திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவில் – Thirumuruganpoondi temple tamil

Table of Contents

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவில் – Thirumuruganpoondi temple tamil

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அடியார்களுக்கு வணக்கம். இந்தப் பதிவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் பற்றியும் இக்கோவிலின் வரலாறு பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில் பெயர்க் காரணம்

ஒருமுறை துர்வாச முனிவர் கற்பக உலகத்திலிருந்து வேண்டியதை வழங்கும் கற்பக விருட்சமான மாதவி என்ற குருக்கத்தி மரத்தை பூவுலகிற்கு கொண்டு வர எண்ணி இத்தலத்திற்குக் கொண்டு வந்தார். ஆதலால் இவ்விடத்திற்கு மாதவிவனம் என்றும் இத்தல இறைவன் மாதவி நாதர் என்றும் புராணகாலத்தில் வழங்கப்பட்டார். வேண்டும் வரம் அருளும் மாதவிநாதரை வணங்கி முருகப்பெருமான் பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றதால்  இத்தலம் திருமுருகன் பூண்டி என்றும் தலநாதர் திருமுருகநாத சுவாமி என்றும் வழங்கப்படுகிறார்.

alayatra-membership1

இத்தல இறைவனின் மற்ற பெயர்கள்

மாதவிவனநாதர், திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்.

அன்னை: முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை, ஆவுடை நாயகி, மங்களாம்பிகை.

தல தீர்த்தம்: சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

தல மரம்: மாதவி என்ற குருக்கத்தி.

அருள்மிகு திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் சிறப்புகள்:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்தபடியும் மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் முருகப்பெருமானால் நிர்மானித்து வழிபடப்பட்ட தலமாகும். இத்தலத்தில் உள்ள முருகன் சிவவழிபாடு செய்ததால் வேலும் மயிலும் இன்றிக் காணப்படுகிறார். இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார். பிரம்மகத்தி தோஷம் நீங்கிய திருத்தலம். திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில்  அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற கொங்குத் திருத்தலங்களில் ஒன்றாகும். பாடல் பெற்ற 247 தலங்களில் 206 வது தலமாக விளங்குகிறது.

சுந்தரர், கொள்ளைபோன பொருட்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பதிகம் பாடி முறையிட பொருள் திரும்பக் கிடைத்ததால் கைப்பொருளைத் தவறவிட்டவர்கள் முருகநாதேஸ்வர சுவாமியை வழிபட்டால் இழந்த பொருள் திரும்பக் கிடைக்கும். 

எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டப சுவற்றில் ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்ட பெரிய நந்தி உள்ளது. முருகன், துர்வாசர் மற்றும் சேக்கிழார் வணங்கிய திருத்தலம் என்று வரலாறு கூறுகிறது.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் வரலாறு: 

முருகனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய வரலாறு – ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் அடக்கியாளும் வரம் பெற்ற சூரபத்மன், தேவர்களை சிறைப்படுத்தி நுன்புறுத்தி வந்தான். தேவர்கள் சேனாதிபதியான குமரக்கடவுள் தேவர்கள் துயர் நீக்கத் திருவுளம் கொண்டார். கந்த சஷ்டி விரதம் இருந்து தாயிடம் சக்தி வேல் வாங்கி சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை சம்ஹாரம் செய்ததார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சிவ பெருமானின் அறிவுரைப்படி நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள மாதவிவனநாதரை வணங்க வந்தார். அப்போது தன் வெற்றி வேலால் தீர்த்தம் ஒன்றைத் தோற்றுவித்தார். சண்முக தீர்த்தம் என்று வழங்கப்படும்

அந்நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து மூலவரையும் அன்னையையும் மெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்து வணங்கினார். இதனால் கொடிய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். திருக்கோவிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகே நீங்கிய பிரம்மஹத்தி தோஷமானது ஒரு சதுரக்கலாக உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்கல்லை இன்றும் காணலாம். 

வேடுபறி வரலாறு – இழந்த பொருளை மீண்டும் பெற்றிட..

