பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் சிவலிங்கம் – கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில்

Table of Contents

பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் சிவலிங்கம் – கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில்

ஆலயாத்ரா அன்பர்களுக்கு வணக்கம். சோழப்பேரரசு ஒரு கொற்றக் கொடையின் கீழ் தமிழகத்தை ஆண்ட போது சோழர்களுக்கு ஐந்து தலைநகரங்கள் இருந்தன. அவற்றுள் கரூரும் ஒரு தலை நகராக விளங்கியது. அத்தகைய பெருமை வாய்ந்த கரூர் மாநகரின் மத்தியில் அமராவதி நதிக்கரையில் அமைதியாய் அழகுற எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அலங்காரவல்லி சுந்தரவல்லி உடனுறை கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயிலில் பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் பெயரக்காரணம்: 

இன்று கரூர் என வழங்கப்படும் வஞ்சிவனத்தில் காமதேனு வந்து பால் சுரந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. சிவனைத் தன் உடம்பில் “ஆ நிலை” (ஆ – பசு, நிலை – இடம்) என, தன் இதயத்திலே தாங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் ஆநிலையப்பர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் ஆநிலை என்று அழைக்கப்பட்டது. 

காமதேனுவின் அன்பில் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு படைப்பாற்றல் வழங்கியதால் இத்தல இறைவன் ‘பசுபதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். 

alayatra-membership1

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் வரலாறு:

படைப்புத் தொழில் புரிவதால் மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவர் என கர்வம் கொண்ட பிரம்மனின் கர்வத்தை அழிப்பதற்காக சிவபெருமான் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினர். அதன்படி திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர், சிவபெருமானின் அருள்பெற மிகுந்த விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனம் என்ற ஒரு அடர்ந்த காட்டில் ஒரு புற்று உள்ளது. அதனுள் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக நிஷ்டையில் இருக்கிறார். அங்கு சென்று வழிபட்டால் சிவனருளும் சிவபதவியும் ஒருங்கே பெறலாம் என கூறினார். சிவனை அடையும் உபாயம் கிடைத்த மகிழ்ச்சியில் தற்போதைய கரூரான வஞ்சி வனத்திற்கு சென்ற காமதேனு புற்றினுள் இருந்த லிங்கத்திருமேனிக்கு தினமும் தன் பாலை சொரிந்து அபிஷேகம் செய்து வழிபட்டது. ஒருமுறை லிங்கத்தின் மீது காமதேனுபின் காலடி குளம்பு பட்டு லிங்கத்தில் இருந்து இரத்தம் கசிய தொடங்கியது. இதைக்கண்ட காமதேனு மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறியது. அதன் துயரத்தை தாங்க முடியாமல் எழுந்தருளிய சிவபெருமான் காமதேனுவின் பக்தியை மெச்சி, வேண்டும் வரமனைத்தும் தந்ததோடு படைப்பு தொழில் செய்யும் பதவியையும் அளித்தார். காமதேனுவுக்குக் படைக்கும் ஆற்றலால் கிடைத்ததை கண்ட பிரம்மா, ‘ஈசன் அருள் இருந்தால் பசுவும் படைப்புத் தொழில் செய்யும்’ இதில் தான் என்ற கர்வம் தவறு என்ற உண்மையை உணர்ந்து, தனது ஆணவம் நீங்கி சிவனிடம் சென்று சரண் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப தந்து, காமதேனுவையும் தேவலோகம் அனுப்பி வைத்தார். 

இத்திருத்தலம் கந்த புராண காலத்தில் வாழ்த முசுகுந்த சக்கரவர்த்தியால் எழுதப்பட்டதாக ஆலயம் வரலாறு கூறுகிறது.

முசுகுந்த சக்கரவர்த்தி:

ஒருமுறை சிவபெருமானை வில்வ இலைகளால் பூஜித்த குரங்கு ஒன்று அந்த புண்ணியத்தால் அடுத்த பிறவியில் குரங்கு முகத்துடன் மனிதனாக பிறந்து முசுகுந்தன் எனப் பெயர் பெற்று பெறும் சக்கரவர்த்தியாக விளங்கினான். வாலாசுரன் என்ற அரக்கனை எதிர்த்து நடந்த போரில் இந்திரனுக்கு உதவியாக இருந்து போரில் வெற்றி பெற உதவினார். இதனால் இந்திரனுக்குப் பிரியமான நண்பனாக விளங்கினார்.

