அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில்
அறியாமையில் வழிபட்டால் கூட முக்தி அளிக்கும் கருணாசாகர மூர்த்தியான சிவபெருமான், வேடனுக்கு ஒரு வில்வ வனத்தில் முக்தி அளித்து ஆட்கொண்டார். ‘யாவர்க்குமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை’ என்ற வார்த்தைப்படி எளிமையே உருவான ஈசன், பச்சிலை பறித்துப் போட்டால் கூட பாவங்களைப் போக்கி சிவபதம் அருள்வார் என்று உலகுக்கு எடுத்துக்காட்டியது இத்திருத்தலத்தில் தான். சிவராத்திரி கோவில்கள் என்றழைக்கப்படும் திருவைகாவூர்,
திருக்கோகர்ணம், ஶ்ரீசைலம், திருக்காளத்தி, ஆகிய திருத்தலங்களில் இந்த திருவைகாவூர் திருத்தலமே முதன்மையானதாகும். ஏனெனில் சிவராத்திரி வழிபாடு பிறந்ததே இத்திருவைகாவூரில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கொள்ளிடக் கரையில் எழில் மிக அமைந்திருக்கும் திருவைகாவூர் (Thiruvaikavur) எனும் ஊரில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில் பற்றி விரிவான விபரங்களை இனிக் காண்போம்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் பெயர்க்காரணம்:
இத்தலம் முற்காலத்தில் வில்வ மரங்கள் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால் இது வில்வ ஆரண்யம், வில்வவனம் என்றழைக்கப்பட்டது. அடர்ந்த வில்வ வனத்தில் எழுந்தருளியதால் இறைவன் வில்வ வனேசுவரர் என்றே வழங்கப்பட்டார். மேலும் வில்வ அர்ச்சனை செய்வதன் மகிமையை, வேடனுக்கு முக்தி அளித்த திருவிளையாடலில் உலகுக்கு எடுத்துரைத்த இறைவன் என்பதாலும் வில்வவனேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் சிறப்புகள்:
*11-ஆவது நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்திற்குத் திருப்பணி செய்திருப்பதாகக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதனால் இத்திருத்தலம் 11ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என அறியப்படுகிறது.
*தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்கள் 274 ல் 48வது திருத்தலம். இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டதாகும்.
*இக்கோயிலில் இரண்டு முருகன் சன்னதிகள் உள்ளன. ஒருவர், மயில் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இந்த முருகன் திரு உருவம் எட்டுக்குடி, எண்கண், சிக்கல் முருகன் கோவில் சிற்பங்களை வடித்த சிற்பியால் வடிக்கப்பட்டதாகும். இறைவன் திருமேனியில் உள்ள நகம் கை ரேகை போன்றவே மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. சுவாமி மயில், திருவாட்சி ஆகிய அனைத்தும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டதாகும். மேலும் மயிலின் முகம் திசை மாறியுள்ளது. இன்னொருவர் முத்துக்குமார சுவாமி. இவர் வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் மயில் மேல் வலது காலை ஊன்றி வேலேந்தி சம்ஹார மூர்த்தியாக அருள்புரிகிறார். இங்குள்ள சுப்பிரமணியரை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.
* அம்பிகைக்கு எதிரே ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே இரண்டு சண்டிகேஷ்வரர்கள் சன்னதி உள்ளன.மேலும் பஞ்ச பைரவர் சன்னதி இத்தல சிறப்புகளில் ஒன்றாகும்.
*இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
*இத்திருத்தலம் கொடுமுடியில் உள்ளது போல் அகத்தியருக்கு திருக்கல்யாணக் காட்சி அளித்த கல்யாணத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
*சிவராத்திரி அன்று தனக்கு வில்வ அர்ச்சனை செய்த வேடனின் உயிரை எடுக்க வந்த எமனை இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சொரூபமான சிவபெருமான் கைத்தடியால் அடித்து விரட்டியடித்தார். எனவே இத்தலத்து குரு தட்சிணாமூர்த்தி வேறெங்கும் இல்லாத வகையில் ஜடாமுடியுடன் கையில் கம்பு, மான் மழுவுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
*சிவராத்திரி பூஜை செய்த வேடனின் ஆயுள் மகாசிவராத்திரியை அடுத்த நாள் முடிவதால் அவனது உயிரை எடுத்து செல்லும் நோக்கத்தோடு எமன் வேடனை நெருங்கினான். தீய எண்ணத்தோடு ஆலயத்திற்குள் வந்த யமனை நந்தியம்பெருமான் சீரிப்பாய்ந்து ஆலயத்தின் வெளியே விரட்டினார். நந்தியின் கொம்பால் தூக்கி எறியப்பட்ட எமன் கோவில் வாசலில் உள்ள குளத்தில் சென்று விழுந்தான். அவ்வாறு எமன் விழுந்த குளம் எம தீர்த்தம் என்றானது. தீய எண்ணத்துடன் ஆலயத்தில் நுழைந்த தோஷம் நீங்க எமன் வழிபட்ட தலமாகும்.
*ஆலயத்தின் வெளியே சென்ற எமன், மீண்டும் உள்ளே வராதபடி காவல் செய்யும் பொருட்டு வாசலை நோக்கி அமர்ந்தார் நந்தி. பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கியபடி அமர்ந்திருக்கும் நந்தி இத்திருத்தலத்தில் மட்டும் நுழைவாயிலை நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அமைந்துள்ள அனைத்து நந்திகளும் வெளிப்புறம் நோக்கியே அமைந்துள்ளது வேறெந்த தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
*படைப்புகள் அனைத்தும் அழிந்து போகும் பிரளய காலத்தில் தன் படைப்புத் தொழில் அழிந்து போகாமல் இருக்க பிரமன் இத்திருத்தலத்தில் கேணி ஒன்றை அமைத்து வழிபட்டுப் பின் கோவில் வாயிலில் துவார பாலகராக நின்று தவம் செய்தார். அதேபோல் திருமாலும் சலந்திரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் பொய்யுரைத்தார். இதை அறிந்த அவள் விஷ்ணுவை சபித்தாள். பொய்யுரைத்த பாவம் நீங்க விஷ்ணுவும் துவாரபாலகராக இத்தலத்தில் தவமிருந்தார். கோவில் அர்த்த மண்டப வாயிலில் பிரம்மனும் விஷ்ணுவும் துவார பாலகர்களாக வீற்றிருப்பது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
* இத்தலத்தில் பிரமன் திருமால் சிவன் மூவரும் சேர்ந்து இருப்பதால் மும்மூர்த்திகள் திருத்தலமாக விளங்குகிறது.
*உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும் இத்திருத்தலத்திற்கு வந்து வில்வவனேசுவரரை வேண்டி சாப விமோச்சனம் பெற்றனர்.
*பிரளய காலத்தில் அனைத்தும் அழிந்து போகும் என்பதால் வேதங்கள், தாங்களும் அழிந்து போகாமல் இருக்க சிவபெருமானைச் சரணடைந்து உபயம் கேட்டன. சிவபெருமானும் ஊழிக்காலத்திலும் வில்வ மரங்கள் அழியாது. எனவே பூலோகம் சென்று வில்வமரங்களாக தவம் செய்யுங்கள் என ஆலோசனை வழங்கினார். அவ்வாறே வேதங்கள் ஊழிக்காலத்தில் இத்திருத்தலத்தில் வில்வ மரங்களாக நின்று தவம் புரிந்தன. இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் வரலாறு:
வேடனுக்கு முக்தி அளித்த திருவிளையாடல்
முன்னொருகாலத்தில் நவநிதி என்ற முனிவர் வில்வ வனத்தில் ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அதேசமயம் வேடன் ஒருவன் கொள்ளிடக் கரையில் வேட்டையாட ஒரு மானைத் துரத்திச் சென்றான். மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடிச் சென்று வில்வ வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த நவநிதி முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. வேடன் மானின் மீது அம்பு தொடுக்கக் குறிவைத்தான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேடனை வேண்டினார். வேடன் அதை மறுத்தான். முனிவரோ தன்னிடம் தஞ்சமடைந்த மானின் உயிர் போக விடமாட்டேன் என்று தடுக்க, மூட வேடனோ அவர் மீதும் அம்பு தொடுக்க ஆயத்தமானான்.
