ஆணவம் அழித்து ஞானம் கொடுக்கும் விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு
ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களில் முதலாவதான ஆணவத்தை அழித்து ஆட்கொள்ளும் ஞானகுருவான விராலிமலை சண்முகநாத சுவாமி திருக்கோவில் பற்றி இப்பதிவில் விரிவாகக் காணலாம். இத்திருத்தலம் திருச்சியில் இருந்து 25 கிமீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை எனும் ஊரில், மயில்கள் உலாவரும் ஒரு அழகிய சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் பல அற்புதங்களை இன்றும் நிகழ்த்திவருகிறார்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் பெயர்க்காரணம்:
இத்தலம் முற்காலத்தில் சொர்ணவிராலியங்கிரி என்று வழங்கப்பட்டது. யோகிகளும் முனிவர்களும் இத்திருத்தலத்தில் குரா (குரா என்பது ஒரு வகை மரம்) மரங்களாக முருகப் பெருமானை நோக்கி தவமிருந்து வழிபட்டதாகவும் அதனால் “விராவி” வனம் என்றழைக்கப்பட்டு பின் மறுவி “விராலி”வனம் என்று மாறியது. விராலி மரங்கள் அடர்ந்த வனத்தில் அமைந்த குன்று என்பதால் இம்மலைக்கு விராலிமலை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வரலாறு:
முருகனுக்கு உணவு தர மறுத்த ரிஷி பத்தினி
சரவணப் பொய்கையில் முருகன் பிறந்தபோது வசிஷ்டரின் மனைவி அருந்ததி அவருக்கு உணவளிக்க மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் தன் மனைவியை சபித்தார். இதனால் வசிஷ்டர் முருகப்பெருமானின் சினத்துக்கு ஆளானார். புராணத்தின்படி வசிஷ்டரும் அவரது மனைவி அருந்ததியும் இந்த விராலிமலையில் தவமிருந்து தங்கள் சாபத்தை போக்கிக்கொண்டனர்.
நாரதர் தவமிருந்த விராலிமலை:
பிரம்மாவின் ஆணவத்தை போக்க சிவபெருமான் அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தைக்காக சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவ நிந்தனைக்கு ஆளாகி திரிலோக சஞ்சாரம் செய்யும் தன்மையை இழந்தார். அவரது தம்புராவும் வளைந்தது. எனவே இத்தலத்து முருகப் பெருமானை சரணடைந்து தவம் செய்து வணங்கி விமோசனம் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் இத்திருத்தலம் ஆணவம் போக்கும் தலமாக விளங்குகிறது. இன்றும் பதவி ஆணவத்துடன் யார் விராலிமலை ஏறினாலும் அவரது பதவி பறிபோகிறது என்றும் முருகப்பெருமானால் அவரின் ஆணவம் அழிக்கப்படுகிறது என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் வேறெந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக இங்கு நாரதருக்கு உற்சவர் திருஉருவம் உள்ளது. இவரது தம்புரா வளைந்து காணப்படுகிறது. திருவிழாக்களின் போது சுவாமிக்கு முன்பாக இவரும் உலா செல்கிறார்.
விராலிமலையில் காஷ்யப முனிவரும் தவம் செய்து சாப விமோசனம் பெற்றார் என நம்பப்படுகிறது.
சுருட்டு நைவேத்தியமும் அதன் வரலாறும்:
முற்காலத்தில் கருபமுத்து என்ற பாளையக்காரர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விராலிமலை முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒருமுறை அவர் கோயிலுக்குச் சென்ற போது கனமழை பெய்து மாமுண்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கருபமுத்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதால் உண்ண உணவின்றி தவித்தார். தன்னிடம் இருந்த சுருட்டை புகைத்து குளிரில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருந்தார். மேலும் விராலிமலை முருகப்பெருமானை இந்த ஆபத்திலினருந்து தன்னை காக்கும்படி வேண்டிக்கொண்டார். அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன் ‘எனக்கும் மிகவும் குளிராக இருக்கிறது சுருட்டு இருந்தால் கொடு உன்னை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்கிறேன்’ என்று கூறினார்.
