வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய அவசியம் & நன்மைகள், விளக்கு வகைகள், விளக்கேற்றும் எண்ணெய்கள், தீபங்களின் பலன்கள்
திருவிளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக நமது கலாச்சாரத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுவது என்பதைத் தாண்டி புனித நாட்கள், நல்ல நிகழ்வுகள் துக்க காரியங்கள் என அனைத்திற்கும் விளக்கேற்றி வைப்பது என்பது இன்றியமையாத ஒரு வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே விளக்கு ஏற்றுவது குறித்த அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
அந்த வகையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள், விளக்கு ஏற்றும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் எத்தனை வகை விளக்குகள், விளக்கு திரிகள், விளக்கேற்றும் எண்ணெய்கள் வழக்கத்தில் உள்ளன, என்ன வகை தீபக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பன பற்றியெல்லாம் இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விளக்குகள் கோவில் விளக்குகள், ஆராதனை விளக்குகள், பரிகார விளக்குகள் மற்றும் வீட்டு விளக்குகள் எனப் பலவகையில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பொது உபயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பந்தம் போன்ற தெரு விளக்குகளும் களங்கரை விளக்குகளும் அடங்கும். இருளை நீக்கி வெளிச்சம் தருவதால் பொதுவாக விளக்குகள் மங்களப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன. மேலும் வேதங்கள் மற்றும் மகான்களின் கூற்றுப்படி இறைவன் ஜோதி வடிவாகக் காட்சியளிக்கிறார். எனவே விளக்குகள் நம் வாழ்விலும் வழிபாட்டிலும் ஒரு முக்கிய அங்கமாக மாறிப்போயின.
8 விளக்குத் திரிகள் மற்றும் அவற்றின் பலன்கள்
கோவில் விளக்குகள்
எட்டுவகை தூக்கு விளக்குகள்
• வாடா விளக்கு
• தூக்கு விளக்கு
• தூண்டாமணி விளக்கு
• நந்தா விளக்கு
• கூண்டு விளக்கு
• புறா விளக்கு
• சங்கிலித்தூக்கு விளக்கு
• கிளித்தூக்கு விளக்கு.
ஒன்பது வகை பூஜை விளக்குகள்
• சர்வராட்சத தீபம்
• சபூத தீபம்
• பிசாஜ தீபம்
• கின்னர தீபம்
• கிம்புரு தீபம்
• கணநாயக தீபம்
• வித்யாதர தீபம்
• கந்தர்வ தீபம்
• பிராக தீபம்
மூன்று வகை கோவில் விளக்குகள்
• சரவிளக்கு
• நிலை விளக்கு
• கிளித்தட்டு விளக்கு.
ஐந்து வகை கைவிளக்குகள்
• கஜலட்சுமி விளக்கு
• திருமால் விளக்கு
• தாமரை விளக்கு
• சிலுவை விளக்கு
• கணபதி விளக்கு
நால்வகை திக்பாலர் தீபங்கள்
• ஈசான தீபம்
• இந்திர தீபம்
• வருண தீபம்
• யம தீபம்
அஷ்டகஜ தீபங்கள்:
• ஐராவத தீபம்
• புண்டரீக தீபம்
• குமுத தீபம்
• ஜனதீபம்
• புஷ்பகந்த தீபம்
• சார்வ பவும தீபம்
• சுப்ரதீபம்
• பித்ர தீபம்
(ஆராதனை விளக்குகள் அந்தந்த கடவுள் மற்றும் வழிபாட்டு முறைகளின்படி உபயோகப்படுத்தப்படுகின்றன.)
வீட்டு விளக்குகளின் வகைகள்:
• காமாட்சி விளக்கு
• குத்து விளக்கு
• அகல் விளக்கு
• பாவை விளக்கு
பரிகார விளக்குகள்:
மேற்குறிப்பிட்ட விளக்குகளைத்தவிர பரிகாரத்திற்காக பச்சைமாவு, எலுமிச்சை, வெண்பூசணி மற்றும் தேங்காய் ஆகியவற்றிலும் விளக்கேற்றும் வழக்கம் உள்ளது.
விளக்குகளைப் போலவே விளக்கேற்றும் எண்ணெய் மற்றும் திரிகளில் பல வகைகள் உள்ளன. எண்ணைகளுக்கும் திரிகளுக்கும் ஏற்ப வெவ்வேறு பலன்கள் கிடைக்கும். எனவே அவரவர் வேண்டுதலுக்கு இணங்க எண்ணைகளையும் திரிகளையும் தேர்ந்தெடுத்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
விளக்கு ஏற்றும் எண்ணைகள் மற்றும் அவற்றின் பலன்கள்:
• பசுநெய் – சகலவிதமான கிரக தோஷங்களும் நீங்கி நன்மை ஏற்படும்.
• வேப்பெண்ணை – கணவன் மனைவி உறவு மேம்படும். அரசு மற்றும் மாற்று இனத்தவரின் உதவி கிடைக்கும்.
• ஆமணக்கு எண்ணெய் – குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.
• நல்லெண்ணை -நவக்கிரகங்களை திருப்தி செய்து காரியத் தடைகள் நீங்கி வெற்றி மற்றும் அமைதியான வாழ்வு தரும்.
• தேங்காய் எண்ணை – மனதில் தெளிவும் உறுதியும் ஏற்படும்.
• இலுப்பை எண்ணெய் – கண்திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை சக்திகள் வெளியேறி நேர்மறை சக்திகளை ஈர்க்கும்.
எண்ணை கலவைகளும் அதன் பலன்களும்
• நெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து விளக்கு ஏற்றுவதால் மன உறுதி, காரிய அனுகூலம் உண்டாகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகி வரும். செல்வம் பெருகும்.