அடியவர்க்கு ஒரு ஆபத்து எனில் தாயினும் பரிந்து வந்து காக்கும் அம்மையப்பன், புலி வடிவில் வந்து வேடனை விரட்டினார். உயிருக்கு பயந்த வேடன் அருகிலுள்ள வில்வ மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலியோ அவனை விடுவதாயில்லை. விடிய விடிய வில்வ மரத்தடியிலேயே அமர்ந்திருந்தது. வேடனும் உயிருக்கு பயந்து மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். பசியிலும் களைப்பிலும் இருந்த வேடன் தூங்கிவிடாமல் இருக்க வில்வ மரத்தில் இருந்து ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவை கீழே புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்தது. பொழுதும் புலர்ந்தது. புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியலில் இருந்து
நெடுநேரமாகியும் புலி வெளியே வராததால், தைரியத்தை வரவழைத்து கொண்டு வேடன் கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்தான். அங்கே புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. வேடனுக்கு விளங்கியது. வந்தது வேங்கை அல்ல சாக்ஷாத் அந்த சிவபெருமான் தான் என்று. வேடனின் அறியாமை இருள் விலகியது. கண்ணீர் பெருக சிவபெருமானை கைகூப்பி வணங்கினான். தன் விஸ்வரூபம் தரிசனம் தந்து வேடனை ஆட்கொண்டார் எம்பெருமான் ஈசன். இத்திருத்தலத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்தது ஒரு மகா சிவராத்திரி அன்று தான். எனவே ஆண்டு தோறும் இந்த கோவிலில் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று வேடன் மோட்சம் என்ற விழா நடைபெற்றது. சிவராத்திரி தலங்களில் ஒன்றான இங்கு மகா சிவராத்திரி மூன்று நாள் விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல இறைவன்: வில்வவனேசுவரர்/வில்வநாத சுவாமி
இறைவி பெயர்: மங்களாம்பிகை/ சர்வஜன இரட்சகி.
தல விருட்சம்: வில்வமரம்
தல தீர்த்தம்: எம தீர்த்தம், அக்னி தீர்த்தம்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் அமைப்பு:
இராஜகோபுரம்:
இத்திருத்தலம் சோழர்கள் கால கட்டடக்கலை அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இத்திருத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை. இராஜ கோபுரம் அமைக்கும் வழக்கம் உருவான காலகட்டத்திற்கும் முற்பட்ட கோவிலாகக் கருதப்படுகிறது.
கோயிலின் வெளிப்புறம் மிக நீண்ட உயரமான மதில் சுவரும், முகப்பில் வவ்வாலத்தி மண்டபமும் காணப்படுகிறன. மண்டபத்துள் நுழைந்தால் முகப்பில் வேடனை, புலி விரட்டிய திருவிளையாடல் சுதை சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கலையழகுடன் கூடிய சிறிய கோபுரம் ஒன்று காணப்படுகிறது. இந்தகோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். தென்புற வாயிலில் கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.
திருக்கோவில் பிரகாரம்:
கோபுரத்தை கடந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று அமைந்துள்ளது. பிரகாரத்தில், சுந்தரமூர்த்திவிநாயகர் சன்னதி, சூரிய, சந்திர பகவான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தகன்னியர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, முத்துக்குமார் சன்னதி, பஞ்ச பைரவர் சன்னதி, இரண்டு சண்டிகேஷ்வரர்கள் சன்னதி மற்றும் சனீஸ்வரன் தனிச்சன்னதியும் அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, நாராயணி, அகத்தியர் திரு உருவங்களும், கோஷ்டத்தில் கணபதி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மூலவர் மற்றும் அம்பாள் சன்னதி:
பிரகார வலம் வந்து கருவறைக்குள் நுழைந்தால் இத்தல மூலவர் அருள்மிகு வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருணைக்கடலான சிவபெருமானை தரிசித்து விட்டு வெளியேறினால், இடதுபுறம் வளைக்கை நாயகி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் தனிச்சன்னதியில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. தாயிடம் தங்கள் குறைகளை முறையிடும் பக்தர்கள் இந்த சக்கரத்திற்கு அருகே நின்று வேண்டிக் கொண்டால் அம்பாளே நம்முடன் பேசுவது உணர முடியும் என்று கூறுகின்றனர்.
