Arudra darisanam date – Arudra darisanam in tamil-ஆருத்ரா தரிசன வரலாறு
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?அதன் சிறப்புகள் என்ன? ஆருத்ரா தரிசன வரலாறு
சிவபெருமானை இழிவுபடுத்த தாருகா வனத்து முனிவர்கள் ஒரு பெருவேள்வி நடத்தினர். அப்போது சிவன் யாசகர் வடிவில் பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மையே மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான்மேல் பக்தியுற்று அவர் பின்னே சென்றனர். இதனால் முனிவர்களின் வேள்வித்தீயில் கோபத்தீயும் கலந்தது. யாக குண்டத்தில் இருந்து முயலகன் எனும் அசுரன், மத யானை, உடுக்கை, மான், தீப்பிழம்பு ஆகியவை தோற்றின. அவற்றை சிவனைத் தாக்க ஏவினர். ஆனால் சிவபெருமான் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.
திருவாதிரைக்கு ஒருவாய் களி – பழமொழியும் சேந்தன் வரலாறும்
சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தன் என்ற விறகுவெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் சாப்பிடுவார். ஒரு நாள் அதிகமாக மழை பெய்து விறகுகள் ஈரமாகி விட்டன. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. சேந்தனாரிடம் அரிசி வாங்க காசு இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். சோதனையாக யாரும் அன்று வரவில்லை.
சிவ பக்தர் வராமல் மனம் வாடிப்போனார் சேந்தனார். தனது பக்தன் மனம் நோக விடுவாரா இறைவன். சிதம்பரம் நடராஜப் பெருமானே சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார். உடனே மகிழ்ச்சியடைந்த சேந்தனார் சமைத்த களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் சாப்பிட்டதோடு மிச்சமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்த போது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன. உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று நடந்துகொண்டிருந்த சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழாக்கு வந்திருந்தார்.
சிவனைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது.
சேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
இதைப்பார்த்த அரசனும் அமைச்சர்களும் அந்தணர்களும், சிவனடியார்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். தனது வீட்டிற்குக் களி சாப்பிட நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து சேந்தனார் மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும் எனவேதான் இன்றும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கப்படுகிறது. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்று கூறுப்படுகிறது.
ஆருத்ரா தரிசனம் சிறப்பு
சிவ வழிபாட்டில் மிகவும் விசேஷமானது சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவராத்திரியன்று சிவனை வழிபட்டால் பலன் ஆதிரையன்று அவரை தரிசித்தாலே பலன் என்று நம்பப்படுகிறது. ஆதிரை சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். எனவே அது தமிழில் உயர்வுக்குறிய அடைமொழி சேர்த்து “திரு ஆதிரை” என்றும் வடமொழியில் ஆருத்ரா என்றும் வழங்கப்படுகிறது. சிவனுக்கு ஆதிரையான் என்று ஒரு பெயரும் உண்டு. இறைவன் இவ்வுலகைத் தோற்றுவித்த நாள் இதுவே என்று நம்பப்படுகிறது.
தேவர்களின் அதிகாலை
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். எனவே இக்காலகட்டத்தில் தில்லைச் சிதம்பர நடராஜப் பெருமானை தரிசனம் செய்வற்காக தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம். ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஆறுகால பூஜைகள் நடக்கும். அவை திருவனேந்தல், காலைச்சந்தி, உச்சிகால பூஜை, பிரதோஷகால பூஜை, மாலைச்சந்தி, பள்ளியறை பூஜை என்பனவாகும். அதுபோலவே நடராஜருக்கு வருடத்தில் ஆறு பூஜைகள் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும் அவற்றில் தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும் இதுவே நடராஜர் வழிபாட்டில் திருவனேந்தல் எனப்படும் வைகறை பூஜையாகும்.
திருவாதிரை துவங்கி அடுத்து வரும் பத்து நாட்கள் திருவெம்பாவை நோன்பு என்றும் திருவாதிரை நோன்பு என்றும் கடைபிடிக்கப்படுகிறது.
