Adheeswarar temple -PeriyaKalanthai-Ancient siva temple
ஆதி ஈஸ்வரன் கோவில் – பெரிய களந்தை
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு பெரியகளந்தை எனும் அழகிய கிராமத்தில் அமைதியாக அமைந்துள்ள ஆதி ஈஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆதீஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்
இத்திருத்தலம் 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஆகும். சந்தனக்காடாக இருந்த இந்த காட்டுக்குள் சிவாலயம் ஒன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடன் எப்பொழுது தோன்றியது என்ற எந்த தகவலும் தெரியாமல் இருந்த காரணத்தால் “ஆதி ஈஸ்வரன் கோவில்” என்று அப்பகுதிவாழ் மக்களால் வழங்கப்பட்டது. ஆதி என்றால் மிகப்பழமையான/முதல் என்று பொருள். அதுவே இத்திருத்தலநாதரின் பெயராகவும் மறுவியது.
இவ்வூரை “குழந்தை நகர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அம்பிகையை துர்வாசர் யாக குண்டத்தில் இருந்து குழந்தையாகப் பெற்றதால் இந்நகருக்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பசுவின் மேல் வசிஷ்டருக்கு காட்சியளித்த அம்மன்
இங்கு வசிஷ்டர் சில காலம் தவம் செய்து வந்தார். அவருக்கு தாய் பசுவுடன் அதன் கன்றின் மேல் அமர்ந்தபடி ஒரு சிறுமி அருட்காட்சி அளித்ததார் அவர் பார்வதி தேவிதான் என உணர்ந்த முனிவர் மனமகிழ்ந்து தேவியை பூஜித்ததார். குழந்தை வடிவில் வசிஷ்டருக்கு அன்னை அருள்பாலித்த இடம் என்பதால் இத்திருத்தலம் “பெரிய குழந்தை” என்றழைக்கப்பட்டு பின் பெரிய களந்தை என்று மருவி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆதீஸ்வரர் திருத்தல வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
14 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கோயில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. மேலும் கொங்கு சோழ மன்னன் வீர ராஜேந்திரன் மற்றும் கொங்கு பாண்டிய மன்னன் வீர பாண்டியன் காலத்து நன்கொடைகள் பற்றிய 14 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன. மூலவர் மண்டபத்தில் உள்ள தூண்களில் 300 ஆண்டுகளுக்கு முன்பு புணரமைக்கப்பட்டதற்கான தகவல்கள் மற்றும் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் சம்மந்தப்பட்ட தகவல்களும் உள்ளன.
துர்வாசர் தவம்.
துர்வாசர் தனக்குப் பெண் குழந்தை வரம் வேண்டி மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த சந்தன வனப்பகுதி ஒன்றில் இறைவனை நோக்கி கடும் தவம் செய்தார்.
ஈசன் அருள்.
துர்வாசரின் தவத்தில் மணமகிழ்ந்த ஈசன் பார்வதி தேவியே குழந்தையாக கிடைப்பார் எனவும் தக்க சமையம் வரும்போது தேவியை தாம் ஆட்கொள்வோம் எனவும் அருளி, அதுவரை தேவியின் மழழை பிராயத்தைத் தந்தையாக இருந்து அனுபவிக்கும் வரத்தை தந்தார்.
துர்வாசரின் யாகத்திலிருந்து கிடைத்த குழந்தை.
ஈசனின் அருட்படி துர்வாசர் மாதத்திலிருந்து ஒரு அழகிய பெண் குழந்தை வெளிப்பட்டது. பார்வதி தேவியான அக்குழந்தையை துர்வாசர் அன்புடனும் பக்தியுடனும் பேணிவளர்த்தார். பருவம் வந்ததும் ஈசனுக்கே திருமணமும் முடித்து வைத்தார். இந்த தேவியை துர்வாசரே இக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்தார்.
வடக்கு நோக்கியிருக்கும் நந்தி.
