balamurugan-temple-salem-kanjamalai

Murugan temple Kanjamalai – Kanjamalai Balamurugan temple Salem

Murugan Temple Kanjamalai – Kanjamalai Balamurugan temple Salem -Tamilnadu

கஞ்சமலை பாலமுருகன் திருக்கோவில் வரலாறு

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் சேலம் மாவட்டம் கஞ்சமலையில் குடிகொண்டிருக்கும் ஞானசற்குரு பாலமுருகன் திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம்.

கஞ்சமலை ஞானசற்குரு பாலமுருகன் திருக்கோவில் வரலாறு

kanjamalai-balamurugan-temple-salem

மயில் பெற்ற சாப விமோசனம்

இத்திருக்கோயில் அமைந்துள்ள குன்று கஞ்சமலைத் தொடரை சேர்ந்தது. ஒருமுறை திருமால் தன் மருமகன் முருகப் பெருமானைக் காண சென்றிருந்த போது அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனிடம் மயில் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டு மயிலை கல்லாகும்படிச் சபித்தார். மயில் தன் செயலுக்கு வருந்தி விமோசனம் வேண்டி இங்கு வந்து தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்தில் மகிழ்ந்து சாப விமோசனம் அளித்தார்.

alayatra-membership1

பக்தரை ஆட்கொண்ட முருகப் பெருமான்

முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. ஒரு சமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றார். பின்பு, ஊதுவர்த்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். ஊதுவர்த்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனை கூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவை தானா? என்ற சிந்தித்தார்.

உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்துவர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை, என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.

balamurugan-temple-kanjamalai

பாலமுருகன் திருக்கோவில் கஞ்சமலை சிறப்புகள்

இத்திருத்தலம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மிகுந்த சிறப்புகளை உடைய கஞ்சமலையின் ஒரு பகுதியில் மிகச்சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.  250 அடி உயரமே உள்ள இந்த மலைமேல் உள்ள முருகப் பெருமானை 101 படிக்கட்டுகளை கடந்தால் தரிசிக்கலாம். (கஞ்சமலையின் சிறப்புகளை இத்தலத்தின் அருகில் அமைந்துள்ள சித்தேசுவர சுவாமி திருத்தலம் குறித்த மற்றொரு பதிவில் விரிவாக காணலாம்)

மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், காளாங்கி, கஞ்சமலையானோடு எழுவரும் என் வழியாமே, என்று திருமந்திரத்தில் பாடல் பெற்ற தலம் இது. மேலும் கந்தகுரு கவசத்தில் கஞ்சமலை சித்தர் மகிழ்ந்து பணி பரமகுரு என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கஞ்சமலை பாலமுருகன் திருக்கோவில் அமைப்பு

ஞானசற்குரு பாலமுருகன் கோவில் அடிவாரத்தில் வலதுபுறம் பாதவிநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. மலை ஏறும் போது இருபுறமும் கல்லால் ஆன அழகிய யானை சிற்பங்கள் அமைந்துள்ளன. சன்னிதியை நோக்கி மயில் வாகனம் கல்மண்டபத்தில் அமைந்துள்ளது. 101படிகள் ஏறியதும் மூன்று நிலைகள் கொண்ட அழகிய இராஜகோபுரம் வரவேற்கிறது. இராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றதும் சுவாமி சன்னதிக்கு எதிரில் பிரகார சுற்றுப்பாதையில் வலதுபுறம் ஐயப்பன் சன்னதியும் இடதுபுறம் வாய்பொத்தி பாலமுருகனிடம் உபதேசம் பெரும் சிவன் மற்றும் கைகூப்பி தரிசனம் தரும் பிரம்மா, விஷ்ணு சன்னதிகளும் நாரதர் சன்னதியும் காணப்படுகின்றன. இவை இத்தலத்தின் சிறப்பம்சமாகும். 

kanjamalai-balamurugar-temple-history

மூலவரின் எதிரில் கொடிமரம், மயில் வாகனம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் சுமித்திர சண்டர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகிய கோஷ்ட தெய்வங்கள்  அமைந்துள்ளன. இதில் சுமித்திர சண்டர் முருகப் பெருமானின் சண்டர் திருமூர்த்தமாகும். இது ஓர் அரிய அமைப்பாகும். இதேபோல் விநாயகருக்கு கும்ப சண்டரும் மற்றும் பார்வதிக்கு சண்டிகேஸ்வரியும் சண்ட மூர்த்தங்களாகும்.

கோஷ்டம் சுற்றி வந்து கருவறையில் நுழையும்போது இடதுபுறம் பிள்ளையாரும் நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களும் வீற்றிருக்கின்றனர். கருவறையில் முருகன் பால முருகனாக அருள்பாலிக்கிறார்.

சன்னிதி வளாகத்தில் அன்னதான கூடமும் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. 

ஞானசற்குரு பாலமுருகன் திருக்கோவில் திருவிழாக்கள்

கஞ்சமலை ஞானசற்குரு பாலமுருகன் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்:

சஷ்டி, கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

குழந்தைகள் நலனுக்காக வேண்டிக்கொள்பவர்களும், இரும்பு. தங்கம், பூவியாபாரம் செழிக்க வேண்டிக்கொள்பவர்களும் இந்த முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்றுகின்றனர்.

பாலமுருகன் கஞ்சமலை வழிபாட்டு பலன்கள்

இங்கு எழுந்தருளியுள்ள முருகனை சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனம் அமைதியாகும், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும், தங்கம், இரும்பு, பூ  வியாபாரம் விருத்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்பகுதியில் அரிய மூலிகைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்தக் கோயிலில்  வழங்கப்படும் தீர்த்தத்தால் நீண்டகால நோய்கள் நீங்குவதாகவும் 15வகை நோய்கள், மயக்கம், மனோவியாதி நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.

குழந்தை பாக்கியம்திருமணத்தடை விலகல், இழந்த வருமானத்தை மீண்டும் பெறுவது ஆகிய பலன்களும் கிடைக்கிறது.

kanjamalai-balamurugar-temple-timings

கஞ்சமலை பாலமுருகன் திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கஞ்சமலை பாலமுருகன் திருக்கோவில் அமைவிடம்

கஞ்சமலை சேலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இளம்பிள்ளை எனும் சிற்றூருக்கு அருகே அமைந்துள்ளது. 

அருகில் இருக்கும் விமான நிலையம்– சேலம் விமான நிலையம்

அருகில் இருக்கும் இரயில் நிலையம்– சேலம் இரயில் நிலையம்

அருகில் இருக்கும் பேருந்து நிலையம்– சேலம் பேருந்து நிலையம்.

இத்திருக்கோயிலுக்கு சேலம் மற்றும் இளம்பிள்ளையிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அமாவாசை தினத்தன்று காலை முதல் இரவு வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றது.

சஷ்டி மற்றும் கிருத்திகை, பவுர்ணமி நாட்களில் பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமணத்தடை விலகல், இழந்த வருமானத்தை மீண்டும் பெறுவது ஆகிய பலன்களும் கிடைக்கிறது.

பாலமுருகன் திருக்கோவில் கஞ்சமலை முகவரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
கஞ்சமலை
சேலம்.
சேலம் மாவட்டம்.
தமிழ்நாடு 636307

தொலைபேசி: +91 98431 75993

Copyright by ALAYATRA.COM