சுந்தரர் மூர்த்தி நாயனார் சேரமான் பெருமானிடம் பாடிப் பரிசு பெற்ற பொருட்களுடன் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது, திருமுருகன்பூண்டி அருகே வரும் போது சுந்தரரும் அவர் உடன் வந்தவர்களும் இளைப்பாற வேண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயில் அருகே உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தங்கினர்.

இதை அறிந்த சிவபெருமான் தனது பக்தன் தன்னை காண வராமல் வேறு இடத்தில் தங்கியிருந்ததை விரும்பாமல் அவர்களிடம் திருவிளையாடல் நிகழ்த்த எண்ணினார். தனது பூதகணங்களை திருடர்கள் உருவில் அனுப்பி சுந்தரரிடம் வழிப்பறி செய்யும்படி பணித்தார். பரிசுப் பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதால் கவலை அடைந்த சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று, வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று  இறைவனைத் திட்டி பதிகம் பாடினார்.  சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆற்றாமை கண்டு தாளாமலும் சுந்தரின் தமிழ் பதிகத்தால் மகிந்தும், திருமுருகநாதசுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் அவரிடமே திரும்ப சேரும்படி செயசெய்தார். எனவே இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது.

கேது பரிகார தலம்

 திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர்  கோவிலும் மிக அருகிலேயே உள்ளது.  இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.

கூப்பிடு விநாயகர்

இத்தலத்து பிள்ளையார் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமான் பூதகணங்களைக் கொண்டு கொள்ளையடித்தபின், தன்கோவிலில் வந்து தங்கியவர்கள்  துயருறுவதை தாங்காமல் விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு:

திருமுருகன் பூண்டி நொய்யல் ஆற்றங்கரையில்  அமைந்த மிகப்பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் 1 ஏக்கர் பரப்பளவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே இடது புறம் கிழக்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு அரசமரத்தடியில் பெரிய விநாயகர் சன்னிதி உள்ளது. வலதுபுறம் வேம்படி முருகன் சன்னதி அமைந்துள்ளது. 

இராஐகோபுரம்: இக்கோவில் இராஜ கோபுரம் கட்டும் வழக்கத்திற்கு முற்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இருப்பினும் இராஜ கோபுரம் இல்லாத மற்ற கோவில்களைப் போல நுழைவு மண்டபமும் காணப்படவில்லை. மாறாக கோயிலுக்கு வெளியே 16 கால் கருங்கல் தூண் மண்டபம் காணப்படுகிறது. கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரிதான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களுடன் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. 

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் பிரகாரம்:

வெளிப்பிரகாரதம்.

வெளிப்பிரகாரத்தில் நுழைந்ததும் வலதுபுறம் கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. இத்தீர்த்த கரையில் நாகர்கள் சிலை அமைத்து வழிபாடு செய்கின்றனர். சித்த பிரமை பிடித்தவர்கள் இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து  தினமும் புண்ணிய  நீராடி சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது ஐதீகம்.  அருகே சன்னதிக்கு வெளியே முருகன் விட்டுச்சென்ற வேலும் மயிலும் நின்ற சன்னதி உள்ளது.

உட்பிரகாரம்

கல்மண்டபத்தின் பெரிய கதவுகளைத் தாண்டி உட்பிராகாரத்தில் நுழைந்தால்  கன்னிமூலை கணபதி, 63 நாயன்மார்கள், சமயக்குறவர்கள் நால்வரும் எழுந்தருளியுள்ளனர்.

இடதுபுறம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராண கல்வெட்டும் அதையடுத்து நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தை இடவலமாகச் சுற்றி வர, நவக்கிரக சன்னதியும் சனிபகவான் தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. நவக்கிரக சன்னதி அருகே கால பைரவர் சன்னிதி வேடுபறி நடந்த அடையாளமாக ஒரு குழியும் அமைந்துள்ளது. பக்தர்கள் இதில் காசு போட்டு வழிபடுகின்றனர். 

சன்னிதியின் பின்புறம் சூரியன் சன்னதியும் பஞ்சபூத லிங்கத்திருமேனிகளும் எழுந்தருளியள்ளன. மூலவர் மற்றும் அம்பிகை சன்னதிகளுக்கு நடுவே கிழக்கு நோக்கி இறைவன் பவானி லிங்கம் என்ற பெயரில் நந்தியம்பெருமானுடன் அருள்புரிகிறார்.

