கயிலையில் தரிசித்த புண்ணியம் தரும் மாதவனேஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில்.
அன்பான ஆலயாத்ரா நண்பர்களே, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவரா பாடல் பெற்ற திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு சிவாலயம், அருள்மிகு மாதவனேஸ்வரர் திருக்கோயில் பற்றியும் அக்கோவிலின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு பலன்கள் குறித்தும் இப்பதிவில் விரிவாக காண்போம். இத்திருத்தலங்கள் இரண்டும், இரட்டை சிவாலயங்கள் என்றே போற்றப்படுகின்றன. திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தின் வெளியே வேப்பமரத்தடியில் உள்ள ஞான தீர்த்தமானது கேது தோஷ நிவர்த்திக்காக நீராட வேண்டிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் தீராத மனநோய்கள் தோல் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் இந்த கோயிலுக்கு அருகே நெடுஞ்சாலையின் மறுபுறம் இருக்கும் மாதவனேஸ்வரர் ஆலயமும் கேது பரிகார ஸ்தலமாகும். இதுவே இவ்விரு கோவில்களும் ஒரே கோவில் என்று நம்பக் காரணமாக உள்ளது.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் வரலாறு:
கேது,கிரக பதவி பெற்ற வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து, சாகாத வரம் அருளும் அமிர்தத்தை அடைந்தனர். சிமிகா என்னும் மாயையின் புத்திரனான சுரபானு தேவர்களை போல் மாறுவேடமிட்டு அமிர்தத்தை தானும் அருந்தினான். அசுரனான சுரபானு அமிர்தம் பருகியதை கண்டு கோபம் கொண்ட மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அவனை தலை வேறு உடல் வேறாக இரு துண்டாக வெட்டினார். ஆனால் அமுதம் பருகியதால் அவனது உயிர் பிரியவில்லை. பின் அசுரனின் தலைப்பாகம் ஒரு பாம்பின் உடலுடன் சேர்ந்து ராகுவாகவும், உடல் பாகம் பாம்பின் தலையோடு சேர்ந்து கேதுவாகவும் மாறின.
செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ராகுவும் கேதுவும் ஈசனை வணங்கி தவம் செய்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் இருவரையும் பூமியை கட்டுப்படுத்தும் கிரகங்களில் ஒன்றாக சேர்தார்.
இதில் கேது இத்தல இறைவனை பூஜித்ததாக தலவரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இக்கோயிலில் கேது சிவவழிபாடு செய்யும் புடைப்புச்சிற்பம் உள்ளது.
கோவில் உருவான வரலாறு:
இன்று திருமுருகன் பூண்டி என்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் முல்லை வனமான இருந்தது. கேது பூஜித்த லிங்கம் இந்த முல்லை வனத்தில் தான் அமைந்துள்ளது.
அதே வனத்தில் மாலாதரன் என்னும் வேடன் ஒருவன் வாழ்ந்துவந்தான். அவன் தினமும் மாலைவேளையில் காட்டில் பூக்கும் முல்லை மலர்களை பறித்து மாலை தொடுத்து அவனும் அவனது மனைவியும் அணிந்து கொள்வர். மறுநாள் காலை அதை இருவரும் வீசிவிடுவர்.
அவ்வாறு அவர்கள் வீசிய முல்லைப் பூமாலைகள் அங்கிருந்த, கேது வழிபட்ட சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்தன. அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இவ்வாறு அறியாமல் செய்த செயலினைக் கூட சிவபூஜையாக ஏற்றுக்கொண்ட கருணைப் பெருங்கடலான ஈசன், அவர்கள் இருவரையும் மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறக்க அருளினார். அவ்விருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களே இத்தல இறைவனுக்கு கோவில் எழுப்பினர் என்பது வரலாறு.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் பெயர் காரணம்:
மாதவி என்றால் முல்லை என்று பொருளாகும். முல்லை வனத்தில் எழுந்தருளி இருந்ததால் இத்தல இறைவன் “மாதவி வன ஈஸ்வரர்” என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி ‘மாதவனேஸ்வரர்’ என வழங்கப்படுகிறார்.
