Bhavani Sangameswarar temple history in tamil – பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் காவிரியும் பவானியும் இருபுறமும் சூழ்ந்திருக்க அழகிய தீவுபோல காட்சியளிக்கும் தனித்துவமான கட்டிடக்கலையின் சின்னமாக ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக வானளாவி ஓங்கி நிற்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலைப்பற்றி விரிவாகக் காணலாம்.
பவானி சங்கமேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்:
பொதுவாக நதிகள் இணையும் இடத்தை சங்கமம் என்றும் கூடுதுறை என்றும் குறிப்பிடுவோம்.
அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நநிகள் சங்கமிக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ எனப்படுகிறது. இங்கு சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை.
அதேபோல தென்னிந்தியாவில் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆதாரமான “ஆகாய கங்கை” ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம் பவானி கூடுதுறை. இங்கே வடகரையில் அமைந்துள்ளது பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில். இதனாலேயே இத்திருத்தல இறைவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர். இந்த கோவில் “தட்சிண திரிவேணி” சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் பார்வதியின் நாமங்களில் ஒன்றான ‘பவானி’ என்ற திருநாமத்தாலேயே இத்தலத்தின் பெயரும், நதியின் பெயரும், இத்தல இறைவியின் பெயரும், அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
இந்த தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி என நான்கு மலைகள் உள்ளதால் இந்த தலத்துக்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இத்திருத்தலம் புராண காலத்தில் ‘திருநாணா‘ என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
பவானி சங்கமேஸ்வரர் திருத்தல வரலாறு:
பாடல் பெற்ற கொங்கேழு திருத்தலங்களில் இது 3வது தலமாகும். திருஞானசம்பந்தரால் தேவாரம் மற்றும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றதிருத்தலமாகும்.
ஒருமுறை திருஞானசம்மந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்கப்பட்டு மிகவும் வருந்தினர். அப்போது இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றனர் என்பது வரலாறு.
குபேரன் வழிபட்ட தலம்– அனைத்து உயிர்களும் பூஜித்த அதிசய திருத்தலம்
ஒருமுறை குபேரன், பூலோகம் முழுதும் உள்ள புனித தலங்களுக்கு சென்று தரிசிக்க விரும்பினான். அவ்வாறு யாத்திரை செய்தபோது பவானி நதிக்கரையில் யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் தவமேற்கொண்டிருந்ததைக் கண்டான். அதுமட்டுமின்றி புலி, சிங்கம், பசு, மான், யானை, நாகம், எலி என பல்வேறு உயிரினங்களும் ஒன்றாக நீர் அருந்துவதுடன் தவத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதைக் கண்டு குபேரன் ஆச்சர்யம் அடைந்தார்.
குபேரன் விருப்பம் –
பல்லுயிர்களும் பணிந்த அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தார் குபேரன். எனவே அவர் தானும் அங்கு தவம் செய்ய விரும்பினார். அவ்வாறே பவானி கூடுதுறையில் இறைவனின் தரிசனம் வேண்டிக் கடும் தவம் மேற்கொண்டார்.
சுயம்பு லிங்கம் –
குபேரனின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அங்குள்ள இலந்தை மரத்தின்கீழ் சுயம்பாகத் தோன்றி குபேரனுக்கு அருள்புரிந்தார். உடன், திருமாலும் காட்சியளித்து அருள்பாலித்தார்.
தட்சிண அளகை –
குபேரன் இறைவனிடம் அளகேசன் என்ற பெயரால் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளவேண்டுமென குபேரன் வரம் கேட்டுப் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம், ‘தட்சிண அளகை’ என்று பெயர் பெற்றது.
பவானி சங்கமேஸ்வரர் திருத்தலத்தின் சிறப்புகள்
தேவாரம் மற்றும் திருப்புகழில் பாடப்பெற்ற திருத்தலம்.
சைவம் மற்றும் வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தலம்.
வேதமே மரவடிவம் எடுத்து இத்தல விருட்சமான இலந்தை மரமாக வந்திருப்பதாக ஐதீகம்.
சூரிய ஒளி – சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி, சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுவது சிறப்பம்சம்.
பரிகாரத்தலம்
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானியும் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பவானியில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர்.
