ஆடி வெள்ளி வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் பலன்கள்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டின் சிறப்புகள்
ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம் ஆகும். இது தேவர்களின் இரவு காலமாகும். பொதுவாகவே வெள்ளி செவ்வாய்க்கிழமைகள் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்தது என்றாலும் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் அம்மனை வழிபட மிகவும் விசேஷமானதாக முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளது.
ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் நவ சண்டி ஹோமம், நவசக்தி லட்சார்ச்சனை, 1008 திருவிளக்கு பூஜை, அம்மன் பூப்பல்லுக்கு பவனி, நாக தேவதைகளுக்கு பாலூற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் அம்மன் கோவில் திருவிழாக்கள், பூ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தீர்த்தக்கரகம் எடுத்தல், கூழ் ஊற்றுதல் என பல விசேஷங்களும் நடைபெறும். அவற்றில் குறிப்பிடத்தக்கது அம்மனுக்கு வளைகாப்பு சாற்றுதல் நிகழ்ச்சியாகும்.
சித்திரையில் வரும் மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்வு ஈசன் பார்வதி திருமணம் என்றும் அந்த மாதத்தில் இருந்து மூன்றாவது மாதமான ஆடி மாதம் அம்மன் தாய்மை அடையும் மாதம் என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. பொதுவாக ‘ஆடி அழைக்கும்’ என்பார்கள் அதாவது ஆடி மாதம் பிறந்து விட்டால் அடுத்தடுத்து பண்டிகைகள் வரும். அதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் பருவ மழை துவங்கும் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே இதை ஆடிபெருக்கு என்று கொண்டாடுகிறோம். விவசாயிகள் ஆடி மாதத்தை விதைப்பதற்கு உண்டான மாதமாக கொண்டாடுகின்றனர். இதற்குச் சான்றாக ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உண்டு. இயற்கையை அன்னையாக எடுத்துக் கொண்டோமேயானால் விதைக்கும் மாதமான ஆடி மாதம் இயற்கை அன்னையின் கர்ப்ப காலமாகவே கருதப்பட வேண்டும். இதுவே ஆடி மாதம் பெண் தெய்வங்களை கொண்டாடும் மாதமாக இருக்க மிக முக்கியமான காரணமாகும்.
ஆடி வெள்ளி வழிபாட்டு முறைகள்
குலதெய்வ வழிபாடு
அனைத்து ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் வழிபாடு நடைபெறும் என்றாலும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக குலதெய்வம் பெண் தெய்வம் என்றால் ஆடி முதல் வெள்ளிக்கிழமை குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு படையலிட்டு விரதம் இருந்து வேண்டிக் கொள்ளுதல் மிகச் சிறந்த பலனை கொடுக்கும். குலம் தழைத்து குழந்தை செல்வம் பெருகும் என்றும் வறுமை நீங்கி செல்வம் பெருகும், தொழில் சிறந்து விளங்கும் என்பதும் ஐதீகம்.
ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு
ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அன்னை காலை முதல் மாலை வரை மஞ்சள் அல்லது சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிவார். மேலும் கண்ணாடி வளையல்களால் அம்மனை அலங்கரித்து வளைகாப்பு சாற்றும் நிகழ்வும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அம்மனுக்கு சாற்றிய மஞ்சள் சந்தனம் வளையல் திருமாங்கல்ய சரடு போன்றவை பிரசாதமாக வழங்கப்படும். இதனால் திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்ய பலமும் குழந்தை பேறும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆடி வெள்ளி அம்மனுக்கு கூழ் ஊற்றுதல்
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்று பழமொழி உண்டு. உண்மையில் ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் என்பதே சரி. சித்திரை வைகாசி போன்ற கடுமையான வெப்பம் நிறைந்த கோடை காலத்தை கடந்த பிறகு பருவமழை துவங்கும் இந்த ஆடி மாதத்தில் பருவநிலை மாற்றத்தால் அம்மை போன்ற காற்றில் பரவும் நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் நம் முன்னோர்கள் அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் கோவில் போன்ற இடங்களிலும் வேப்பிலை தோரணம் கட்டி மஞ்சள் நீர் தெளித்து சுத்தம் செய்தனர் அதன் ஒரு அங்கமாகவே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நவதானியங்களால் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல் இட்டு பக்தர்களுக்கு வழங்கினர். அதுவே இன்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபடுவதால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
ஆடி வெள்ளி விரதம்
ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி அம்மனுக்கு மிகவும் பிடித்த நிறமான செந்நிற ஆடை அணிந்து கோவிலுக்கு சென்றோ இல்லத்தில் விளக்கேற்றியோ அம்மனை செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து விரதத்தை துவங்க வேண்டும். பகல் முழுதும் இறை சிந்தனையுடன் அம்மனின் திருநாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். (முதியவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள் பால் பழம் இளநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.) பகல் முழுவதும் முழுமையாக விரதம் இருந்து மாலை கோவிலுக்கு சென்று லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அபிஷேக அலங்கார ஆராதனைகளை தரிசனம் செய்து அம்மனை வழிபட்டால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் பெருகி துன்பங்கள் அனைத்தும் நீங்கும் அம்பிகையின் முழுமையான அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது உறுதி.
வரலட்சுமி விரதம்
ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று தான் மகாலட்சுமிக்கு உகந்ததாக கருதப்படும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி நோன்பு இருப்பதால் கணவனின் ஆரோக்கியம் ஆயுள் மேம்படும். மாங்கல்ய தோஷங்கள் இருப்பின் அனைத்தும் விலகி அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். இல்லறம் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம்.
மேலும் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி இல்லத்தை சுத்தம் செய்து மாவிலை தோரணம் மற்றும் வாசனை மலர்களால் அலங்கரித்து பூஜை அறையில் பலகையின் மேல் தீர்த்த கலசத்தில் மஞ்சள் கலந்த நீர் நிரப்பி தேங்காய் வைத்து மஞ்சள் பூசி, பொட்டு வைத்து பட்டாடை மற்றும் நகைகள் அணிவித்து தீர்த்த கலசத்தை அம்மனாகவே உருவகப்படுத்தி வேப்பிலை மற்றும் மாவிலைகளால் அலங்கரித்து, ஐந்து முக நெய் விளக்கு ஏற்றி, பால், பழம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நைய்வேத்தியங்களைப் படைத்து மிகுந்த தூப தீப ஆராதனை காட்டி, மலர்களால் அர்ச்சித்து அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டோமேயானால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம். (வரலட்சுமி விரத முறை பற்றி நமது ஆலயாத்ராவில் விரிவாக வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்).
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை பெண்கள் கடைபிடித்து அன்னை பராசக்தியின் பரிபூரண அருளையும் அன்னை மகாலட்சுமியின் அருட் கடாட்சத்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்