நிறுத்தி வைத்தார். அதனால் அலகாலம் தான் தங்கிய ஈசனின் கழுத்தை நீலமாக மாற்றியது. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயர் உண்டானது. இந்த நிகழ்வு நடந்தது ஒரு கார்த்திகை மாத ஏகாதசி நாளின் மாலை நேரத்தில் தான்.
மூர்ச்சை தெளிந்த ஈசனிடம், தேவர்கள் தங்களது செல்வம் திரும்பக் கிடைக்காததை முறையிட்டார். எனவே சிவபெருமான் மீண்டும் பாற்கடலிலைக் கடையும்படி கட்டளையிட்டார். ஏகாதசியான அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி திருப்பாற்கடலைக் கடைந்தனர். பாற்கடலைக் கடையக் கடைய மகாலட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பக விருட்சம், சிந்தாமணி, கௌஸ்துப மணி, சூடாமணி, உச்சைச்ரவம் ஆகியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. மகாலட்சுமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். மற்றவற்றை இந்திராதி தேவர்கள் அடைந்தனர்., துவாதசித் திதியான மறுநாள் அதிகாலையில் பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது. அதனை, அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் அவர்கள் அன்று முழுவதும் ஆடியும் பாடியும் கொண்டாடினர்.
மறுநாள், பதிமூன்றாம் நாள் திரயோதசி திதியன்று தாங்கள் இழந்த செல்வம் மற்றும் அமிர்தம் கிடைக்கக் காரணமாக இருந்த சிவபெருமானைத் துதியாமல் களியாட்டம் செய்த தங்களது குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்து வணங்கி மன்னித்து அருளுமாறு மனமுருகி வேண்டினர். கருணையே வடிவமான சிவபெருமானும் அவர்களை மன்னித்துத் தருமதேவதையின் அம்சமான நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே ஒரு யாம காலம் ஆனந்த நடனமாடினார். கலைமகள் வீணை மீட்ட, திருமகள் பாடல் பாட, இந்திரன் குழலூத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தம் கையில் உடுக்கை ஏந்தி, திரிசூலத்தைச் சுழற்றித் தாண்டவமாடினார். தேவர்கள் அனைவரும் அதனைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தனர். அது முதல் ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாவத்தைப்போக்கும் நேரமாயிற்று.
பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கும் முறை?
பிரதோஷம் கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி அல்லது கார்த்திகை மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் இருந்து துவங்கலாம்.
பிரதோச விரதம் அனுசரிப்பவர்கள் அதிகாலை எழுந்து நீராடி வீட்டை சுத்தம் செய்து, விளக்கேற்றி, திருநீறு அணிந்து, சிவபுராணம் பாராயணம் செய்து விரதத்தை துவக்க வேண்டும். பகல் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். விரத நேரத்தில் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலான பிரதோச வேளையில் சிவாலயங்களில் நடைபெரும் நந்தி அபிஷேகத்தில் கலந்துகொண்டு நந்தி வழிபாடு செய்ய வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. பின் சிவதரிசனம் செய்து பச்சரிசி வெல்லம் கலந்து சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இரவு, பால் அல்லது எளிதில் செரிமானம் ஆகும் உணவு உட்கொள்ளலாம்.
பிரதோஷ வழிபாடு:
ஈசன் அபிஷேகப் பிரியர் என்பதால் அவர் மண்ணுயிர்களை காக்க விஷத்தை தான் உண்ட தியாகேசப் பெருமானுக்கு, தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் அளவில்லா திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து போற்றினர். அவ்வாறே பிரதோஷ நேரத்தில் நாமும் அபிஷேகம் செய்து ஈசனை வழிபட்டால் சகல தோஷங்களில் இருந்தும் நம்மை காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அவ்வாறு அபிஷேகம் செய்யவேண்டிய குறிப்பிட்ட சில திரவியங்களும் அதன் பலன்களும் பின்வருமாறு,
1. தண்ணீரால் அபிஷேகம் செய்ய பாவங்கள் நீங்கும்.
2. பழங்களால் அபிஷேகம் செய்ய விளைச்சல் பெருகும்.
3. சந்தனத்தால் அபிஷேகம் செய்ய தடைகள் நீங்கும்.
4. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்ய தோஷங்கள் விலகும்.
5. சர்க்கரையால் அபிஷேகம் செய்ய எதிர்ப்புகள் மறையும்
6. தேன் அபிஷேகம் செய்ய இனிய சாரீரம் கிட்டும்
7. பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய நன்மக்கட்பேறு கிட்டும்.
8. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய நோய் நீங்கும்.
9. பால் அபிஷேகம் செய்ய சுக வாழ்வு உண்டாகும்.
10. இளநீர் அபிஷேகம் செய்ய நீண்ட ஆயுள் கிடைக்கும்.
11. பன்னீர் அபிஷேகம் செய்ய புகழ் உண்டாகும்.
12. தயிர் அபிஷேகம் செய்ய காரியத் தடைகள் நீங்கும்.
13. நெய் அபிஷேகம் செய்ய செல்வம் பெருகும்.
