Srirangam temple timings- Trichy Aranganathar swamy temple timings & History -ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி  திருக்கோவில்

Table of Contents

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி  திருக்கோவில் – திருச்சி

ஓம் நமோ நாராயணா! அடியவர்களுக்கு வணக்கம். பிரசித்தி பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு, பூமியில் இல்லை. அவை ஒன்று வைகுண்டம் மற்றொன்று திருப்பாற்கடல். ஆனால் சோழ நாட்டு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம்  “பூலோக வைகுண்டம்” என்ற சிறப்பை பெற்றது. திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள திரு அரங்கநாத சுவாமி  திருக்கோவில் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் இப்பதிவில் விரிவாகக் காணலாம். 

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் சிறப்புகள்: 

• திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் 108 வைணவத் திவ்ய தேசங்களில் முதல் திருத்தலமாகும்.

• பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால், ‘மங்களாசாசனம்’ செய்து பாடப்பெற்று திருத்தலமாகும். 

alayatra-membership1

• சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாக விளங்குகிறது. 

• சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவு கொண்ட கோயிலாகும்.

• ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பெருமாள் கோயில் என்ற  பெருமைக்குரிய திருத்தலம். 

• ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ரங்க விமானம் சுயம்பாக உருவானதாகக் கூறப்படுகிறது.

• இத்திருத்தலத்தின் 24 கிமீ சுற்று வட்டாரத்தில்  எங்கிருந்து வழிபட்டாலும், அரங்கனின் பரிபூரண அருளும் முக்தியும் நிச்சயம் கிடைக்கும் என ஸ்ரீரங்க தலவரலாறு கூறுகிறது.

• திருக்கோவில் கருவறை, பொன்னால் வேயப்பட்ட விமானத்தைக் கொண்டது. இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.  மேலும்  இதில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. 

• இந்த தங்க விமானத்தில் பரவாசு தேவர்  அமுதக் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்த அமுதக் கிண்ணம்  அவர் திருவாய் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், எப்போது அது அவரின் திருவாயில் சென்று சேர்கிறதோ அப்போது இந்த உலகம் அழியும் என்றும் நம்பப்படுகிறது.

• கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது இத்திருத்தலத்தில் தான்.

• 9ம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அரசுகளின் கல்வெட்டுகள் இத்தலத்தில் காணக்கிடைக்கின்றன.

• இத்திருத்தலம் சுக்கிரன் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

• இத்திருத்தலம் ஐ.நா வின் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

• ரெங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தின் முன் விழுந்து வணங்கி எழுந்து, கொடி மரத்தை நிமிர்ந்து நோக்கினால், அந்த கொடிமரம் அசைவது போல தோன்றும். அப்படி கொடிமரம் அசையும் விதமாக காட்சி அளித்தால் நம் வேண்டுதல்களை இறைவன் ஏற்றுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

• இத்திருத்தலத்து மூலவர் சுதை (மண்சிலை) வடிவில் எழுந்தருளியுள்ளார். எனவே மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. மாறாக கோயில் சேவகர் ஒருவரை கொண்டு இயற்கை மூலிகைகளினால் தைலக்காப்பு தயாரிக்கப்பட்டு பெருமாளுக்கு மெருகூட்டப்படுகிறது.

• பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், விஷ்ணு சேவைக்கே தன்னை அர்ப்பணித்து, அவரோடு ஐக்கியமானது இத்திருத்தலத்தில் தான்‌. மேலும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து திருப்பாணாழ்வார் மற்றும் துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்துள்ளனர். 

• தேயும் காலணிகள்

இத்திருத்தல இறைவன் ஸ்ரீ ரங்கநாதர் சயனத் திருக்கோலத்திலும் காலணிகள் அணிந்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் இந்த காலணிகள் உபயோகப்படுத்தியது போலவே தேய்ந்திருக்கின்றன. அவ்வாறு தேய்மானம் ஆன காலணிகள் திருக்கொட்டாரம் எனும் இடத்தில் உள்ள தூணில் மாட்டி வைக்கப்படுகின்றன. இந்தப் காலணிகளை செய்வதற்காகவே பல தலைமுறையாக சேவகர்கள் இருக்கின்றனர். அரங்கனின் காலணிகள் இரு வேறு ஊர்களில் தனியாக செய்யப்படுகின்றன. ஆனாலும் இரண்டும் ஒன்று போலவே இருப்பது வியப்பு.

