2023 Aadi kiruthigai fasting and benefits

what is Aadi kiruthigai ? Aadi kiruthigai fasting and benefits

ஆடி கிருத்திகை விரதம் மற்றும் அதன் சிறப்புகள்

கிருத்திகை விரதம் என்றால் என்ன?

நாள், திதி, நட்சத்திரம் என்று மூன்றிலும் முருகனுக்கு விரதங்களும் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அவை செவ்வாய் கிழமை, சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் ஆகும்.

ஆறுமுகன் அவதாரம்

சூரனை வதம் செய்து தேவர்கள் சிறைமீட்டு உலகில் நன்மையை நிலை நாட்ட சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பிழம்பாக முருகப்பெருமான் அவதரித்தார். தீப்பொறியாக அவதரித்த அவரது வெப்பம் தாங்க முடியாமல் இருந்தது. எனவே அக்கினி தேவனை அழைத்து அந்த அக்னி சுடரை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கொண்டு செல்ல பார்வதி வேண்டினார்.  ஆனால் நெருப்பின் கடவுளான அக்னியாலேயே அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனவே அந்த நெருப்பை தற்போதைய பழநி அருகே உள்ள ஒரு நீர்நிலையில் இறக்கினார். சரவணன் உதித்த அந்த நதி பின்னாளில் “சரவண பொய்கை” என்று அறியப்பட்டது.  சரவணப் பொய்கையில் விழுந்த நெருப்பு தாமரை இலைகளின் மேல் ஆறு குழந்தைகளாக வளர்ந்தது. 

கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

சரவணப் பொய்கையில் வளர்ந்த அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். முருகனின் தாய் என்ற பெருமையைப் பெற்றது கிருத்திகை நட்சத்திரம். கிருத்திகை என்பது வானியல் ரீதியாக 6 நட்சத்திரங்களின் குழுவாகும் மேலும் அவற்றின் தத்துவம் நெருப்பு. கிருத்திகை 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம். இது சூரியனுக்கு உகந்த நட்சத்திரம்.  கிருத்திகை, தாயின் பிரியமான மகனான முருகனுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாகும்.

alayatra-membership1

ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

aadi-kiruthigai-fasting-benefits

அனைத்து முருகன் கோவில்களிலும் மாதாந்திர கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரும் மகா கிருத்திகை வழிபாடுகள் மிக விமர்சையாக நடைபெறும். என்றாலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பானது. ஏனெனில் சூரியன் தனது சுற்றுப் பாதையின் பயணத்தை வடக்கில் இருந்து தெற்காக  ஆடி மாதத்தில் தான் மாற்றுகிறார். இந்த துவக்கத்தை ‘கர்கசங்கராந்தி‘ என்றும் தெற்கு நோக்கிய இந்த பயணத்தை ‘தட்சிணாயன புண்ணிய‘ காலம் என்றும் அழைக்கின்றனர். ‘தட்சிணம்’ என்றால் தெற்கு என்று பொருள்.

தெற்கு நோக்கி சூரியன் நகரும் 6 மாத காலம் மழை பொழியும் உயிர்கள் பெருகும். எனவேதான் இதை புண்ணிய காலம் என்று முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். தை முதல் ஆடி வரை 6 மாதம் உத்திராயண காலம். இது பூமியின் வெயில் மற்றும் இலையுதிர் காலம் ஆகும்.

பொதுவாக ஆடி கிருத்திகை விழா பழனி, திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர் சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும். என்றாலும் மலைகளில் சிறந்த மலையாக கந்தபுராணத்தில் போற்றப்படும் திருத்தணியில் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.

கிருத்திகை விரதம் பெயர் காரணம்

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் அன்று தமிழ் கடவுளான முருகனுக்கு கடைபிடிக்கப்படும் விரதம் கிருத்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு என்றாலும் ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில் சூரியன் தனது சுற்றுப்பாதையில் மாற்றத்தை இந்த இரண்டு மாதங்களில் தான் மாற்றுகிறார். வேண்டுதலுக்காக ஆறு மாதங்கள் தொடர்ந்து கிருத்திகை விரதம் இருக்க விரும்புவோர் ஆடி கிருத்திகையில் துவங்கி தை கிருத்திகையில் முடிக்கின்றனர்.

