அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவர்கள் வழிபாடு -Ashta Bhairavas – Worship & Benefits
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
அடியார்களுக்கு வணக்கம். இப்பதிவில் சிவபெருமானின் திரு மூர்த்தங்களில் ஒன்றான மகாகால பைரவர் மற்றும் அவரது வெவ்வேறு ரூபங்களான அஷ்டபைரவர்கள் பற்றியும் பைரவர் வழிபாட்டு முறைகள் அதன் பலன்கள் பற்றியும் விரிவாகக் காணலாம்.
பொதுவாக கால பைரவர் வழிபாடு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக காசியில் பைரவருக்கு தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. காலபைரவரே காசி மாநகரின் காவல் என்பது ஐதீகம். இவரே சிவாலயங்களிலன் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார். எனவே அனைத்து சிவாலயங்களிலும் இவருக்கு தனி சன்னிதியோ அல்லது திருமேனியோ இருக்கும். வழக்கமாக ஆலயம் திறந்தவுடனும் இரவு கோவில் நடை மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்யப்படுவது வழக்கம்.
ஸ்ரீ காலபைரவர்
பைரவர் சிவபெருமானின் பஞ்ச மூர்த்தங்களில் மிகவும் கடுமையானதான அகோர மூர்த்தியாவார். மகா ஞானியான இவர் சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் மகாகாலன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது சக்தி மகாகாளி ஆவார். ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. முக்கண் மூர்த்தியாக நெற்றிக்கண்ணுடன் கோபாவேசமாய் எட்டுக் கரங்களுடன் விளங்கும் காவல் தெய்வமான இவரது வாகனம் நாய்.
ஸ்ரீ கால பைரவரை வழிபடுவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது என்பது நம்பிக்கை. அஷ்டமிகளில் பைரவரை வழிபடுவதால் தீராத வியாதி, பகை, அகங்காரம், முப்பிறப்பில் செய்த தீவினைகள், திருமண தடை இவையாவும் நீங்கி எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று பெருவாழ்வு வாழ்லாம். குறிப்பாக கடன் தொல்லைகள் நீங்கும் செல்வம் பெருகும்.
பைரவ அவதார வரலாறு
அந்தகாசுரன் என்னும் அரக்கன், தேவர்களையெல்லாம் துன்புறுத்தி வந்தான். அதோடு அவன் முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் தொல்லை கொடுத்தான். நல்லோரைக் காக்க அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். இதனால் தன்னுடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து மகா பைரவரை தோற்றுவித்தார். இவர் அந்தகாசுரனை சம்ஹாரம் செய்து நல்லோரையும் பக்தர்களையும் காத்தார். ஒரு முறை ஜோதிப் பிழம்பான சிவபெருமானின் அடி முடி அறியும் போட்டியில் மகாவிஷ்ணு பாதத்தை தரிசிக்க கீழ்நோக்கிச் செல்ல படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா முடிக காண மேல் நோக்கிச்சென்றார்.
பல ஆண்டுகள் பயணம் செய்தும் சிவனின் சிரசைக் காண முடியாத விரக்தியில் சிவனின் முடியைத தான் தரிசித்து விட்டதாக பொய் உரைத்தார். இதற்கு தாழம்பூவை சாட்சிக்கு அழைத்து வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரம்மனை கண்டித்தார். எனவே கோபம் கொண்ட பிரம்மன் தானும் ஐமுகனே. படைத்தல் தொழில் செய்வதால் சிவனை விட நானே உயர்ந்தவனுமாவேன் என்று கர்வம் கொண்டார். எனவே சிவனின் அவதாரமான பைரவர் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவரின் அகங்காரத்தை அழித்தார். எனவே பைரவரை வழிபடுவதால் அகங்காரம் அழியும் என்பதும் ஐதீகம்.
அஷ்ட பைரவர்கள் – Ashta Bairavas
பைரவரின் பிரதானமான எட்டு வடிவங்களும் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்பனவாகும். அஷ்ட பைரவர்களின் ஒவ்வொரு தோற்றமும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என பஞ்ச பூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன், ஆத்மாவைக் குறிக்கிறது. மேலும் ஒவ்வொரு பைரவர்களும் வெவ்வேறு ஆயுதங்கள், வெவ்வேறு வாகனங்கள் கெண்டிருப்பதோடு தோற்றத்திலும் வித்தியாசமானவர்கள். ஒவ்வொரு பைரவரின் கையில் உள்ள வெவ்வேறு ஆயுதங்களும் அஷ்ட லட்சுமிகளக் குறிக்கின்றன.
- 1. அசிதாங்க பைரவர்.
- 2. ருரு பைரவர்.
- 3. சண்ட பைரவர்.
- 4. குரோதன பைரவர்.
- 5. உன்மத்த பைரவர்
- 6. கபால பைரவர்
- 7. பீஷண பைரவர்.
- 8. சம்ஹார பைரவர்.
1. அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார். முக்கண், தலைமாலை, கதை, கபாலம், பாணபாத்திரம், கத்தி(கட்கம்), ஜபமாலை, கமண்டலம், திகம்பரத் தோற்றம், வெண்மையான நிறத்தில் காட்சியளிக்ககிறார்.
இவரது வாகனம்: அன்னப் பறவை.
சக்தி: சப்த கன்னியரில் ஒருவரான பிராம்ஹி.
திசை: கிழக்கு.
அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.
அசிதாங்க பைரவர் வழிபாட்டு பலன்கள்:
அசிதாங்க பைரவர் வழிபாடு ஆக்க சக்தியை அளிக்கக்கூடியது. வியாபாரத் தடை மற்றும் பொருளாதாரத் தடை விலகி செல்வம் பெருகும். மேலும் குருவின் தோஷம் விலக இந்த பைரவரை தரிசிக்கலாம்.
அசிதாங்க பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள விருத்தகாலர் கோவிலில் இந்த பைவரர் அருள்பாலிக்கிறார்.
2. ருரு பைரவர்.
அஷ்ட பைரவ மூர்த்திகளில் இரண்டாவது ருரு பைரவர். முக்கண், டங்கம், க்ருஷ்ணாமிருகம்(மான்), பாணபாத்திரம், கத்தியுடன் காட்சியளிக்கிறார்.
வாகனம்: ரிஷபம்.
சக்தி: சப்த கன்னியரில் ஒருவரான மகேஷ்வரி.
திசை: தென் கிழக்கு.
ருரு பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.
ருரு பைரவர் வழிபாட்டு பலன்கள்:
ருரு பைரவர் வழிபாடு ‘நான்’ என்ற அகங்காரத்தை அழித்து சுயபெருமை பேசும் குணத்தை நீக்கும். காதல் கைகூடும். தம்பதியருக்கு இடையே அன்னியோன்யம் கூடும். மேலும் நவக்கிரகங்களில் சுக்ரனின் தோஷம் விலகும்.
ருரு பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவர் அருள்புரிகிறார்.
3. சண்ட பைரவர்.
அஷ்ட பைரவர்களில் மூன்றாவதாக வடிவம் கொண்டவர் சண்ட பைரவர். முக்கண், சாந்த முகம், வில், அம்பு, கத்தி, பாணபாத்திரம், வெண்மையான நிறம் கொண்டவர்.
வாகனம்: மயில்.
சக்தி: சப்த கன்னியர்களில் ஒருவரான கவுமாரி.
திசை: தெற்கு.
சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
சண்ட பைரவர் வழிபாட்டு பலன்கள்:
இந்த பைரவர் வழிபாடு பகை அழிக்கும். . வீடு நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் விலகும். திருமண தடை நீங்கும். மேலும் நவக்கிரகங்களில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த பைரவரை வழிபாடு செய்யலாம்
சண்ட பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள துர்க்கை கோவிலில் இந்த பைரவர் அருளாட்சி செய்கிறார்.
4. குரோதன பைரவர்.
அஷ்ட பைரவ மூர்த்திகளில் நான்காவதானவர், குரோதன பைரவர். முக்கண், கதை, சங்கம், பாணபாத்திரம், சாந்தமும் கருணையுமான முகம், குமாரர், திகம்பரத்தோற்றம், நீல நிறத்துடன் காட்சியளிக்கிறார்.
வாகனம்: கருடன்
சக்தி: சப்த கன்னியரில் ஒருவரான வைஷ்ணவி.
திசை: தென்மேற்கு.
குரோதன பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்.
குரோதன பைரவர் வழிபாட்டு பலன்கள்:
இந்த பைரவ வழிபாடு மிகப் பெரிய காரியங்களை செய்வதற்கான சக்தியை வழங்குகிறது. முப்பிறவி மற்றும் இந்த பிறவியில் செய்த தீவினைகளை முற்றிலுமாக அழித்து ஒரு பரிசுத்தமான வாழ்வை வழங்குகிறது . மேலும் நவக்கிரகத்தில் சனிதோஷம் இருப்பவர்கள் இந்த பைரவரை வழிபட்டால் நிவர்த்தி பெறலாம்.
குரோதன பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள காமாட்சி கோவிலில் இந்த பைரவரை தரிசிக்கலாம். மயிலாடுதுறை அருள்மிகு பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி்யுடன் எழுந்தருளி உள்ளார்.
5. உன்மத்த பைரவர்
அஷ்ட பைரவர்களில் ஐந்தாவது தோற்றம் கொண்டவர் உன்மத்த பைரவர். முக்கண், குமாரர், திகம்பரத்தோற்றம், கத்தி, கபாலம், உலக்கை, கேடயத்துடன் காட்சியளிக்கிறார்.
வாகனம்: குதிரை
சக்தி: சப்த கன்னியரில் ஒருவரான வராகி.
திசை: மேற்கு.
உன்மத்த பைரவர்காயத்ரி மந்திரம்:
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
உன்மத்த பைரவர் வழிபாட்டு பலன்கள்:
இந்த பைரவரை வணங்கினால் கர்வம் நீங்கி ஞானம் பெருகும். கல்வி தடை மற்றும் உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும். நவக்கிரகங்களில் புதன் தோஷம் இருப்பவர்கள், இந்த பைரவரை தரிசனம் செய்வது நல்லது.
உன்மத்த பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த உன்மத்த பைரவர் அருள்பாலிக்கிறார்.
6. கபால பைரவர்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில், ஆறாவதாக இருப்பவர் கபால பைரவர். இவர் பாசக்கயிறு, வஜ்ரம், கத்தி, பாணபாத்திரம் சகிதமாக காட்சியளிக்கிறார்.
வாகனம்: யானை.
சக்தி: சப்த கன்னியரில் ஒருவரான இந்திராணி.
திசை: வடமேற்கு
கபால பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.
கபால பைரவர் வழிபாட்டு பலன்கள்:
இந்த பைரவர் வழிபாடு தீராத வியாதிகளை குணப்படுத்தும். மன அமைதி கிடைக்கும். முகவசீகரம் அதிகரிக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். மேலும் நவக்கிரகங்களில் சந்திர தோஷம் இருப்பவர்கள் இந்த பைரவரை வணங்கலாம்.
கபால பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவர் அருள்கிறார்.
7. பீஷண பைரவர்.
அஷ்ட பைரவர்களில் ஏழாவது தோற்றம் கொண்டவர், பீஷண பைரவர். கத்தி, சூலம், கபாலம், உலக்கையுடன் கூடியவராக சிவந்த நிறத்தோடு வீற்றிருப்பார்.
வாகனம்: சிங்கம்.
சக்தி: சப்தகன்னியர்களில் ஒருவரான சாமுண்டி.
திசை: வடக்கு
பீஷண பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்
பீஷண பைரவர் வழிபாட்டு பலன்கள்:
பீஷண பைரவர் வழிபாடு தீய மற்றும் எதிர்மறை சக்திகளை அழித்து நம்மை காக்கிறது. பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகளை அழித்து நல்வாழ்வு அளிக்கும். அரசியலில் வெற்றி கிடைக்கும். மேலும் நவக்கிரகங்களில் கேது கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த பைரவரை வணங்கி பலன் பெறலாம்.
பீஷண பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.
8. சம்ஹார பைரவர்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில், எட்டாவதாக இருப்பவர் சம்ஹார பைரவர். பத்துத் திருக்கரங்கள், முக்கண், சர்ப்பத்தையே பூணூலாகத் தரித்திருப்பார் .கோரைப்பற்கள், குமாரர், திகம்பரத் தோற்றத்துடன் கைகளில் சூலம், டமருகம், சங்கம், பாணபாத்திரம், கதை, சக்கரம், கத்தி, கட்வாங்கம், பாசம், அங்குசம் முதலானவைற்றை ஏந்தியிருப்பார். தேகத்தில் தலை மாலைகளை அணிந்து காணப்படுவார்.
வாகனம்: நாய்.
சக்தி: சண்டிகை தேவி.
திசை: வடகிழக்கு.
சம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்.
சம்ஹார பைரவர் வழிபாட்டு பலன்கள்:
சம்ஹார பைரவர் வழிபாடு மன தைரியத்தை அதிகரிக்கச்செய்கிறது. கலை ஊடகம் போன்ற துறைகளில் தனித்துவமாக விளங்க ஆற்றலை வழங்குகிறது. மேலும் நவக்கிரகங்களில் ராகு தோஷம் உள்ளவர்கள் இந்த பைரவரை தரிசிக்கலாம்.
சம்ஹார பைரவர் எழுந்தருளியுள்ள திருத்தலம்:
காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் இந்த பைரவர் அருள்பாலிக்கிறார்.
பைரவருக்கு பிரியமான நைவேத்தியங்கள்:
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை படைக்கலாம். மேலும் வடையை மாலையாக சாற்றுதல் மிக விசேஷமானது. வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகளும் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.
பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். இது ஆயுள் விருத்தி யாகம் செய்ததற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.
பைரவர் திருத்தலங்கள்:
கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில்,
• தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.
• குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.
• நாகை மாவட்டத்தில் உள்ளது சீர்காழி ஊரில் சட்டைநாதரை திருக்கோவிலில் எட்டு பைரவர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
• திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் தங்கள் பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் அருள்பாலிக்கின்றனர்.
• கோயம்புத்தூர் நஞசுண்டாபுரம் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் எழுந்தருளியுள்ளார்.
• காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் பைரவர் அர்த்தநாரி வடிவில் அருட்காட்சியளிக்கின்றார்.
• கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் ஆறகளுரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீசுவரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிக்கின்றனர்.
• யாழ்ப்பாணத்தில் பொன்னலையில் அருள்மிகு நரசிங்கபைரவர் கோவில் கொண்டுள்ளார்.
• திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் காரைக்காடு கிராமத்தில் உள்ள பைரவ சாய் பீடத்தில் விதியினை மாற்றும் பன்னிரண்டு ராசிக்கும் உரிய அஷ்ட பைரவர்கள் உடன் சொர்ணாகர்ஷண பைரவரும் இணைந்து நவ பைரவர்களாக காட்சியளிக்கின்றனர்.
பைரவர் வித்தியாசமான கோலத்தில் காட்சி தரும் திருத்தலங்கள்:
• திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அருள்புரியும் பைரவர், ஆறு கரங்களுடன் பலவித ஆயுதங்கள் தாங்கி, சாந்தமுகத்துடன் திகழ்கிறார்.
• சங்கரன்கோயில் சிவன் கோயிலில் நின்ற கோலத்தில் செங்குத்தாக பாம்பை கையில் ஏந்திய சர்ப்ப பைரவரை தரிசிக்கலாம்.
• சிருங்கேரியில் மூன்று கால்கள் உள்ள பைரவரைத் தரிசிக்கலாம்.
• மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எட்டு கைகளுடன் மூன்று கண்கள் கொண்ட ஐம்பொன்னாலான பைரவர் உற்சவ சிலையாக கொலுவிருக்கிறார்.
• காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் சிவாலயத்தில் பைரவர் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் காட்சி தருகிறார்.
• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் ஏழு அடி உயரத்தில் அருள்புரிகிறாரதருகிறார்
• நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலில் எட்டு கரங்களுடன்-ஜடாமண்டல கால பைரவர் எழுந்தருளியுள்ளார்.
• கும்பகோணம் – திருவாரூர் சாலையில் உள்ள சிவபுரம் சிவகுருநாதன் கோயிலில் நின்ற கோலத்தில் கோரைப்பற்கள் மற்றும் பயங்கர உருவத்துடன் கையில் சூலாயுதம் தாங்கிய பைரவரைக் காணலாம். வாகனமான நாய் இடப்புறம் திரும்பி பைரவரின் முகத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது.
• கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் தலத்தில் உள்ள சிவயோக நாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
• குடந்தை நாகேஸ்வரம் கோயிலிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் ஆலயத்தில் உட்பிராகாரத்தில் ஒரே சந்நதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகிறார்கள். இவர்கள் சனீஸ்வரனைப் பார்த்த வண்ணம் உள்ளார்கள்.
• வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நர்த்தன பைரவராகக் காட்சியளிக்கிறார்.
• கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவிலில் அருள்புரியும் ஞானபைரவருக்கு வாகனம் இல்லை.
திருச்சிற்றம்பலம்