Anuvavi-subramaniyar-temple-kanuvai

Anuvavi subramaniyar temple history & timings – Coimbatore

Table of Contents

Anuvavi subramaniyar temple history & timings

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அடியார்களுக்கு வணக்கம். குன்று தோரும் குடிகொண்ட குமரக் கடவுள், கொங்கு நாட்டில் ஆனைகட்டி செல்லும் வழியில் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை ஒன்றின் மத்தியில் அரிய வகை மரங்கள் மூலிகைகள் பறவைகள் என அழகுற கோயில் கொண்டுள்ளார். வடக்கே குருவிருட்சமலை, தெற்கே அனுவாவிமலை, மேற்கே கடலரசிமலை ஆகியவற்றால் இக்கோயில் சூழப்பட்டுள்ளது. அருளும் அழகும் ஒருசேர அமைந்துள்ளது இத்தலத்தைப்பற்றி இப்பதிவில் விரிவாக காணலாம்.

அனுவாவி பெயர் காரணம்

Anuvavi-subramaniyar-temple

அனுமன் லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையைச் சுமந்தபடி இந்த மலையைக் கடந்து செல்லும் போது அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அப்பொழுது முருகப்பெருமானிடம் தண்ணீர் வேண்டினார். இறைவன் தனது வேலினால் இங்குள்ள ஒரு இடத்தைக் குத்த அங்கிருந்து நீர் பெருகி நதியாகப் பாய்ந்தது. அதில் அனுமன் நீராடி தாக சாந்தி அடைந்தார். அனு என்ற சொல் அனுமனைக் குறிக்கிறது. தமிழில் வாவி என்றால் நீர்நிலை என்று பொருள். ‘அனுவாவி’ என்றால் அனுமனுக்காக தோன்றிய நீர் ஆதாரம் என்று பொருள். குமரன் அனுமனுக்கு உதவியதால் இந்த மலை அனுமகுமாரமலை என்றும் போற்றப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதமாக அனுவாவி ஊருக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேயர் கோவிலும் மிக பிரம்மாண்டமான பச்சை நிறத்தில் அனுமன் சுதைச் சிற்பமும் அமைத்துள்ளது.

alayatra-membership1

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் தலவரலாறு

இக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வரலாறு கூறுகிறது. ஆனால் இத்திருத்தலம் இராமாயண காலத்தில் அனுமனால் தோற்றுவிக்கப்பட்ட தலமாக நம்பப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் மூலவர் மற்றும் ஐந்து மாமரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பின்னர் 1969ஆம் ஆண்டு புதிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2022ல் கோவில் புணரமைப்புத் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் சிறப்புகள்

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்:

Anuvavi-subramaniyar-temple-coimbatore

பொதுவாக கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் முருகனை பாலமுருகன் அல்லது தண்டாயுதபாணியாகவே தரிசிக்க இயலும். ஆனால் சுப்பிரமணியராக தன் துணைவியருடன் ஒரு சில கோவில்களில் தான் காட்சியளிக்கிறான். அத்தகைய சிறப்பு பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

தலதீர்த்தம் “காணாச்சுனை”:

கோயிலை ஒட்டி அனுமன் தீர்த்தம் / அனுவாவி என்ற பெயருடைய வற்றாத இயற்கை நீரூற்று உள்ளது. இதன் மூலம் காணக்கிடைப்பதில்லை.இந்த மலையில் கணாச்சுனை என்ற நீர் ஊற்று தல தீர்த்தமாக உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் நீர் வற்றுவதில்லை. இந்த ஊற்றுதான் முருக்கடவுள் ஆஞ்சநேயருக்காக தோற்றுவித்தார் நம்பப்படுகிறது. இது காணாச்சுனை அதாவது கண்களுக்கு புலப்படாத ஊற்று என்று மைசூர் மன்னரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீரூற்றுக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக ஐதீகம். எனவே பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் இறைவனை வணங்குகின்றனர். இது இத்திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

தலவிருட்சம்: இத்திருத்தல விருட்சம் மாமரமாகும்

சித்தர்கள் பயணித்த வனப்பாதை:

இத்திருத்தல அருணாச்சலேஸ்வரர் சன்னிதிக்கு மேல், வனப்பகுதிக்குள் சென்றால் அங்கிருந்து பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவிலுக்கு ஒரு வழி உள்ளது. சித்தர்கள் இவ்வழியில் பயணித்து இருதலத்து முருகனையும் வழிபட்டிருப்பர் என்பது நம்பிக்கை.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அமைப்பு

அனுவாவி சுப்பிரமணியர் கோயில், கருவறை, அந்தரளம், மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இத்திருத்தலத்தின் அமைப்பை இனி விரிவாக காணலாம்.

