trichy-thirupattur-brammapureeshwarar-temple

Brahmapureeswarar temple -change your fate by seeking the blessings of Brahma Tirupattur, Trichy

Table of Contents

Brahmapureeswarar temple – Tirupattur, Trichy

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் – திருப்பட்டூர் – திருச்சி மாவட்டம்

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வழிபடும் அடியவர் தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பற்றி விரிவாகக் காண இருக்கிறோம்.

திருப்பட்டூர் பெயர்க்காரணம்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலம் காசிக்கு நிகரானது மட்டுமல்லாது கைலாயத்திற்கும் நிகரான தாகும். 3001 வேதம் ஓதுபவர்கள் அனுதினமும் வேதங்களைப் பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்ததால் முற்காலத்தில் இவ்வூர் திருப்பிடவூர் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் திருப்பட்டூர் என்று மருவியது என்று குறிப்புகள் சொல்கின்றன. மேலும் முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்திருக்கோயிலில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன் பின்னர் படை திரட்டிச் சென்றாராம். இதனால் திருப்படையூர் எனப்பட்ட இத்திருக்கோயில் திருப்பட்டூர் என மருவியதாகவும் கூறுவர்.

பெம்மானே பேரருளாளன்
நம்மானே தண்டமிழ் நூற்புலவாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே

என சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப் பெற்ற திருத்தலம். திருச்சியில் இருந்து வடக்கே சுமார் முப்பத்தி இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் செல்லும் வழியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

alayatra-membership1

திருப்பட்டூர் – பிரம்மன் பிராயச்சித்தம் தேடிக் கொண்ட திருத்தலம்

Bhrammapureeshwarar-temple-tirupattur-trichy

படைக்கும் கடவுளான பிரம்மா தானே இந்த உலகை உருவாக்கியவன் தனக்கும் ஐந்து தலைகள் உள்ளன, படைத்தல் காத்தல் அழித்தல் என சிவபெருமானின் முத்தொழில்களையும் தானும் செய்ய இயலும். ஆகவே தானே சிவனை விட மிகவும் மேலானவன் என்று கர்வம் கொண்டு தன் கடமையிலிருந்து தவறினார். இதனால் சினம் கொண்ட சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை திருவையாறு அருகே உள்ள திருக்கண்டியூரில் கொய்தார். கொடுத்த படைப்புத் தொழிலையும் பறித்தார். துடித்துப் போனார் பிரம்மா. அகங்காரம் தந்த அழிவும் அதனால் கிடைத்த அவமானமும் துன்புறுத்த பிரம்மன் தன் தவற்றை உணர்ந்து சிவனிடம் சரணடைந்து மன்றாடி பிராயச்சித்தம் கேட்டார்.

அதையடுத்து சிவனின் அறிவுரைப்படி கடும்தவம் புரிந்த பிரம்மன் 12 வகையான துவாதச லிங்கங்களை திருப்பிடவூரில் பிரதிஷ்டை செய்து, பிரம்ம தீர்த்தமொன்றை உருவாகக்கி அதில் நீராடி அனுதினமும் பூஜை செய்து வந்தார். பிரம்மனின் வழிபாட்டில் மனமகிழ்ந்த ஈசன், பிரம்மனே யாம் உம் தலையெழுத்தை மாற்றி அமைக்கிறோம். இன்று முதல் சாப விமோசனம் அடைந்து படைப்புத் தொழிலை செய்வீராக. இங்கு வந்து வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் தலையெழுத்தை நீங்கள் மங்களகரமாக மாற்றி அமைக்கும் வரம் தருகிறேன் என்றும் “விதி இருப்பின் விதி கூட்டி அருள்க” என்றும் அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும், அம்மன் பிரம்ம நாயகி/பிரம்ம சம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைப்பு

brammapureeshwarar-temple

அரங்கேற்ற அய்யனார்

பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு வலதுபுறமாக அய்யனாருக்கு மிகப்பெரிய கற்கோயில் அமைந்துள்ளது. இதுவே அய்யனாருக்கான முதல் கற்கோயிலாகும். ஞான உலா அரங்கேற்றிய அய்யனார் என்ற பெயரில் கையில் ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவர்.

