திருமண வரம் தரும் திருநாள் – பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் 2024 நாள் மற்றும் நேரம்:
ஒவ்வொரு மாதமும் வரும் முழு நிலவு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் தை மாதம் பூசம் நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பௌர்ணமி தைப்பூசம் என்றும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என்றும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பௌர்ணமி பங்குனி உத்திரம் என்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களாகவே உள்ளன. ஆனால் பொதுவாகவே பௌர்ணமி சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கும் உகந்த நாட்களே.
எனினும் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக போற்றப்படுவது, 12வது மாதமான பங்குனி மாதத்தில் 12வது ராசியான மீன ராசியில் 12வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரம் இணைந்து வரும் அபூர்வ நிகழ்வே பங்குனி உத்திரம் எனப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி பௌர்ணமி வந்தாலும் 25ம் தேதி காலையில் தான் உத்திரம் வருகிறது எனவே உத்திர நட்சத்திரத்துடன் இணைந்து வரும் அந்த நேரமே பங்குனி உத்திர வழிபாடு மேற்கொள்ள உகந்த நேரமாகும்.
பங்குனி உத்திரத் திருநாளின் சிறப்புகள்:
‘பங்குனி உத்திரத் திருநாளுக்கு பல சிறப்புகள் இருந்தாலும் இந்நாள் “‘கல்யாண விரதத்திருநாள்” என்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக பிரபலமாகாத இந்த விரதத்தை, திருமண வாழ்க்கை அமையக் காத்திருப்பவர்களும், திருமணம் ஆகியும் இல்வாழ்வில் பிரிந்து வாழ்பவர்களும், இல்லறத்தில் பிரச்சனைகளை சந்திப்பவர்களும் இப்பங்குனி உத்திர நாளில் கல்யாண விரதமிருந்து விருப்ப தெய்வத்தினை வேண்டிக்கொள்ள இல்வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரம் “கல்யாண விரதம்” – பெயர்க்காரணம்:
ஈசன் ஒருமுறை பல யுகங்களாக தியானத்தில் மூழ்கிப்போனார். இதனால் உலக இயக்கம் நின்று போனது. பிரபஞ்சம் மீண்டும் இயக்கம் பெற தேர்களும் முனிவர்களும் பார்வதி தேவியிடம் வேண்டிக்கொண்டனர். எனவே, அன்னை பார்வதி காமனிடம் சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி காமனும் சிவபெருமான் மீது கரும்பு வில்லில் மலர்க் கனை தொடுத்தார். தனது தியானத்தைக் கலைத்த காமனை சிவபெருமான் தன் நெற்றிக்கண் திறந்து தகனம் செய்தார். இதனால் உயிர்கள் உருவாவது நிற்றுபோனது. கணவனை இழந்த ரதிதேவி சிவனை நோக்கி கடும் தவமிருந்து காமனை மீண்டும் உயிர்பிக்க வேண்டினாள்.
அவளது பக்தியிலும் பதிபக்தியிலும் மகிழ்ந்த சிவபெருமான் பங்குனி உத்திர நாளில் தான் காமனை மீண்டும் உயிர்பெறச் செய்தார். பின் முருகப்பெருமான் அவதாரம் செய்யத் திருவுளம் கொண்ட ஈசன் அன்னை பார்வதியை மணமுடித்து, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மீனாட்சி சுந்தரேஸ்வராக திரு மணக்கோலத்தில் காட்சி அருளினார். காஞ்சி திருத்தலத்தில் அன்னை காமாட்சி ஆற்று மணலில் லிங்கமாக வடிவமைத்து ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்து ஈசனை அடைந்தது இந்நாளில் தான்.
மீண்டும் உயிர் பெற்றதும் மன்மதன் ரதிதேவியை மீண்டும் மணந்தது இந்நாளில் தான். நான்முகனும் சரஸ்வதியும் திருமணம் செய்ததும், தேவேந்திரன் இந்திராணியைத் திருமணம் செய்ததும் இப்பங்குனி உத்திரநந்நாளிலே.
ஸ்ரீ என்றால் திருமகள். நிவாசம் என்றால் குடியிருத்தல். ஸ்ரீனிவாசன் என்றால் திருமகள் குடியிருக்கும் என்று பொருள். திருமாலுக்கு ‘ஸ்ரீனிவாச பெருமாள்’ என்ற திருநாமம் உண்டாகக் காரணமாக, தாயார் மகாலட்சுமி அவதரித்ததும் திருமாலின் நெஞ்சில் குடிகொண்டதும் பங்குனி உத்திரத் திருளாளில் தான். மனிதப் பெண்ணாகப் பிறந்து இறைவனைக் கணவனாக அடைந்த கோதை ஆண்டாள் ஸ்ரீ அரங்கநாதப் பெருமானுடன் திருமணக்கோலம் கொண்டதும் இந்த பங்குனி உத்திரத் திருளாளில் தான்.