• நெய், நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து விளக்கேற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் தொழில் முன்னேற்றம் உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.
• நெய், வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் தீய சக்திகள் விலகும். மறைமுக பகை விலகும். முன்னோர்கள் சாபம் நீங்கும். வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மாறும்.
பஞ்ச தீப எண்ணை:
நெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை கலந்து விளக்கேற்ற எண்ணிய காரியம் கைகூடும், சகல விதமான தோஷங்களும் நீங்கும், காரியத்தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், தொழில்விருத்தி, புகழ், அமைதி, நீங்காத செல்வம், திருமணம் மற்றும் குழந்தைகள் என அனைத்தும் கிட்டும். தீய சக்திகள், ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி போன்ற இடையூறுகள் நீங்கி காரிய சித்தி பெறலாம். மந்திர சித்தி அடையலாம், பற்றுகள் அருந்து முக்தி அடையலாம். எனவே சுத்தமான பஞ்ச தீப எண்ணையில் விளக்கேற்றுவது மிகச்சிறந்த பலன்களைத்தரும்.
பஞ்சகவ்ய விளக்கு:
பஞ்ச கவ்ய விளக்கானது பசுவின் கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய பசுவின் ஐந்து பொருட்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தினமும் இந்த விளக்கை மகாலட்சுமிக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக கடன் தொல்லைகள் நீங்கி பொருளாதாரம் செழிக்கும். இந்த விளக்கை ஏற்றும் பொழுது விளக்கும் எரியும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும் இந்த பஞ்ச கவ்ய விளக்கிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரவும் பொழுது ஹோமம் செய்த பலனை நமக்குக் அளிக்கிறது. இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி செல்லச்செழிப்பு உண்டாகும்.
விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:
விளக்கு ஏற்றும் வீட்டில் எப்போதும் மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். ஏனெனில் விளக்கின் ஒளியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதங்கள் கூறுகின்றன. வீட்டில் தவறாமல் விளக்கை நன்றாக சுத்தம் செய்து மலர்கள் மற்றும் குங்குமம் இட்டு மங்களகரமாக அலங்கரித்து தீபம் ஏற்றி வர வற்றாத செல்வம் பெருகும். இழந்த பொருட்கள் திரும்ப வரும்.
விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் -விளக்கேற்றும்போது செய்யவேண்டியவை
• மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முழு இறை சிந்தனையுடனும் மன அமைதியுடனும் விளக்கு ஏற்ற வேண்டும்.
• முழுமையாக உடுத்தி, தலை வாரி திலகம் இட்ட பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும்.
• விளக்கு ஏற்றும் முன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
• வீட்டுவிளக்கு பொதுவாக கிழக்கு முகமாக இருப்பது நலம்.
• விளக்கை வணங்கும் போது வடக்குப் பக்கம் பார்த்து நின்று வணங்குதல் சிறப்பு.
விளக்கேற்றும்போது செய்யக் கூடாதவை
• தீய சிந்தனைகளுடன் விளக்கு ஏற்றக்கூடாது.
• இரட்டை திரியிட்டு விளக்கு ஏற்ற கூடாது.
• குளித்துவிட்டு ஈரத்துடன் விளக்கு ஏற்ற கூடாது.
• தலை முடியை அவிழ்த்துவிட்டும் வெறும் நெற்றியுடனும் விளக்கு ஏற்றக்கூடாது.
• பெண்கள் மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்ற கூடாது.
• மரணம் நிகழ்ந்த வீட்டில் காரியம் முடியும் வரை பூஜை அறை விளக்கை ஏற்றக்கூடாது.
• உடைந்த விளக்கில் தீபம் ஏற்ற கூடாது.
• தெற்கு முகமாக பூஜை அறை விளக்கை ஏற்றக்கூடாது.
• விளக்கிற்கு எதிரே நின்று வணங்கக்கூடாது.
விளக்கு ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
• விளக்கு ஏற்றும்போது ‘ஸ்வாகதம் லஷ்மி’ என்று மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.
• விளக்கை தீண்டும்போது ‘ஓம் ஒளிர் வளர் ஜோதி போற்றி’ என்று கூற வேண்டும்.
• விளக்கை அணைக்கும் போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி’ என்று கூறி மலரால் அமர்த்த வேண்டும். தானே விளக்கு அணைய விடக்கூடாது.
விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது?
பொதுவாக இரவும் பகலும் சந்திக்கும் அந்தி சந்தி எனப்படும் காலை மாலைகளில் விளக்கேற்றுவது நல்லது. தவிர அதிகாலை பிரம்ம முகூர்த்தம் மற்றும் மாலை பிரதோஷ நேரமான 4.30 முதல் 6.30 மணிக்கு விளக்கேற்றுவது மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். மேலும் பரிகாரம் செய்ய விளக்கேற்றும்போது அந்தந்த அதிதேவதைகளின் ஓரைகளில் கோவில்களிலும் நம்முடைய வீட்டிலும் விளக்கு ஏற்றலாம். (உதாரணமாக இராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய்யில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவது)
விளக்கேற்றி வழிபாடு செய்வதன் சிறப்புகளை உணர்ந்தே இல்லங்களில் விளக்கேற்றி வழிபடுவது மட்டுமின்றி கோவில்களிலும் சிறப்பு நாட்களில் இறைவனுக்கு திருவிளக்கு பூஜை செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. நாமும் சிறப்பு வாய்ந்த இந்த திருவிளக்கு வழிபாட்டை மேற்கொண்டு நன்மை அடைவோமாக.