இலந்தை பிரசாதம் –
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பவானி கூடுதுறையில் நீராடி விநாயகரையும் சங்கமேஸ்வரரையும் வழிபட்டு இங்குள்ள இலந்தைப் பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம் – மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் மாந்தி கிரகத்தின் ரூபத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லில் செய்த நாகரைக் கொண்டு வந்து, ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஜுரஹரேஸ்வரர் சன்னதி –
இங்கு அமைந்திருக்கும் ஜுரகரேஸ்வரர் சன்னிதி வேரெங்குமில்லாத தனிச்சிறப்பாகும். காய்ச்சல், தோல் வியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஜுரஹரேஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, மிளகு ரச சாதத்துடன், அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்தால் உரிய நிவாரணத்தை பெறலாம். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு வில்வத்தால் அர்ச்சித்து அதனை உணவில் சேர்த்தால் நலம் பெறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நாராயண பலி பூஜை –
அகால மரணம் அடைந்தவர்களுக்கு பவானியில் ‘நாராயண பலி’ பூஜை செய்யப்படுவது மிகவும் விசேஷமானதாகும்..
பவானி சங்கமேஸ்வரர் திருத்தல அமைப்பு:
இராஜகோபுரம் –
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரம் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுர நுழைவாயில் –
ராஜ கோபுரத்திற்கு எதிரே ராஜநந்தி தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார். ராஜகோபத்துக்குள் நுழைவதற்கு முன்பாக இடது புறம் கோட்டை விநாயகர் சன்னதியும் வலது புறம் கோட்டை ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளன. ராஜகோபுரத்தை ஒட்டி வலது புறமாக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கல்தூண் நுழைவாயிலுடன் கூடிய பரமபத வாசல் அமைந்திருக்கிறது.
கோவில் பிரகாரம் –
வடக்கு இராஜகோபுரம் வழியாக ஆலயத்தின் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் தனிச்சன்னதிகளில் வலதுபுறம் ராஜகணபதியும் இடதுபுறமாக முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்துடன் பாலுதண்டாயுதபாணியாக முருகப்பெருமானும் எழுந்தருளி அருள்புரிகின்றனர்.
கோவில் நந்தவனம் –
ராஜகோபுர நுழைவாயிலில் இருந்து மூலவரான சங்கமேஸ்வரர் சன்னிதி வரை இடது புறமாக மிகப்பெரிய திருக்கோவில் நந்தவனம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் அருள்மிகு பவானி ஸ்ரீ வேதநாயகி அம்மன் திருமண மண்டபமும் அன்னதான மண்டபம் அமைந்துள்ளது.
கோவில் யானை –
வலதுபுறம் பிள்ளையார் சன்னிதியை ஒட்டி கோவில் யானையை பராமரிக்கும் இடமும் சிறிய கடை ஒன்றும் உள்ளது. யானைப் பராமரிப்புக்கு நிதி உதவி செய்ய விரும்பும் பக்தர்களுக்காக அருகிலுள்ள மண்டபத்தில் யானைக்கென தனி உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
ஆதிகேசவப் பெருமாள் சன்னதி –
யானை பராமரிக்கும் மண்டபத்தை அடுத்து மிக பிரம்மாண்டமான மண்டபம் ஒன்றில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பெருமாள் சன்னதியின் உள்ளே கருவறைக்கு இடது புறமாக ஸ்ரீ கிருஷ்ணன், நம்மாழ்வார் இராமானுஜர், ஆஞ்சநேயர் ஆகியோரது திருவுருவச் சிலைகளும். வலது புறமாக ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ ஞான கோபாலன் ஸ்ரீ சத்யபாமா ஆகியோர் அமைந்துள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் தனது துணைவியரான பாமா ருக்மணி ஆகியவருடன் பக்தர்களுக்கு அருட்காட்சி அளிக்கிறார்.
விளக்கு தோணும் கொடி மரமும் –
ஆதிகேசவப் பெருமாள் சன்னதிக்கு எதிரில் கருடத்தாழ்வார் தனிச் சன்னியில் வீற்றிருக்கிறார். அருகில் கொடி மரமும் பலி பீடமும் விளக்குத்தூணும் அமைந்துள்ளது. இத்தூணில் சங்கு, சக்கரம் ஆஞ்சநேயர் கருடத்தாழ்வார் ஆகியோர் சிற்பங்கள் அமைந்துள்ளன.
சௌந்திரவல்லி தாயார் சன்னதி –
ஆதிகேசவ பெருமாள் சன்னதிக்கு அருகிலேயே வலது புறமாக தனி மண்டபத்தில் சௌந்தரவல்லி தாயார் சன்னிதியும் அமைந்துள்ளது. தாயாரை வணங்கி வெளியேறுகையில் பெருமாள் சன்னதிக்கும் தயார் சன்னதிக்கும் இடையில் லட்சுமி நரசிம்மர் தனிச்சன்னதி அமைந்துள்ளது.