புகுந்த வீட்டுக்கு வந்ததும் நந்தி தலை திரும்பியிருப்பதைப் பார்த்த பார்வதி அதற்கான காரணத்தை கேட்டு அறிந்துகொண்டார். தன் கணவரை ஒரு பக்தனுக்காக காட்டிக் கொடுத்ததால் இப்படி இருப்பதாகத் தெரிய வந்ததும், நந்தியின் கருணையை மெச்சி அவரைத் தனக்கும் வாகனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். நந்திதேவரும் சிவனை மட்டுமே சுமந்த தனக்கு அம்பிகையையும் சுமக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ந்தார்.
படிக்காசு புலவர்.
முற்காலத்தில் சண்டம் பாடுவதில் வல்லவரான புலவர் ஒருவர் இத்திருத்தலத்தில் தங்கி இருந்து இத்திருத்தல இறைவன் மேல் பாடல்கள் பாடி பரிசாக சிவனிடம் இருந்து படிக்காசுகள் பெற்று வந்தார். இதனால் இவர் படிக்காசுப்புலவர் என்றே அழைக்கப்பட்டார்.
இறைவனின் சோதனை.
இத்திருத்தலத்தில் தங்கி இருந்து இறைவன் மேல் பாடல்களை பாடி வந்த புலவர் அதற்கு பரிசாக படிக்காசுகள் பெற்றுவந்ததால் இவர் மெய்யென்புடன் துதிப்பாடல்களை பாடவில்லையோ கூலிக்காக வேலை செய்கிறாரோ என்று சந்தேகம் கொண்டார் இறைவன். எனவே புலவரை சோதிக்க எண்ணினார்.
மாயமான ஆதீஸ்வரரும் அன்னையும்.
ஒரு நாள் படிக்காசு புலவர் இறைவனை வாழ்த்திப் பாடல் பாடி முடித்ததும் தரிசனத்துக்காக கண்களை திறந்த போது இறைவனும் அன்னையும் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நந்தியிடம் உதவி கேட்ட புலவர்.
கோவில் முழுவதும் தேடியும் இறைவன் மற்றும் இறைவியைக் காணாததால் நந்தியம் பெருமானிடம் தனக்கு உதவுமாறு வேண்டினார் படிக்காசுப்புலவர்.
நந்தியின் மௌனம்.
இறைவன் தான் இருக்கும் இடத்தை சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டதால் நந்தி இறைவன் ஒளிந்திருக்கும் இடம் தெரிந்தும் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தார்.
படிக்காசுப் புலவரின் தவிப்பு.
ஆனால் நேரம் செல்லச் செல்ல படிக்காசு புலவர் பதட்டம் அதிகரிக்க கண்களில் நீர் மல்க இறைவனை காணாது தவித்தார். செய்வதறியாது திகைத்தார்.
நந்தி செய்த உதவி.
பக்தனின் துயரைக் காண இயலாத நந்தி இறைவனின் கட்டளையை மீறவும் முடியாமல் இறைவன் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் சற்றே தனது தலையை திருப்பினார்.
படிக்காசு புலவரின் மகிழ்ச்சி.
படிக்காசு புலவர் இறைவன் ஒளிந்திருந்த இடத்தை நந்தியின் உதவியுடன் கண்டுகொண்டார். மனம் மகிழ்ந்து இறைவனைப் பணிந்து வணங்கினார்.
இறைவனின் பாராட்டு.
பக்தர்களின் துயரை தாங்க முடியாத நந்தியின் அன்பைக் கண்டு இறைவன் மன மகிழ்ந்தார். இருப்பினும் தலை இருக்க வாலாடக்கூடாது என்று செல்லமாக கடிந்து கொண்டார். இத்திருத்தலத்தில் நந்தியம் பெருமானின் தலை இறைவனை பார்க்காமல் சற்று திரும்பி இருப்பதற்கு இதுவும் காரணம் என்று ஒரு வரலாறு உண்டு.
பிரம்மன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்.
பிரம்மா தனது படைப்புத் தொழிலில் கர்வம் கொண்டதால் பல சாபங்களுக்கு உள்ளானார். இந்த சாபங்களில் இருந்து விமோசனம் பெற பூவுலகம் முழுதும் இருக்கும் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று தவம் செய்து இறைவனை வணங்கினார். அப்படி அவர் பூவுலகில் பிரயாணம் செய்யும் போது அடர்ந்த சந்தன வனமாக இருந்த இவ்விடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டு அங்கேயே தங்கி பலகாலம் தவம் புரிந்து சாபம் விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆதீஸ்வரர் திருத்தலத்தின் சிறப்புகள்.
