போகர் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன்
ஆலயாத்ரா அன்பர்களுக்கு வணக்கம். விசாரணை நடத்தாமல் கோவலனை கொன்று கண்ணகியின் கோபத்திற்கு ஆளாகி மதுரையையே அழித்து தானும் அழிந்துபோன பாண்டியன் நெடுஞ்செழியனின் குல தெய்வம் மதுரை காளி/ மதுரகாளியே என்றெல்லாம் அழைக்கப்படும் மதுராபதி தெய்வமே ராஜகாளியம்மனாக திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் எனபது ஐதிகம்.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் வரலாறு:
போகர் வழிபட்ட தலம்:
அறிவியல் மற்றும் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் சித்தர்கள் சிறந்து விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது. அதிலும் காலங்கி சித்தர், அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் மிகவும் பிரபலமானவர்கள். மூலிகை செடிகளுக்கு பெயர் பெற்ற பழனியை சுற்றி அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைகளின் பல்வேறு மலைப்பகுதிகளில் சித்தர்கள் ஆராய்ச்சியும் தவமும் இயற்றி வந்தனர். அவற்றில் “மலைவாகடம்” என்னும் பழமையான மலைகள் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அரிகேசவ பர்வதம் மற்றும் வராககிரி ஆகிய மலைப்பகுதிகளில்
கன்னிவாடி மலை, பன்றிமலை என்ற மலைகள் பற்றி என்று பழைய. கன்னிவாடி மலை சித்தர்கள் வாழும் மலையாகும். இம்மலைக்கு சித்த முனிவர் போகர் தம் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் ஆகிய சித்தர்களுடன் செயற்கையாக மனிதர்களை உருவாக்கும் ஆராய்ச்சி செய்துவந்தார். ஆராய்ச்சியின் வெற்றிகரமாக முடிந்தது. அவர் ஒரு இளம் பெண்ணை உருவாக்கி தன் கமண்டல நீரை அவள் மீது தெளித்து, ”கன்னி வாடி” என்று சொல்ல அந்த பாவை உயிர் பெற்று இளம் பெண்ணாக எழுந்து வந்தாள்.
கன்னி பூஜையும் பூமாதேவியின் கோபமும்: போகர் தனது சித்துக்களால், ஒரு கல்லை கன்னிப்பெண்ணாக படைத்தார். அவளை வைத்து படைப்பாற்றலின் புதிய பரிணாமத்தின் கன்னி பூசை செய்யத் தொடங்கினார். இயற்கைக்கு எதிரான இந்த செயலை கண்டு பூமாதேவி கடும் கோபம் கொண்டாள்.
போகரின் கன்னி பூசை நிறைவுறுவதர்க்குள் பிரம்மன் போகர் முன் தோன்றி பூஜையை நிறுத்தி கன்னிப்பெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினார். போகரின் தவ வலிமை முற்றிலும் இழந்து முதுமையுற்று படும்படி சாபம் கொடுத்து மறைந்தார். அதிர்ந்து போன போகர் விமோட்சனம் தேடி அந்த மலையிலேயே சுற்றி திரிந்தார். இன்னும் தற்போது அந்த மலை கன்னிவாடி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அந்த மலையின் அடிவாரத்தில் தெத்துப்பட்டி எனும் கிராமதில் ஒரு காளி கோவில் இருப்பதை கண்டு அங்கேயே கடும் தவம் புரிய தொடங்கினார்.
மீண்டும் சக்தி பெற்ற போகர்: காளியை நோக்கி கடும் தவம்புரிந்த போக இராஜகாளியம்மன் தோன்றி இவர் தவத்தை மெச்சி, அவரது பிழையை மன்னித்து சாப நிவர்த்தியளித்தார். போகருக்கு தவ வலிமையை திரும்ப தந்து, என்று பழனி என்றழைக்கப்படும் சக்திகிரிக்குச் சென்று அங்குள்ள முருகனை வழிபட அருள்புரிந்தார். அவ்வாறு பழனி முருகனை வழிபட்டால் அவரது மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் உன்னத நிலையை அடையலாம் என்று வரம் தந்தாள். இவ்வாரு போகர் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாக இத்தலம் விளங்குகிறது.
