Aatkondeeshwarar temple, Pethanayakkan palayam – salem
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் சேலம் மாவட்டம் பெத்தநாயகனன் பாளையம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம்.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல வரலாறு
வசிஷ்ட நதியின் வரலாறு
சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர் பேராறு என்ற நதியின் கரையில் பல இடங்களில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். எனவே அம்முனிவரின் பெயரை வைத்தே பேராற்றுக்கு பின்னாளில் வசிட்ட நதி என பெயர் வழங்கலாயிற்று.
பேராறு சேலம் மாவட்டத்தில் உள்ள கல்ராயன் மலைப்பகுதில் உள்ள புழுதிக்குட்டை அணையிலிருந்து ஒரு சிற்றாறும் பாப்பநாய்க்கன்பட்டி அணையிலிருந்து ஒரு சிற்றாறுமாக உற்பத்தியாகிப் பின்னர் இரண்டும் ஒன்றாக கலந்து வசிட்ட நதியாக உருவெடுக்கிறது. இந்நதி பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், காட்டுகோட்டை, மணிவிழுந்தான் வடக்கு மற்றும் தெற்கு இடையிலும், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல், ஆறகளூர் (ஆறகளூரில் வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட காமநாதீஸ்வரர் ஆலயம் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதியிருக்கிறோம்) பெரியேரி, கடலூர் ஊர்களின் வழியாகப் பாய்கின்றது.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல மூலவர் வரலாறு
வசிஷ்ட நதிக்கரையின் வசிஷ்டர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு 12 இடங்களில் சிவ தலங்கள் அமைத்தார். அவற்றில்
1. நிலம் தத்துவத்தில் பேலூர் ஸ்ரீ தான்தோண்டீஸ்வரர்,
2. நீர் தத்துவத்தில் ஏத்தப்பூர் சம்பமூர்த்தீஸ்வரர்,
3. நெருப்பு தத்துவத்தில் ஆத்தூர் கோட்டை ககாயநிர்மேஸ்வரர்,
4. காற்று தத்துவத்தில் ஆறகளூர் காமநாதேஸ்வரர் மற்றும்
5. ஆகாய தத்துவத்தில் கூகையூர் சுவர்ணபுரீஸ்வரர்
என பஞ்ச லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த லிங்கங்களில் இந்தக் கோயிலிலுள்ள லிங்கமும் ஒன்றாகும். இந்த லிங்கம் காலவெள்ளத்தில் புதைந்து விட்டது. பிற்காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவனடியாரின் கனவில் இறைவன் தோன்றி தான் வசிஷ்டநதியின் தென்கரையில் மண்ணில் புதையுண்டு இருப்பதாக கூறினார். சிவனடியார் லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்டி வழிபாடு செய்தார். இத்தலம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல பெயர் காரணம்
இத்திருத்தலத்தின் புராதன பெயர் பிருகன்நாயகிபுரி. வசிஷ்டர் தங்கியிருந்து தவம் செய்த இடம் என்பதால் வசிஷ்டாரண்யம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்ததல இறைவன் வசிஷ்டரை ஆட்கொண்டு தவம் செய்யத் தூண்டியதால் அவர் இத்தல இறைவனை ஆட்கொண்டீஸ்வரர் என்று போற்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சுவாமி தன் நெற்றியில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருவது சிறப்பு. தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை “ஆட்கொண்டீஸ்வரர்” என்கின்றனர்.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல சிறப்பு
• கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடை தாமரை மலர் போன்ற அமைப்பில் இருக்கிறது.
• இத்தல இறைவன் தன் நெற்றியில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருவது சிறப்பு.
• அதிகாரநந்தியும் பிரதோஷ நந்தியும் ஒரே மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர்.
• பொதுவாக ஆலயத்தின் உற்சவ மூர்த்திகள் அமர்ந்தநிலையில் வடிவமைக்கப்படும். ஆனால், ஆட்கொண்டீஸ்வரர் கோவில் உற்சவர் சந்திரசேகர் மற்றும் அம்பாள் இருவரும் நின்ற வடிவில் பந்தர்களுக்கு அருளுகின்றனர்.
• இத்தல உற்சவர்களுள் ஒன்றான அர்த்தநாரீஸ்வரர் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக திரிசூலத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல அமைப்பு
கோவிலை அடைந்ததும் வலது புறம் வேப்பமரத்தின் அடியில் மேடை ஒன்றில் பிள்ளையார் மற்றும் நாகர்கள் அமைந்துள்ளனர். ஆலய நுழைவாயில் அருகே அரசமரம் மற்றும் ஆலமரம் இணைந்து அழகுற அமைந்துள்ளது.
ஆட்கொண்டீஸ்வரர் கோவில் பிரகாரம்
இத்திருத்தலத்திற்கு ராஜகோபுரம் இல்லை. மாறாக கருங்கற்களான நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலை தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிமரம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளது. அதை அடுத்து அதிகார நந்தியும் பிரதோஷ நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளன.
இடமிருந்து வலமாக கோவில் பிரகாரத்தை சுற்ற பிள்ளையாரில் துவங்கி 63 நாயன்மார்களின் திரு உருவங்களும் சமயக்குரவர்கள் நால்வரின் திரு உருவங்களும் அமைந்துள்ளன. மேலே முன்னேற கன்னி மூலையில் மகாகணபதி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். பின்புறம் கிருஷ்ணர் மற்றும் மகாலட்சுமி தாயார் சன்னதிகள் இருக்கின்றன. இத்திருத்தலத்தில் முருகன் பால தண்டாயுத சுவாமியாக தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார்.