• ஐந்து குழி

தாயார் சன்னிதிக்கு வெளியே தரையில் ஐந்து குழி அமைப்பு உள்ளது. இந்த ஐந்து குழிகளில்  ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கமாக பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இவ்வாறு தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஐந்து குழிகள் அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகவும்  அவற்றில் கைகளை பொருத்தி பார்க்கப்படும் பரமபத  வாசல் என்பது இறைவனை அடையும் வழி  என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

• அரங்கனின் திருடு போன திருக்கண்கள்

திருவரங்கம் ரங்கநாதனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்ட விலை மதிப்பில்லாத வைரங்களால் ஆனவை என்றும், அந்நியர்களின் படையெடுப்பின் போது ஆவை திருடு போய்விட்டன என்றும் கூறப்படுகிறது. 

• வளரும் நெற்குதிர்கள்

இத்திருத்தலத்தில் சுமார் 1000 ஆண்டுகள் முன் அமைக்கப்பட்ட வட்டவடிவமாகன 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரமாண்டமான நெல் சேமிப்பு கிட்டங்குகள் உள்ளன. இதில் மொத்தம் 1500 டன் அளவுக்கு நெல் சேமிக்க முடியும். ஆனால் எவ்வளவு அதிகமாக நெல்லைக் கொட்டினாலும் உள்வாங்கிக்கொள்கிறது.  இந்த நெற்குதிர்கள் நிரம்பி வழிவதும் இல்லை இதில் நெல் தீருவதும் ‌இல்லை எனக் கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தின் சிறப்புமிக்க ஏழு அதிசய அமைப்புகள்

• அரங்கநாதசுவாமி திருக்கோயிலானது  ஏழு சுற்று மதில்களுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

இந்த ஏழு மதில் சுற்றுக்களும், ஏழு லோகத்தை குறிக்கின்றன. அதாவது மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று – பூலோகம், திரிவிக்ரம சோழன் திருச்சுற்று – புவர்லோகம், அகலங்கன் என்னும் கிளிச்சோழன் திருச்சுற்று – ஸுவர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று -மஹர்லோகம், குலசேகரன் திருச்சுற்று – ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று -தபோலோகம், தர்ம வர்ம சோழன் திருச்சுற்று – ஸத்யலோகம் என்பனவாகும். இவற்றில் கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுகள் மட்டுமே திருக்கோயில் பயன்பாட்டில் உள்ளன. வெளிப்புறமாக உள்ள மற்ற மூன்று சுற்று மதில்களும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என முழு நகரப் பயன்பாட்டிற்கு உரியவையாக உள்ளன.

• இத்திருத்தலத்தில் மட்டும் தான் ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார் என ஏழு தாயார்கள் உள்ளனர்.

• 7 உற்சவங்கள், 7 திருவடி சேவைகள், 7 கண்டுகளிக்கும் சேவைகள் என கோவில் விசேஷங்களும் ஏழு என்ற எண்ணிக்கையிலேயே நடைபெறுகின்றன.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் தலவரலாறு: 

இராவணனின் தம்பியான விபீஷணன் ராமரின் பட்டாபிஷேகத்திற்கு வந்தார்.  அவருக்கு பரிசாக ஸ்ரீ நாராயணனின் சிலையை ராமர் பரிசளித்தார். அந்த சிலையை எடுத்துக்கொண்டு இலங்கைக்கு சென்றான் விபீஷணன். வழியில் அன்றைய பூஜைக்கு நேரமாகி விட்டதால் அங்கிருந்த ஒரு சிறுவனிடம் சிலையைக் கொடுத்து விட்டு, காவிரியில் நீராடச் சென்றான் விபீஷணன். ஆனால் ஆடு மேய்க்கும் சிறுவன் வடிவில் இருந்த விநாயகர் விபீஷணன் வர தாமதமானதால் அந்த சிலையை காவிரிக்கரையிலேயே வைத்து விட்டு மறைந்துவிட்டார். கரையில் வைக்கப்பட்ட சிலை பெரிதாக மாறியது. குளித்து முடித்து கரைக்கு வந்த விபீஷணன் மிகப் பெரிதாக வளர்ந்திருந்த சிலையைக் கண்டு அச்சமும் குழப்பமும் மேலிட  அதை எடுக்க முயன்றான்.  ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த சிலையை அசைக்கக்கூட முடியவில்லை. இதனால் விபீஷணன் இறைவனிடம் முறையிட்டான். ஆனால் தான் காவிரி ஆற்றங்கரையிலேயே இருக்க விரும்புவதாக அசரீரி ஒலித்தது. மேலும் பெருமால்,  விபீஷணனிடம், ”வருந்த வேண்டாம் நான் இலங்கை வராவிட்டாலும், நீ வாழும் இலங்கை இருக்கும் தென் திசை பார்த்தபடியே  காட்சி தருவேன்” என்று உறுதி அளித்தார். அதனாலேயே இத்திருத்தலத்தின் 24 கி.மீ சுற்று வட்டாரத்தில் எங்கே இருந்து வேண்டிக்கொண்டாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சோமுகன் எனும் அசுரன்

