மகா காலபைரவாஷ்டமி – காலபைரவ ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள்
யார் இந்த காலபைரவர்?
சிவனின் நெற்றிக்கண்ணின் ஒளியிலிருந்து பிறந்த ருத்ரமூர்த்தியே பைரவர். இவர் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். சைவத் திருத்தலங்கள் அனைத்திலும் காலபைரவருக்கு தனி சன்னதி இருக்கும். கோவிலின் கடைசி பூஜை முடிந்ததும் அனைத்து சன்னதிகளையும் பூட்டி சாவிகளை காலபைரவர் காலடியில் வைத்து பூஜை செய்து பிறகு நடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர் கோவிலின் காவல் தேவதையாக வழிபடப்படுகிறார். காசி நகரின் காவலராக பைரவர் விளங்குகிறார் என்பது ஐதீகம். மேலும் பக்தர்களின் பயத்தைப் போக்கி அவரது செல்வங்களையும் காக்கும் காவலராக விளங்குகிறார். 27 நட்சத்திரங்களையும் நவ கோள்களையும் கட்டுப்படுத்துகிறார். மேலும் இவரே சனி பகவானின் குரு ஆவார். முக்காலத்தையும் கட்டுப்படுத்தும் சிவ ஸ்வரூபமாக திகழ்வதாலே இவர் காலபைரவர் என்று வழங்கப்படுகிறார். சிவபெருமானின் மகனாக 8 அவதாரங்களாக அவதரித்த பைரவர் அதிலிருந்து தலா எட்டு அவதாரங்களாக 64 திருமூர்த்தங்களாக அவதரித்தவர்.
சைவத் திருத்தலங்கள் அனைத்திலும் காலபைரவருக்கு தனி சன்னதி இருக்கும். கோவிலின் கடைசி பூஜை முடிந்ததும் அனைத்து சன்னதிகளையும் பூட்டி சாவிகளை காலபைரவர் காலடியில் வைத்து பூஜை செய்து பிறகு நடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர் கோவிலின் காவல் தேவதையாக வழிபடப்படுகிறார்.
கால பைரவாஷ்டமி என்றால் என்ன?
இந்தப் பிரபஞ்சத்தின் காவல் தெய்வமான காலபைரவர் கார்த்திகை மாதம் தேய்பிறை எட்டாம் நாள் அவதாரம் செய்த தினமே மகா காலபைரவாஷ்டமி அல்லது கால பைரவர் ஜென்மாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காசி நகரில் பைரவருக்கு மிகச் சிறப்பான வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இன்றைய தினத்தில் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காசியில் பைரவர் வழிபாட்டுக்காக ஒன்று கூடுகின்றனர். பைரவருக்கு என தனி திருத்தலம் கொண்ட காசி நகரம் பைரவ சேத்திரம் என்றே அழைக்கப்படுகிறது.
தென்னகத்தில் சிவபெருமானால் காமதகனம் செய்யப்பட்டதாக நம்பப்படும் தட்சிணகாசியான தமிழகத்தைச் சேர்ந்த சேலம் ஆறகளூர் காமநதேஸ்வரர் கோவிலில்(இத்திருத்தலம் பற்றி வேறொரு பதிவில் விளக்கமாக பதிவிட்டுள்ளோம்) எழுந்தருளி இருக்கும் அஷ்ட பைரவர்களுக்கு காசியில் நடப்பது போன்றே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாம் நாள் தேய்பிறை அஷ்டமி அன்றும் அனைத்து சிவாலயங்களிலும் மிக சிறப்பாக பைரவர் வழிபாடு செய்யப்படுகிறது.