முருகன் அருளால் நவபாஷாண சிலை: அவ்வாறே போகர், மேற்கு திசை நோக்கி வந்து பழனியில் முருகனை நோக்கி தவம் புரிந்தார். போகருக்கு அருட்காட்சி அளித்த முருகப்பெருமான் நவபாஷாண ரகசியத்தை போதித்தார். அதன் பிறகே போகர் மற்ற சித்தர்களுடன் கூடி ஆய்வு செய்து, நவபாசாணத்தை கொண்டு சிலை வடிக்கும் கலையை கண்டுபிடித்தார். மேலும் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பொருட்களை மருந்தாக கொண்டு பூலோக மக்களின் தீராத நோய்களை தீர்த்தார். அவற்றில் ரசாயண காப்பு பூசப்பட்ட ஒரு சிலையை பழனியில் பிரதிஷ்டை செய்து மக்கள் பயன்பட வழி செய்தார். ரசாயன காப்பு பூசாத சிலையை திருச்செங்கோட்டு மலை மீது பிரதிஷ்டை செய்தார். கொடைக்கானல் பூம்பாறையில் தசபாசாண சிலையை பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு மூலிகைகள் கொண்டு பாசாண சிலைகளை வடித்து தமிழகமெங்கும் பல கோவில்களில் பிரதிஷ்டை செய்தார்.
போகரின் ஓலைச்சுவடி குறிப்பு:
தனக்கு அருள்புரிந்த தாயை பற்றி போகர் தன் ஓலைச்சுவடிகலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரைக் காளி, அநியாயமாக கோவலன் கொலையுண்டது கண்டு பாண்டியன் அரண்மனைக்கு விரைந்து வந்து நீதி தவறிவிட்ட அவனின் செங்கோலை பறிக்க முற்பட்டாள். பாண்டிய குலதெய்வமான இராஜகாளியம்மன் அவன் செங்கோலைத் பறிக்க முயன்ற போது, பாண்டியன் அன்னை மீனாட்சியையும் சொக்கநாதரையும் கூக்குரலிட்டு உதவிக்கு அழைதான். உடனே மீனாட்சியும் சொக்கநாதரும் அவன் முன் தோன்றி பாண்டியனுக்காக காளியிடம் பரிந்து பேசினர். நீதி தவறிய அரசனின் செங்கோலை பறிப்பதற்கு முன் மதுரைப் பதியைக் காக்கவேண்டிய குல தெய்வமான மதுரை காளி தன் கடமையிலிருந்து தவறியதால் தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்து அப்பாவி மக்களும் பலியாகினர். காளி இதை தடுத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார் ஈசன்.
அதற்கு ராஜகாளி தேவி ‘பாண்டியவின் ஊழ்வினைப் பயனையும் கண்ணகியின் கற்பின் சக்தியையும் தன்னால் கூட தடுத்து மதுரையை தீயினின்று காக்க இயலவில்லை’ என்று விளக்கமளித்தார். இச்சம்பவத்தின் மூலம், ஒருவரின் தீய கர்மங்களின் பயனை அவர் அனுபவித்தே தீர வேண்டும். குலதெய்வத்தால் கூட அதை தடுக்க இயலாது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. சிவபெருமான், பாண்டியன் மீண்டும் பல பிறவிகள் எடுத்து தன் கர்மாவை கழித்த பிறகு தன் கடைசி பிறவியில் காளிக்கு ஒரு கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். இது வரை வரை, தன் குலத்தைக் காக்கத் தவறிய மதுராபதி தெய்வமாகிய ராஜகாளி அம்மன் குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவிலின் மேற்கு கோபுரத்தில் தங்க வேண்டும் என்று கட்டளை இட்டார் சிவபெருமான். தண்டனையை ஏற்று அரசவை விட்டு வெளியேறிய மதுராபதி தெய்வமான ராஜகாளி மதுரை முழுவதையும் எரித்தும் தன் கோபம் தணியாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மதுரையின் மாட வீதிகளில் அலைந்து திரிந்து கண்ணகியை தடுத்து நிறுத்தி பாண்டியனின் ஊழ் வினையையும் கோவலன் மற்றும் கண்ணகியின் முற்பிறவி கர்மாவையும் எடுத்துரைத்தாள். இவ்வாறு ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகே சினம் தணிந்து மேற்கே மலையாள தேசம் நோக்கி கண்ணகி சென்றதாக வரலாறு கூறுகிறது. போகர் தவம் செய்த இடத்தில் மதுரை காளியாகிய மதுராபதி அரூப சக்தியாக உறைகிறாள் என்பது போகர் குறிப்பு.