பூலோகத்தில் இந்திரன் பூஜித்த சப்த விடங்கத்  தலங்கள் எனப்படும் ஏழு சிறப்பு மிக்க சிவாலயங்களான திருவாரூர், திருநள்ளாறு, திருமறைக்காடு (வேதாரண்யம்), திருவாய்மூர், திருக்காறாயில், திருக்குவளை ஆகிய திருத்தலங்களை எழுப்பிய பெருமைக்குரிய இவர் முருகப்பெருமானின் 12 அடியார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சூரசம்ஹாரத்திற்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தேவசேனை திருமணத்தைக் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கந்த புராணம் கூறுகிறது. தொன்மையான தமிழ் இலக்கியங்கள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இவரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. 

சைவ சமயதை தழைக்க செய்த சோழ வம்சத்தின் முன்னோடியாக இருந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்ட புராதான சிறப்பு பெற்ற இத்திருத்தலம் பின்னாளில் பல சோழ மன்னர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டதக தலவரலாறு கூறுகிறது.

கருவூர் சித்தர்:

சிவபெருமானையே தன் சித்து வேலையால் ஆட்கொண்டவர் எனப் போற்றப்படும் 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொங்கு நாட்டின் கரூரில் பிறந்த பதினெண் சித்தர்களில் ஒருவரான 

கருவூர்த் தேவர் என்றழைக்கப்படும் கருவூர் சித்தர் போகரின் ஆஸ்தான சீடரானாவார். தஞ்சை பெரிய கோவில் கட்டுமானத்தின் போது அஷ்டபந்தன மருந்து இளகிய நிலையிலேயே இருந்ததால் ராஜராஜ சோழன் மனம் கலங்கினார். எனவே போகர் கருவூர் சித்தரை தஞ்சைக்கு அழைத்தார். குருவின் அழைப்பை ஏற்று அங்கு வந்த கருவூரார் இறைவனை வணங்கி, அஷ்டபந்தன மருந்துப் பொருளைக் கடினப்படுத்தினார். இதனால் சிவலிங்கத் திருமேனி மற்றும் தஞ்சைபெருவுடையார் கோயில் கோபுர பிரதிஷ்டையும் குறைவின்றி முடிந்தது. 

சிவசித்துக்கள், யோகம், ஞானம் மற்றும் மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்.  சைவத் திருமுறைகளில் ஒன்பதாவது திருமறையான திருவிசைப்பா என்ற நூலை எழுதியுள்ளார். 

பல சிவாலயங்களில் தங்கி வழிபட்டும் சிவபணி செய்தும் வந்த கருவூரார் 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் பிறந்த ஊரான கருவூரை அடைந்தார். அங்கு பசுபதி நாதர் திருக்கோவிலில் இருந்து இறைப்பணி செய்தார். அந்த ஊரின் அந்தணர்கள் சிலர், கருவூர் சித்தரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் புகார் செய்தார். ஆனால் மன்னரோ இவரிடம் எக்குறையும் இல்லை என்று கூறி, புகார் செய்தவர்களைத் தண்டித்தான். ஆனால் அந்த அந்தணர்கள் மீண்டும் இவருக்கு தொல்லை தந்தனர். ஒரு தைப்பூசத்தன்று அவர்களின் தொல்லை தாங்காமல்,  பசுபதீஸ்வரர் ஆலயம் சென்று மூலவரைத் தழுவி ஆனிலையப்பருடன் ஐக்கியமாகி விட்டார். ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது என தல வரலாறு கூறுகிறது. 

மூலவர்:  பசுபதீஸ்வரர், ஆனிலையப்பர்,

பசுபதிநாதர், பசுபதி என்ற திருநாமங்களால் அழைக்கப்படுகிறார் 

அம்மன்: அலங்காரவல்லி, சௌந்தரநாயகி கிருபா நாயகி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

தல விருட்சம்: வஞ்சி மரம் 

தல தீர்த்தம்: தடாகைதீர்த்தம், அமராவதி நதி எனப்படும் ஆம்பிரவதி தீர்த்தம்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவன் கீழ்ப்பகுதி பிரம்மபாகம், நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக காட்சி தருகிறார்.
  • கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உடையது.
  • இத்திருத்தல மூலவர் பசுபதீசுவரர்/ஆநிலையப்பர் சதுர ஆவுடையில் இரண்டடி உயரதில் கம்பீரமான திருமேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
  • இத்திருத்தலத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி என இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. 
  • பிரம்மா, காமதேனு மற்றும் கருவூர் சித்தர் ஆகியோர் வழிபட்ட தலம்.
  • காமதேனு வழிபட்டபோது அறியாமல் பட்ட அதன் காலடி குளம்பின் தடம் இன்னும் மூலவரின் முடி மீது காணப்படுகிறது.
  • பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் இத்தலத்து இறைவனை கட்டியணைத்து அவருடனே ஐக்கியமானதாக தலவரலாறு கூறுகிறது. அவர் இழுத்து அணைத்ததால் மூலவர் சிறிது இடதுபுறம் சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பக்தனுக்காக சாய்ந்து நிற்கும் லிங்க திருமேனி இத்தல சிறப்பாகும்.
  • இத்திருத்தலத்தில் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
  • மாசி மாதத்தில் ஐந்து நாட்கள், பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுவது இத்தலத்தின் சிறப்பாகும்.
  • புகழ்ச்சோழ நாயனார் ஆட்சி செய்த தலம். 
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம். 
  • சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த திருத்தலம். 
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம்.
  • இத்திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ தலங்களில் 211வது தலமாகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு பாடல்பெற்ற தலங்களில் முதன்மையான தலமாகும்.
  • சுந்தரமூர்த்தி நாயனார் கருவூர் தேவர் மற்றும் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம்.
  • அருணகிரிநாதர் இத்தல முருகனை போற்றி தன்னுடைய திருப்புகழில் 7திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் அமைப்பு:

இத்திருத்தலம் ஐந்து கலசங்களுடன் 120 அடி உயரம் கொண்ட ஏழு நிலை 

ராஜா கோபுரத்தை கொண்டது. கோவில் வளாகம் உயரமான சுற்றுசுவருடன் கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. கோவிலுக்குள் அழகிய நந்தவனமும் இரண்டு பிரகாரங்களும் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.

ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் சிறிய மண்டபத்தில் கருங்கல்லால் ஆன பிரம்மாண்ட தூஜஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. இதில் ஒருபுறம் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. 

இது கொங்குநாட்டு தலங்களுக்கே உண்டான சிறப்பம்சமாகும்.

அதையடுத்து பலிபீடம் மற்றும் சக்தி வேல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  வலதுபுறம் புகழ்சோழர் மண்டபம் படி ஏறி மேலே போவது போல அமைந்துள்ளது. மண்டபத்தின் படிகளின் இருபுறமும் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தாமரை மலர்களும் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இடதுபுறம் திருக்கோவில் அலுவலகம் அமைந்துள்ளது. அருகில் சன்னதிப்பிள்ளையார் அரசமரத்தடியில் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அவரின் இருபுறமும் நாகர்கள் உள்ளனர். 

வெளிபிரகாரம்:

அவரை வணங்கி இடமிருந்து வலமாக வெளிப்பிரகாரத்தில் வலம் வந்தால் பிரகார சிற்றுசுவரிலேயே நால்வர் கலையரங்கம் உள்ளது.  அதை ஒட்டி கருவூரார் சன்னதி நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் சென்றால் நேரே ஆலயத்தின் தெற்கு மூலையில் கருவூரார் சன்னதி அமைந்துள்ளது. சன்னதி முன்மண்டபத்தின் மேல் கூரையில் 18 சித்தர்களின் திரு உருவங்கள் சுதைசிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கன்னி மூல கோஷ்டத்தில் காகபுஜண்டர் அகத்தியர் மற்றும் பதஞ்சலி முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவூர் சித்தரை வழிபட்டு முன்னேற, மேற்கு சுற்றில் நந்தவன பிள்ளையார் சன்னிதி அமைந்துள்ளது. அவருக்கு எதிரே பசு மடம் உள்ளது. ஆலயத்தின் வடக்கு மூலையில் இரண்டு வில்வமரங்களும் அதனடியில் ராகு – கேது  சன்னதி உள்ளது. அவர்களை சுற்றி பல நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். 

உட்பிரகாரம்:

வெளிப்பிரகாரத்தை சுற்றி முடித்து உட்பிரகாரத்தில் நுழைந்தால் உள்ளே கொடிமரம், கொடிமரத்து பிள்ளையார், பலிபீடம் மற்றும் தனி மண்டபத்தில் பிரம்மாண்டமான பிரதோஷ நந்தி அமைந்துள்ளது. நந்தி மண்டபத்தில் உள்ள தூண்களில் எரிபத்த நாயனார், முசுகுந்த சக்கரவர்த்தி, திருஞான சம்பந்தர் மற்றும் கையில் தலையை ஏந்தியபடி புகழ் சோழ நாயனார் ஆகியோர்களது சிற்பங்கள் காணப்படுகின்றன.  அருகே ஊஞ்சல் சேவை மண்டபமும் அமைந்துள்ளது. 

உட்பிரகார நுழை வாயிலின் இடதுபுறம் சூரியன் வலதுபுறம் சந்திரன் மேற்கு நோக்கி உள்ளனர். உட்பிரகாரத்தை இடமிருந்து வலமாக வலம்வர தெற்கு சுற்றில் உற்சவர் மற்றும் வாகன மண்டபம், நால்வர் சன்னதி, பில்லா பிள்ளையார், புகழ்சோழர், நம்பியண்டன் நம்பி, சேக்கிழார், எரிபத்தனார் நாயன்மர்கள், வலம்புரி விநாயகர், தண்டாயுதபாணி, காசி விசுவநாத சுவாமி விசாலாட்சி தாயார் சன்னதிகள் அமைந்துள்ளன. தெற்கு மூலையில் கன்னிகணபதி சன்னதியும் மேற்கு சுற்றில் சோமாஸ்கந்தர், 63 நாயன்மார் உற்சவர் சன்னதிகளும், கஜலட்சுமி தனி சன்னதியும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்தில் ஆறு முகங்களுடன் பன்னிரு கரங்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வடக்கு மூலையில் பழனி பால தண்டாயுதபாணி கரியமாலீஸ்வரர், காந்திமதியம்மன், காலபைரவர் மற்றும் கருவூர் சித்தர் சன்னதிகள் அமைந்துள்ளன. பிரகாரத்தின் வடக்கு சுற்றில் பஞ்ச லிங்கங்கள் தனித்தனி நந்தியம் பெருமான், பலிபீடம் மற்றும் தேவியருடன் காட்சியளிக்கின்றனர். அடுத்து தீர்த்த கிணறு, நவகிரக சன்னதி மற்றும் காலபைரவர் தனி சன்னதியுடன் உட்பிரகாரம் முற்றுப்பெறுகிறது.

மூலவர் சன்னதி: 

உட்பிரக்காரம் சுற்றி வந்து சுவாமியை தரிசனம் செய்ய மூலவர் சன்னதி மண்டபத்தில் நுழைய சிறிய அதிகார நந்தி பலிபீடம் அமைந்துள்ளது. கருவறைக்கு வெளியே பிள்ளையார் துவார பலகராக இருக்கிறார். வலதுபுறம் நடராஜ பெருமான் சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கருணை விடிவாக பேரருளை அள்ளி வழங்கியபடி அழகுற காட்சி அளிக்கிறார். சுவாமி தரிசனம் செய்து வெளியேற கருவறை கோஷ்டதில் நர்த்தன கணபதி, குரு தட்சிணாமூர்த்தி, மூலவருக்கு பின்புறம் அர்தநாரீஸ்வரர், பிரம்மா துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளன. 

அம்மன் சன்னதி:

சுவாமி சன்னதியின் இடதுபுறம் அமைந்துள்ள வாயிலைக் கடந்தால் நேராக தெற்கு முகமாக சுந்தரவல்லி அம்மன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தாயர் இறைவனின் கிரியா சக்தியாவார். இவரின் இடது புறம் அலங்காரவல்லி தாயார் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவர் இறைவனின் ஞான சக்தியாவார். 

தயார் கருவறை வாயிலில் விநாயகர் துவார பாலகராக காட்சியளிக்கிறார். இருவருக்கும் தனித்தனி நந்தியும் கோஷ்டத்தில் ஒரு சண்டிகேஸ்வரி அம்மன் சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதி உள்ளே பள்ளியறை அமைந்துள்ளது. அம்மனை தரிசித்து வெளியேற அம்பாள் சன்னதி வாயிலில் வடக்கு நோக்கி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

இத்திருத்தலத்தில் பங்குனி உத்திரதிருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  12 நாட்கள் பிரம்மோற்சவம், 10 நாட்கள் ஆருத்ராதரிசனம், 10 நாட்கள் நவராத்திரி விழா, சிவராத்திரி விழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இவைதவிர அனைத்து சைவ சமய விழாக்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் சிறப்பு வழிபாடுகள்:

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கிணங்க நேர்த்திகடனாக அபிஷேகங்கள் செய்து விழிபடுகின்றனர். காமதேனு பால் சொரிந்து வழிபட்டு பேரருள் பெற்றதால் இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்:

தொழில் வளர்ச்சி பெற, திருமண தடை நீங்க, மழலை செல்வம் பெற, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க உடல் ஆரோக்கியம் பெற என இத்தல இறைவனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராகு கேது தனி சன்னதி அமைந்துள்ளதால் இத்தல இறைவனை வணங்கி ராகு கேதுவை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்:

இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் அமைவிடம்:

கரூர் நகரின் மையப் பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி, கோவை விமான நிலையம்.

அருகில் உள்ள இரயில் நிலையம்:  கரூர் இரயில் நிலையம்.

அருகில் உள்ள பேருந்து நிலையம்: கரூர் மத்திய பேருந்து நிலையம்.

அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் திருக்கோயில் முகவரி:

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,

கரூர்-639 001.

கரூர் மாவட்டம்.

தொலைபேசி: 04324 262 010

alayatra-donate-support-banner

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Copyright by ALAYATRA.COM