கிருத்திகை விரதம் கடைபிடிக்கும் முறை

கிருத்திகை விரதம் துவங்கும் முறை

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேக அலங்கார ஆராதனைகளை பார்த்து விரதத்தை துவங்கவேண்டும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே முருகனின் திரு உருவத்தின் முன்போ முருகனின் புகைப்படத்தின் முன்போ அரிசிமாவினால் அறுகோண சக்கரம் வரைந்து, அதன் மத்தியில் விபூதியை பரப்பி மத்தியில் தமிழில்  ‘ஓம்‘ என்று எழுதி ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு அகல் விளக்கு என்ற வீதம் 6 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து மனதார இறைவனை தியானித்து கந்த சஷ்டி கவசம் ஓதி நெற்றியில் திருநீரு அணிந்து விரதத்தை துவங்கவேண்டும். 

கிருத்திகை விரதம் முடிக்கும் முறை

மாலை வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தேவைப்படும் பொழுது நீர் மட்டும் அருந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேக அலங்கார ஆராதனைகளை பார்த்து மாலை 6 மணிக்கு பிறகு பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். ஒரு சிலர் மிகவும் கடும் விரதமாக இரவும் எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி மீண்டும் முருகனை வழிபட்டு அடியவர்கள் எவருக்கேனும் அன்னதானம் படைத்துவிட்டு அதன் பின்னர் விரதத்தை முடிக்கின்றனர்.

கிருத்திகை விரதம் இருக்க இயலாதவர்கள் 

 வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் இந்த விரதத்தை உப்பில்லாத உணவுகளை எடுத்துக்கொண்டு கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலர் பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர் ஒரு சிலர் பால், பழச்சாறு, இளநீர் போன்ற நீராகாரங்களை எடுத்துக்கொண்டு கடைப்பிடிக்கின்றனர். 

விரதம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் கிருத்திகை தினத்தன்று முழுவதும் முருகப்பெருமானின் துதி பாடி இறை சிந்தனையுடன் இருக்கலாம்.

கிருத்திகை வழிபாட்டு பலன்கள்

கிருத்திகை சூரியனின் நட்சத்திரமாகும். ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு காரணகர்த்தா சூரியன் ஆவார். எனவே கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து அழகன் முருகனை வழிபட்டு வந்தால் உடல் வலிவும் அழகும் ஆரோக்கியமும் பெறலாம் என அகத்திய முனிவரும் கோரக்க  சித்தரும் வழிகாட்டி உள்ளனர். 

கிருத்திகை வழிபாடு ஞானம், சக்தி, ஆரோக்கியம், வெற்றி, உறவு மற்றும் செழிப்பு ஆகிய 6 பலன்களை கொடுக்கிறது. 

விநாயகரின் அறிவுரைப்படி 12 ஆண்டுகள் கிருத்திகை விரதம் இருந்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். முக்காலத்திலும் மூன்று லோகத்திலும் சஞ்சரிக்கும் சிறப்பினை பெற்றார். மேலும் திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள் என்கிறது புராணம்.

கிருத்திகை அன்று முருகனை வணங்கினால் அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, நிறைவான சொந்தங்கள், குணமுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.

கந்தக் கடவுள், கிருத்திகை விரதம் இருக்கும் பக்தர்கள் வாழ்க்கையில் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், மண், மனை சொத்து விஷயங்களில் உள்ள வழக்குகள்-பிரச்னைகள், சகோதரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள், பகை, எமபயம் யாவற்றையும் நீங்கி சகல செல்வங்களும் அருளுகிறார்.

திருச்சிற்றம்பலம்

Copyright by ALAYATRA.COM