அடிவார நுழைவாயில்:

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை அடைந்ததும் அடிவாரத்தில் மிக அழகிய நுழைவாயில் கோயிலின் திருநாமத்தை ஏந்தியபடி நம்மை பிரம்மாண்டமாக வரவேற்கிறது. மலையடிவாரத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் கோயில் உள்ளது. அடிவாரத்தில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் மலையேரத் துவங்குகின்றனர். 500 படிகள் ஏறி இத்தல இறைவனை தரிசிக்கலாம்.

அகத்தியர் ஆசிரமம் – சித்தர் சன்னிதி:

agasthiyar-temple-Anuvavi-subramaniyar-kanuvai

நுழைவாயில் அருகே வலதுபுறமாக அகத்தியர் ஆசிரமம் உள்ளது. இங்கு 18 சித்தர்களின் ஜென்ம நட்சத்திரங்களும் அவர்கள் ஜீவசமாதி அமைந்துள்ள இடங்களும் குறிப்பிடப்பட்டு அவர்களது திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. காலை மற்றும் மாலை வேளைகளில் சில பக்தர்கள் இங்கு வந்து தியானம் செய்கின்றனர்.

பாதவிநாயகர் சன்னிதி:

அனுவாவி மலை ஏறத்துவங்கியதும் வலதுபுறம் பிள்ளையார் எழுந்தருளி அருள்புரிகிறார். பக்தர்கள் முழுமுதற் கடவுளான பிள்ளையாரை வணங்கி மலையேறுகின்றனர். இதனால் யானைகள் அதிக அளவில் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு எந்த இடையூறும் இன்றி தரிசனம் முடித்துத் திரும்பி வரலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வனக்கருப்பசாமி சன்னிதி:

karuppa-swamy-temple-Anuvavi-subramaniyar

பாதவிநாயகர் சன்னதிக்கு அருகில் இடதுபுறமாக வனத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை செல்கிறது. அங்கு காவல் தெய்வமான கருப்பு சாமி வனத்திற்குள் கூரை இல்லாத மேடைமேல் திருவுருவச் சிலை இல்லாமல் சுயம்பு மேனியாக குதிரை மற்றும் நாய் வாகனத்துடன் காவல் புரிகிறார். இங்கு பலர் குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். நேர்த்திக்கடனாக பலர் வேல் நட்டு வேண்டிக் கொள்கின்றனர்.

இடும்பன் சன்னிதி:

மலையேறி வரும் பக்தர்கள் இளைப்பாற நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதிக்கு சற்று முன்பாக வலப்புறம் இடும்பன் சன்னிதி உள்ளது. காவடியுடன் மலையேறி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசித்து விட்டு பிறகு தான் முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

சித்தர் குகை:

sithar-cage-Anuvavi-subramaniyar-temple

இடும்பன் சன்னிதியைக் கடந்து சற்று மேலே சென்றால் இடதுபுறமாக பாம்பாட்டிச்சித்தர் தியானம் செய்த சிரிய குகை ஒன்று உள்ளது. அதில் எப்பொழுதும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அங்கு சென்று தியானம் செய்ய அனுமதி இல்லை. எனினும் விருப்பப்படுவோர் தூரத்தில் படிகளில் அமர்ந்து தியானிக்கின்றனர். இதுதவிர மலைச் சரிவுகளில் சில குகைகள் உள்ளன. இந்த குகைகளில் பாம்பாட்டிச்சித்தர் மற்றும் முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்ததாக நம்பப்படுகிறது.