மகாகால பைரவர் அவதார வரலாறு
அந்தகனை அழிக்கத் தோன்றிய அவதாரம்
முன்னொரு காலத்தில் அந்தகன் என்னும் அசுரன் சிவ பக்தனாக இருந்து கடும் தவம் புரிந்து வந்தான். அவன் சிவனிடம் இருள் என்ற வரத்தைப் பெற்றான். அந்த வரத்தைக் கொண்டு எட்டு திசைகளையும் இருளில் மூழ்கடித்து மூவுலகங்களிலும் இருள் ஆட்சி செய்தான். இவன் தேவர்களை பெண் வேடமிடச் செய்து தனக்கு சாமரம் வீசும் படி பணித்தான். மேலும் முனிவர்களையும் ரிஷிகளையும் தவம் செய்யவிடாமல் தொல்லை செய்து வந்தான். நல்லவர்களை வதைத்தான். இவனது கொடுமை தாங்க முடியாமல் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுது கருணை கடலான சிவபெருமான் எட்டு திசைகளிலும் இருளை விலக்கி ஒளி பெருக செய்ய தன் நெற்றிக்கண்ணை திறந்து அக்னி சுடரை வெளியிட்டார். அத்தகைய நெற்றிக்கண்ணின் கோப அக்னியில் இருந்து பிறந்தவர் தான் சிவனின் ருத்ர ரூபமான எட்டு பைரவர்கள். இவர்கள் அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர் உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்ற இவர் அந்தகனை அழித்து எட்டு திசைகளிலும் இருளை விரட்டி மூவுலகமும் மீண்டும் ஒளிபரச் செய்தார். எட்டு பைரவ அவதாரங்களும் வெவ்வேறு திரு உருவங்கள் வாகனம், ஆயுதம் கொண்டு எட்டு தேவியர்களுடன் எட்டு திசையையும் இன்றும் காவல் புரிந்து வருகின்றனர்.
பிரம்மனின் தலையைக் கொய்த பைரவர்
அண்டதனை அளிக்க அவதரித்த பைரவர் எண் திசைகளையும் காவல் புரிந்து வந்தார். ஒருமுறை பிரம்மன், தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதாகவும் படைத்தல் தொழிலை தானே செய்வதாகவும் தானே சிவனை விட உயர்ந்தவர் என்றும் கர்வம் கொண்டார். இதன் காரணமாக சிவனையும் விஷ்ணுவையும் அவமரியாதை செய்தார். எனவே கோபம் கொண்ட சிவபெருமான் தனது ருத்ர ஸ்வரூபமான பைரவரை கொண்டு பிரம்மனின் ஆணவத்திற்கு காரணமான ஐந்தாவது தலையை கொய்து விடும்படி ஆணையிட்டார். அப்படியே பைரவரும் பிரம்மனின் ஆணவத்தை அழித்து மீண்டும் படைப்புத்தொழில் சிறப்புரச் செய்தார். எனவே பிரம்மனின் ஆணவத்தை அழிக்க அவதரித்த பைரவர் என்று அனைவராலும் வழிபடப்படுகிறார்.
கால பைரவரை வழிபட உகந்த நேரங்கள்
பொதுவாக பைரவர் வழிபாடு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் செய்யலாம் குறிப்பாக உச்சிப் பொழுதுகளிலும் நடுநிசியிலும் செய்வது விசேஷமானதாகும். தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும். செவ்வாய், வெள்ளி ஞாயிற்று கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. இந்த கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானதாகும். மேலும் தேய்பிறை அஷ்டமி திதியன்று வரும் குரு ஹோரைகளில் வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும்.
பரணி நட்சத்திரத்தில் பைரவர் வழிபாடு நடத்துவதும் ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் வழிபடுவதும் மிகவும் விசேஷமானதாகும்.
பைரவரை வழிபட வேண்டிய திதிகள் தேய்பிறை சஷ்டி திதி மற்றும் அமாவாசை பௌர்ணமிகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
பூஜைக்குரிய பொருட்கள் – பைரவருக்கு பிரியமான அபிஷேகங்கள்
பைரவர் சந்தன அபிஷேகப் பிரியர் எனவே பைரவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். மேலும் வாசனை திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்வது மிக சிறப்பாக கூறப்படுகிறது.
பைரவரை மகிழ்விக்கும் அர்ச்சனைகள்
செவ்வலரி மலர்கள் பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானது. செந்நிற மலர்கள் அனைத்தும் சிறப்பானதாகும். தாமரை, தும்பை, வில்வம் போன்றவற்றால் அர்ச்சிப்பது மிகவும் சிறப்பானதாகும். பைரவர் வழிபாட்டிற்கு மல்லிகை நந்தியாவட்டை மலர்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
பைரவருக்கு விருப்பமான நைவேத்தியங்கள்
காரமான புளி சாதம், வெல்லம் போட்டு செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல், தேன், மிளகு சேர்த்து செய்யப்பட்ட வடை மாலை போன்றவை பைரவருக்கு மிகவும் பிரியமான நைய்வேத்தியங்கள் ஆகும்.