திருக்கோவில் நூலகம் –
ஆதிகேசவ பெருமாள் வீற்றிருக்கும் மண்டபத்தின் தெற்கு மூலையில் திருக்கோவில் நூலகம் அமைந்துள்ளது.
இந்த நூலகம் காலை 10:30 முதல் 1.00 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையும் செயல்படுகிறது.
தேர்நிலை
நூலகத்தை அடுத்து ஸ்ரீ சங்கமேஸ்வரர் வேதநாயகி அம்மனின் வெள்ளித்தேர்நிலை அமைந்துள்ளது. வெள்ளி தேர் பவனி பிரதி தமிழ் மாதம் 1ஆம் தேதி அன்று நடைபெறும். இதர நாட்களில் கட்டளைதாரர்களின் வேண்டுதல்கள் எதுவும் இருப்பின் அதன்படி நடைபெறும்.
சித்திவிநாயகர் சன்னதி:
ராஜகோபுரத்திற்கு நேராக வடக்கு திசையை நோக்கியபடி வேதநாயகி சன்னதி பிரகாரத்தில் சித்தி விநாயகர் சன்னதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
வேதநாயகி அம்மன் மண்டபம்:
சித்தி விநாயகரை வணங்கி முன்னேறுகையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த வேதநாயகி அம்மன் கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பக்கலையின் அழகை ரசித்தபடி அம்மன் சன்னிதிக்கு உள்ளே நுழையும் இடத்தில் இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.
வேதநாயகி அம்மன் சன்னிதி பிரகாரம்:
துவாரபாலகிகளைக் கடந்து அம்மன் சன்னிதியை வலம் வருகையில் இடது புறமாக சித்தி விநாயகரும் வலது புறமாக நாகரும் எழுந்தருளியுள்ளனர். அம்மனுக்கு நேராக நந்தி அமைந்துள்ளது.
அம்மன் சன்னிதி கோஷ்டம்:
அன்னையின் கோஷ்டம் அழகிய கதவுகளை உடையது. அதைக் கடந்து உள்ளே சென்றால் உட்பிரகார சுற்றுப் பாதையில் இடதுபுற சுவரில் தேவி பல திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள திருவுருவங்கள் அழகிய ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. வலதுபுறம் கோஷ்ட சுவரில் அன்னை உமா, மகேஸ்வரி, கௌரி, மகேந்திரி, வைஷ்ணவி ஆகிய தேவிகளின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.
அன்னை சண்டிகேஸ்வரி:
சிவன் சன்னிதிகளில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது போல வேதநாயகி அம்மனின் உட்பிரகார சுற்றுப் பாதையில் அன்னை சண்டிகேஸ்வரி தனிச்சன்தியில் எழுந்தருளியுள்ளார்.
வல்லப கணபதி:
சண்டிகேஸ்வரி சன்னதி அருகே ஸ்ரீ வல்லவ கணபதி துணைவியுடன் அஷ்ட புஜங்களுடன் மேற்கு நோக்கிய வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது விசேஷமான ஒன்றாகும்.
வேதநாயகி அம்மன் சன்னிதி:
அன்னையின் உட்பிரகாரத்தை சுற்றி வந்ததும் வேதநாயகி அம்மன் தன்னை நாடி வரும் பக்தர்கள் துயரம் நீங்கி அருள்புரிய கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அன்னைக்கு தனிவிமானம், மண்டபம், பலிபீடம் அமைந்துள்ளது.
இத்தல இறைவிக்கு பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என பல திருநாமங்களில் வணங்கப்படுகிறார்.
பள்ளியறை:
அன்னை சந்நிதி கோஷ்டத்திலேயே இடது புறமாக பள்ளியறை அமைந்துள்ளது. இரவு கடைசி பூஜையாக பள்ளியறை பூஜை நடைபெறுகிறது.
மூலவர் சன்னதி:
வேதநாயகி அம்மன் சன்னிதியை தாண்டி மூலவர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதி தனி உட்பிரகாரத்துடன் அமைந்துள்ளது.
இத்தலநாதரான சங்கமேஸ்வரருக்கு அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு.