சோமுகன் என்ற அசுரன் மிகவும் கடுந்தவம் செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான்.   அழிவில்லா வரம் பெற்ற ஆணவத்தில்,  மூவுலகையும் ஆளவேண்டும் எனவும் தேவர்கள் தனக்கு சேவை செய்ய வேண்டும் எனவும் முனிவர்கள் தன்னை வணங்க வேண்டும் என்றும் ஆவல் கொண்டான். அவ்வாறே மூவுலகையும் வென்று தன் ஆசையை நிறைவேற்றினான்.

கடலுக்கடியில் புதையுண்ட வேதங்கள்

மூவுலகையும் வென்ற சோமுகன் பிரம்மனைச் சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து சென்று விட்டான்.  பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று சோமுகனை வதம் செய்து தங்களைக் காக்கும்படி வேண்டினார். மகாவிஷ்ணுவும் சோமுகனை வதம் செய்யப் போர் தொடுத்தார்.  இருவருக்கும் கடும் போர்  நடந்தது.  மகா விஷ்ணுவிடம் சோமுகனின் மாயாஜாலங்கள் அனைத்தும் தோற்றுப்போயின.  அச்சத்தில் அவன் கடலுக்கு அடியில் சென்று பதுங்கிக்கொண்டான்.

மச்ச அவதாரம் 

திருமால் மச்ச அவதாரம் எடுத்துக் கடலுக்கு அடியில்  சென்று அழியா வரம் பெற்ற சோமுகனை வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டார். அவ்வாறு மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை தற்போதைய திருவரங்கமான “உத்தரங்கம்” எனும் இந்த இடத்தில் தான் பிரம்மாவுக்கு வழங்கி உபதேசம் செய்தார் என்று வேதங்கள் கூறுகின்றன. 

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் பெயர் காரணம்

தமிழில் “அரங்கம்” என்றால் “தீவு” என்று பொருள். திரு என்பது திருமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கிறது.  காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும், திருமால் பள்ளி கொண்டிருக்கும் தீவு என்பதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. மேலும் இத்தல இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்திலேயே அருள்புரிவதால் பூலோக வைகுண்டம் என்றும் வழங்கப்படுகிறது.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)   அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைப்பு

ராஜகோபுரம்:

இந்தியாவிலேயே இத்திருத்தலத்தில் தான்‌ 72 மீட்டர் (236 அடி) உயரமுள்ள மிக உயரமான இராஐ கோபுரம் அமைந்துள்ளது. 7 பிரகாரங்களுக்கு, 21 வாயில்கள் 21 கோபுரங்களுடன் இருந்தாலும் ராஜகோபுரத்துடன் கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக விளங்குகிறது. மொத்தம்  1.28 லட்சம் டன்கள் எடை கொண்ட இக்கோபுரம் 13 நிலைகள் மற்றும் 13 கலசங்களுடன் 236 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. 17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாத நிலையில் அகோபில மடத்தின் 44 வது சீடர் அழகிய சிங்கரால் மீண்டும் 1979ல் கட்டுமான பணிகள் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 1987 ஆம் ஆண்டு தான் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ராஜகோபுரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இராஜ கோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தால் நாழிக்கேட்டான் வாயில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். அவர்களைக் கடந்து திருவரங்கனின் விண்ணகரத்தில் நுழைந்தால் ஒவ்வொரு திருச்சுற்றிலும் ஏராளமான சன்னிதிகள் அமைந்துள்ளன. அனைத்தையும் வர்ணிக்க ஒரு பதிவு போதாது என்பதால் பக்தர்கள் வாழ்நாளில்  ஒருமுறையாவது திருவரங்கம் வந்து தமிழர் கட்டிடக் கலையின் அற்புதங்களையும் அரங்கனின் பேரருளையும் அனுபவித்து உணருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மூலவர்

மதில் சுவர்களுக்கு மத்தியில் மூலவர் பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமாளாக அனந்த சயனத்தில்  கருணையே வடிவாக ‘சங்க நிதி’, ‘பதும நிதி’யுடன் அருள்பாலிக்கிறார். அருகில் தாயார் தனிச்சன்னதியில் எழுந்தருளி அருள்புரிகிறார்.