சுயம்புலிங்கம்.
இத்திருத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இவரை சதாபிஷேக லிங்கமாக வழிபடுகின்றனர்.
பாடல் பெற்ற தலம்.
அருணகிரி நாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும்.
மூலவருக்கு கீழ் நீரோட்டம்.
மூலவருக்கு கீழ் மண்ணுக்கடியில் கண்ணுக்கு புலப்படாத நீரோட்டம் ஒன்று ஓடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
பக்தன் இறைவியை மகளாகப் பெற்ற திருத்தலம்.
வசிஷ்டரின் தவத்தில் மகிழ்ந்து பெண்ணாக பார்வதியே அவதரித்து இத்திருத்தலத்தில் சிவபெருமானை கரம் பிடித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கழுத்து சாய்ந்த வள்ளி.
திருத்தலத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி, தனது கழுத்தை வலப்புறம் சாய்த்தபடி காட்சி தருவது சிறப்பு.
சிறப்பு நந்தி வழிபாடு.
இத்தலத்து நந்தியை தரிசித்து வேண்டிக்கொண்டால் இறைவனிடம் கூறி எளிதில் நிறைவேற்றித் தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக பிரதோஷ காலங்களில் இங்கு வந்து நந்தியை வழிபட்டு இறைவனை தரிசித்தல் மிக விசேஷமானதாகும்.
விசேஷமான கோவில் அமைப்பு.
வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்த வெவ்வேறு அரசர்களால் புணரமைக்கப்பட்ட கோவில் என்பதால் வேறு வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சிற்பங்களும் கடவுள்களின் திரு உருவங்களும் மாறுபட்ட கோவில் அமைப்புமாக கலவையான கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் அமைந்துள்ளது இச்சன்னதியின் தனிச்சிறப்பாகும்.
ஆதீஸ்வரர் திருத்தல அமைப்பு.
முன்பு இத்திருத்தலம் செங்கற்களால் கட்டப்பட்ட கோயிலாகவே இருந்தது. பின்னர் கரிக்கால் சோழன் தன் காலத்தில் கல்லால் கோவிலை எழுப்பினார். இருப்பினும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசர்களின் ஆட்சிக்கு வெவ்வேறு விதமாக புனரமைக்கப்பட்டு தற்போதுள்ள நிலையிக்கு மறுவியிருக்கிறது.
கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இராஜகோபுரம்.
இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை ஆனால் நுழைவாயில் உள்ளது. எனவே கற்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் வழக்கத்திற்கு முற்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது.
பால கணபதி
கோவிலை அடைந்ததும் வலது புறம் ஒரு பெரிய அரச மரம் குளுமையாக நம்மை வரவேற்கிறது. அரச மரம் மிகச் சமீபத்தியது தான் என்றாலும் மரத்தடியில் நாகர்களுடன் வீற்றிருக்கும் பிள்ளையார் மிகவும் பழமையானவர் என திருவுருவச் சிலையே தெரிவிக்கிறது. இத்திருத்தல விநாயகர் பாலகணபதி என்ற நாமத்தில் வணங்கப்படுகிறார்.
பாம்பு புற்று
இடது புறம் சுமார் நான்கு அடியில் ஒரு பாம்பு புற்றும் அதன் முன்பாக நாகர்களின் சிலைகளும் அமைந்துள்ளன. பாம்புகளை வழிபடும் இந்த பழக்கம், பல ஆண்டுகளாக அடர்ந்த வனத்துக்குள் அமைந்திருந்த தலம் இது என்பதன் அறிகுறியாகும். மேலும் விளக்குத் துணைத் தாண்டி கோவிலின் நுழைவாயிலின் வலது புறம், ஒரு கல்லில் முன் பகுதி மட்டும் செதுக்கப்பட்ட வில் வீரன் ஒருவரின் பழமையான சிற்பம் ஒன்று சற்று மறைவாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இத்திருத்தலம் அடர்ந்த வனத்திற்குள் இருந்திருக்கலாம் என்பதற்கும் வேடர்கள் வழிபட்டு வந்த திருத்தலமாக இருக்கலாம் என்பதற்குமான சான்றாக இருக்கிறது.