பூர்வ ஜென்மத்தில் திருமாலின் புதல்விகளாக இருந்த அமுதவள்ளி, சுந்தரவள்ளி ஆகியோர் முருகப்பெருமானை கணவனாக அடைய வேண்டி தவமிருந்து பூலோகத்தில் மானின் வயிற்றில் பிறந்தது இந்நாளில் தான். பின் அமுதவள்ளி தேவேந்திரனிடம் தேவயானையாகவும், சுந்தரவள்ளி வேடுவ குல அரசன் நம்பிராஜனிடம் வள்ளியாகவும் வளர்ந்து, இருவரும் தங்கள் விருப்பப்படியே முருகப் பெருமானை மணம்முடித்த சுபநாள் ஒரு பங்குனி உத்திரத் திருநாளே.
மேலும் மிதிலை நகரில் மஹரிஷி விஸ்வாமித்திரர் தலைமையில் ஜனக மகாராஜாவின் புதல்வர்கள் ராமர்-சீதா, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்துருக்கனன்-ஸ்ருதகீர்த்தி ஆகியோரின் மணவிழா நடந்ததும் இப்பங்குனி உத்திர திருநாளிலேதான்.
பிரஜாபதி தட்சனின் மகள்களான இருபத்தேழு நட்சத்திரங்களை சந்திரபகவான் திருமணம் செய்து கொண்டதும் இந்நாளிலே தான்.
அகத்திய மாமுனிவர் ஈசனின் ஆணைப்படி லோபமுத்திரையை மணம் செய்ததும் இந்நாளில் தான். இவ்வாறு இந்த பங்குனி உத்திர திருநாளில் பல இறை அவதாரங்கள் திருமணம் கொண்டதால் இந்நாள் சாஸ்திரங்களில் கல்யாண திருநாள் என்றே போற்றப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து இஷ்ட தெய்வத்தை வழிபட கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரம் நாளின் மற்ற சிறப்புகள்:
பங்குனி மாத பௌர்ணமி அன்று உத்திரம் நட்சத்திரத்துடன் சந்திரன் நேர்கோட்டில் வரும்போது தனது 64 கலைகளையும் பொழிவதால் மிகவும் பெரியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் ஜோதிடரீதியாக பங்குனி மாதம் என்பதால் ஆரோக்கியகாரகனான சூரியன் அதிக வெப்பமுடனும், பௌர்ணமி என்பதால் மனோகாரகனான சந்திரன் முழு அதிக குளுமையுடனும் இருப்பர். எனவே இந்நாளில் உடலும் மனமும் சம பலத்துடன் இருக்கும் எனவே இன்றைய தினம் உலகின் உயிர்களனைத்தும் புத்துணர்வுடன் சக்தியின் உச்ச நிலையில் இருக்கும். தாவரங்கள் அனைத்தும் பூத்து குலுங்கும். எனவே தான் பங்குனி வருடத்தின் வசந்த மாதமாக கருதப்படுகிறது. சக்தி நிலை அதிகமாக இருப்பதால் தியானம் வழிபாடு போன்ற ஆன்ம சாதகங்கள் செய்யவும் கல்வி கலைகள் போன்ற ஞான உபதேசம் பெறுவதற்கும் புதிய தொழில் தொடங்கவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு சூரிய சந்திர பூசைகள்
நவக்கிரகத் தலங்களில் சந்திரன் பரிகாரத்தலமாக விளங்கும் திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் மூலவரான சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரியனின் அதிகாலை கிரணங்கள் விழுகிறது. அதேபோல் மாலை 6 மணிக்கு பூரணச்சந்திரனின் ஒளி லிங்கத்தின் மீது விழுகிறது. இன்றுவரை ஒவ்வொரு வருடமும் இந்த அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. எனவே இப்பங்குனி உத்திரத்தன்று திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு சூரிய சந்திர பூசைகள் நடைபெறுகின்றன.