மேலும் பல்வேறு காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பலர் இங்கு வந்து போரில் வெற்றி பெற வேண்டி, பின்னர் மாபெரும் வெற்றிகளையும் பெற்று அவர்களின் குலதெய்வமாக அய்யனாரை ஏற்று வழிபட்டிருக்கின்றனர்.

ராஜகோபுரமும் மூலவர் சந்நிதியும்

ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டு மிக பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. வாயில் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிமரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்திலிருந்து 300 அடி தொலைவில் இத்தல இறைவன் பிரம்மபுரீசுவரர் சன்னதி உள்ளது. மூலவர் இறைவன் பிரம்மபுரீசுவரர் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிறப்பு பிரகார வடிவமைப்பு:

“குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ” என்ற ஸ்லோகத்தின்படி சிவன் கோஷ்டத்தில் முதலில் குரு தட்சிணாமூர்த்தி, பிரம்மா, பிறகு மூலவர் கோஷ்டத்தில் உள்ள குரு விஷ்ணு பின் மூலவரான மகேஷ்வர் என வரிசையாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு மிகவும் சிறப்பானதாகும்.

அருள்மிகு பிரம்ம நாயகி அம்மன் சன்னதி

சிவன் கோஷ்டத்தை வலம் வந்து ஆலய நாதரான பிரம்மபுரீஸ்வரரை தரிசித்து வெளியேறுகையில் இடதுபுறமாக அருள்மிகு பிரம்ம சம்பத்கவுரி அம்மன் விஸ்தாரமான மண்டபத்தில் தனிச் சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தாயாரை செவ்வாய் வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி சௌபாக்கியம் பெருகும்.

திருக்கோவில் பூங்கா

அம்மன் சன்னதியை ஒட்டி இடதுபுறமாக திருக்கோவில் பூங்கா அமைந்துள்ளது சிறிய நந்தவனமும் அதில் தலவிருட்சமான மகிழ மரமும் அமைந்துள்ளது.

பிரம்ம தீர்த்தம்

brammapureeshwarar-temple-bramma-theertham

பூங்காவை அடுத்து பிரம்மன் உருவாக்கி நீராடிய பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தை ஒருவர் கையில் எடுத்தாலே அவர் கங்கையில் குளித்த பலனை அடைகிறார். தீர்த்த குளத்தின் வெளியில் நான்முகனின் சுதைச்சிற்பம் தாமரையில் அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதர் சன்னதி

இக்கோயிலிலுள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். அருள்மிகு வள்ளி தெய்வசேனா சமேதராய் காட்சியளிக்கிறார். இந்த சுப்பிரமணிய சுவாமியை பட்டு சார்த்தி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வியாபாரத்தடை நீங்கும். மேலும் முக்தி நிச்சயம்.

பிரம்மன் சன்னிதி

சிவன் கோஷ்டத்தின் அருகிலேயே வலதுபுறமாக பிரம்மன் தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். வேறெந்த கோயில்களிலும் இல்லாதவாறு மிக பிரம்மாண்டமான பிரம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தின் பிரம்மன் சன்னதியில் வியாழக்கிழமை அல்லது அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று ஜாதகத்தை வைத்து வழிபட்டால் அவரது தலையெழுத்து மாறி நல்வாழ்வு அமையும். மங்களம் தந்து வாழ்க்கையைச் சிறக்கச் செய்யும் குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால் இக்கோயிலில் பூஜையின்போது பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.

பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்

இக்கோயிலின் தனிச்சிறப்புகள் மிக நீண்ட பட்டியல் ஆகும்.

பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் வடிவமைப்பு

நான்கு வேதங்களையும் ஈசன் அம்பிகையிடமும் அம்பிகை பிரம்மனிடமும் பிரம்மன் நந்தியிடமும் நந்தி ரிஷிகளிடமும் உபதேசித்ததாக நம்பப்படுகிறது. அவ்வகையில் நான்கு வேதங்களின் உபதேசமும் இத்திருத்தலத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் கோவிலின் வடிவமைப்பு ஈசன், அம்பிகை, பிரம்மன், பெரிய நந்தி, பதஞ்சலி முனிவர் என்ற வரிசையிலேயே அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

12 லிங்கங்கள்

bramma-worshipped-sivan-temples

பிரம்மன் பிரதிஷ்டை செய்த பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள நாதர், தாயுமானவர், மண்டுக நாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய பன்னிரண்டு லிங்கங்களும் ஒரே திருத்தலத்தில் அமைந்துள்ளது மிகவும் விசேஷமான ஒன்றாகும். இத்திருத்தலத்தில் வழிபாடு செய்தால் 12 ஜோதிர்லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்

பிரம்மன் வழிபட்ட பதினாறு பட்டைகள் உடைய ஷோடசலிங்க சன்னிதி தனிமண்டபத்தில் அமைந்துள்ளது. . இந்த மண்டபத்தின் மேற்பரப்பு மரத்தால் ஆனது.