ராமானுஜர் சன்னதி

மூலவர் சன்னதியைத்தவிர இத்திருத்தலத்தில் மிக விசேஷமானது ராமானுஜர் சன்னதியாகும். ஆதிசேஷனின் அவதாரமாக கருதப்படும் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜரே இத்திருத்தலத்தின் நிர்வாக முறையை ஏற்படுத்தினார். 120 ஆண்டு காலம் வாழ்ந்த அவரது திருமேனி ‘அகலங்கன் திருச்சுற்று’ எனப்படும் 5-வது திருச்சுற்றின் வசந்தமண்டபத்தில் பூமிக்கு அடியில்தான் புதைக்கப்பட்டது. ஆனால் பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. சுமார் 900 ஆண்டுகளாக பச்சைக் கற்பூரம் சேர்த்து பதப்படுத்திய அவரது திருமேனியில் இன்னும் நகமும் முடியும் வளர்வதாக நம்பப்படுகிறது. ராமானுஜர் தான் ஏற்படுத்திய நிர்வாக முறைகள் சரியாக நடைபெற்று வருகின்றனவா எனக் கண்காணித்து வருகிறார் என்று நம்பப்படுகிறது.

மேலும் இத்திருத்தலத்தில் 1000 தூண் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்டதாகும். இதில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை . 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்களும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மட்டும் மணல்வெளியில் மரத்தூண்களாக நடப்பட்டு முழுமையான ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.

மூலவர்: அரங்கநாதர்

உற்சவர்: நம்பெருமாள்

தாயார்: அரங்கநாயகி

தலவிருட்சம்: புன்னை மரம்

தல தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்: 

புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி உற்சவம் போன்ற வைணவத் திருத்தலங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில்  வைகுண்ட ஏகாதசி 20 நாட்கள் மகா உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் ரா பத்து என்றும், அடுத்து வரும் 10 நாட்கள் பகல் பத்து என்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் இறைவனை கணவனாக அடைய விரும்பி திருமாலுடன் ஐக்கியமானது இத்திருத்தலம் என்பதால் இங்கு மார்கழி உற்சவம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோரும் ஆடி 18 அன்று காவிரியில் புது வெள்ளம் கறை  ஓடும்போது , திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகில், பெண்கள் குடும்பத்துடன் காவிரிக்கு பூஜை செய்து வணங்குவர். ( ஆடிப்பெருக்கு விழாவை பற்றிய விரிவான பதிவு நமது ஆலயாத்ராவில் பதிவிடப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு பக்தர்கள் அதையும் படித்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்).

மேலும் பங்குனி உத்திரத் திருநாளில் தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்திசேவை மண்டபத்தில், பெருமாளும் தாயாரும் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) அரங்கநாத சுவாமி திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்: 

இத்திருத்தல இறைவன் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராவார். எனவே இத்தலம் சுக்கிரன் பரிகார தலமாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சக்ரத்தாழ்வாரை  வழிபட்டால் தீயசக்திகள், துரதிர்ஷ்டங்கள் விலகும் எனவும்  தீராத நோய்களும் தீரும் எனவும் கூறப்படுகிறது. இங்கு வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து நன்மைகளும் முக்தியும் கிடைக்கும். .

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் நடைதிறக்கும் நேரம் – SriRangam temple timings

காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை

மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைவிடம்: 

அருள்மிகு திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருச்சியில் இருந்து 7.9 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம்:  திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்.

அருகிலுள்ள இரயில் நிலையம்:  ஸ்ரீரங்கம் இரயில் நிலையம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம்: ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்.

பக்தர்கள் வந்து செல்ல அனைத்து வழிகளிலும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)  அரங்கநாத சுவாமி திருக்கோயில் முகவரி: 

அருள்மிகு ரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் – 620006

தொலைப்பேசி – 0431 – 243 2246

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பார்க்கவேண்டிய மேலும் சில முக்கிய இடங்கள்:

திருஆனைக்காவல் திருத்தலம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில்,
திருச்சி மலைக்கோட்டை,
திருவடிவழகிய நம்பி பெருமாள் கோவில்,
வண்ணத்துப்பூச்சி பூங்கா,
இராமேஸ்வரம்.

Copyright by ALAYATRA.COM