மேலும் அடியவர்கள் வேண்டுதல்கள் இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார் என்றும் அவ்வாறே குறித்த நாளுக்குள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். வேண்டுவோர் குறை அனைத்தும் தீர்க்கும் தாய் என்பதால் அம்பாளுக்கு சர்வஜன ரட்சகி என்ற திரு நாமமும் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அம்பாள் சன்னதியும் சுவாமி சன்னதியும் நேர்கோட்டில் ஒரே திசையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு உள்ள கோவில்கள் கல்யாணத்திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஈசன் கயிலாயத்தில் நடந்த கல்யாணக் காட்சியை அகத்தியர்ருக்கு காட்சிதந்து அருளிய ஆலயங்களில் ஒன்றாகும்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்:
*மகா சிவராத்திரி கோவில் என்றழைக்கப்படும் இத்தலத்தில் மாசி மாத சிவராத்திரியானது மூன்று நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
* மகா சிவராத்திரி அன்று இரவு வேடன் மோட்சம் என்ற நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றது.
* மேலும் ஆருத்ரா தரிசனம், திருவாதிரை, திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், சித்திரா பௌர்ணமி வழிபாடு ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.
அம்மாவாசை அன்று தீர்த்தவாரி நடைபெற்று அதில் பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா வருகின்றனர். மேலும் அன்று இரவு ஓலையால் கட்டப்பட்ட சப்பரத்தில் ஓலையால் செய்யப்பட்ட நந்தி, சுவாமி, அம்பாள் ஆகியோர் வீதியுலா வருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இத்திருத்தலத்தில் தனிச்சன்னதியில் வீற்றிருக்கும் சனிபகவானை தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
வேறெந்த கோவிலிலும் இல்லாத வகையில் முத்துக்குமாரசுவாமி சம்ஹார மூர்த்தியாக அருள்புரிவதால் சூரசம்காரம் விழா சிறப்பாக நடைபெருகிறது. இத்தல முருகப்பெருமானை தொடர்ந்து 6 செவ்வாய் கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட எதிரிகள் விலகுவர், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் பகைவர்கள் தொல்லை விலகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:
*இத்தல இறைவனை சிவராத்திரி அன்று விரதமிருந்து உறங்காமல் விழித்திருந்து வழிபட அறியாமை நீங்கி வேடனுக்கு கிடைத்து போல சிவ தரிசனமும் சிவலோகப் பதவியும் கிட்டும் என்பது நம்பிக்கை.
*தீய நோக்கத்துடன் ஆலயத்திற்குள் நுழைந்த எமனுக்கு ஏற்பட்ட பாவம் நீங்க அவன் இத்திருத்தலத்திலேயே சில காலம் தங்கி இருந்து தவம் செய்து விமோசனம் பெற்றான். அவ்வாறு தவம் செய்த போது தான் விழுந்த குளத்து நீரிலேயே இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். இன்றும் இந்த எம தீர்த்தத்தில் நீராடி வில்வவனேசுவரரை வழிபடுவோருக்கு எமபயம் போகும் என்பது நம்பிக்கை.
*இத்தலத்து ஈசனை தரிசித்து வணங்கினால் பாவங்கள் நீங்கு அறிவொளியும் சிவலோக பதவியும் கிட்டும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, கல்யாண வரம், குழந்தை வரம், செல்வம், புகழ், மனஅமைதி கிடைக்கும்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும்
கோவில் நடை திறந்திருக்கும்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் அமைவிடம்:
கோவில்களின் நகரமாம் கும்பகோணத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கும்பகோணம் – திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பேருந்துகள் செயல்படுகின்றன. கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் கும்பகோணம் திருவையாறு செல்லும் சாலையில் உள்ள அண்டக்குடி எனும் கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சுவாமி மலையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவலஞ்சுழியில் இருந்தும் சாலைவழியாக இத்தலத்தை அடையலாம்.
அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர் இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்: கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்.
திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோவில் முகவரி:
அருள்மிகு வளைக்கை நாயகி உடனுறை வில்வவனேசுவரர் திருக்கோவில்
திருவைகாவூர், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு- 6123021
தொலைபேசி: 8148799242, 8056208166