Avinashi-lingeshwarar-temple-gopuram

Avinashi Lingeshwarar temple history – Coimbatore

Table of Contents

Avinashi lingeshwarar temple -Coimbatore

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 
அடியார்களுக்கு வணக்கம். 

தென்னகத்தின் காசி அவிநாசி:

Avinashi-lingeshwarar-temple-gopuram2

தென்னகத்தின் காசி அவிநாசி என்றால் அது மிகையாகாது. ஏனெனில் சங்ககாலத்தில் திருப்புக்கொளியூர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை அன்று காசி தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வழிபட்டால் சாபவிமோசனம் அடைந்து நல்வாழ்வும் முக்தியும் பெறுவர் என்பது உறுதி. கொங்கு மண்டலத்தின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் முதல் தலமான இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.  இக்கோவிலைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இப்பதிவில் காண்போம். இத்திருத்தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி மில் அமைந்துள்ளது.

சுந்தரர் சோழ நாட்டை சேர்ந்தவர். சேர மன்னன் ஒருவர் அவரது நெருங்கிய நண்பர். கேரளாவிற்கு அவரைப் பார்ப்பதற்காக அவிநாசி வழியாகத்தான் சுந்தரமூர்த்தி நாயனார் செல்வாராம். இன்றைக்கும் கேரளா செல்வதென்றால் அவிநாசி-பாலக்காடு புறவழிச்சாலை தானே.! அப்படி தான் இக்கோயிலை சுந்தரர் தரிசனம் செய்ததும் நமக்கு தேவாரப்பாடல் கிடைத்ததும். 

alayatra-membership1

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மற்றொரு தேவாரத் தலமான திருமுருகன் பூண்டிக்கு 5 கி. மீ அருகாமையில் அமைந்துள்ளது.

அவிநாசி லிங்கேஸ்வரர் பெயர் காரணம்:

Avinashi-lingeshwarar

விநாசம் என்றால் அழிவு. அ-விநாசம் என்றால் அழிவற்றது. அவிநாசி என்றால் அழிவற்றவன் என்று பொருள். அவிநாசி நாதரை வழிபட்டால் ஒருவன் தன் வாழ்நாளில் அழியாத புகழ் அடைந்து அமரன் ஆவான் என்பது ஐதீகம். இத்திருத்தல இறைவனுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அவிநாசி என்னும் பெயருடைய இத்திருத்தலத்திற்கு இன்னொரு இலக்கியப் பெயருமுண்டு.

அது ‘திருப்புக் கொளியூர்’ என்பதாகும். சிவபிரானின் அக்கினி தாண்டவத்தின் வெம்மை தாங்காமல், தேவர்கள் இத்தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதால் அந்தப் பெயர் வந்தது புக்கு + ஒளி + ஊர் = புக்கொளியூர். புகுந்து ஒளிந்துகொண்ட ஊர்.

அவிநாசி லிங்கேஸ்வரர் தல வரலாறு:

ஒரு சமயம் அவிநாசியப்பர் திருக்கோவில் குளத்தில் சில சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சிறுவனை ஒரு முதலை அவன் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னேயே விழுங்கிவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்து சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஊருக்கு வருகை தந்தார். இறைவனின் பாடல்களைப் பாடிக்கொண்டு அங்குள்ள தெருக்களில் நடந்தார்.  அந்த தெருவில் ஒரு வீட்டில் மங்கல இசையும் பெண்களின் கலகலப்பான சிரிப்பு சத்தமும் குழந்தைகள் விளையாடும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு வீட்டில் அழுகைச் சத்தமும் ஓலக்குரலும் கேட்டுக்கொண்டிருந்தது.

Avinashi-lingeshwarar-temple-muthalai-pillai

மூன்று வருடங்களுக்கு முன்பு  ஒரு  முதலைக்குத் தன் மகனை  இறையாகக் கொடுத்த அந்தப் பெற்றோரின் அழுகைச் சத்தம் சுந்தரரை வாட்டியது. அந்த பெற்றோர் தன் மகனும் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் சந்தோஷம் இருந்திருக்கும். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திருப்பர். ஆனால் இப்போது குழந்தையை இழந்து விட்டுத்தவிக்கிறோம் என்று ஆற்றாமையில் புலம்பிக் கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த சுந்தரர், அங்கிருந்து நேராக அவிநாசியப்பர் கோவிலுக்கு சென்று  எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக

“உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே”