கல் விளக்குத் தூண்
மூலவருக்கு நேர் எதிரில் கல்லால் ஆன விளக்குத்தூண் ஒன்று இருக்கிறது. இத்தூணில் பிள்ளையார் முருகன் திரிசூலம் மற்றும் லிங்கத்திற்கு பால் புகட்டும் காமதேனும் ஆகியவற்றின் சிற்பங்கள் அமைந்துள்ளன.
கோவில் நுழைவாயில்
திருக்கோவிலில் உள்ளே நுழைந்ததும் இடது புறமாக சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய பிள்ளையார் திரு உருவம் ஒன்றும் வடக்கு நோக்கிய திசையில் வீற்றிருக்கும் மிகப்பழமையான அதிகார நந்தியும் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் நந்தியம் பெருமான் சன்னிதி ஒரு அரிய அமைப்பாகும்.
கோவில் பிரகாரம்
சூரிய சந்திரர் -அதிகார நந்தியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் திருக்கோயில் பிரகாரத்தில் இடது புறமாக ஸ்ரீ சூரியனும் வலது புறமாக ஸ்ரீ சந்திரனும் வீற்றிருக்கின்றனர்.
நந்தியும் கொடி மரமும்
பீடத்தில் மூலவரை நோக்கியபடி அழகிய நந்தியும் கொடி மரமும் அமைந்துள்ளது.
சமயக் குறவர்கள் நால்வர்
பிரகார சுற்றுப் பாதையில் முதலில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குறவர்கள் நால்வர் திரு உருவமும் அமைந்துள்ளது.
கண்ணப்ப நாயனார் சிலை
நால்வர் திரு உருவத்துடன் ஸ்ரீ கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. இது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். கண்ணப்ப நாயனாருக்கு மட்டும் அமைக்கப்பட்டிருக்கும் தனித் திருவுருவச் சிலையும் கோயில் வாயிலில் இருக்கும் வேடரின் சிலையும் இது வேடர்கள் வழிபட்ட தலம் என்ற நமது நம்பிக்கையை மேலும் உறுதி செய்கிறது.
மூன்று பிள்ளையார்
அடுத்ததாக மூஷிக வாகனம் மற்றும் பலி பீடத்துடன் ஒரே சன்னதியில் மூன்று பிள்ளையார் எழுந்தருளியுள்ளனர். இது வேறெந்த கோவிலிலும் காண முடியாத ஒரு சிறப்பான அமைப்பாகும்.
சனிபகவான்
அருகே சனிபகவான் தனிச்சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சனிபகவானுக்கு தனி விமானம் அமைந்துள்ளது.
சன்னிதிக் கோஷ்டம்
சன்னதி கோஷ்டத்தில் தெற்கு முகமாக குரு தட்சிணாமூர்த்தியும் மூலவருக்கு பின்புறமாக லிங்கோத்பவரரும் வலப்புறம் விஷ்ணு துர்க்கை அம்மனும் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். கருவறை சுற்றுச்சுவரின் மேல் பகுதியில், பூத கணங்களுடன், மகா விஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் சிற்பங்களும், முதலையிலிருந்து பிள்ளையை மீட்ட அவிநாசி தல புராணமும் செதுக்கப்பட்டுள்ளன.
சிவ சண்முகசுப்பிரமணியர் சன்னதி
சன்னிதியில் வடக்கு மூலையில் முருகப்பெருமாளன் சிவ சண்முக சுப்பிரமணியராக வள்ளி தெய்வானை சமேதராய் மயில்வாகனம் பலிபீடத்துடன் ஆறு திருமுகங்களுடனும் பபன்னிரு திருக்கரங்களுடனும் அபய ஹஸ்தபாவத்தில் அருள் பாலிக்கிறார்.