கோஷ்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரரி போன்ற கோஷ்ட தேவதைகள் சன்னதிகள் அமைந்துள்ளன. 

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் கருவறை

கோஷ்டம் சுற்றிவந்து மூலவர் சந்நிதியின் உள்ளே நுழைகையில் கொடிமரம் பலிபீடம் மண்டபத்தில் பிரதோஷ நந்தி அருட்காட்சி தர இருபுறமும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். துவார பாலகருக்கு அருகே வலப்புறம் வேடன் வடிவில் கையில் வில்லுடன் சிவபெருமானும் பொருளை இழந்த கவலை நிறைந்த முகத்துடனும் பதிகம் பாடிப் பொருளைத் திரும்பப் பெற்ற மகிழ்ச்சியான முகத்துடனும் இரண்டு சுந்தரர் திருவுருவங்களும் அமைந்துள்ளன.

கருவறைக் கல்மண்டபத்தில் இடப்பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் சண்முகக் கடவுள் 5 அடி உயரத்திருமேனியாக அருள்பாலிக்கிறார். முருகன் வேலும் மயிலும் இன்றி அபூர்வக்காட்சியளிக்கிறார். மூலவர் சந்நிதியின் வலப்புறம் பிள்ளையார் திரு உருவம் அமைந்துள்ளது. 

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் மூலவர் சன்னிதி

மூலவர் விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மூலவரான திருமுருகநாதர் மேற்குப் பார்த்து 2 ½ அடி உயரத்தில் தரிசனம் தருகிறார். கருவறையின் பின்புறச் சுவரில் தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் யானை ஒன்றின் அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் அம்பாள் சன்னதி

திருமுருகநாதரை தரிசித்து உட்பிரகாரம் சுற்றி மூலவர் சன்னதிக்கு வலப்புறம் அமைந்துள்ள அம்மனின் தனிச்சன்னதியில் நந்தி கொடிமரம் பலிபீடத்தை கடந்து உள்நுழைய  மேற்குப் பார்த்த நிலையில் முயங்கு பூண்முலைவள்ளியம்மை கருணையே வடிவாக அருள் புரிகிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வலப்பறம் முருகன் தோற்றுவித்த சுப்பிரமணிய தீர்த்தத்தம் உள்ளது. இடப்புறம் குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். 

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் திருவிழாக்கள்: 

மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவா நடைபெரும். தவிர மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் மாதாந்திர சிறப்பு வழிபாடுகளும் கொண்டாடப்படுகின்றன.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:

தொலைந்த பொருட்கள் திரும்பக் கிடக்க வேண்டிக்கொள்கின்றனர். 

சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுகின்றனர்.

தோஷங்கள் நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டிக்கொள்கின்றனர். தீர்த்தக் கரையில் நாகர்கள் சிலை அமைத்தும் காவடிகள் சுமந்தும் பாதயாத்திரை வந்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:

இங்குள்ள பிரம்மநீரதநந்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய், சாபங்கள், பாவங்கள் பில்லி ஏவல் சூனியம் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை. சுப்பிரமணிய தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் தீராத தோஷங்களும் நீங்கும் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் நடை திறக்கப்படும் நேரம்:

 காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் அமைவிடம்:

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் இருந்து 5km தொலைவில், அவிநாசி – திருப்பூர் சாலையில் திருமுருகன்பூண்டி கோவில் அமைந்துள்ளது.

அருகே உள்ள விமான நிலையம்: கோவை விமான நிலையம்.

அருகே உள்ள இரயில் நிலையம்:  அவினாசி இரயில் நிலையம்:

அருகே உள்ள பேருந்து நிலையம்:  அவினாசி பேருந்து நிலையம்.

 அவிநாசியிலிருந்து நிறைய அரசு பேருந்து மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உள்ளன. 

கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 8கி.மீ  பயணித்து திருக்கோயிலை அடையலாம்.

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் திருக்கோவில் முகவரி:

அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்
திருமுருகன்பூண்டி
திருப்பூர் மாவட்டம் -641652.

தொலைபேசி எண்: 04296-273 507

Copyright by ALAYATRA.COM