கிழக்கு ராஜகோபுரம்-
மூலவர் சன்னதிக்கு எதிராக மூன்று நிலைகளுடன் ஐந்து விமானங்களுடன் கிழக்கு ராஜகோபுரம் அமைந்துள்ளது. பவானி ஆற்றில் நீராடி படிகளில் ஏறி இந்த ராஜ கோபுரம் வழியாக சன்னதிக்குள் நுழைய வேண்டும். ஆனால் ஆற்றை ஒட்டிய இந்த நடை விழாக்காலங்களில் மட்டுமே திறக்கப்படும்.
மூலவர் விளக்குத்தூண்:
கிழக்கு ராஜகோபுரத்திற்கும் மூலவர் சந்ததிக்கும் இடையில் விளக்குத்தூண் மண்டபமும் பலி பீடமும் கொடிமரமும் அமைந்துள்ளது.
துவார பாலகர்கள்:
அருள்மிகு பவானி சங்கமேஸ்வரர் திருத்தளத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் துவாரபாலர்களாக துவார விநாயகர் மற்றும் துவார முருகன் அருள் புரிகின்றனர்.
மூலவர் பிரகாரம்:
• துவார விநாயகர் மற்றும் துவார முருகனை தாண்டி மூலவர் சன்னதிக்குள் நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் நந்தியம் பெருமான் பகவானை நோக்கி வீற்றிருக்கிறார்.
• பிரகாரச் சுற்றுப் பாதையில் இடதுபுறமாக முதலில் ஸ்ரீ சூரிய பகவான் அருள் பாலிக்கிறார். அருகே 63 நாயன்மார்களுக்கும் உற்சவர் திருவுருவங்கள் அமைந்துள்ளன.
• அதை எடுத்து திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் என சமயக்குரவர்கள் நால்வரின் தனி சிற்பங்கள் அமைந்துள்ளன.
• பிரகார சுற்றுப் பாதையில் இடதுபுறமாக 63 நாயன்மார்களின் திருநாமம் ஜென்ம நட்சத்திரம் காலகட்டம் ஆகியவற்றுடன் கூடிய அழகிய திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. அதை அடுத்து சப்தகன்னியர் மற்றும் வீரபத்திரர் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
• மேலும் பிரகாரத்தின் தெற்கு மூலையில் ஸ்ரீ ராமநாதீசுவரர் பர்வதவர்தினி மற்றும் பால தண்டாயுதபாணியும் அமைந்துள்ளனர்.
• அருகே கன்னிமூல கணபதி தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார்.
• பகவான் சன்னதிக்கு நேர் பின்புறம் பஞ்சபூத லிங்கங்களான பிரித்திவிலிங்கம் அப்புலிங்கம் தேயுலிங்கம் வாயுலிங்கம் ஆகாய லிங்கம் ஆகிய லிங்கத் திருவுருவங்களில் ஈசன் அருள் பாலிக்கிறார்.
• அடுத்து திரு கல்யாண சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாய் பக்தர்களுக்கு நின்ற திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
• மூலவர் உட்பிரகாரத்தின் வடக்கு மூலையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார் மற்றும் ஜோதிலிங்கம் தனி நந்தியுடன் எழுந்தருளியுள்ளனர்.
• கோஷ்டத்து சுவரில் முதலில் நடன கணபதியும் பின் தென்முகபரமன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் பின்புறம் லிங்கோத்பவரும் கடைசியாக பிரம்மாவும் எழுந்தருளியுள்ளனர்.
• சண்டிகேஸ்வர பெருமாள் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
• மூலவர் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நடராசர் சிவகாமி அன்னையுடன் உற்சவமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
• பிரகாரம் சுற்றி வந்து மூலவரை தரிசிக்க உள்மண்டப்பத்தில் நுழைகையில் இருபுறமும் பிரமாண்டமான துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.
விஷ்ணு துர்க்கை:
சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு அருகே கோஷ்டத்து சுவரில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை வடக்குப் பார்த்து வீற்றிருக்கிறார். அவருக்கு நேர் எதிரே அன்னையின் திருப்பாதங்களின் திருவுருவம் அமைந்துள்ளது.
மூலவர் சன்னதி உள்மண்டபம்: கருவறை வாயிலில் சன்னதி விநாயகர், சன்னிதி முருகன், திண்டி முண்டி ஆகியோர் துவாரபாலகர்கள் போல் அமைந்துள்ளனர்.