என்று பாடி அந்தக் குழந்தையை உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார். சுந்தரரின் வேண்டுதலுக்கு இறங்கிய இறைவன், அந்த முதலையிடம் ‘ஐந்து வயது உடைய சிறுவன் மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேய அந்தப் பாலகன் முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். அவிநாசியப்பரின் கட்டளைப்படி அந்த முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டது. பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்த இத்தலத்து இறைவன் எமன் வாயில் சென்றவனை கூட மீட்டுத்தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அமைப்பு:

இரட்டை இராஜகோபுரம்:

சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் கிழக்கு திசை நோக்கி அருகருகே இரட்டைக் கோபுரங்களளுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அவிநாசியப்பர் இராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் ஏழுநிலைகளுடன் சுவாமி சன்னிதிக்கு எதிரிலும், அதை ஒட்டி தென்புறமாக ஐந்து நிலை ராஜகோபுரம் அம்பாள் சன்னிதிக்கு எதிரிலும் அமைந்திருந்து நம்மை வரவேற்கிறது.

Avinashi-lingeshwarar-temple-kulam

விளக்குத்தூண்:

ராஜகோபுரத்துக்கு முன்பாக பெரிய விளக்குத் தூண் ஒன்று உள்ளது. ஆத்தூர் மேடையில் அ சுவாமியைப் பார்த்தபடி நந்தி சிலை ஒன்று உள்ளது. அத்தூணில் வாயைப் பிளந்தபடி ஒரு முதலையும், அதன் வாயில் இருந்து ஒரு சிறுவன் வெளியே வரும் காட்சியும் அமைந்துள்ளது.

கோவில் பிரகாரங்கள்:

கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரத்தில் உள்ள விநாயகரை வணங்கி பின்பு பெரிய கோபுரத்துக்கும் அம்பாள் சன்னதியின் கோபுரத்திற்கும் நடுவில் உள்ள தவத்திலிருக்கும் பாதிரி மரத்து அம்பாளை தரிசித்துவிட்டுதான் உள்ளே செல்லவேண்டும்.

உட்பிரகாரமும் அவிநாசியப்பர் சன்னிதியும்:

ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கணபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உட்பிரகாரத்தில் நுழைந்ததும் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது. 

பெருங்கருணை நாயகி:

இத்திருத்தலத்தின் இறைவி பெருங்கருணை நாயகி தனி இராஜகோபுரம் கொடிமரத்துடன் வேறெங்கும் இல்லாத வகையில் மூலவரின் வலது பக்கம் தனிச்சன்னதியில் அருள்புரிகிறார். இந்த அம்பாளைப் பற்றி ஒரே நாளில் 100 பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது.

விஷம் நீக்கும் விருச்சிகம்:

அம்பாளின் பின்புற மாடத்தில் தேள் உருவம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விச ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விச ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது. இத்தேளை விருச்சிக ராசியினர் வழிபட்டு வருவது மிகவும் சிறப்பானதாகும். அப்படி வழிபடும் முன்னர் ராஜகோபுரத்தில் குபேர திசையான வடக்கு திசையை நோக்கியுள்ள செல்வ கணபதியை வணங்கி விட்டு பிறகு விருச்சகத்தை வழிபட வேண்டும்.

விசேஷ நடராஜர்:

Avinashi-lingeshwarar-temple-coimabatore

வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர்.  சபாமண்டபத்தில் ஐம்பொன்லால் ஆன நடராசர் சிவகாமி அம்மன் சமேதராக அருள்புரிகிறார். பஞ்ச தாண்டவ தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

சோமஸ்கந்தர்:

somaskanthar-avinashi

கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் சிவன் பார்வதி சன்னதிகளுக்கு இடையில் முருகன் சன்னதி அறுங்கோண வடிவில் அமைந்திருக்கிறது. இது விசேஷமான சோமாஸ்கந்த வடிவமைப்பு ஆகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

“நல்ல’ சனீஸ்வரன்:

இத்திருத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் நவக்கிரக சன்னிதியோடு வசிஷ்டர் பிரதிஷ்டை செய்த சனிபகவான் சன்னதியும் தனியாக உள்ளது. வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார்.

வியாதவேடர் சன்னிதி:

முறையான வழிபாட்டு முறைகள் தெரியாத தியான மார்க்கம் அறியாத திருடனுக்கு பரமார்த்த பக்தியுடன் உலகை வேண்டிக்கொண்ட திருடனுக்கும் முக்தி அடித்துள்ளார் இத்தல இறைவன் என்பது வரலாறு. அதற்கு சான்றாக பைரவர் சந்நிதிக்கு அருகில் வியாத வேடர் என்ற அந்த முக்தியடைந்த திருடனுக்கும் உருவச் சிலை அமைந்துள்ளது.