பைரவர் வழிபாட்டு முறைகள்
*தொல்லைகள் தேய தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாட்டை துவங்க வேண்டும்.
*வாழ்க்கையில் நன்மைகள் வளர வளர்பிறை அஷ்டமி அன்று விரதத்தை துவங்க வேண்டும்.
அஷ்டமி அன்று ஆலயங்களில் பைரவர் அபிஷேகத்திற்கு தேவையான பொருள் உதவிகளை செய்வதும் வாசனை பொருட்கள் மலர்களை அர்ச்சனைக்கு தருவதும் கால பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவளிப்பதும் பைரவர் காயத்ரி மந்திரம் சொல்லி தியானம் செய்வதும், பைரவரின் போற்றிகளை பாராயணம் செய்வதும், பைரவாஷ்டகம் படிப்பதும், பைரவர் திருநாமத்தை உச்சரிப்பதுமே கூட பைரவரின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும்.
தேய்பிறைஅஷ்டமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சிவாலயம் சென்று உண்ணாவிரதம் துவங்க வேண்டும். நாள் முழுதும் இறை சிந்தனையுடன் இருந்து மாலையில் மீண்டும் நீராடி நீரு பூசி சிவாலயத்திற்கு சென்று, பைரவருக்கு மாலை 6 மணிக்கு மேல் நடக்கும் அஷ்டமி பூஜைகளளில் பங்கேறு தரிசனம் செய்யலாம். ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள் மேலே கூறிய அபிஷேகப் பொருட்கள் அர்ச்சனை மலர்களைக் கொண்டு இறைவனை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிலேயே பூஜித்து இயன்ற நெய்வேத்தியங்களை படைத்து மனமுருகி வேண்டிக் கொள்ளலாம்.
குறிப்பு- தேய்பிறை அஷ்டமிகளில் விரதம் இருப்பவர்கள் பகலில் பால் பழங்கள் போன்ற மெல்லி ஆகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக இரவு உணவை தவிர்க்க வேண்டும் இரவில் பட்டினி இருப்பது பைரவர் விரதத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.
மேலும் பைரவருக்கு அஷ்டமி அன்று விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்
பைரவருக்கு விளக்கேற்றும் முறைகள் மற்றும் அதன் பலன்கள்
பைரவருக்கு பொதுவாக 9 அல்லது 11 விளக்குகள் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
1. பகவானுக்கு ஏழு தீபம் ஏற்றுவது போல 27 மிளகை எடத்து மெல்லிய சிவப்பு அல்லது வெண்துணியில் சிறு மூட்டையாக கட்டி ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு அதில் இந்த மிளகு மூட்டையை திரியாக வைத்து பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று தீபம் ஏற்ற வேண்டும். இதனால் தீராத கடனும் தீரும்.
2.அடுத்து வியாழக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமிலோ கால பைரவ அஷ்டமி அன்று காலை அல்லது மாலையில் வரும் ஏதாவது ஒரு குரு ஹோரையில், தேங்காயை உடைத்து அதன் நீரை வடித்து விட்டு தேங்காய் மூடியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சிவப்பு திரியிட்டு மஞ்சள் குங்குமம் திலகமிட்டு பைரவ மூர்த்திக்கு விளக்கேற்ற காரிய தடைகள் நீங்கும். சுப காரியங்கள், புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் தடை இன்றி வெற்றி பெறும்.
3. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி அன்றோ கால பைரவாஷ்டமி அன்றோ ராகு காலத்தில் பைரவருக்கு வெண்பூசணிக்காயை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி உள்பக்கத்தில் குங்குமம் தடவி அதில் நல்லெண்ணெய் நிரப்பி சிவப்பு திரையிட்டு விளக்கேற்ற பகை நீங்கும். எம்மா பயம் போகும். பில்லி ஏவல் சூனியம் போன்ற துஷ்ட சக்திகளில் தொந்தரவும் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களும் நீங்கி மன அமைதியும் பயமற்ற வாழ்வும் கிடைக்கும். சிவப்பு திரைக்கு பதிலாக 27 மிளகை ஒரு சிவப்புத் துணியில் வைத்து அதை திரியாக சுருட்டி விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
4.அஷ்டமிகளில் பைரவருக்கு வெண்பூசணிக்காயை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி மஞ்சள் குங்குமம் திலகமிட்டு சுத்தமான பசுமையை நிரப்பி வெண்மையான துணியில் 27 மிளகாய் வைத்து திரியாக சுருட்டியோ வெள்ளை திரியிலோ விளக்கேற்ற தொழில் தடைகள் நீங்கி செல்வம் பெருகும் தொழில்முறை எதிரிகள் விலகி வியாபாரம் வெற்றியடையும். உயர் பதவிகளுக்கோ அரசு அலுவல்களுக்கோ விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்.