மேலும் வலதுபுறம் உலோகங்களால் ஆன உற்சவர் திருவுருவங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் பவானி சங்கமேஸ்வரர்:
விமானத்துடன் அமைந்த கருவறையில் இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் கிழக்கு முகமாக பவானி ஆற்றை அருட்பார்வை பார்த்தபடி அமைந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
காலம் தவறாமல் தமிழில் திருமுறைகள் ஓதப்பட்டு மூலவருக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
தலவிருட்சம்:
சங்கமேஸ்வரப் பெருமானை தரிசித்து வெளியேறுகையில் வெளிப்பிரகாரச் சுற்றுப் பாதையில் தென்மேற்கு மூலையில் தலவிருட்சமான இலந்தை மரம் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. அதன் அடியில் தலவிருட்ச விநாயகர், நாகர் மற்றும் ஒரு லிங்கத் திருமேனி நந்தியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தத்தாத்ரேயர் சன்னிதி:
பெருமான் சன்னிதிக்கு பின்புறமாக தத்தாத்ரேயர் தனிச் சன்னதியில் ஸ்தூபியில் அருள்பாலிக்கிறார். இத்தூணினல் மற்ற மூன்று புறங்களில் விநாயகரும் நந்தி தேவரும் லிங்கத்திற்கு பாலூட்டும் பசுவின் சிற்பமும் காட்சியளிக்கின்றனர்.
சனிபகவான் சன்னதி:
தோஷ பரிகாரத்தலங்களில் ஒன்றான சங்கமேஸ்வரர் திருத்தலத்தில் சனிபகவான் தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இத்தலத்து சனீஸ்வரர் திருமுகத்தில் ஒரு அமைதியான புன்னகை தவழும். இந்த கருணை முகம் மிகவும் சிறப்பானதாகும்.
ஸ்ரீ ஜுரகரேஸ்வரர்:
சனிபகவான் சன்னதி அருகே ஈசன் மூன்று திருமுகங்களுடன் தூக்கிய திருப்பாதத்துடன் மூன்று திருக்கரங்களுடன் கரத்தில் அக்னியும் ஏந்திய சுரகரேஸ்வரர் வடிவில் நந்தி வாகனத்துடன் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். அதேபோல் திருவுருவத்துடன் சன்னிதி வாயிலில் சிறிய துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.
ஜுரகரேஸ்வரர் மகிமை:
சிவபெருமானின் அஷ்டாஷ்ட(64) மூர்த்திகளில் ஒன்றாக ஜுரகரேஸ்வரர் விளங்குவதாக சிவ மகாபுராணம் கூறுகிறது. உலக உயிர்கள் இன்புற்று வாழ மருத்துவர் ரூபம் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசனின் இந்த மூன்று முகமும் மூன்று கரங்களும் மூன்று கால்களும் மனிதனின் மூன்று வகையான பித்த வாத சிலேஷ்ட நாடிகளை குறிக்கிறது. இந்த நாடிகளில் உடல் உஷ்ணம் அதிகமாகும் போது ஏதாவது ஒரு வியாதி உடலுக்கு வந்து விடுகிறது இவ்விதம் ஏற்படும் வியாதிகளைப் போக்க மருத்துவர்கள் நம் கையில் உள்ள நாடி பிடித்து பார்த்து வியாதிகளை நிர்ணயம் செய்வது வழக்கம்.
பெரு வியாதி உள்ளவர்கள், அடிக்கடி காய்ச்சலில் அவதிப்படுவோர், சரும வியாதி உள்ளவர்கள், மனநோய் உள்ளவர்கள் ஜூரகரேஸ்வர பெருமானுக்கு குளிர்ந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து மிளகு ரசம், மிளகு சாதம், அரைக்கீரை கூட்டு ஆகியவற்றைப் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வது மிகுந்த நன்மையை தரும். வாயு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்க மிளகு சீரகத்தை படைத்து வில்வத்தால் அர்ச்சனை செய்து அதை உணவில் சேர்த்து வர வியாதிகள் நீங்கும்.
ஜுரகரேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
பஸ்மா யுதாய வித்மஹே
ரக்த நேத்ராய தீமஹி
தன்னோ ஜுரஹர பிரசோதயாத்.
சண்முகசுப்பிரமணியர் சன்னதி:
ஜுரகரேஸ்வரர் சன்னதி அருகே மூலவருக்கும் அன்னை வேதநாயகி சன்னிதிக்கும் நடுவில் முருகன் சன்னிதி அருங்கோன வடிவில் அமைந்திருக்கிறது இது மிகச் சிறப்பான சோமஸ்கந்த அமைப்பாகும். திரு சண்முக கடவுள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியராக மயில்வாகனம் பலி பீடம் மற்றும் தனி விமானத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
அருணகிரிநாதரின் திருப்புகழில் இந்த சன்னதி குறித்து பாடப்பட்டுள்ளது.