அத்தோடு அசுரர்களின் தீமைகளை ஒழிக்க சிவபாலன் முருகப்பெருமான் போர் துவங்கியது இந்நாளிதான். சூரபத்மனின் குருவான இடும்பன், கயிலாய மலையில் இருந்து, சிவன் மலை சக்தி மலைகளை, அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க, தென்னகம் கொண்டு வந்து சேர்க்க, அவற்றை காவடியாக கட்டி சமந்து பயணம் துவங்கியது இத்தினத்தில் தான். எனவேதான் முருகனின் அறுபடை வீடுகளிலும் பங்குனி உத்திரத் திருநாள்ளில் பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரை சென்று முருகப்பெருமானை வழிபடுகின்றனர். குறிப்பாக பழனியிலும், திருப்பரங்குன்றத்திலும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பக்தன் மார்க்கண்டேயனை எமனின் பாசக் கயிற்றில் இருந்து காப்பதற்காக, ஈசன் காலனை காலால் உதைத்தும் இனத்தில் தான். சிவனிடம் கொண்ட பேரன்பால் இளமையிலேயே பேயுருவம் வேண்டி பெற்ற காரைக்கால் அம்மையார், தன் கைகளால் நடந்து கயிலாயம் சென்று, ஆதி அந்தம் இல்லாத அம்மையப்பனால் அம்மையே என்று அழைக்கப்பட்டு முக்தியடைந்ததும் இந்த திருநாளில் தான்.
சுவாமி ஐயப்பன் அவதரித்த நாள்
வில்லாளி வீரன், வீர மணிகண்டன் என போற்றப்படும் சுவாமி ஐயப்பன் அவதரித்ததும், வில்லுக்கோர் விஜயன் என்று பெயர் பெற்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் அவதரித்ததும் இப்பங்குனி உத்திரத் திருளாளில் தான்.
பங்குனி உத்திரம் விரதம் இருக்கும் முறை:
பங்குனி உத்திரம் விரதம் இருநந்து வழிபட விரும்புபவர்கள் பௌர்ணமிக்கு முன் தினமே எளிமையான சைவ உணவை எடுத்துக் கொண்ள்ள வேண்டும். பௌர்ணமி அன்று அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை அறையில் முருகன், சிவன் திரு உருவங்கள் வைத்து வழிபடுபவர்கள் பால், தயிர், பன்னீர், சந்தனம் விபூதி ஆகிய எளிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து சிவப்பு மலர்கள் அல்லது வாசனை மலர்களைக் கொண்டு அலங்கரித்து, தூபம் தீபம் ஏற்றி கற்பூரம் காட்டி வழிபாடு செய்வது நல்லது. 16 வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானது. சர்க்கரை பொங்கல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் நைவேத்தியம் செய்யலாம்.
இயலாதவர்கள் குளிந்த நீரிலாவது அபிஷேகம் செய்து அவல் கரும்பு சர்க்கரை நைவேத்தியம் செய்யலாம். பின் திருப்புகழ், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்து இறைவழிபாடு செய்து நாள் முழுதும் விரதம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். பின் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அபிஷேகம் அலங்கார ஆராதனைகளில் கலந்துகொண்டு வழிபாடு செய்ய வேண்டும். பௌர்ணமி நிலவொளியில் கிரிவலம் செல்வது சிறந்த பலன்களை தரும்.
பங்குனி உத்திரம் நாளில் விரதமிருந்து முருகப்பெருமானுக்கு காவடி எடுக்க விரும்புபவர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து அதில் வன்னி இலைகள் இட்டு தீர்த்த காவடியாக முத்திரித்து பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்வது மிகச்சிறந்த பலன்களைத்தரும். தீர்த்த காவடி தவிர பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பக்தர்கள் தங்கள் விருப்பப்படி காவடிகள் எடுத்து சென்று சமர்பிக்கலாம். ஆனால் கட்டாயம் முருகனை மலை ஏறி வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திர வழிபாட்டு பலன்கள்:
பொதுவாகவே பங்குனி உத்திரம் நாளில் உலகெங்கும் உள்ள ஆலயங்களில் தீர்த்தவாரி, உற்சவம், தேர்த்திருவிழா போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இத்தனை சிறப்புகள் நிறைந்த பங்குனி உத்திரம் விரதம் இருந்தால், காதல் கைகூடும், கல்யாண வரம் கிடைக்கும், சக்தி தரும், முக்தி தரும், பாவங்கள் தீரும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரம் விரதமிருந்து வழிபட மறு பிறப்பு இன்றி சிவபதம் அடைவர் என்பது நம்பிக்கை. முருகன் வழிபாடு செய்பவர்கள் ஏதேனும் ஒரு படைவீட்டிற்கு சென்று வழிபடுவது உத்தமம். குறிப்பாக இந்த பங்குனி உத்திரத் திருளாளில் அன்பர்கள் அனைவரும் விரதமிருந்து பழநி சென்று பங்குனி தேரோட்டத்தில் கலந்துகொண்டு வழிபட கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் வேண்டியதெல்லாம் அருள்வான். அவ்வாறே ஈசன் வாசம் செய்யும் மலையை வலம் வந்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.