adi-perukku-pooja-benefits-aadi18

2023 Aadiperukku pooja Aadi 18 benefits

Aadiperukku pooja Aadi 18 benefits

ஆடிப்பெருக்கு என்றால் என்ன? ஆடி 18 ன் சிறப்புகள் என்ன?

ஆடிப்பெருக்கு தமிழர் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் தமிழர்களின் வாழ்க்கை முறை விவசாயம் சார்ந்தது. எனவே இயல்பாக அது இயற்கை சார்ந்தது. தை 1 அறுவடைத் திருநாள். அதுபோல ஆடி 18 பருவ மழை விழாவாகும்.  சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்த குறிப்புகள் உள்ளன.

ஆடிப்பெருக்கு பெயர் காரணம்

 சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து  பொதுவாக ஆடி மாதம் பருவ மழை துவங்கிவிடும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் எல்லாம் சிறு வெள்ளம் சேர்ந்து 18ம் திங்களுக்குப் பின் பெரு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி ஒவ்வொரு விவசாயி மண்ணிலும் நெஞ்சிலும் நீர் வார்க்கும். இதுவே ஆடிப்பெருக்கின் பெயர் காரணம். அவ்வாறு ஆடி வரும் புது வெள்ளத்தை மக்கள் பொங்கல், படையலிட்டு பக்தி சிரத்தையோடு, வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி  வரவேற்பார்கள்.

ஆடி 18 சிறப்பு வழிபாடுகள்

முளைப்பாரி திருவிழா

ஆடி18 காவிரியில் புதுப்புனல் பெருக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். மாரி (மழை) அம்மனை நன்றியுடன் கொண்டாடி ஆடிப்பாடி ஆடிப்பட்டம் விவசாயத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்துவர். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடியில் விதைக்க நல்ல விதைகளைத்  தேர்ந்தெடுக்கும் விதமாக ஆடிப்பெருக்கின் ஒரு வாரம் முன்பாக அதிகாலை எழுந்து நீராடி அவரவர் குலதெய்வங்களை முறையாக வழிபட்டு, அந்த வீட்டுப் பெண்கள் சுடாத மண் பாண்டங்களில் அவரவர் விவசாய நிலங்களின் மண்ணை பரப்பி நீர் தெளித்து தங்கள் கையிருப்பில் உள்ள விதைகளையெல்லாம் தூவி சூரிய உதயத்தில் பூஜை செய்து பின் வெயில் படாத இடத்தில் வைத்துவிடுவர்.

alayatra-membership1

ஒரு வாரம் கழித்து ஆடிப் பெருக்கன்று மீண்டும் அதை எடுத்து பூஜைகள் செய்து கன்னிப் பெண்கள் தலையில் வைத்து நாட்டுப்புற பாடல்கள் சொல்லி, கும்மி அடித்து கொண்டாடி அதை காவிரியில் விட்டு வழிபாடு செய்வர். இது அவரவர் விதைகளின் வீரியம் அறிவதோடு காவிரி ஆற்றின் கரைகளை வளப்படுத்தும் சடங்காகவும் திகழ்ந்தது.

சப்த கன்னியர் வழிபாடு

arakalur-salem-kamannatheswarar-temple-timings

சப்த கன்னிகள் என்பது ஏழு கன்னி தெய்வங்களை குறிக்கும். சப்த என்பது ஏழு திதிகளில் சப்தமியைக் குறிப்பதாகும். அண்ட முண்டர்கள் என்ற அசுரர்களை அழிக்க கர்ப்பத்தில் பிறக்காமல் பராசக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகசகன்யா, வனகன்யா, சுமதிகன்யா என்ற திரு நாமம் கொண்ட ஏழு கன்னி தெய்வங்களான இவர்களை ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி என்றும் அழைக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் அஷ்ட பைரவர்களின் சக்திகள் என்று புராணங்கள் கூறுகின்றன. (விபரங்கள் அஷ்ட பைரவர் வழிபாடு என்ற நம் மற்றொரு பதிவில் விரிவாக உள்ளது) மேலும் சப்த கன்னியர் பற்றி விரிவாக விரைவில் மற்றொரு பதிவில் காண்போம்.

பழமை வாய்ந்த கோவில்களில் கன்னி மூலையில் சப்த கன்னியர், அய்யனார், கருப்பசாமி போன்ற ஏதேனும் ஒரு காவல் தெய்வத்துடன் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. சிறப்பு வழிபாடாக பூமி செழிக்க குலம் தழைக்க ஆடி 18 அன்று முளைப்பாரி ஆற்றில் விட்டு கன்னிமார் வழிபாடு செய்வது பேரூர் பவானி உட்பட பல தீர்த்த தலங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருமண தடை நீக்கும் தோஷ நிவர்த்தி பூஜைகள்

ஆடி 18ஆம் பெருக்கு அன்று பவானி கூடுதுறையில் நீராடி இத்தலத்து இறைவன் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்ய கூடுதுறையில் கூடும் சுமங்கலிப் பெண்கள், தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து மாங்கல்யம் நிலைக்கவும் திருமணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும் வேண்டி பூஜை செய்து அப்படி பூஜை செய்த பொருட்களை ஆற்றில் விட்டு வழிபாடு செய்கின்றனர். பூஜை செய்த மஞ்சள் நூலை கையில் அணிந்து கொள்கின்றனர்.

புதுமணத் தம்பதியினர், காவிரித் தாய்க்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை எடுத்து வந்து ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நதிக்கு நடக்கும் பூஜைகள்

வடக்கில் வற்றாத ஜீவ நதியாம் கங்கைக்கு தினமும் தீபாராதனையுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அதுபோல் நம் தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி 18 அன்று நதிக்கு நன்றி சொல்ல பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று ஆற்றங்கரைகளில் கூடி பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். மேலும் தங்கள் வீட்டில் பல விதமான உணவுகள் தயாரித்து (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) அதை ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.

ஆடி 18 வழிபாட்டு பலன்கள்

பொதுவாக புண்ணிய நதிகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவம் நீங்கி நன்மை உண்டாகும். முக்தி கிட்டும். குறிப்பாக 18ஆம் பெருக்கு அன்று நீர்நிலைகளில் வழிபடுவதால் விவசாயம் செழிக்கும். செல்வம் பெருகும். திருமண தடை நீங்கும். கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். நிம்மதியான வாழ்வு உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

Copyright by ALAYATRA.COM