இத்திருத்தலத்தில் தல விருட்சம்
தல தீர்த்தம் எதுவும் இல்லை.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் அமைப்பு:
இத்திருத்தலம் வேதாகம முறைப்படி இல்லாமல் சித்தாகம முறைப்படி அமைந்துள்ளது. ஆலயத்திற்கு ராஜகோபுரம், நுழைவாயிலில், கொடிமரம் எதுவும் இல்லை. கோவில் வளாகத்தில் நுழைந்ததும் வலதுபுறம் காவல் தெய்வமான கருப்பசாமி கையில் அரிவாள் தாங்கி நின்று கொண்டு அருள்பாலிக்கிறார்.
அவரை வணங்கி முன்னே சென்றால் நேரே ராஜகாளியம்மன் செங்கோலுடன் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திரிசூலம் அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். கருவறை வாயிலில் விநாயகரும் முருகரும் துவார பாலகர்களாக காட்சியளிக்கின்றனர். அன்னைக்கு எதிரே சிம்மவாகனம் பலிபீடம் மற்றும் திரிசூலம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையின் முன் உள்ள மண்டபத்தில் விஷ்ணு துர்க்கை, ஜல துர்க்கை, ருத்ர துர்க்கை, சூலினி துர்கை, ஸ்தல துர்கை, பிரம்ம துர்கை, வன துர்கை, அக்னி துர்கை, பத்ரகாளி, சர்வ சாமுண்டி, சரசண்டிகை, பைரவி, கலராதிரி, சாமுண்டி, காளி மற்றும் மாகாளி தேவிகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அருகிலேயே அதிமரத்தால் செய்யப்பட்ட ஆதிவாழை ராஜகாளியம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இதுவே போகர் தவம் செய்த காளி சன்னதியாகும். அமர்ந்த கோலத்தில் அருட்காட்சியளிக்கும் இவரே பாண்டியகுல தெய்வமான மதுராபதி தெய்வமாவார். இந்த தாயாருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. அலங்கார ஆராதனை மட்டுமே. இந்த தாயாரின் முன்னும் சிம்மவாகனம் பலிபீடம் மற்றும் திரிசூலம் ஆகியவை உள்ளன. கருவறை வாயிலில் துவார பாலகர்கலாக விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அமைந்துள்ளன. இவரை தரிசித்து வெளியேற, வலதுபுறம் சித்தர்
போகர்குக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. அருகிலேயே அய்யனார், விநாயகர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆகியோர் அருள்புரிகின்றனர். வில்வ மரத்தடியில் பாண்டி முனி அருள் புரிகிறார். அருகே நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அது தவிர பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட கோச்சார நவகிரக சன்னதி அமைந்துள்ளது. இந்த நவகிரகங்கள் அன்றாட கிரக நிலைப்படி தினமும் மாற்றி அமைக்கப்படுகின்றன. பிரகாரத்தில் இடமிருந்து வலமாக வலம் வந்தால் வாசி யோக லிங்கம், குரு தட்சிணா மூர்த்தி மற்றும் நவகோடி ஸ்வர்ணபைரவர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அருகே திருவோண நட்சத்திர யாகசாலை அமைந்துள்ளது. யாகசாலை வாயிலில் காகபூஜண்டர் மற்றும் தன்வந்திரி பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். யாக சாலை உள்ளே ராஜாகாளி உற்சவர் மூர்த்தி எழுந்தருளி உள்ளார். வசிஷ்டர் சந்நிதி உள்ளது. இந்த யாக சாலையில் ஒவ்வொரு ராசியும் லிங்கவடிவில் அமைந்துள்ளன. அடுத்து தனி சன்னதியில் நாகர் திரிசூலங்கள் அமைந்துள்ளன. அதை ஒட்டி அஷ்ட நாக ராஜாக்கள் சன்னிதிகள் உள்ளன. மத்தியில் எட்டுத்தலை நாகதில் கிருஷ்ண பகவான் உள்ளார். இந்த அஷ்ட நாக ராகங்களை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அடுத்து பயன்கள் அனைத்தும் போக்கும் ராஜதுர்க்கை சன்னதி, திரைப்பட ராஜாகன்னி ஸ்ரீ ராஜகாளி சுதை சிற்பம் ஆகியன அமைந்துள்ளன. அடுத்து அருட்பால் உண்ட சித்தர்கள் ஜீவ சமாதி ஆலயம் அமைந்துள்ளது. ஜீவ சமாதி முன் ஆலய நந்தவனம் அமைத்து.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் பெயரக்காரணம்:
மதுராபதி தெய்வம் என்று அழைக்கப்படும் மதுரகாளி அம்மன் பாண்டிய அரச வம்சத்தின் குலதெய்வம் என்பதால் இந்த அம்மனுக்கு ராஜகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் மதுரையின் காவல் தெய்வம் என்பதால் மதுரை காளி அம்மன் என்றும் வழங்கப்படுகிறார். தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் என்று அன்போடு வழங்கப்படுகிறாள் அன்னை.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் சிறப்புகள்:
* உலகிலேயே தினமும் கோட்சாரப்படி, நகரும் நவக்கிரக சன்னிதி உள்ள ஒரே திருத்தலம் இது மட்டுமே ஆகும். இந்த நவக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
*இத்திருத்தலம் போகர் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலமாகும்.
*இக்கோவில் “திருவோண” நட்சத்திர கோவிலாகவும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
*இத்தலத்தில் திருவோண நட்சத்திர யாக சாலை அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திரத்தன்று காலை 11 மணி அளவில் சிறப்பு யாகம் நடைபெறும்.
*இத்தலம் சித்த ஆகம முறைப்படி அமைந்துள்ளது.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்:
இராஜகாளியம்மன் கோவிலில் செங்கோல் பெறும் விழா, ஆடி பதினெட்டு சித்தர்கள் விழா, பவுர்ணமி பூசை, ஆடிவெள்ளி திருவிளக்குபூஜை, நவராத்திரி கலைவிழா, விஜயதசமி, தமிழ்ப் புத்தாண்டு விழா, அன்னதானம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.
இத்திருத்தலம் திருவோண நட்சத்திர கோவில் என்பதால் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு ‘திருவோண யாகபூஜை’ மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணி தைலம் பூசி அபிசேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:
இங்கு வழிபட்டால் திருமணம் தடை, குழந்தைப் பேறின்மை ஆகிய தடைகள் நீங்குகின்றன. மேலும் தொழில் தடைகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நாகராஜக்களை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ராஜ துர்கையை ராகுகாலத்தில் வழிபட்டால் பயன்கள் அனைத்தும் போகும். திருவோண நட்சத்திரத்தில் யாகம் செய்து வழிபட்டால் நட்சத்திரத்தின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி மகிழ்ச்சி செல்வம் அனைத்தும் கிடைக்கும்.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்:
இக்கோயில் தினமும் காலை 6:00மணி முதல் மதியம் 1:00 வரையிலும் மாலை 3:00 மணிமுதல் இரவு 7:00 தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் அமைவிடம்:
திண்டுக்கல் – தேனி சாலையில் செம்பட்டி அருகே கன்னிவாடி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை, கோவை விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: திண்டுக்கல் இரயில் நிலையம்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்: திண்டுக்கல் மத்திய பேருந்து நிலையம்.
அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் முகவரி:
அருள்மிகு இராஜகாளியம்மன் திருக்கோவில்,
தெத்துப்பட்டி, கன்னிவாடி (வழி),
திண்டுக்கல் – 624705.
திருசிற்றம்பலம்