வித்தியாசமான விஷ்ணு சிலை:

மற்ற சிவாலயங்களைப் போல் விஷ்ணு, சிவன் சன்னதிக்கு பின்னால் இல்லாமல் கொடிமரத்தின் அருகே சுவாமியை பார்த்தபடி அமைந்திருக்கிறார்.

குருவை மிஞ்சிய சிஷ்யன் சிலை:

இங்குள்ள தட்சணாமூர்த்தி தலைக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார்.  இவர் தட்சணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய ஞானத்தை பெற்று குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆனார். ஆதலால் குருவின் குருவாக மதிக்கப்படுகிறார்.

இக்கோவிலில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் உள்ள சதுரக் கிணற்று நீரை சுவாமி அபிஷேகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கங்கைக்குச் சமமான புனிதநீர் திருவிழாக் காலங்களில் கலசங்களில் நிரப்பப்பட்டு, பிற ஊர்களுக்கு கொண்டு சென்று வழிபடப்படுகிறது. அருகே இருக்கும் தெப்பக்குளம் கயிலை தீர்த்தம் என்றும் சிவ தீர்த்தம் என்றும் நாக கன்னி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ காலபைரவர் சந்நிதி:

இத்தலத்தில் பைரவர் சந்நிதி சிறப்பிற்குரியதாகும். 64 பைரவ மூர்த்தங்களில் இத்திருக்கோவில் உள்ள பைரவர் ‘ஆகாச காசிகா புரதனாத பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை காசியிலிருந்து எடுத்து வந்ததாகவும் காசி பைரவருக்கு முற்பட்டவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன . இவருக்கு வடைமாலை சாற்றுவது சிறப்பான வழிபாடாகும்.

திருத்தலத்தின் சிறப்புகள்:

தேவாரப்பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் 205 திருத்தலமாகும். மேலும் காசிக்குச் சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அந்த புண்ணியம் அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசித்தால் உண்டு என்பது நம்பிக்கை. 

இத்திருக்கோவிலின் மூலவரான அவிநாசியப்பர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

இத்திருத்தலத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர் ஒருவர் தவக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மற்றொருவர் அன்னை கருணாம்பிகை. இவர் ஆட்சி பீட நாயகி என்பதால் மூலவரின் வலது பக்கம் அமைந்திருப்பது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியான ராஜகோபுரமும் கொடிமரமும் அமைந்திருக்கிறது.

காலபைரவர் சந்நிதி உட்பிரகாரத்தில் இருப்பது இத்திருத்தலத்தில் மட்டும் தான்.

இத்திருத்தலத்தின் விருட்சமான பாதிரி மரம் மற்ற நேரங்களில் பூக்காமல் சித்திரையில் நடைபெறும்  பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் என்பது அதிசயமான விஷயம் ஆகும்.

இக்கோவிலின் தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைப்பாடுகளுக்காக பெயர் பெற்றது.

மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து விட்ட பின்பு தான் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை இந்த அவிநாசியப்பர் அருளுகின்றார்.

அவிநாசி லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் திருவிழாக்கள்:

Avinashi-lingeshwarar-chariot

சித்திரையில் பிரமோற்ஸவம் மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி பூர நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு. இதைத்தவிர சிவராத்திரி, திருவாதிரை பிரதேசம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.

அவிநாசி லிங்கேஸ்வரர் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 1 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அவிநாசி லிங்கேஸ்வரர் பலன்கள்:

இக்கோயிலின் இறைவனை வணங்கினால் இறவாப்புகழும் ‘பிறவாத்தன்மை’யும் கிடைக்கும். அம்பாளின் கோயில் பின்புறம் உள்ள மதில் சுவரில் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வம்மனை தரிசித்து விருட்சகத்தை வழிபட்டால் விஷம் நீங்கும், தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.

கோவிலை அடைவது எப்படி ?

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

 திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

கோவைக்கு கிழக்காக 42 கி.மீ தொலைவிலும் திருப்பூரிலிருந்து வடமேற்காக 12 கி.மீ தூரத்திலும், திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் கோவை – ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே பொது மற்றும் தனியார் போக்குவரத்து வசதிகள் 24 மணிநேரமும் உள்ளன. 

அருகில் உள்ள விமான நிலையம்: கோவை விமான நிலையம்

அருகில் உள்ள ரயில் நிலையங்கள்: கோவை மற்றும் திருப்பூரில் இரயில் நிலையங்கள்.

அவினாசி பேருந்து நிலையம் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் முகவரி:

அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருப்பூர் மாவட்டம், 
அவிநாசி – 641654.

தொலைபேசி எண்: 04296 273113,  94431 39503

திருச்சிற்றம்பலம்

🙏

Copyright by ALAYATRA.COM