5. செவ்வாய்க்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி அன்றோ கால பைரவாஷ்டமி அன்றோ ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சம் பழத்தை வெட்டி சாற்றைப் பிழிந்து விட்டு அதன் தோலை திருப்பி உள்பக்கமாக நல்லெண்ணெய் நிரப்பி சிவப்பு திரியிட்டு பைரவருக்கு விளக்கேற்ற குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் குடும்பத்திற்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதியும் ஆனந்தமும் பெருகும். குடும்பத்திற்குள் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கண் திருஷ்டி போன்ற தீய அதிர்வுகள் நம்மை விட்டு நீங்கும்.
6. செவ்வாய்க்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி அன்றோ கால பைரவாஷ்டமி அன்றோ ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சம் பழத்தை வெட்டி சாற்றைப் பிழிந்து விட்டு அதன் தோலை திருப்பி உள்பக்கமாக சுத்தமான பசு நெய் நிரப்பி வெண் திரியிட்டு பைரவருக்கு விளக்கேற்றி வழிபட பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். கல்வித் தடைகள் நீங்கும் செல்வம் பெருகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவு மேம்படும்.
7. தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு மண் அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் நிரப்பி வெண்பஞ்சுத்திரி இட்டு அந்த எண்ணெயில் ஜவ்வாது கலந்து விளக்கேற்ற வேண்டும். விளக்கின் அடியில் புனுகு என்ற வாசனைப் பொருளை வைத்து விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. இவ்வாறு செய்ய வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பப்படுவோர் தகுந்த வாய்ப்பை பெறுவர் அந்நிய முதலீடுகள் வெளிநாட்டு பயணம் ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் இருக்கும் தொழில் தடைகள் நீங்கும் காரியவெற்றி உண்டாகும்.
ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்?
மனித வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு பைரவ வழிபாடாகும். கலியுகத்தின் காவல் தெய்வமான பைரவர் வழிபாடு பக்தர்களுக்கு அளவிட முடியாத அருளை வழங்குகிறது. குறிப்பாக கால(எம) பயம் அகலும். கால பைரவர் காலத்தில் அருள் புரிவார். சிவ வழி பாட்டில் சிறந்த வழிபாடான பைரவர் வழிபாட்டால் தீராத கடன் தீர செல்வம் சேரும். வரா கடன் வசூலாகும். தீராத நோய்கள் தீரும் நோய்கள் நீங்கும். சனியால் ஏற்படும் எந்த தீய விளைவுகளும் நம்மை நெருங்காது. இழந்த பொருள் தொழில் உறவுகள் மீண்டும் புதிய தொழில் வாய்ப்புகள் வேலை கல்விச்செல்வம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியலில் வெற்றி வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்களில் அபார வளர்ச்சி, சபகாரியத்தடை விலகுதல் போன்ற நன்மைகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் வழக்கு வியாக்கியங்கள் பகை இவை அனைத்தும் நீங்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக முற்பிறவி பாவங்களும் வினைகளும் நீங்கும். மேலும் பில்லி சூனியம் வைப்பு ஏவல் கண் திருஷ்டி போன்ற எதிர்மறை சக்திகளில் இருந்து விடுபடவும் அமானுஷ்ய பயங்களிலிருந்தும் தொல்லைகளில் இருந்தும் விடுபட பைரவர் வழிபாடு உதவும். மேலும் கால பைரவரின் வாகனமான நாயை குழந்தையாக பாவித்து வளர்க்கும் இல்லத்தில் எழுபிறவிக்கும் குழந்தை செல்வம் இல்லை என்ற கவலை இருக்காது என்பது நம்பிக்கை. எனவே பக்தர்கள் அனைவரும் பைரவர் வழிபாடு செய்து பரம்பொருளாம் ஈசனின் கருணை மழையில் நனைய வாழ்த்துகிறோம்.
திருச்சிற்றம்பலம்