14. விபூதி அபிஷேகம் செய்ய முக்தி கிட்டும்
15. வில்வத்தால் அபிஷேகம் செய்ய ஊழ்வினை அகலும்.
16. மலர்களால் அபிஷேகம் செய்ய தெய்வ தரிசனம் கிட்டும்.
சோம சூக்த பிரதட்சணம்:
பிரதோஷ பூஜை முடிந்ததும் சுவாமி தரிசனம் செய்து பிரகார வலம் வர வேண்டும். பொதுவாக கோவிலில் நாம் வலமிருந்து இடம் பிரதட்சணம் செய்வது வழக்கம். ஆனால் பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் என்ற தனித்துவமான பிரதட்சணம் செய்வது தான் மிகவும் விசேஷமான தாகும். அவ்வாறு பிரதோஷ காலத்தில் சோமசூக்த பிரதட்சணம் செய்தால் எண்ணிலா அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
சோம சூக்த பிரதட்சணம் செய்யும் முறை:
வழக்கமாக பிரகார வலம் வரும் முறைக்கு எதிர் திசையில் வலம் வருவதே சோம சூக்த பிரதட்சணம் ஆகும். அதாவது, மூலவருக்கு எதிரே உள்ள பிரதோஷ நந்தி பகவானை வணங்கி, பின் வழக்கமாக சுற்றும் முறைக்கு எதிராக சுற்றி மூலவருக்கு இடப்புறமாக இருக்கும் சண்டிகேஸ்வரரை சென்று வணங்க வேண்டும். பின்பு அங்கிருந்து மூலவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் வழியாக வழக்கமான முறையில் சுற்றி மூலவருக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் வெளியேறக்கூடிய சோமசூக்தம் எனும் கோமுகி வரை வந்து வணங்க வேண்டும். பின் வந்த வழியாகவே திரும்ப வந்து மூலவர், அடுத்து சண்டிகேஸ்வரர் வரை வந்து வணங்க வேண்டும். மீண்டும் அதேபோல் சண்டிகேஸ்வரர் துவங்கி சோமசூக்தம் வரை சென்று வணங்க வேண்டும். சண்டிகேஸ்வரரை தரிசித்த பின்னர் மூலவர் சிவபெருமானை நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். இதுவே சோம சூக்த பிரதட்சணம் செய்யும் முறையாகும். பொதுவாக சோம சூக்த பிரதட்சணம் 3, 5, 7, 9 மற்றும் 11 என ஒற்றைப் படையில் செய்ய வேண்டும்.
பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள்:
1. தினசரி பிரதோஷ காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரத்தில் சிவபெருமானை ஆலயத்தில் தரிசனம் செய்வதோ வீட்டில் பூஜித்தோ அல்லது மனதிலேனும் தியானித்து வழிபடுவது நித்ய பிரதோஷம் எனப்படும். இந்த வழிபாடு செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நிறையும் என்றும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு முக்தி நிச்சயம் என்றும் வேதங்கள் கூறுகின்றன.
2. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் பட்சப் பிரதோஷம் எனப்படுகிறது. இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து வழிபாடு செய்வதால் அறம் வளரும், தொழில் பெருகும், அறிவு விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
3. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் திரயோதசி திதியில் விரதமிருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மாதப் பிரதோஷம் எனப்படுகிறது. இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிக்க தீவினைகள் தேயும், நோய்கள் அகலும், பகை விலகும் என்பது நம்பிக்கை.
4. திரயோதசி திதியன்று வரும் பிரதோஷ நேரத்தில் என்ன நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்திற்கு உரிய சிவபெருமானை வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷம் எனப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிக்க நட்சத்திரம் மற்றும் ஜாதக ரீதியான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
5. சனிக்கிழமையன்று திரயோதசி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது கந்தப் பிரதோஷம். இது சூரசம்ஹாரத்துக்கு முன்னதாக முருகப் பெருமானே சிவ வழிபாடு செய்த பிரதோஷமாகும். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு சிவன் அருள் மட்டுமின்றி முருகப்பெருமானின் பரிபூரண அருளும் கிட்டும் என்பது ஐதீகம்.
6. திரயோதசி தினத்தன்று துவாதசியோ அல்லது சதுர்த்தசியோ சேர்ந்து வரும் நாட்களில் வரும் பிரதோஷம் திவ்யப் பிரதோஷம் எனப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7. திரயோதசி திதியுடன் சதுர்த்தசி திதி சேராமல் முழுமையான திரயோதசி திதி உள்ள நாளில் வரும் பிரதோஷம் பூரண பிரதோஷம் எனப்படும். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
8. எந்தவொரு திரயோதசி திதியிலும் விரதமிருந்து பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் விளக்கேற்றியோ தீபங்களை தானம் செய்தோ சிவவழிபாடு செய்ய சொந்த வீடு அமையும். இவ்வாறு வழிபடுவது தீபப் பிரதோஷம் எனப்படுகிறது.
9. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் “வ” வடிவில் தோன்றும் நட்சத்திர கூட்டம் “சப்தரிஷி மண்டலம்” எனப்படுகிறது. இந்த மாதங்களில் வரும் திரயோதசி திதியில் விரதமிருந்து பிரதோஷ வழிபாடு செய்து சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபட வேண்டும். இதுவே அபயப் பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமான் என்றும் அபயக்கரம் நீட்டு அருள்தருவார். அபாயம் என்றும் நேராது.
10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு நந்தி கொம்பிடையே ஆனந்தக் கூத்தாடியது கார்த்திகை மாதம் வந்த சனிக்கிழமை திரயோதசி திதி நாளேயாகும். எனவே கார்த்திகை மாதத்தில் வரும் சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்த நாள் மகா பிரதோஷம் எனப்படுகிறது. அதேபோல் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகாபிரதோஷம்” எனப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட எமபயம் நீங்கும்.
11. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களின் வளர்பிறையில், திரயோதசியுடன் சனிக்கிழமை சேர்ந்து வரும் பிரதோஷம், உத்தம மகாபிரதோஷம் எனப்படும். இந்நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட நீங்காத புகழும் சிறப்பும் கிடைக்கும்.
12. வருடத்தில் ஒரே முறை மட்டும் மகாபிரதோஷம் வருமானால் அது ஏகாட்சரபிரதோஷம் எனப்படுகிறது. அன்றைய தினம் விரதமிருந்து பஞ்சாட்சர மந்திரம் தியானித்து, சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை இயன்ற வரை ஓதி சிவபெருமானையும் விநாயகரையும் வழிபட சகல தடைகளும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
13. வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வருமானால் அது அர்த்தநாரி பிரதோஷம் எனப்படும். அந்த நாளில் விரதம் இருந்து சிவாலயம் சென்று வழிபட, இல்வாழ்க்கை சிறப்புடன் அமையும், பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
14. வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரணபிரதோஷம் எனப்படும். இந்த தினத்தன்று முறையாக விரதமிருந்து ஈசனை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
15. ஒரு வருடத்திற்கு நான்கு மகாபிரதோஷம் வந்தால் அது பிரம்மப்பிரதோஷம் எனப்படுகிறது. இந்தப் பிரதோஷ வழிபாட்டை விரதம் இருந்து முறையாகச் செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற கொடிய தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம்.
16. வருடத்துக்கு ஐந்து முறை மகாபிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம் எனப்படுகிறது. தாருகாவன ரிஷிகள் ‘தான்’ என்ற கர்வம் கொண்டு ஈசனையே எதிர்த்தனர். எனவே சிவபெருமான் பிட்சாடனர் வேடத்தில் வந்து நல்லறிவு புகட்டினார். தங்கள் பிழையை உணர்ந்த ரிஷிகள் இந்த அட்சர பிரதோஷ விரதத்தைக் கடைபிடித்து பாவ விமோசனம் பெற்றனர். எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் பாவ விமோசனம் அடைவர் என்பது ஐதீகம்.
17. ஒரு வருடத்தில் ஏழு மகாபிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம் எனப்படும். தன் தங்கையின் எட்டாவது குழந்தை தன்னைக் கொல்லும் என்றறிந்த கம்சன் அவளின் ஏழு குழந்தைகளைக் கொன்று, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பே தேவகியையும் அவளது கணவன் வாசுதேவரையும் சிறைபிடித்தான். சிறையில் இருந்தவாறே அவர்கள் ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷங்களையும் முறையாக கடைப்பிடித்தனர். அதனால் அவர்களுக்கு கிருஷ்ணர் பிறந்தார். நாமும் சட்ஜ பிரபா பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் தெய்வாம்சம் பொருந்திய குழந்தை பாக்கியம் கிட்டும்.
18. ஒரு வருடத்தில் எட்டு மகாபிரதோஷம் வந்தால் அது அஷ்டதிக் பிரதோஷம் எனப்படும். இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களையும் மகிழ்விக்கலாம். அவர்கள் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், ஞானம், புகழ் போன்ற எட்டு செல்வங்களையும் குறைவின்றி அருள்வர் என்பது நம்பிக்கை.
19. ஒரு வருடத்தில் ஒன்பது மகாபிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம் எனப்படும். இவ்வகை பிரதோஷம் வருவது மிகவும் அரிதானது. இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபட ஈசன் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.
20. ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவது மிக மிக அரிதான ஒன்றாகும். இது துத்தப் பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இந்த துத்தம் பிரதோஷ வழிபாட்டைச் சிறப்பாக செய்தால் ஒருவருக்கு இப்பிறவியில் ஏதேனும் பிறவிக் குறைபாடுகள் இருந்தால் கூட அது சரியாகிவிடும். மேலும் பிறவிப் பிணி நீக்கும். மறுபிறப்பு இருக்காது.
பிரதோஷ விரதத்தின் மகிமையை உணர்ந்து சிவபெருமானின் பெருங்கருணையை அறிந்து இப்பூவுலகில் பெருதற்கரிய பாக்கியங்கள் யாவற்றையும் பிரதோஷ வழிபாடு என்ற எளிய விரதத்தை முறையாகக் கடைப்பிடித்து பெற்று பெருவாழ்வு வாழ்க என ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.