இத்தல இறைவி பக்தர்களுக்கு சகல மங்கலங்களையும் அருள்பவர் ஆதலால் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
திருவாசகத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தை பூண்டி மாநகர் என்று குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் திருப்புகழில்
கொங்கு ராஜபுரம் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் அமைப்பு:
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜ கோபுரம் இல்லை. கேது தோஷம் நீங்க விநாயகர் வழிபாடு முதன்மையான பரிகாரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் இத்திருத்தலத்தில் நுழைந்ததும் இடதுபுறம் வேப்பமரத்தடியில் தலவிநாயகர் நாகர்கள் சூழ சர்ப்ப விநாயகராக அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு வெளியே தூஜஸ்தம்பம் காணப்படுகிறது. அதன் நான்கு பக்கமும்
தூஜஸ்தம்பத்தை தாண்டி மற்ற சிவாலயங்கள் போல் பிரதோஷ நந்தி இல்லை. நேரடியாக கோவில் மண்டபத்தில் நுழைந்தால் மண்டபத்தின் இருபுறமும் சூரிய சந்திரர்கள் மூலவரை பார்த்தவாறு மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர். மண்டபத்தின் மேல் தளத்தல் பிரமாண்டமான நந்தியின் சுதை சிற்பம் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை போல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வெளிப்பிரகாரத்தை இடமிருந்து வலமாக சுற்றி வர, இடப்புறம் துர்வாச முனிவர் தோற்றுவித்த துர்வாச தீர்த்தகிணறு அமைந்துள்ளது. கண்ணி மூலையில் கணபதி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் குரு தக்ஷிணா மூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தின்கோஷ்டத்தில் பிரம்மன் சன்னிதி இல்லை. வடமேற்கு மூலையில் கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கேதுபகவானின் எதிரில் மாவிலங்க மரத்தடியில் நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடுத்து நவகிரக சன்னதி அமைந்துள்ளது.
மூலவர்:
பிரகாரம் சுற்றி வந்து மூலவரை தரிசிக்க மகாமண்டபத்தில் நுழைத்தால், மூலவர் சன்னதி வாயிலில் விநாயகரும் பாலசுப்பிரமணியர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் துவாரபாலகர்கள் வீற்றிருக்க
இத்தல இறைவன் மாதவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி கேதுவுக்கு அருள்புரிந்தவர் என்பதால் எப்போதும் நாகாபரணத்துடன் காட்சிதருகிறார். கருவறை முன்பு நந்தியம் பெருமான் எழுந்தருளியுள்ளார். இந்த அமைப்பு கைலாயத்தில் உள்ள நந்தி அமைப்பாகும். எனவே இத்தலத்தில் வழிபட்டால் கயிலையில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அருகே பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. நந்திக்கு வலதுபுறம் நடராஜப்பெருமான் சிவகாமி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது.
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.
மூலவருக்கு இடப்பக்கம் அன்னை மங்களாம்பிகை தனி சன்னதியில் சிம்மவாகனம் பலிபீடத்துடன் எழுந்தருளி நின்ற திருக்கோலத்தில் புன்னகை பூக்கும் முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
மற்ற சிறப்பு அமைப்புகள்:
மூலவர் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகப்பெருமான் ஈசனை வழிபடுதல், மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வேடுபறி செய்த திருவிளையாடல் மற்றும் கேது பகவான் பூஜித்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு பக்கத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி அமைக்கப்பட்டுள்ளன.
வடக்குப் பக்கத்தில் இத்தல இறைவனை துர்வாச முனிவர் வழிபடுதல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் தலவரலாற்றை எட்டு சுதைச் சிற்பங்களாக வடித்துள்ளனர்.
முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்:
- சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- கயிலாயத்தில் உள்ளதுபோல நந்தி பகவான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கு வழிபடுவது கயிலையில் தரிசித்த புண்ணியம் தரும்.
- இத்தல இறைவனுக்கு முதல் பூஜை செய்த பிறகே அருகே உள்ள முருகநாத சுவாமிக்கு பூஜை செய்யப்படுகிறது.
- கருவறை விமானமே சிவலிங்க வடிவில் அமைந்துள்ளது.
- விமான கோபுரத்திற்கு எதிரே மிகப் பெரிய வெள்ளை நிற நந்தி சுதை சிற்பமாக முன் மண்டபத்தின் மேல் கூரையில் அமைக்கப்பட்டுள்ளது.
- கேது பரிகார தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
- கேது வழிபட்டு கிரக பதவி பெற்ற தலம்.
- கிரகங்களின் அமைவிடத்தில் வடமேற்கு திசை கேதுவிற்குரியது. ஆலயத்தின் வடமேற்கு மூலையில் கேது சன்னிதி அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்.
- துர்வாசர் வழிபட்ட தலம்.
- மாலாதரன் என்ற வேடன் வழிபட்டு மறு பிறவியில் மன்னனாக பிறந்து எழுப்பிய சிவாலயம் இது.
- மகாரதன் எனும் பாண்டிய மன்னன் வழிபட்டு பிள்ளை வரம் பெற்ற திருத்தலம்.
- தேவாரப்பாடல் பெற்ற சிவதலமான திருமுருகன் பூண்டி முருகநாதேக்வரர் ஆலயத்தின் ஒரு அங்கமாகும்.
திருத்தல இறைவன்: மாதவனேஸ்வரர் திருத்தல இறைவி: மங்களாம்பிகை.
தலவிருட்சம் முல்லை, மாவிலங்க மரம்.
தலதீர்த்தம் துர்வாச தீர்த்தம்
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 7.00 மணிவரை வழிபாட்டிற்காக நடை திறந்திருக்கும்.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் திருவிழாக்கள்:
மஹா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் போன்ற சிவாலயங்களில் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் விமர்சியாக நடத்தப்படும். இவை தவிர மாதாந்திர பிரதோஷம், பவுர்ணமி, சோமவார சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:
கேது தோஷம் எனப்படுவது நாக தோஷம் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒருவரது ஜாதகத்தில் கேது கிரகம் 1, 2, 5, 7, 8, அல்லது 12-ம் இடங்களில் சாதகமற்ற நிலையில் அமைந்திருந்தால் அது கேது தோஷமாகும். இதனால் திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, வேலையின்மை, தொழில் தடைகள், திடீர் நிதி இழப்பு மற்றும் தோல் நோய்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த தோஷமானது முற்பிறவி வினைகள் மற்றும் சாபங்கள், முன்னோர்களை கடன், வயதில் மூத்தவர்களை அவமதித்தல் முதியவர்களை துன்புறுத்துதல், குடும்ப பெரியவர்களை பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றால் ஏற்படும்.
சர்ப்ப தோஷங்கள் நீங்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணிவரை) கேதுபகவானுக்கு செவ்வரளி மாலை அணிவித்து அவரை ஏழு முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொள்ளு தானியம் போட்டு, பல வண்ண நிற திரியிட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கொள்ளு சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.
மாங்கல்ய பாக்கியம் பெறவும் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும் பெண்கள் இத்தல இறைவியான மங்களாம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
அருள் மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம், நவகைலாயம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ராஜபதி, நவதிருப்பதிகளில் கேதுத் தலமான இரட்டை திருப்பதி – அரவிந்த லோசனர் ஆலயம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போன்ற புகழ் பெற்ற கேது பாரிகார தலங்கள் இருப்பினும், கேதுவிற்கு கிரக பதவி கிடைத்த, கேதுவுக்கே தோஷம் நீங்கிய தலமான இத்திருத்தலத்தில் வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்:
இத்திருத்தலத்தில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும், வேலையில் உள்ள சிக்கல்கள் நீங்கும், தொழில் தடைகள், திடீர் நிதி இழப்பு போன்றவை குறையும். தோல் நோய்கள் மன நோய்கள் நீங்கும். அகால மரணம் போன்ற கண்டங்களில் இருந்து விடுபடலாம். ஊழ்வினைகளும் முன்ஜென்ம சாபங்களும் நீங்கும். பித்ருகடன் கடன், வயதில் மூத்தவர்களை அவமதித்த வினை, முதியவர்களை துன்புறுத்திய செயல் குடும்ப பெரியவர்களை பராமரிக்காமல் நிராதரவாக விட்ட கொடுமை போன்ற தீய கர்மா பாலங்களில் இருந்து விடுபட வழி கிடைக்கும்.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்:
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் திருக்கோவில் முகவரி:
அருள்மிகு மாதவனேஸ்வரர் திருக்கோவில்,
திருமுருகன் பூண்டி,
அவிநாசி, திருப்பூர் – 637 211.
தொலைப்பேசி:
9282522104, 9443459074