சுருட்டை வாங்கிப் புகைத்தபடியே பாளையக்காரர் கருப்பமுத்துவை விராலிமலை முருகப்பெருமான் ஆலயத்திற்க்கு அழைத்து வந்து விட்டார். ஆனந்தமடைந்த கருப்பமுத்து வேடனுக்கு நன்றி கூற திரும்பிப் பார்த்தால் வேடன் மாயமாக மறைந்துவிட்டார். ஆச்சரியம் அடைந்த கருபமுத்து முருகனை தரிசனம் செய்ய கருவரைக்குள் நுழைந்தபோது அங்கே வேடனுக்கு இவர் தந்த சுருட்டு புகைந்துகொண்டு இருப்பதைக் கண்டு வியந்தார். தன்னை வெள்ளத்திலிருந்து மீட்டது வள்ளல் முருகனென்று அறிந்து நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீரோடு தரிசனம் செய்தார். அன்றுமுதல் விராலிமலை முருகனிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியதும் சுருட்டு காணிக்கையாக வழங்கும் பழக்கம் வந்தது. மேலும் அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அப்பொழுது அவர் தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். வயிற்று வலி எங்கு சென்றும் குணமடையாத நிலையில், புதுக்கோட்டை மகாராஜா கனவில் ஒருநாள் முருகன் தோன்றி, “நைவேத்தியமாக படைத்த சுருட்டை தடை செய்து விட்டாய் மீண்டும் சுருட்டு படைக்க உத்தரவிட்டால் வயிற்று வலி குணமாகும்” என்று கூறினார். அவ்வாறே சுருட்டு நைவேத்தியம் படைத்ததும் வயிற்று வலி குணமானது.
அருணகிரிநாதருக்கு வழி காட்டிய விராலிமலை முருகன்:
திருவண்ணாமலையில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான் அவருக்கு “சும்மா இரு” என்று உபதேசம் செய்தார். அதன்படியே 12 ஆண்டுகள் எவருடனும் பேசாமல் தவம் செய்த அருணகிரிநாதர் முருகன் வீற்றிருக்கும் ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். அப்படி வயலூர் முருகனை தரிசனம் செய்த போது, முருகப்பெருமான் தன்னை விராலிமலையில் வந்து தரிசிக்குமாறு வழி நடத்தினார். அவ்வாறே அருணகிரிநாதர் குரா மரங்கள் அடர்ந்த விராலி மலைக்காட்டுக்குள் வழி தவறிவிட்டார். அப்போது அவர் மனமுருகி முருகனை நினைக்க எங்கிருந்தோ ஒரு வேடன் வேங்கைப்புலி ஒன்றை வேட்டையாடத் துரத்திக்கொண்டு ஓடினார். அருணகிரிநாதரோ நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மனிதரைக் கண்ட மகிழ்ச்சியில் வழி கேட்க அந்த வேடனை துரத்திச்சென்றார். மிக வேகமாக ஓடிய அந்த வேடன் விராலிமலையை அடைந்ததும் அங்கு இருந்த குரா மரம் ஒன்றில் மாயமானார்.
வேடனாக வந்து வழிகாட்டியது முருகப்பெருமான் தான் என்று உணர்ந்த அருணகிரிநாதர் இத்திருத்தலத்திலேயே தங்கி மனமுருகி இறைவனை வணங்கிவந்தார். அருணகிரிநாதரின் பக்தியில் மகிழ்ந்த முருகன் அவர் முன் தோன்றி தன்னைபற்றி தமிழ் பாடல் பாடும்படி பணித்தார். “எழுத்தறிவற்ற ஏழை என்னால் எப்படி இலக்கியம் படைக்க முடியும்?” என அருணகிரிநாதர் கலங்க அவரது நாவில் வேலால் முருகன் ஓம் என்று எழுதி உபதேசம் தந்தார். அருணகிரிநாதர் விராலிமலையிலேயே வெகு காலமாக தங்கி இத்தலத்து இறைவன் மேல் 16 திருப்புகழ்கள் பாடியுள்ளார். அவ்வாறு அவர் தங்கி இருந்தபோது முருகன் தோன்றி, சந்தனக்கோட்ட மண்டபத்தில் அவருக்கு ஞானோபதேசம் அளித்து, அஷ்டமா சித்திகளில் ஒன்றான பரகாயப்பிரவேசம் (கூடுவிட்டு கூடுபாய்தல்)என்ற சித்தியை வழங்கினார். இந்த சித்தியை வைத்தே அருணகிரிநாதர் கிளி உடம்பில் புகுந்து பழநி முருகன் கைத்தடியில் அமர்ந்து முருகனைப் பாடியதாக நம்பப்படுகிறது. எனவே பக்தர்கள் ஞானம் பெற குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் சிறப்புகள்:
*இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்.