முருகன் வழிபட்ட லிங்கம்

போருக்குப் படைதிரட்டிச் செல்லும் முன் முருகப்பெருமான் இங்கு வந்து லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த சிவனை வழிபட்டால் வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மங்களகரமாக மஞ்சள் நிறம்

இத்திருத்தலத்தில் 12 லிங்கங்கள், நந்தி மற்றும் பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள் ஆடையே சார்த்தப்படுகிறது. இத்திருத்தலத்து பிரம்மன் நம் வாழ்க்கையை மங்களகரமாக மாற்றக் கூடியவர் என்பதால் அவருக்கு மஞ்சள் காப்பிட்டு, மஞ்சள் ஆடை உடுத்து, புளியோதரை நைவேத்தியம் படைத்து வழிபடுகின்றனர். பிரசாதமாக மஞ்சள் வழங்கப்படுகிறது.

அய்யனாருக்கான ஒரே கற்கோயில்

வேறெங்கும் இல்லாத வகையில் இத்திருக்கோவிலில் தான் அய்யனாருக்கு கற்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து அய்யனார் அரங்கேற்ற அய்யனார் என்று அழைக்கப்படுகிறார். வாள் கம்பு எதுவும் கையில் இல்லாமல் ஓலைச்சுவடியை கையில் ஏந்திய வண்ணம் காட்சியளிக்கிறார். அருகில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக பூர்ணபுஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் பக்தர்களுக்கு தனி சன்னிதியில் அருள்புரிகிறார்.

வியாக்ரபாதர் புலிக்கால் முனிவர் ஜீவ சமாதி

இத்தலத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் புலியின் கால்களைப் பெற்றிருந்த முனிவரான வியாக்ரபாதர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த இடம் அமைந்துள்ளது.  மேலும் காசி விசுவநாதர் சமேத விசாலாட்சி கோயிலில் வியாக்ரபாதர் ஜீவ சமாதி உள்ளது. சிவபெருமான் அருளால் வியாக்ரபாதர் காலால் அடித்துக்கொண்டு வரப்பட்ட கங்கைக்குளம் இன்றும் புலிக்கால்களைப் போல காட்சியளிக்கிறது.

பிரம்மபுரீஸ்வரர் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி

கோயில் கட்டுமானம் சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வலம் வரும் சூரியன், ஏழு நிலைகளைக் கடந்து தினமும் பிரம்மபுரீசுவரரைத் தரிசிப்பதாக ஐதீகம். பங்குனி மாதம் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சிவலிங்கம் மீது சூரியவொளி விழும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ஏழு நிமிஷங்கள் இந்த ஒளி இருக்கும். இது சூரிய பூஜை என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதே நாளில் அடுத்த 7 நிமிஷங்களுக்கு அம்மன் மீதும் சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வும் நடைபெறுகிறது.

விசேஷ பைரவர்

இங்குள்ள பைரவரின் வலது காது வித்தியாசமான வடிவமைப்பில் அமைந்துள்ளது. இது மிகவும் விசேஷமானதாகும். அஷ்டமியில் ராகு கால வேளையில் இங்குள்ள பைரவரை தரிசித்து அவரது வலது காதில் நமது வேண்டுதல்களை கூறினால் அவை நிறைவேறும் என்பது ஐதீகம். இதற்காகவே பைரவரின் வலக்காது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.இக்கோயிலில் மேற்கு நோக்கி உள்ளாரென்பது மிக விசேஷமானதாகும்.

