perur-pateeshwarar-temple-gopuram

Pateeswarar temple Perur – Coimbatore

Table of Contents

Pateeswarar temple Perur – Coimbatore

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக காலத்தை வெல்லும் கலைநயத்துடனும் பழமையின் கம்பீரத்துடனும் காஞ்சி நதி என்று அழைக்கப்பட்ட தற்போதைய நொய்யல் ஆற்றங்கரையில் அழகுற அமைந்துள்ள பேரூர் பச்சை நாயகி உடனமர் பட்டீசுவர சுவாமி ஆலயத்தை பற்றி விரிவாகக் காண்போம்.

பட்டீசுவரர் பெயர்க்காரணம்:

படைப்புத் தொழிலை மறந்த பிரம்மன் – ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழில் செய்து களைப்புற்று கண்ணயர்ந்து உறங்கிவிட்டார். அப்பொழுது பிரபஞ்சமே படைப்புகள் நிகழாது ஸ்தம்பித்து போனது. இதையறிந்து இந்த சிக்கலைத் தீர்க்க, காக்கும் கடவுளான மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து ஒரு யோசனை கூறினார். 

காமதேனு தவம்

காமதேனுவை அழைத்த விஷ்ணு ‘சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை நீ மேற்கொள்வாயாக’ என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலை சென்று அருந்தவமிருந்தது. ஆனாலும் சிவபெருமான் அருள் கிடைக்காமல் மிகவும் வருந்தியது.

alayatra-membership1

தட்சிண கயிலாயம்

காமதேனுவின் துயரம் அறிந்த நாரத முனிவர் தற்போதைய பேரூரான தஷிணகைலாயம் பற்றி எடுத்துரைத்தார். காமதேனுவும் கன்றுடன் தட்சிண கயிலாயம் வந்தடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது.

 ‘பட்டி’ செய்த பிழை

ஒருநாள் காமதேனுவின் கன்றான பட்டி ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாக சிதைத்து விட்டது. இளம் கன்றான பட்டியின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது. செய்வதறியாது பதறிப்போய் கலங்கியது காமதேனு.

பெருமானின் பெருங்கருணை

கடுந்தவம் புரிந்த காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக சிவபொருமான் தோன்றி “பார்வதி தேவியின் வளைத் தழும்மை எப்படி என் மார்பில் ஏற்றேனோ அதுபோல உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் சிரசில் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.

தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்ட திருத்தலம்

பெயர் கொண்ட பட்டீஸ்வரப் பெருமான் –  காமதேனுவுக்கு இறங்கிய இறைவன், “இது முக்தி தலம் அதனால் நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே உனக்கு அருள இயலாது. அதை திருக்கருகாவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம் என்று அருள் புரிந்தார்”. மேலும் “உன் நினைவாக இத்தலம் காமதேனுபுரம் என்றும் உனது கன்றின் நினைவாக பட்டிபுரம் என்றும் வழங்கப்படட்டும்” என்றும் அருள் புரிந்தார். இவ்வூரில் குடிகொண்டுள்ள என்னை பட்டீஸ்வரர் என்ற திருப்பெயரால் வணங்குவர் என்றும் அருளினார்.  இவ்வாறு இறைவன் தனக்கு தானே பெயர் சூட்டிக் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

இறைவன் சிரசில் தழும்பு – இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம்.

இத்திருத்தலத்தின் வேறு பெயர்கள்

இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம். பிப்பலம் என்றால் அரச மரம். ஆரண்யம் என்றால் காடு. அரச மரங்களால் ஆன காடு என்று பொருள்.  மேலும் காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி தென்கயிலாயம், அழகிய சிற்றம்பலம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலைச்சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. 

பேரூர் பட்டீசுவரர் தல வரலாறு

perur-pateeshwarar-temple

இத்திருக்கோவில் கரிகால் சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப்பாடல் பாடப் பெற்றுள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றதாக ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் கச்சியப முனிவரும் இத்தலத்தை தனது ‘பேரூர் புராணத்தில்’ விளக்கமாகப் பாடியிருக்கிறார். இதில் மொத்தம் 32 படலங்கள் உள்ளன. 

சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலின் அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகியவை கட்டப்பட்டு கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர் 17ஆம் நூற்றாண்டு வரை கொங்கு மன்னர்கள், சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் அமைப்பு

இராஜகோபுரம்

 திருக்கோவிலின் வெளிப்புறம் மிகப்பெரிய அரசமரம் ஒன்றும் அதன் அடியில் இருக்கும் பிள்ளையாரும் நம்மை அருளோடு வரவேற்கின்றனர். அதை கடந்ததும் ஆலயத்தின் கல் விளக்குத்தூணும் ஐந்து நிலைகளுடன் கூடிய மிக பிரம்மாண்டமான கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும் காட்சியளிக்கிறது. 

ராஜகோபுரத்தில் தெற்குப் பார்த்த குரு தட்சிணா மூர்த்தி நான்கு தோற்றங்களில் காட்சியளிக்கிறார். 

கலா மண்டபமும் கொடிமரமும்

ராஜகோபுரத்தை அடுத்துள்ள பிரகாரத் தூண்களில் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது. ஆஞ்சநேயர், மாய கிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.

இம்மண்டபத்தின் இறுதியில் கொடிகம்பமும் நந்தியம்பெருமானும் இறைவனை நோக்கியுள்ளன.

ஸ்தல தீர்த்தம்

மஹாமண்டபத்தில் நுழைந்தால் சிருங்க தீர்த்தத்தை காணலாம். ஐயனின் அபிஷேகத்திற்காக காமதேனு தன் கொம்பினால் (சிருங்கம் என்றால் கொம்பு) உருவாக்கிய இத்தீர்த்த நீரே பயன்படுத்தப்படுகின்றது. 

மூலவர் சந்நிதி

கருவறையில் காமதேனுவுக்கும் பட்டிக்கும் அருளிய பரமன் லிங்க ரூபத்தில் கிழக்குத் திருமுக மண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றார். ஒரு கன்றுக்கும் அருளிய ஐயனின் எளிமை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

முதல் பிரகாரம்

பட்டீஸ்வரரை ஐந்தெழுத்து நாமத்தில் தியானித்து மனதார வணங்கி முதல் பிரகாரம் வலம் வந்தால், 63 நாயன்மார்களையும் சூரிய சந்திரர், சகஸ்ரலிங்கம், கோஷ்டத்தில் துர்க்கை ஆகியோரையும் தரிசிக்கலாம். 

ஆதிகுரு தட்சிணாமூர்த்தி

மூலவர் கோஷ்டத்தில் தெற்கு முகம் நோக்கிபடி ஞானமே வடிவாய் குரு தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார். இத்திருத்தலத்து தட்சிணாமூர்த்தியை வணங்கி விஜய தசமியன்று சன்னதியில் குழந்தைகளுக்கு நாக்கில் எழுத்தாணியால் எழுதி அக்ஷராப்பியாசம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

அன்னை மனோன்மணி சந்நிதி

சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில் சிவன் கோவில்களில் மூலஸ்தானத்திற்குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. ‘சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை “மனோன்மணி” என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். முதல் பிரகாரத்தில் மனோன்மணி அம்மைக்கு ஒரு சன்னதி இருக்கிறது. 

சோமஸ்கந்த தண்டாயுதபாணி

வெளிப்பிரகாரத்தில் ஐயன் சன்னதிக்கு பின்புறம் சோமாஸ்கந்த அமைப்பில் காசி விஸ்வநாதருக்கும் அன்னை விசாலாட்சிக்கும் நடுவே அருணகிரி நாதர் பாடிய வள்ளி தெய்வாணை சமேத முருகர், மேற்கு முகமாக பழனி முருகன் போலவே அருள் பாலிக்கின்றனர். முருகர் சன்னிதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அருவ வடிவில் உள்ளார். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது.

அன்னை பச்சைநாயகி சந்நிதி

மரகதவல்லி என்னும் பச்சைநாயகி அம்மை தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள். அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால் இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள். நல்ல மகசூல் பெறவும் பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல் மற்றும் தானியத்துடன் பூஜிக்கிறார்கள். அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும் நந்தி வாகனத்துடனும் கருணை ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பாகும்.

அம்மன் சந்நிதி கோஷ்டம்

அம்மனின் கருவறையின் முன்மண்டபத்தில் வலப்புறம் துர்க்கை சன்னதியும் இடப்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும் அருள் பாலிக்கின்றனர். தூண்கள் நிறைந்த அம்மனின் இம்மஹாமண்டபத்தில் அஷ்டலக்ஷ்மி மற்றும் தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஈட்டி மரத்தாலான ஆஞ்சனேயர் சன்னதியும் உள்ளது.

கனக சபை

அன்னை பச்சை நாயகியின் சந்நிதி தாண்டினால் எதிரில் மிக விஸ்தாரமான கனகசபை உள்ளது. இக்கனகசபையில் 36 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தூண்கள் உள்ளன. இச்சபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான 8 சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள் காணப்படுகின்றன.  அதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும் யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை அமைந்துள்ளது. அதைத் தாண்டினால் குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதாகவும் மற்றொரு பக்கம் உடைந்தும் மேலும் பல சிற்பங்களும் காணப்படுகின்றது.

மேலும் படிக்க : கனகசபை பற்றி மேலும் பல அரிய தகவல்கள்

சிறப்பு நடராஜர் சன்னதி

மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜரும் அவரோடு சிவகாமியம்மையும் காட்சியளிக்கின்றனர். நடராஜரின் மண்டபத்தை 4 வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம்.  இறைவனுக்கு பணிந்த நிலையில் தூண்கள் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளன. 

இத்தலம் நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத்தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது. 1625 முதல் 1659 வரை 34 வருடங்களாக கட்டப்பட்ட இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும் ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

ஞானபைரவர்

இது முக்தி தரும் தலமென்பதால் இத்திருத்தலத்து பைரவர் நாய் வாகனம் இன்றி ஞான பைரவராக அருள்புரிகிறார்.

நவக்கிரக சந்நிதி

நடராஜர் மண்டபத்தின் வலப்புறம் நவக்கிரகங்கள் தனி மேடையில் பக்தர்களின் அருள்பாலிக்கின்றனர். 

ஆலயத்தின் சிறப்புகள்

இத்திருத்தலத்தில் எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாத ஐந்து அதிசயங்கள் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

அவை,

அதிசய தல விருட்சங்கள் 2:

பிறவா புளி – தலவிருட்சமாக கோயிலின் முன்புறம் இராஜகோபுரத்துக்கு எதிரில் ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் உள்ளது. இந்தப் புளியமரத்தின் விதையை எங்கு எடுத்துச் சென்று விதைத்தாலும் அது முளைப்பதில்லை. 

இறவாப் பனை – அதேபோல் இங்குள்ள ஆற்றின் கரைப்பகுதியில் வடகயிலாயநாதர் கோவில் அருகே இருக்கும் பனை மரம் ஒன்று பல நூற்றாண்டுகளாக  வாடாமல் இன்றும் இளமையாக உள்ளது. இது “இறவாப்பனை” என்று நம்பப்படுகிறது.

இவ்விரு மரங்களும் முக்தித்தலமான இங்கு இறைவன் அருளால் முக்தி பெற்று நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.

புழுக்காத சாணம்

அடுத்து இப்பகுதியில் உள்ள மாட்டு சாணத்தில் புழுக்கள் வருவதில்லை.

மேல்நோக்கிய காது

இங்கு இறந்து போவோரின் காதில் சிவபெருமானே வந்து “நமசிவாய” மந்திரத்தை ஓதி முத்தியளிப்பதாக நம்பப்படுகிறது. எனவே இவ்வூரில் கால காலமாக இறந்து போகும் ஒவ்வொரு உயிரினத்தின் வலது காதும் தவறாது மேல் நோக்கிய வண்ணம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லாகும் எலும்பு

நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட அஸ்த்தியில் உள்ள எலும்புகள் வெண்கற்களாக மாறிப்போவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால  இவ்வூரில் இறந்தவர்கள் பிறவா வரம் பெற்று முக்தி அடைவதாக நம்புகின்றனர்.

அரசமரத்தடி சிவபெருமான்

இக்கோயிலில் அரச மரத்தடியில் பட்டி விநாயகருடன் அரசம்பலவாணர் என்ற திருநாமமுடைய சிவபெருமான் சன்னிதி அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. 

அபூர்வ நடராஜர் சிலை

இத்திருத்தலத்தில் தங்கத்தால் ஆன நடராஜர் சிலை ஒன்று உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால் இக்கோயிலில் ஆடி முடியப்போகும் நிலையில் இருக்கும் நடராஜரை தரிசனம் செய்யலாம். இந்த நடராஜரின் முகத்தில் ஒரு குறும்பு பார்வையும், மேவிய கன்னமும் குமிண்சிரிப்பும் தாழ்சடையும் ஆடிமுடித்த பாதமும் காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

மேலும் இங்குள்ள கனக சபை நடராஜப் பெருமானின் திருவுருவம் மகா விஷ்ணு, பிரம்மா, காளி தேவி, சுந்தரர் ஆகியோருக்கு தனது தாண்டவ தரிசனத்தை காட்சி தரும் வகையில் அமைந்துள்ளது. 

மேல் சிதம்பரம்: 

பேரூர் பட்டீஸ்வரர் திருத்தலத்தில் சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் இத்திருத்தலம் மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

நடை திறந்திருக்கும் நேரம்:

தினந்தோறும் காலை : 05:30 முதல் 01:00 வரை
மாலை : 04:00 முதல் 09:00 வரை தரிசனம் செய்யலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் சிறப்பு வழிபாடுகள்

பிரதி திங்கட்கிழமைகள், பிரதோஷம், திருவாதிரை, சிவராத்திரி, பௌர்ணமி போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. 

இது முக்தித்தலம் என்பதால் இத்திருத்தலத்தின் தீர்த்தமான நொய்யலில் ஆடி, தை மாத அமாவாசைகளிலும் பிரதிமாத அமாவாசை திதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இறந்தவர்களுக்கான இறுதி காரியங்களைச் செய்கின்றனர்.

ஆடி 18ஆம் பெருக்கன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

பேரூர் பட்டீஸ்வரர் திருவிழாக்கள்

பட்டீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி மாதத்தில் முத்துப்பந்தல் திருவிழாவும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நிகழ்வும் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுகின்றன. மேலும் மகா சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, அன்னாபிஷேகம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நாட்டியாஞ்சலி திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆடல் கலைஞர்கள் வந்து அவரவரது நாட்டிய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் உத்திரத்திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்பொழுது கோயில் தேர் அலங்கரிக்கப்பட்டு தேரில் பட்டீசுவரரும் பச்சைநாயகி அம்மனும் மக்களுக்கு அருள்பாலிக்க வீதியுலா வருகின்றனர். 

நாற்று நடவுத் திருவிழா

நந்திக்கு இட்ட கட்டளை – சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான் ஒருசமயம் சுந்தரர் திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளியாகவும் நாற்று நடச்சென்றனர். தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் ‘சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே’ என்று நந்திக்குக் கட்டளையிட்டுவிட்டுச் சென்றார். 

கட்டளையை மீரிய நந்தி

இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயானார் கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார்.

நந்தி பெற்ற தண்டனை – தம் சொல்லை மீறியதால் கோபம் கொண்டு கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். பிறகு நந்தி தேவர் மன்னிப்பு வேண்டி தவமிருக்க தனது தாண்டவ தரிசனத்தை சிவபெருமான் அவருக்கு அருளினார். இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது. 

ஆனித்திருவிழா

மேலும் இத்தலத்து இறைவனும் இறைவியும் நாற்று நட்டத்தை நினைவுகூறும் விதமாக காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா ஆண்டுக்கொருமுறை சிறப்பாக ஆனி மாதத்தில் நடைபெறுகிறது.

ஆனி மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா தொடங்கி பூராடநட்சத்திரத்தில் நாற்றுநடவும், உத்திர நட்சத்திரத்தில் திருமஞ்சணமும் கோலாகலமாக நடைபெறுகிறது. 

பேரூர் பட்டீஸ்வரர் வழிபாட்டு பலன்கள்

இத்தலத்து இறைவன் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர்யாவையும் துடைத்து அவர்களின் இம்மை பிறவித் துன்பம் நீக்கி முக்தியளிக்கிறார். இவரை வழிபட்டால் அமரன் போன்ற அழியாப் புகழும் முக்தியும் கிடைக்கும் என்பது உறுதி. ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இத்திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்திருக்கிறார். இங்கு இறுதிக் கிரியைகள் செய்வதால்  முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைகிறது. பயிர் செழித்து விவசாயம் சிறந்து விளங்குகின்றது. 

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வழித்தடம்:

இக்கோவில் கோவை காந்திபுரத்தில் இருந்து மேற்கே சிறுவாணி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்தும் ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் அடிக்கடி நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் ஆட்டோ, சேர் ஆட்டோ டாக்சிகள் என தனியார் போக்குவரத்து சேவைகள் 24 மணிநேரமும் செயல்படுகின்றன.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அமைவிடம்: 

சிறுவாணி செல்லும் வழியில் கோவை விமான நிலையத்திலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும் கோவை மத்திய இரயில் நிலையத்திலிருந்து 7.5 கி.மீ தொலைவிலும் கோவை காந்திபுரம்‌ பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முகவரி:

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில், 
சிறுவாணி சாலை, பேரூர்,
கோயம்புத்தூர். 641010

தொலைபேசி எண்: 0422 2607991.

                     

திருச்சிற்றம்பலம்.

Copyright by ALAYATRA.COM