திருவாதிரை நோன்பு/ சுமங்கலி நோன்பு இருக்கும் முறை
பொதுவாக பெண்கள் கணவனின் நல்வாழ்வு நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம், ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு, மாசி மாதத்தின் இறுதி நாளில் காரடையான் நோன்பு, மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு ஆகிய விரதங்களை மேற்கொள்கின்றனர். இதில் மார்கழி திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க மேற்கொள்ளப்படும் திருவாதிரை நோன்பு மிகவும் சிறப்பானதாகும். இந்த விரதம் கொங்கு மண்டலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர்.
திருவாதிரை விரதம் துவங்கும் முறை
திருவாதிரைக்கு முந்தைய நாள் பகல் முடிந்து இரவு வந்ததும் நோன்பு ஆரம்பமாகும். ஆலயங்களில் சிவனுக்கு அபிஷேகங்கள் முடிந்ததும் சந்தனக்காப்பிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். தாலிச்சரடு எனப்படும் மஞ்சள் கயிறுகள் சிவனின் திருமேனி மேல் அணிவிக்கப்படும். அடுத்த நாள் அதிகாலை சந்தனக்காப்பு கலைக்கப்பட்டு 32 வகையான அபிஷேகங்கள் செய்த பின் சிறப்பு பூஜைகள் நடைபெரும். இறைவனுக்கு திருவாதிரை களி நைவேத்தியம் செய்யப்படும். பின் பக்தர்களுக்கு மாங்கல்ய நாண் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
வீட்டில் திருவாதிரை வழிபாடு செய்யும் முறை
சிவாலயத்திற்கு சென்று ஆருத்ரா தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. வீட்டில் திருவாதிரை விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி உண்ணா விரதம் துவங்க வேண்டும்.
மஞ்சள் பிள்ளையார் செய்து அருகம்புல் சாற்றி விபூதி சந்தனம் அருகம்புல் மலர்கள் கொண்டு அலங்கரித்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். பகல் முழுவதும் நடராஜர் துதிகளை பாடி இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
மாலையில் விளக்கேற்றி பூஜை செய்து வெள்ளன்னம், பச்சரிசி அடை, இயன்றால் 18 வகை காய்கறிகள் சமைத்து விநாயகருக்கு அமுது படைத்து தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி குல தெய்வத்திற்கும் படையல் போட்டு பூஜை செய்து வழிபட வேண்டும். படையலைக் கணவருக்கு சாப்பிடக் கொடுத்து அந்த இலையில் சாப்பிடுவதால் தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை. அதன்பின் பௌர்ணமி நிலவை தரிசனம் செய்து உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிந்து வீட்டிற்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வளையல் குங்குமம் தானம் வழங்கி நோன்பை நிறைவு செய்ய வேண்டும். இந்த நோன்பு நாளில் வீட்டில் திருவாதிரை களி செய்து சிவனுக்குப் படைத்தல் மிகவும் விசேஷமாகும்.
திருவாதிரை களி
திருவாதிரை அன்று நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். களி என்றால் ஆனந்தம் என்று பொருள். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஜீவாத்மாக்கள் சத், சித் ஆனந்தம் என்ற பரவச நிலையில் இருக்கும். களி என்றால் நடனம் என்ற ஒரு பொருளும் உண்டு. மேலும் சேந்தன் இறைவனுக்கு களி வழங்கியதால் பக்தர்கள் களி சமர்ப்பிக்கும் போது ஆன்மாவை சமர்ப்பித்தல் என்ற தத்துவம் நினைவுகூறப்படுகிறது.
2023ஆருத்ரா தரிசன நேரம்
திருவாதிரை நட்சத்திரம் ஆரம்பம் – 5.1.2023 (மார்கழி 20) இரவு 9:26
திருவாதிரை நட்சத்திரம் முடிவு – 7.1.2023 (மார்கழி 22) இரவு 11:28 PM
தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு மேற்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என்று ஆடலரசனை வேண்டிக்கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்