மூலவர் சன்னதி:

சுயம்பு மூர்த்தியான இத்தலத்து மூலவரின் திருமேனி ஒரு இயற்கை சீற்றத்தால் சிதைந்துவிட்டது. பின்பு புதுக் கோவில் கட்டப்பட்டு தற்போதுள்ள மூலவரை பிரதிஷ்டை செய்தனர். இத்தலத்து இறைவனான சுப்ரமணியர் அவரது துணைவியர் வள்ளி மற்றும் தேவசேனா சமேதராய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அனுவாவி சுப்பிரமணியர் கோயில் பிரகாரம்

துவாரபாலகர்கள்:

மூலவர் சன்னிதிக்கு படியேறும் இடத்தில், முக மண்டபத்தில் விநாயகர் மற்றும் வீரபாகுவே இத்தல இறைவனுக்கு துவாரபாலகளாக நின்றருளும் அபூர்வ தரிசனத்தை காணலாம்.

நவக்கிரக சன்னதி:

கோவில் வளாகத்தில் நவக்கிரகங்கள் தனி மேடையில் அமைந்து பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்.

ஆஞ்சநேயர் சன்னதி:

மூலவரை தரிசித்து பிரகாரத்தை சுற்ற துவங்கினால் தலவரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வலப்புறம் முதலில் வடக்கு திசையை நோக்கி இருப்பது வீர ஆஞ்சநேயர் சன்னதி தான். பெருமாள் சன்னதி எதுவும் இல்லாமல் சைவத்திருத்தலத்தில் அனுமனுக்கு தனிச்சன்னதி இருப்பது இத்திருத்தலத்தில் தான்.

கன்னிமூல கணபதி:

அனுமனைப் பணிந்து பிரகாரம் சுற்ற, தென்மேற்கு மூலையில் பாறைகளை ஒட்டி கன்னிமூல கணபதி தனிச்சன்னதியில் மூஷிக வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

அருணாச்சலேஸ்வரர் சன்னிதி:

arunachaleshwara-temple-subramaniyar-temple-coimbatore

மூலவருக்கு மேலே வலதுபுறம் திரும்பி மேலும் சில படிகள் ஏற அருணாசலேஸ்வரர் தனிச்சன்னதியில் ஆலமரத்தடியில் எழுந்தருளி அருள்புரிகிறார். இந்த அமைப்பு மிகவும் அரிதான ஒன்றாகும். தந்தையை தலைக்கும் மேலாகப் போற்றவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்துகிறார் சிவபாலன்.

வேல் திருவுருவம்:

vel-Anuvavi-subramaniyar-temple

மூலவரின் அருள் பெற்று மேலே அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க படியேறும் வழியில் இடதுபுறமாக வேல் அதிருவுருவம் ஒன்று உள்ளது. அது அனுமனுக்காக முருகக் கடவுள் காணாச்சுனையைத் தோற்றுவித்து, இத்திருத்தலத்தின் பெயர் வரக்காரணமான நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வழிபாடுகள்:

குழந்தை வரம் வேண்டுவோர் ஐந்து செவ்வாய் கிழமைகள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

இங்குள்ள காணாச்சுனையில் சூரிய உதயத்திற்கு முன் வசந்த காலத்தில் குளிப்பது மன மற்றும் தோல் நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.

திருமணத்தில் தாமதம் ஏற்படுபவர்கள் முருகப்பெருமானுக்கு மங்கள சூத்திரங்கள், வஸ்திரங்கள் மற்றும் திருமண விழாவை நடத்துகின்றனர்.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடை திறந்திருக்கும் நேரங்கள்:

காலை 8.00 மணி முதல்

மாலை 6.00 மணி வரை.

இத்திருத்தலம் வனப்பகுதி என்பதாலும் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் தாமதமாக நடை திறக்கப்பட்டு விரைவிலேயே நடை சாத்தப்படுகிறது.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் திருவிழாக்கள்:

ஐப்பசி மாதம் சூர சம்ஹாரம், பங்குனி உத்திரம், கார்த்திகை ஜோதி, வைகாசி விசாகம் போன்ற பெரிய விழாக்களும், மாதாந்திர சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அமைவிடம்: இத்திருத்தலம் கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 17.5 கி.மீ தொலைவில் ஆனைகட்டி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவை விமான நிலையம் மற்றும் இரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 24 மணிநேரமும் தனியார் போக்குவரத்து சேவைகள் உள்ளன.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் முகவரி:

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்,
அனுவாவி, பெரிய தடாகம், கோயம்புத்தூர்-641108.


தொலைபேசி: +91-94434 77295, 98432 84842.

   திருச்சிற்றம்பலம்.

Copyright by ALAYATRA.COM