பிரகார சுற்றுப் பாதையில் மூலவரின் பின்புறத்தில் பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம் ஆகிய பஞ்ச லிங்கங்கள் தனி சன்னதிகளில் அமைந்துள்ள. மேலும் ஒவ்வொரு லிங்கத்தின் தன்மைக்கும் ஏற்றவாறு வெவ்வேறு நிறங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மாலை வேளைகளில் காண மிகவும் அழகாக உள்ளது.
சண்டிகேஸ்வரர் தனிசன்னதியில் அமைந்துள்ளார். இத்திருத்தலத்தின் பைரவர் மேற்கு முகமாக மூலவரை நோக்கி வீற்றிருக்கிறார். வழக்கமாக பிரகார சுற்றுப் பாதையில் இடதுபுறமாக இருக்கும் சூரியன் பைரவரின் அருகே நுழைவாயிலின் வலது புறம் எழுந்தருளியுள்ளார் என்பது தனிச்சிறப்பாகும். மேலும் சந்திரன் இல்லாமல் சூரியன் மட்டும் இருப்பதால் சிவசூரியன் என்று அழைக்கப்படுகிறார்.
நவக்கிரகங்கள் மூலவர் சன்னதி மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரி அன்னை சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது.
தலவிருட்சம் வில்வம் மற்றும் தல தீர்த்தம் வசிஷ்ட நதி.
மூலவர் சன்னதி கோஷ்டம்
ஆட்கொண்டீஸ்வரர் கோவில் மூலவர் சன்னதி கோஷ்டத்தில் ஊர்துவ கணபதி, குரு தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் மற்றும் விஷ்ணுதுர்க்கை போன்ற கோஷ்ட தெய்வங்கள் அமைந்துள்ளன.
மூலவர் சன்னதி
இத்தலத்தின் கருவறை விமானம் திராவிட விமானமாகும். கருவறை வாயிலில் இருபுறமும் துவார பாலகர்கள் காட்சியளிக்க உள்ளே கருணை வடிவான அண்ணல் ஆட்கொண்டீஸ்வரர் தாமரை மலர் போன்ற ஆவுடையில் நெற்றிக்கண்ணுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
உற்சவ மூர்த்திகள்
கருவறைக்கு வெளியே மூலவர் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் அமைந்துள்ளதுள்ளர். பொதுவாக உற்சவர் சிலைகள் அமர்ந்தநிலையில் வடிவமைக்கப்படும். இவை விழாக்காலங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் ஆனால் இங்குள்ள உற்சவர் சந்திரசேகர் மற்றும் அம்பாள் இருவரும் நின்ற வடிவில் பக்தர்களுக்கு அருளுகின்றனர்.
ஆட்கொண்டீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி சன்னதி
மூலவர் சன்னதி மண்டபத்தின் வெளியே இடதுபுறம் தெற்கு முகமாக தனிச்சன்னதியில் ‘அகிலாண்டேஸ்வரி’ என்ற திருநாமத்துடன் அம்பிகை அருளுகிறாள். இத்தல இறைவிக்கு பிருகன்நாயகி என்ற பெயரும் உண்டு. ஆதியில் இத்தலம் பிருகன்நாயகிபுரி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தம் என்றால் ‘பாதி’ நாரி என்றால் ‘பெண்’ சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக இறைவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். இத்திருத்தலத்தின் உற்சவ மூர்த்திகளுடன் திரிசூலத்திற்கு மத்தியில் சிவனும் சக்தியும் ஒரே மேனியாக அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.
ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோவில் திருவிழாக்கள்
சித்ரா பவுர்ணமி, அன்னாபிஷேகம், திருவாதிரை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆட்கொண்டீஸ்வரர் ஆலய சிறப்பு வழிபாடுகள்
மாதாந்திர பிரதோசம், அமாவாசை பௌர்ணமி அஷ்டமி போன்ற பூஜைகள் நடைபெறுகின்றன.
மேலும் இத்திருத்தலத்தில் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி இராகு கேது பெயர்ச்சி போன்ற கிரக பெயர்ச்சி காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்தில் அதிகார நந்தியும் பிரதோஷ நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளனர். பிரதோஷ காலத்தில் இவர்கள் இருவருக்குமே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதோஷ காலத்தில் இவர்களை வணங்கினால் செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோவில் வழிபாட்டு பலன்கள்
பொதுவாக நதிக்கரையில் அமைந்துள்ள சிவாலயங்களில் வழிபாடுதல் பாவ விமோசனம் அளிக்கும். அந்த வகையில் இத்திருக்கோவிலில் வழிபடுவதால் தீவினைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வு சித்திக்கும்.
காரிய தடைகள் உள்ளவர்கள் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தலம் நடைதிறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல அமைவிடம்
சேலத்தில் இருந்து 42.7 கி.மீ தொலைவில் ஆத்தூர் செல்லும் வழியில் ஆத்தூர் – சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 50 நிமிட பயணத்தில் இடதுபுறமாக பெத்தநாயக்கன்பாளையம் என்னும் கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
ஆத்தூரில் இருந்து 11.9 கி.மீ தொலைவில் சேலம் பெரம்பலூர் சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் உள்ளது. இத்தலத்தின் மிக அருகில் திரௌபதி அம்மன் கோயில் மற்றும் சிறு குன்றில் முருகன் கோவில் அமைந்துள்ளது.
அருகில் உள்ள விமான நிலையம்– சேலம் விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்– சேலம் இரயில் நிலையம்.
அருகில் உள்ள பேருந்து நிலையங்கள்– சேலம் மற்றும் ஆத்தூர் பேருந்து நிலையங்கள்.
இத்தலம் NH79 தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளதால் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஆட்கொண்டீஸ்வரர் திருத்தல முகவரி
அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில்,
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் – 639 109
தொலைபேசி எண்: +91-4282 221594
திருச்சிற்றம்பலம்