மகாலட்சுமி சன்னதி
சுப்ரமணியர் சன்னதிக்கு அருகில் அன்னை கஜலட்சுமி தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
நினைவுத்தூண்
இத்திருத்தலத்தில் தங்கி இருந்து தவம் செய்த முனிவர்களில் ஒருவரான யோகம் மற்றும் நாட்டிய சாஸ்திரத்தை எழுதிய பதஞ்சலி முனிவர் தவம் செய்த இடத்தில் அதன் நினைவாக ஒரு கல் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூண் மூலவரின் பிரகார சுற்று பாதையில் கஜலட்சுமி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர்.
வில்வ மரத்தடி சிவனும் பார்வதியும்
சுப்பிரமணிய சன்னதியின் இடது புறமாக இரண்டு வில்வ மரங்கள் நெடிது வளர்ந்துள்ளன. இந்த வில்வமரங்கள் ஏக வில்வம் எனப்படும் மூன்று இலைகளை கொண்டதாகும். இந்த வில்வமரம் த்ரிநேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் இரு கண்களையும் நெற்றிக்கண்ணையும் குறிப்பது போல் மூன்று இலைகள் இருப்பதால் அப்பெயர் பெற்றது. ஆறு இலைகளைக் கொண்ட மற்றொரு வில்வ வகையும் உண்டு இது மகா வில்வம் என்று அழைக்கப்படுகிறது.
இதில் ஒரு வில்வ மரத்தின் கீழ் மான் மழு ஏந்திய சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளியுள்ளனர். இந்த சிறு உருவங்கள் தற்போது அமைக்கப்பட்டவையாகும்.
தல தீர்த்தம்
இத்திருத்தலத்தின் தல தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இதுதவிர தற்போது ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு கிணறும் தென்கிழக்கில் வரதராஜ பெருமாள் சன்னதிக்கு எதிரில் ஒரு கிணறும் அமைந்துள்ளது. மேலும் மூலவரின் கீழ் கண்ணுக்குத் தெரியாத நீரோட்டம் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.
தல விருட்சம்
இத்திருத்தலத்தின் விருட்சம் சந்தன மரமாகும். தற்பொழுது கோவில் வளாகத்திற்குள் இரண்டு வில்வ மரங்கள் இருக்கின்றன.
காலபைரவர் சன்னதி
மூலவர் பிரகார சுற்றுப் பாதையின் முடிவில் தெற்கு முகம் நோக்கிய கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. அஷ்டமி தினங்களில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
நவக்கிரக சன்னதி
பைரவர் சன்னதியின் அருகே நவகிரகங்கள் தனி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
மூலவர் சன்னதி
துவார பாலகர்கள் – பிரகாரத்தை சுற்றி வந்து கொடி மரம் மற்றும் நந்தியை தாண்டினால் தண்டி முட்டி ஆகிய வார பாலகர்கள் இருபுறமும் காவல் புரிகின்றனர்.
கல் மண்டபம்
துவாரபாலகர்களைத் தாண்டி நுழைந்தால் ஒரு சிறிய கல் மண்டபம் உள்ளது. கரிகால் சோழன் எழுப்பிய கற்கோயில் சிதிலமடைந்த நிலையில் அவ்வப்போது வந்த அரசர்கள் அவர்களால் ஆன புனரமைப்பு பணிகளை செய்து வந்துள்ளனர். மேலும் தற்போதுள்ள இம்மண்டபம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான குறிப்புகள் நடராஜர் சன்னதிக்கு முன் இருக்கும் ஒரு தூணில் இடம் பெற்றுள்ளது.
சன்னிதி பிள்ளையார்
துவார பாலகர்களை தாண்டி பழமையான தூண் மண்டபத்தில் நுழைந்ததும் கருவறைக்கு வெளியில் வலது புறம் பிள்ளையார் மற்றும் நாகர்கள் அருள் புரிகின்றனர்.
