Aadi amavaasai – What is aadi amavasai? Aadi amavasya fasting and benefits
ஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் அதன் சிறப்புகள்
ஆடி மாத சிறப்புகள்
பொதுவாக ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஆடியில் மழை துவங்கிவிடும். அதனால் அனைவரும் விவசாய வேலைகளில் கவனம் செலுத்த துவங்கிவிடுவர். எனவே ஆடி முழுவதும் சுபமங்கள பொதுவிழாக்களான கோவில் விழாக்களை நடத்தி இறைவனை வழிபடுவதில் நம் முன்னோர்கள் கவனமாக இருந்தனர். மேலும் இறைவழிபாட்டில் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.
ஆடி அமாவாசை சிறப்புகள்
அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசி(மகாளய)அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கியமாக கொண்டாடப்படுகின்றன. இவற்றில் ஆடி அமாவாசை என்பது மிக சிறப்பானதாகும். ஏனெனில் ஆடி மாதம் சூரியன் தனது சுற்றுப்பாதையை வடக்கில் இருந்து தெற்காக மாற்றிப் பயணிக்கும் காலமாகும். இது “தட்சிணாயன புண்ணிய காலம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆடி மாதம் துவங்கி அடுத்தடுத்து விழாக்கள் கொண்டாடப்படுவதாலும் அடியில் அடைமழை துவங்குவதாலும் “ஆடி அழைக்கும் தை துரத்தும்” என்ற சொல் வழக்கு உண்டு. இவ்வாறு விழாக்களை அழைத்து வருவதால் மட்டுமின்றி, மேல் லோகத்தில் இருந்து பூமிக்கு வர இன்றைய தினத்தில் தான் கிளம்புகிறார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே இறந்நு போன மூதாதையர்களை பூலோகத்திற்கு அழைப்பதாலும் ஆடி அழைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மகாளய அமாவாசையான புரட்டாசி அமாவாசை அன்று முன்னோர்கள் பூமியை வந்தடைவதாகவும் தை அமாவாசை அன்று மீண்டும் முன்னோர் உலகுக்கு செல்ல பூமியிலிருந்து புறப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
மஞ்சள் மற்றும் வேம்பின் சிறப்பு
வேம்பும் மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன. ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழி ஒன்று உண்டு. ஆடி, காற்று காலமாகும். எனவே ஆடி காற்று வழியாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உண்டு. அதைத் தடுப்பதற்காகவே ஆடி மாதத்தில் வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதும் வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பதும் வழக்கமாக இருந்தன. இவை இரண்டும் மிகப்பெரிய கிருமி நாசினிகள் என்பதால் கிருமிகள் வீட்டில் வருவது தடுக்கப்படும். மேலும் இந்த மாதத்தில் மட்டுமாவது சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஏன் அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும்?
ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர் வழிபாடு செய்ய ஏதாவது புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று நீராடி பிறகு தர்ப்பணம் செய்து பிண்டம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஆடி மாத அமாவாசையன்று இராமேஸ்வரம், பவானி கூடுதுறை, கொடுமுடி, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், அவிநாசி, சிவகாசி, தென் காசி, விருதாட்சலம், காசி, வாரநாசி என புண்ணிய தலங்களுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் அமாவாசை அன்று முதல் சந்திரன் வளர்வதாக ஐதீகம். எனவேதான் அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான நாட்கள் வளர்பிறை என்று அழைக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு காரியத்தையும் தொடங்க அமாவாசை மிகச்சிறந்த நாளாகும்.
ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்
மழை வழிபாடு
மாரி என்றால் மழை. மாரியம்மன் மழைக் கடவுள். பொதுவாக ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்குவதால், விவசாயம் செய்த நம் முன்னோர்கள் அம்மனை வணங்கி மழையை வரவேற்றனர். அம்மன் வழிபாடு நல்ல மழை தரும் என நம்பினர். மேலும் ஆடிமாதம் அம்மன் தவம் செய்த மாதம் என்பதால் தேவிக்கு உகந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தேங்காய் சுடுதல்
பாண்டவர்கள் பாரத போருக்கு கிளம்பிய முதல் நாளாக ஆடி 1 கூறப்படுகிறது. பாண்டவர்கள் போரில் வெற்றி பெற போருக்கு முன் அரவாணை பலியிட்டு அவன் தலையை வைத்து பூஜை செய்து போரைத் துவங்கினார். அதன் அடையாளமாக சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றளவும் ஆடி 1ம் தேதி அழிஞ்சி மரத்தின் குச்சியில், தேங்காயை நன்றாக சுத்தம் செய்து அதன் கண் வழியாக சர்க்கரை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்டவை சேர்ப்பார்கள். தேங்காயின் கண்ணில் அழிஞ்சி குச்சி குத்தி சூட்டு சுவாமிக்கு படைத்து பூஜை செய்கிறார்கள்.
அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை
அமாவாசை அன்று அதிகாலை எழுந்து நீராடி உண்ணா நோன்பு இருந்து வீட்டில் அவரவர் குடும்ப வழக்கப்படி சைவம் அல்லது அசைவம் சமைத்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு புண்ணிய தலத்திற்கு சென்று புண்ணிய நீராடி அத்தல இறைவனை வணங்கி நெய்தீபம் ஏற்றி தீர்த்த கரையில் துளசி தீர்த்தம் தெளித்து எள்ளு சாதம் தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் உச்சி வேளைக்கு முன்பு எச்சில் படாமல் சமைத்த உணவுகளை படையலிட்டு பூஜை செய்து காகத்திற்கு வைத்து பின் விரதத்தை முடிக்கலாம்.
கோயிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால், வீட்டில் அந்தணரை அழைத்து தானம் கொடுத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாவிட்டால் வீட்டிலேயே குளித்து காலையில் சாப்பிடாமல், வீட்டில் கால் படாத இடத்தில் எள்ளை கையில் எடுத்து சுத்தமான தண்ணீர் ஊற்றி இரைக்க வேண்டும். இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுக்கலாம்.
யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும்
தாய், தந்தை இல்லாத ஆண்களும் கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலும் இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பண விரதம் இருப்பார்கள். அவ்வாறு சகோதரர், தாய் தந்தை இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம். வீட்டில் அன்னதானம் அளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது.
அமாவாசை விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் என இந்த விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள். அடியார்களுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்யலாம்.
அமாவாசை வழிபாட்டு பலன்கள்
அமாவாசை விரதம் இருந்து வழிபாடு செய்ய நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவர். முக்தி அடைந்து மோட்சம் செல்வர் என்பது ஐதீகம். இதனால் அவர்கள் நம்மை வாழ்த்துவர் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துபவர்களின் சந்ததியினர் பித்ரு தோஷம் எதுவும் இல்லாமல் நல்ல பலன்கள் பெறுவார்கள்.
மேலும் அமாவாசை அன்று துவங்கும் காரியங்கள் தடையின்றி வளரும் என நம்பப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்