குரு பரிகாரத்தலம்

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும் பிரம்மா சன்னதியில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குருதோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் இக்கோயிலில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் பிரம்மா மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். யாருக்குத் தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மா பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். ஒருவரது ஜாதகத்தில் 7 ஆம் இடம் மனைவி நண்பர்கள் ஆகியவற்றை குறிப்பதால் இது தொடர்பான தோஷங்களுக்கு பரிகார ஸ்தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் ஏழாம் எண்ணுக்குரிய அனைத்து தோஷங்களுக்கும் இத்திருத்தலத்தில் வழிபடுதல் பரிகாரமாக அமைகிறது.

பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி

இத்திருத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணனை வணங்கி பணிந்ததால் ஆதிசேஷன் அடுத்தகணம் பதஞ்சலி முனிவராக மாறினார் என்பது ஐதீகம். சோதிடக்கலையின் தந்தையும் பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் 10 இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக தகவல் உண்டு. இந்த 10-இல் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

நரசிம்மரர் மண்டபம்

நரசிம்மர் அவதாரம், இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதானுக்கு அருள் செய்தது ஆகிய நான்கு காட்சிகள் இக்கோயிலின் கொடிமரம் அருகே நான்கு தூண்களில் எழிலுற வடிவமைக்கப்பட்டு காணப்படுகிறது. எனவே இது நரசிம்மர் மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.

நாத மண்டபம்

ராவணனேஸ்வரன் சிவன் மேல் கொண்ட அதீத பக்தியால் இறைவன் தனக்கு மட்டுமே சொந்தமானவர் என்றும் அவர் தன்னுடன் தன் நாட்டிலேயே வசிக்க வேண்டும் என்றும் தவமிருந்து வேண்டிக்கொண்டான். ஆனால் பார்வதிதேவியோ இறைவன் இந்த உலகத்துக்குப் பொதுவானவர் என்றும் ராவணனுடன் இலங்கையில் வந்து வசிக்க இயலாது என்றும் மறுத்துவிடவே தன் தீவிர பக்தியினால் ராவணன் கயிலாய மலையை சிவன் மற்றும் பார்வதியுடன் சேர்ந்து இலங்கைக்கு தூக்கிச் செல்ல முயன்றான். அது முடியாமல் போகவே தவத்திற்கும் இசையாத ஈசன் இசைக்கு வசப்படுவான் என்று அறிந்து சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான் ராவணன்.  இதை நினைவு கூறும் வகையில் இக்கோவிலின் மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் நாத மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதி பிரகதீஸ்வரர் ஆலயம்

இத்திருத்தலத்தில் தஞ்சை பெரிய கோயில் கோபுர அமைப்பு போன்றே வடிவமைக்கப்பட்ட கைலாசநாதர் சன்னதியும் எதிரே பெரிய நந்தியும் உள்ளது. இந்த நந்தியை நம் கைகளால் தொடும் போது நிஜமான ஒரு காளையை தொடுவது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. ஒரே இடத்தில் ஏழு லிங்கங்கள் அமைந்துள்ளன.

இதனால் இச்சன்னிதி தஞ்சைக்கு முந்தைய திருக்கோயில் வடிவமைப்பு என்று கருதப்படுகிறது. 

அரங்கேற்றம்

சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனைப் பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை சாஸ்தா அய்யனார் என்றழைக்கப்படும் மாசாத்தய்யனாரைக் கொண்டு இத்திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்தார் சிவபெருமான் என்பது ஐதீகம்.

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் சிறப்பு வழிபாடுகள்

ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் குரு தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் திங்கள் கிழமைகளிலும் புனர்பூசம் சதயம் திருவாதிரை நட்சத்திர நாட்களிலும் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் பக்தர்களின் ஜாதகத்தை பிரம்மன் திருவடியில் வைத்து பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு குரு பெயர்ச்சியன்றும் பிரம்மாவிற்கு விசேஷ தோஷ நிவர்த்தி யாகபூஜை நடைபெறுகிறது. திருமணத்தடை பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுதல் வியாபாரத்தை போன்றவைகளுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியினர் மக்கட்பேறு வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

பூஜைகள் 

இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலசாந்தி பூஜை காலை 8.30 மணி முதல் 9.30,
உச்சிக்கால பூஜை  முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12,
சாயரட்சை பூஜை மாலை 6 மணி முதல் 6.30,
அர்த்தசாம பூஜை இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் காலை 8 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும். 