உற்சவர் சன்னதி
இடதுபுறம் சௌந்தரநாயகி சமேத சந்திரசேகரன் கிழக்கு நோக்கியும் சிவகாமி சமேத நடராஜர் தெற்கு நோக்கியும் உற்சவமூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
மூலவர்
கருவறையில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தின் மேல் பஞ்சலோக குவளை ஒன்று தொங்கவிடப்பட்டு அதில் தூய நீர் நிரம்பி ஆதீஸ்வரப் பெருமானுக்கு சதா சர்வ காலமும் அபிஷேகம் நிகழும்படி அமைக்கப்பட்டுள்ளது. மூலவரின் கீழ் கண்ணுக்குத் தெரியாத நீரோட்டம் ஒன்று ஓடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
பெரியநாயகி அம்மன் சன்னதி:
இத்திருத்தல தேவி பெரியநாயகி அம்மன் மூலவர் சன்னதிக்கு வலப்புறத்தில் தனி கோபுரம், பலிபீடம், நந்தி வாகனத்துடன் நின்ற திருக்கோலத்தில் அலங்கார ரூபிணியாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
முனிவர்களின் திரு உருவங்கள்
துர்க்க முனிவர், அகத்தியர், துர்வாசர் ஆகியோரது திருவுருவங்கள் கோஷ்டத்தின் வெளிச்சுவரில் அமைந்துள்ளது.
வரதராஜ பெருமாள் சன்னதி.
பின்னாளில் வந்த வைணவ அரசர் ஒருவரால் வரதராஜ பெருமாளுக்கு தனி சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. பெருமாள் சன்னதி தனி விமானம் விளக்கு தூண் பலி பீடத்துக்கு அமைந்துள்ளது. கருட தோணியுடன் கிழக்கு நோக்கியிருக்கும் இக்கோயில் மேல் பகுதிகள் உள்ளார்ந்த முறையில் செதுக்கப்பட்டுள்ளது. கருட தூணின் அடிப்பகுதியில் இரண்டு முயல்களின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
வரதராஜ பெருமாள் சன்னதிக்கு வெளியில் கணபதி அருள் பாலிக்கிறார்.
பெருமாளின் எதிரே கருடத்தாழ்வார் சன்னிதி கொண்டுள்ளார். அருகே தென்முகமாக ஆஞ்சநேயர் தனிச்சின்னதியில் அருள்பாலிக்கிறார்.
கருவறையில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
சாஸ்தா சன்னதி
சன்னிதியின் தென்மேற்கு மூலையில் ஐயனாருக்கு சாஸ்தா என்ற நாமத்தில் தனி சன்னிதி அமைந்துள்ளது.
கோவில் நந்தவனம்
சாஸ்தா சன்னிதையொட்டி திருக்கோவில் நந்தவனம் அமைந்துள்ளது.
ஆதீஸ்வரர் திருக்கோவில் திருவிழாக்கள்
ஆனி உத்திரம், ஆடிவெள்ளி, சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.ஆனி உத்திரம், ஆடிவெள்ளி, சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.
இதைத் தவிர மாதாந்திர பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, மேலும் சஷ்டி கிருத்திகை போன்ற நாட்களிலும் பெருமாளுக்கு உகந்த நாட்கள் ஆன திருவோணம் ஏகாதசி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஆதீஸ்வரர் சிறப்பு வழிபாடுகள்.
பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஆதீஸ்வரர் வழிபாட்டு பலன்கள்
திருமணதோஷம், புத்திரதோஷம் நீங்கும், சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்ற தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் அம்பாள் சன்னதியில் தரப்படும் வெள்ளைக்கயிறைக் கட்டிக்கொள்ள நோய்கள் வராது என்பது ஐதீகம்.
ஆதீஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும்,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆதீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்.
பொள்ளாச்சியிலிருந்து 26.4 கி.மீ தொலைவிலும் கிணத்துக்கடவிலிருந்து 14.8 கி.மீ தொலைவிலும் நெகமத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவிலிருந்து இடதுபுறம் நெகமம் செல்லும் சாலையில் பெரிய களந்தை அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம் – கோவை விமான நிலையம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் – கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை போத்தனூர் இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம் – கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பேருந்து நிலையயங்கள் அருகில் இருக்கிறன என்றாலும் பேருந்து வசதிகள் அவ்வளவாக இல்லை என்பதால் பெரும்பாலும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
ஆதீஸ்வரர் திருக்கோவில் முகவரி.
ஸ்ரீ ஆதீஸ்வரர் கோவில்,
பெரிய களந்தை,
கிணத்துக்கடவு, கோவை மாவட்டம்.
தொலைபேசி எண்கள்:
+91-4259 – 283 503
+91 9865974484
திருச்சிற்றம்பலம்