சண்முக சுப்பிரமணியர் சன்னதிக்கு அருகில் பழமையான வில்வமரம் ஒன்றும் அதன் அடியில் நந்தியுடன் லிங்கமும் அமைந்துள்ளது.
பைரவர் மற்றும் நவகிரக சன்னதி:
மூலவர் சன்னதிக்கு வெளியில் சுப்பிரமணியர் சன்னதி எதிரில் நவகிரகங்கள் தனி மண்டபத்திலும் இடதுபுறமாக தெற்கு முகமாக பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளது.
அதை ஒட்டி அமைதியாக பாய்ந்து கொண்டிருக்கும் பவானி நதியில் இறங்குவதற்கான படித்துறைகள் அமைந்துள்ளன.
தல தீர்த்தம்: காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்.
காயத்ரி லிங்கேஸ்வரர் சன்னதி:
காவிரி பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட காயத்ரி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பல தோஷம் நீங்க இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் திருவிழாக்கள்:
இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மறைந்த முன்னோருக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் கூடுதுறையில் நீராடி தர்ப்பணம் செய்து பிண்டம் கொடுப்பதஉ மிகுந்த விசேஷம். இதற்காக நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பவானி வந்து செல்கின்றனர்.
சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா, தேரோட்டத்துடன் விமரிசையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதேபோல, சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வருகின்றனர். மாசி மகம், ஆணித் திருமஞ்சனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆடி 18ஆம் பெருக்கு அன்று பவானி கூடுதுறையில் நீராடி இத்தலத்து இறைவன் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் சிறப்பு பூஜைகள்:
கூடுதுறையில் கூடும் சுமங்கலிப் பெண்கள், தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து மாங்கல்யம் நிலைக்கவும் திருமணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும் வேண்டிபூஜை செய்து அப்படி பூஜை செய்த பொருட்களை ஆற்றில் விட்டு வழிபாடு செய்கின்றனர். பூஜை செய்த மஞ்சள் நூலை கையில் அணிந்து கொள்கின்றனர்.
புதுமணத் தம்பதியினர், காவிரித் தாய்க்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை எடுத்து வந்து ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இத்திருத்தலத்தில் நாக தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை தோஷங்கள் விலக சிறப்பு பரிகாரபூஜைகள் செய்யப்படுகின்றன.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள் வாழை மரத்துக்கு தாலிகட்டி அதை ஆற்றில் விட்டும் பெண்கள் அரசங்கொத்துக்கு பூஜை செய்து ஆற்றில் விட்டும் பரிகாரங்கள் செய்கின்றனர்.
பவானி சங்கமேஸ்வரர் திருத்தல நடை திறந்திருக்கும் நேரம்:
சங்கமேஸ்வரர் கோயில் காலை 6 மணி முதல் பகல் 1 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். இத்திருத்தலத்தில் வேதாகமப்படி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பவானி சங்கமேஸ்வரர் திருத்தல பூஜை நேரங்கள்:
வைகறை பூஜை:6.00 மணி
கலாசந்தி காலை 8:00 மணி
உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணி
இடைக்கால பூஜை மாலை 4:00 மணி
சாயா ரக்ஷை மாலை 5:15 மணி
பள்ளியறை (அர்த்தஜாம பூஜை) இரவு 8:30 மணி
பவானி சங்கமேஸ்வரர் திருத்தல அமைவிடம்:
தமிழ்நாட்டில் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் ஈரோடு சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பவானி நதிக்கரையில் அமைந்துள்ளது.
வழித்தடம்:
அருகே உள்ள விமான நிலையம்:
கோயம்புத்தூர் விமான நிலையம் – 95 கீ.மீ
அருகே உள்ள தொடர்வண்டி நிலையம்:
ஈரோடு இரயில் நிலையம் – 10 கீ.மீ.
அருகே உள்ள பேருந்து நிலையம்:
பவானி பேருந்து நிலையம்.
மேலும் சாலை வழியாக எல்லா இடங்களிலிருந்தும் இணைக்கப்பட்டுள்ளது.
ADDRESS:
Sangameswarar temple
Bhavani, Erode district.
Tamil Nadu, 638301.
Phone: +91 4256 230 192. ( Hours: 06:00-13:00 ,17:00-20:30.)
திருச்சிற்றம்பலம்