எலும்பு நோய்க்கு சிறப்பு பூஜை

பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இந்த இடத்தில் லிங்கமும் ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்துக்குத் தயிர் சாதம் படைத்து பூஜை நடைபெறும். வைகாசி மாத சதய நட்சத்திரத்தன்று பதஞ்சலி மகரிஷி குரு பூஜை நடைபெறுகிறது. மன அமைதி கிடைக்க, எலும்பு சம்பந்தமான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

நடை திறந்திருக்கும் நேரம்

இக்கோயில் வார நாள்களில்
காலை 7 மணி முதல் பிற்பகல் 12,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்,
வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1, மாலை 4 மணி முதல் இரவு 8 வரை திறந்திருக்கும். குறிப்பாக குருஹோரையான காலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை தரிசனம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். இதிலும் பங்குனி மாத பூரம் நட்சத்திரத்தன்று திருத்தேரோட்டம் நடைபெற்று, சுவாமி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சித்திரை மாத முதல் தேதியான தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைபெறும். இதையொட்டி பிரம்மபுரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதுபோல, ஆடிமாத பூரம் நட்சத்திரத்தன்று பிரம்ம சம்பத் கௌரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, ஐப்பசி மாத பௌர்ணமியன்று பிரம்மபுரீசுவரருக்கு அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார திங்கள்கிழமைகளில் சங்காபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும். 

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் வழிபாட்டு பலன்கள்

பிரம்மனுக்கே வரம் தந்த தலம் இதுவாகும். 

பிரம்மனின் தவத்தில் உள்ள மகிழ்ந்த ஈசன் என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என்று கூற  எந்த சுயநலமமும் இன்றி பிரம்மதேவன், ஈசன் மீது என்றும் குறையாத பக்தியும், அன்பும் நீடித்து நிலைத்திருக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்., இதனால் உளம் மகிழ்ந்த இறைவன் தன் ஈசனாம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனும் பஞ்சமூர்த்தி சொரூபத்துடன் கூடிய அற்புத தரிசனத்தைக் கொடுத்து, நீர் இனி பிடவூரில் இருந்து எம்மையும், உம்மையும் வந்து பிரார்த்திப்பவர்களுக்கு அவர்களுடைய தலையெழுத்தை மாற்றி அவர்களுக்கு வேண்டிய வரத்தையும் ஞானத்தையும் அருள்புரிய புரிவீராக என்று வரம் தந்தார்.

குருப் பெயர்ச்சி நாளில், பிரம்மாவுக்கு அர்ச்சனை செய்து, 36 தீபங்களேற்றி 108 புளியோதரை உருண்டைகள் நைவேத்தியம் செய்து 9 முறை பிரம்மாவை வலம்வந்து வழிபட்டால் குரு யோகம் கிடைக்கப் பெறலாம். குரு பலம் பெற்று நிம்மதியுடன் வாழலாம். திருமணத்தடை நீங்கும். புத்திர பேறு கிட்டும். இங்கு வேண்டிக்கொள்ளும் கர்பிணிகளுக்கு சுக பிரசவம் நிகழும். கல்வியில் பின்தங்கும் மாணவர்கள் இங்கு வழிபாடு செய்த பிறகு கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். வீண் செலவீனங்கள் ஏற்படுவது குறைகிறது. அதே நேரத்தில் தீய நோக்கங்களை கொண்டு மனதில் வேண்டுபவர்களுக்கு எதிர்மறையான பலன் ஏற்படும் என்பதும் ஐதீகம்.

கோவிலை அடைவது எப்படி?

திருச்சி – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர்.

திருச்சிக்கு விமானம் மற்றும் ரயில் மூலமாக வருபவர்கள் திருச்சி வந்து சமயபுரம், சிறுகனூர் வழியாக இக்கோயிலைச் சென்றடையலாம்.

பேருந்து மூலமாக வருபவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் செல்லலாம். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் பெரம்பலூர் தடத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் சென்று சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் போன்ற  தனியார் வாகனங்கள் மூலம் கோவிலை அடையலாம். திருச்சியிலிருந்து சிறுகனூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முகவரி:

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருப்பட்டூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621105

தொலைபேசி எண்: 0431 2909599

திருச்சிற்றம்பலம்.

Copyright by ALAYATRA.COM