* சூரசம்காரம் முடித்து முருகன் தெய்வயானையை திருப்பரங்குன்றத்தில் திருமணம் முடித்ததும் விராலிமலையில் வந்து வள்ளியம்மையை மணமுடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
*அருணகிரிநாதர் நாவில் “ஓம்” என்று வேலால் எழுதி கல்வி ஞானத்தையும் அட்டமா சித்திகளில் ஒன்றான பரகாயப்பிரவேசம் (கூடுவிட்டு கூடுபாய்தல்) என்னும் சித்தியையும் வழங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
*வசிஷ்டரும் அவரது பத்தினி அருந்ததியும் தவமிருந்து தமது சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.
*நாரத முனிவரும், கஷ்யப்ப முனிவரும் இத்தலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு பாவ விமோசனம் கிடைத்ததாகக் சொல்லப்படுகிறது.
*வேறு எந்த கோவில்களிலும் இல்லாத வகையில் இத்திருத்தலத்தில் நாரதர்க்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.
*முருகனின் சேனாதிபதியான வீரபாகுவிற்கு மிகப்பெரிய சிலை உள்ளது இத்திருத்தலத்தில் மட்டுமே என்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
* வாய் பேச முடியாதவராக இருந்த சிவாச்சாரியார் என்ற முனிவர், இங்கு வந்து முருகப்பெருமானிடம் வேண்டி வழிபட்டதால், அவர் பேசும் திறன் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.
*அருணகிரிநாதர் இத்தலம் குறித்துத் சுமார் 16 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.
*முத்துப்பழனிக் கவிராயர் என்னும் கவிஞர் ‘விராலிக் குறவஞ்சி’ என்னும் நூலை இயற்றியுள்ளார்.
*விராலிமலை நிறைய மயில்கள் நடமாடும் சோலை. எனவே இது மயில்கள் சரணாலயமாக விளங்குகிறது.
*அசுர மயில்- சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமான் அசுரனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி ஆட்கொண்ட வரலாறு நாம் அறிந்ததே. அதில் சேவலை எப்பொழுதும் கொடியில் வைத்திருக்கும் முருகப்பெருமான் இத்திருத்தலத்தில் அசுரனை மயில் வாகனமாக வைத்துள்ளார். பொதுவாக மயில் முருகப்பெருமானின் இடது புறம் இருக்குமானால் அது முருகனின் மயில் வாகனமாகும். மயில் முருகனுக்கு வலது புறம் இருந்தால் அது இந்திர மயில் எனப்படும். அதாவது முருகன் போருக்குச் செல்லும் பொழுது இந்திரனே மயிலாக மாறி வாகனமானார் என்றும் அத்தகைய இந்திர மயிலே முருகனுக்கு வலது புறம் இருக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதுவே முருகனுக்கு வலது புறம் இருக்கும் மயில் தெற்கு நோக்கி இருந்தால் அது அசுர மயில் ஆகும். இத்திருத்தலத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
தல விருட்சம்: விராலி மரம் / காசி வில்வம்
தல தீர்த்தம்: சரவணப் பொய்கை. இதை நாகதீர்த்தம் என்றும் வழங்குகின்றனர்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் திருக்கோவில் அமைப்பு:
விராலிமலை 207 படிகள் கொண்ட சிறிய மலையாகும். மலையின் அடிவாரத்தில் தெற்குப் பகுதியில் சரவண பொய்கை அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தின் நடுவில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. படி ஏறும் முன் இடது புறம் சிறிய விநாயகர் சன்னிதியும் வலது புறம் கொடிமரம் பலிபீடத்துடன் கூடிய குமாரசாமி சன்னிதியும் உள்ளது. அதன் எதிரில் ஒரு கல் மண்டபம் உள்ளது. விநாயகர் சன்னிதியை அடுத்து வீரகேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சிவபெருமான் தனிச்சன்னதியில் அருள்கிறார். படியேறி மேலே செல்லும் வழியில் இளைப்பாற மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் இரண்டாவது மண்டபத்தில் வண்டிப்பாதை வந்து சேர்கிறது. அங்கே வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் படியேரிவரும் பக்தர்களுக்கு இடதுபுறம் இடும்பர்-கடம்பர் சன்னதியும் வலதுபுறம் பழனியாண்டவர் சன்னிதியும் உள்ளது. அதனருகிலேயே விராலிமலையிலை முருகனை அருணகிரிநாதர் வழிபாடு செய்வது போல் சுதைச்சிற்பம் உள்ளது. அதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஒரு சிறிய குகை சன்னதியும் உள்ளது. அந்த சன்னிதி சுவற்றில் மயில் சாட்சி சொன்னது வரலாறு புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மயில் சாட்சி சொன்ன வரலாறு:
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியைச் சேர்ந்த M.M.பழனியப்ப செட்டியார் என்பவர் பர்மாவில் கப்பல் வணிகம் செய்துவந்தார். அவர் மணப்பாறையில் வாங்கிய மாடு விராலிமலையில் தொலைந்து போனது. இந்த வழக்கில் முருக பக்தரான பழனியப்ப செட்டியாருக்கு விராலிமலை மயில் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னது. அதற்கு நன்றி கூற பழனியப்ப செட்டியார் கோவிலைப் புணரமைப்பு செய்து கொடுத்தார். இந்த சம்பவங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி சுவற்றில் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
அருணகிரிநாதர் அருள் பெற்ற சந்தனக்கோட்டம்:
இளைப்பாறும் மண்டபத்தைத் தாண்டி மேலேற, படிக்கட்டுகளின் முடிவில் சந்தனகோட்ட மண்டபம் உள்ளது. அதில் படிப்பாதைக்கு நேரே விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த மண்டபத்தில் தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளில் ஒன்றான பரகாயப்பிரவேசம் (கூடுவிட்டு கூடுபாயும் சித்தி) என்ற சித்தியை முருகப்பெருமான் தந்தருளினார். எனவே பக்தர்கள் இந்த மண்டபத்தில் தியானம் செய்கின்றனர். சந்தன கோட்டம் மண்டபத்தை ஒட்டி நவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து இராஜகோபுரம் தெற்கு நோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் பிரகாரம்:
இராஜ கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரே பிரகாரத்துடன் சண்முக மூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள கல் தூண்களில், நாரதமுனிவர், காஷ்யப்ப முனிவர், அருந்ததி, அருணகிரிநாதர், வசிஷ்டர், ஆறுமுக பெருமான் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. கருவரைக்குள் நுழையும் வழியில் இடதுபுறம் சிவன், குரு தட்சிணாமூர்த்தி சன்னதிகளும் வலதுபுறம் பார்வதி சன்னதியும் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் மைக்கண்ணுடையாள் அம்மன் சன்னதி உள்ளது. மலை ஏறும் முன் இந்த அம்மனை வழிபடுகின்றனர். அம்மன் சன்னதியின் எதிரே நவக்கிரகங்கள் சன்னதி உள்ளது. பிரகார முடிவில் காலபைரவர் அருள்கிறார். கோஷ்டத்தில் கணபதி, மித்திரசண்டர், பிரம்மா, துர்க்கை போன்ற கோஷ்ட தேவதைகள் உள்ளன.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் மகா மண்டபம்:
பிரகார வலம் முடிந்ததும் கருவரைக்கு வெளியே மகா மண்டபம் உள்ளது. அதன் வாயிலில் முருகப்பெருமானின் தம்பியும் படைத்தளபதியுமான வீரபாகுவிற்கு வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் பெரிய திரு உருவம் உள்ளது.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் உற்சவர் சன்னிதி:
மகாமண்டபத்தில் நுழைந்ததும் நடராஜர், சிவகாமி, மாணிக்க விநாயகர், பெருமாள், தாயார், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், விநாயகர் மற்றும் நாரதருக்கு உற்சவர் சிலைகள் உள்ளன.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் மூலவர்:
மகாமண்டபத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் வள்ளல் விராலிமலை முருகப் பெருமான் 10 அடி உயரத்தில் ஆறு முகங்களும் பன்னிருதோளும் கொண்டு அசுர மயில் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை சுவற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறைக்கு எதிரே கொடிமரம் அழகாக காட்சியளிக்கிறது.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் திருவிழாக்கள்:
முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் மாதாந்திர சஷ்டி கிருத்திகை போன்ற சிறப்பு நாட்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அது தவிர இத்திருத்தலத்தில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய நான்கு விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் கொடிக்கட்டு தேரோட்டத்துடன் 10 நாள் விழாவாக நடைபெறுகிறது.. சூரசம்ஹாரம் 6 நாள் விழாவாக சிறப்புடன் நடைபெறுகிறது. வேறுவங்கும் இல்லாதபடி புராணத்தில் நிகழ்ந்தது போலவே சூரபத்மன் முதலான அசுரர்கள் ஒவ்வொருவரும் கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளிளும் சம்காரம் செய்யப்படுகின்றனர். ஆடிக் கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் வருடப் பிறப்பு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இத்திருத்தல இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:
ஆணவம் அழிக்கும் தலம் என்பதால் முடி இறக்குதல் சிறப்பு வேண்டுதலாக நிறைவேற்றப்படுகிறது. மேலும் பக்தர்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேற முருகனிடம் நேர்த்திக்கடன் வைத்து காரியம் நிறைவேறியதும் சுவாமிக்கு சுருட்டு வாங்கி படைக்கின்றனர். தவிர காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், கார்த்திகை விரதம் இருத்தல், குறிப்பாக நோய் தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் பெண்கள் அடிப்பிரதட்சணமும் கும்பிடுதண் (பிரகார சுற்றுப் பாதை முழுவதும் விழுந்து நமஸ்காரம் செய்வது) நிறைவேற்றுகின்றனர். மேலும் சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி போன்றவை சிறப்பாக செய்யப்படுகின்றன.
அருணகிரிநாதருக்கு ஞானம் வழங்கிய பெருமான் என்பதால் கல்வி மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்க இத்தல முருகனை வழிபடுகின்றனர்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம் மற்றும் பூஜைகள்.
விராலிமலை முருகப் பெருமானுக்கு ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கோவில் தினசரி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும். (விழாக்காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது).
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை:
தமிழகத்தில் செல்லமாக குழந்தைகளை “நீ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை” என்று கூறுவதுண்டு. இந்த சொல்வழக்கு விராலிமலையில் பக்தர்கள் செய்யும் வினோத வழிபாட்டால் வந்த வழக்காகும். அதாவது நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கூட விராலிமலை சண்முகநாதரை வணங்கி குழந்தை பிறந்தால் முருகனுக்கு அற்பணிப்பதாக வேண்டிக்கொண்டால் நிச்சயமாக குழந்தைச்செல்வம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும் குழந்தை பிறந்த உடனை வேண்டியது போலவே அக்குழந்தையை விராலிமலை முருகனுக்கு அற்பணிப்பத்துவிடுகின்றனர். பின் குழந்தையின் மாமன்மார்களோ உறவினர்களோ குழந்தைக்கு பதிலாக தவிட்டை கொடுத்துவிட்டு பிள்ளையை வாங்கிச்செல்கின்றனர். ஆக தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்றால் முருகப்பெருமானிடம் தவமிருந்து வாங்கிய பிள்ளை என்று புரிந்துகொள்ள வேண்டும்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் அமைவிடம்:
திருச்சியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர்கள் தொலைவில் திருச்சி – மதுரை வழித்தடத்தில் அமைந்துள்ளது. சாலை வழியாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: திருச்சி, விராலிமலை இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்: விராலிமலை பேருந்து நிலையம்.
திருச்சி மற்றும் விராலிமலையில் பல தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளும் உள்ளன.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:
திருப்புகழை அருளிய அருணகிரிநாதருக்கு வழங்கியது போல இத்தலத்திற்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு முருகப் பெருமான் இந்திரியத்தை அடக்கி ஆளும் வல்லமையையும் ஞானத்தையும் காரிய சித்தியையும் வழங்குகிறார். மேலும் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகன் வள்ளியம்மையை மணமுடித்த தலம் என்பதால் காதல் கைகூட, கல்யாண வாழ்க்கை சிறக்க இத்தலமுருகன் அருள்புரிகிறார். நீராத நோய்தீர, வழக்குகளில் வெற்றிபெற, சாப விமோச்சனம் பெற இத்தல இறைவன் அருள்புரிகிறார்.
விராலிமலை சண்முகநாதர் திருக்கோவில் முகவரி:
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவில்
விராலிமலை, புதுக்கோட்டை – 621 316.
தமிழ்நாடு.
04322 221084, 9842390416
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா