Aadi pooram date pooja and benefits
ஆடிப்பூரம் சிறப்புகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்
உமாதேவி அவதார திருநாள்
பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகும் அதிலும் ஆடிமாதம் அமாவாசைக்கு பிறகு சதுர்த்தசியில் வரும் பூர நட்சத்திர தினம் மிக மிக விசேசமானது ஏனெனில்,
பக்தர்களை காக்கவும் உலக நன்மைக்காகவும் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் அன்னையான பார்வதி, உமாதேவியாக அவதரித்த தினமாக ஆடிப்பூரம் கருதப்படுகிறது. மேலும் அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் கருதப்படுகிறது. இந்நாள் “வளைகாப்பு திருநாள்” என்றும் கொண்டாடப்படுகிறது.
ஆண்டாள் ஜெயந்தி
இன்றைய தினத்தில் தான் பூமி தாய் மக்களுக்கு பக்தி மார்க்கத்தை காட்ட எண்ணி ஆண்டாளாக அவதாரம் எடுத்ததாக நம்பப்படுகிறது. அன்பால் இறைவனையே ஆட்கொண்டதால் ஆண்டாள் என்றழைக்கப்பட்ட கோதை மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த 12 ஆழ்வார்களுள் ஒருவராவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். ஆடிப் பூரத் திருவிழா திருவில்லிப்புத்தூரில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூர திருவிழா
• பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள அம்பாள் சன்னதிகளிலும் அம்மன் திருத்தலங்களிலும் அதிகாலை முதலே துவங்கி சிறப்பு அலங்காரங்களும் வழிபாடுகளும் நடைபெரும். அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்களுக்கு அந்த வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
குறிப்பாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மன், அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்மனின் மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் நடைபெரும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும்.
• தமிழ்நாட்டின் அனைத்து விஷ்ணு கோவில்களிலும் ஆடி பூரம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் திருவிழாவாகும். இதில் கடைசி நாள் (10ம் நாள்) ‘ஆடி பூரம்’ அனுசரிக்கப்பட்டு ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரங்கநாதசுவாமிக்கு பிரமாண்ட திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு ‘ஆண்டாள் திருகல்யாணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் பக்தர்கள் ‘திருப்பாவை’ மற்றும் ‘லலிதா சஹஸ்ரநாமம்’ ஓதுவார்கள்.
ஆண்டாள் பட்டுப் புடவை, பளபளக்கும் நகைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறாள். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் ஆண்டாளுக்கு மிகவும் பிடித்தமானதாகும். மேலும் பூரத்தை முன்னிட்டு திருமஞ்சனம் நடைபெறுவதால் தலை வாழை இலையில் ஆண்டாளுக்கு விருந்து படைக்கப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இரவு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நைவேத்திய பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் தலங்கள்
*திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். 4-ம் நாள் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளையல் அலங்காரம் நடைபெரும்.
*திருவாரூர் – கமலாம்பாள், நாகப்பட்டினம் – நீலாயதாட்சி, திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை திருத்தலங்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
*சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.
*திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரங்கநாதர் மற்றும் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடிப்பூர வழிபாட்டுப் பலன்கள்
ஆடிப் பூரம் அன்று பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி அரிசி மாவு கோலமிட்டு நெய் விளக்கு ஏற்றி வாசனை தூபம் காட்டி, அம்மனுக்கு சிவந்த மலர்கள் மற்றும் ஆண்டாளுக்கு மிகவும் பிடித்த தாமரை மலர் கொண்டு அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ஆடிப்பூர வழிபாட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமண யோகம் உண்டாகும் என்ற நம்பப்படுகிறது.
அன்னை உமாதேவியை வழிபட்டு வளையல் பிரசாதம் அணிந்துகொள்வதால் மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருச்சிற்றம்பலம்