சந்திர தோஷ பரிகாரத்தலமான கைலாசநாதர் திருக்கோயில்-திங்களூர்,திருவையாறு
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் தந்தை ஸ்தானம் என்றால் சந்திரன் தாய் ஸ்தானத்தை குறிப்பவர் ஆவார். மேலும் பூமியில் உள்ள நீர்நிலைகளை கட்டுப்படுத்துவதும் சந்திரனே. எனவேதான் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நீர்நிலைகள் பொங்குகின்றன. அவ்வாறே மனித உடலினை இயக்கும் சுரபிகளையும்(ஹார்மோன்) மனத்தின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனப்பிறழ்வு நோய், மனநலக் கோளாறுகள், தாயாருடன் கருத்து வேறுபாடு, தாயாரின் உடல் நிலை பாதிப்பு, நீரில் கண்டம், முக அழகு சிதைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவை சந்திர கிரக தோஷத்தால் ஏற்படுகின்றன.இவ்வாறு ஒவ்வொறு கிரக தோஷத்திற்கும் பரிகாரத் தலமாக ஒவ்வொரு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் சந்திர தோஷ பரிகாரத் தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில் விளங்குகிறது. திருவையாறில் அழகுற அமைதியாக அமைந்துள்ள திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில் பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோவில் பெயரக்காரணம்:
புராண காலத்தில் நவகிரகங்கள் ஒருவரான சந்திரன் இத்தல இறைவன் கயிலாய நாதரை நோக்கி கடும் தவமிருந்து வரம்பெற்றுத் தனது சாபம் நீங்கப்பெற்றான். எனவே இத்திருத்தலம் சந்திரனின் பெயராலேயே திங்களூர் என்று இன்றுவரை வழங்கப்படுகிறது.

அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு:
1.சந்திரன் சாபம் நீங்கிய வரலாறு:
அத்திரி – அனுசுயா தம்பதியினரின் மகனாகப் பிறந்து தேவகுரு பிரகஸ்பதியிடம் கல்வி மற்றும் கலைகளைக் கற்று புகழ் பெற்றார் சந்திரன். மிகவும் வசீகரமான அழகுடனும் அறிவுடனும் திகழ்ந்த சந்திரன், திருமாலை நோக்கித் தவம் செய்து பல வரங்களைப் பெற்று நவக்கிரக பதவியை அடைந்தார். இதனைக் கண்ட பிரஜாபதி தட்சன் என்ற மன்னன் தனது அஸ்வினி முதல் ரேவதி வரையான தனது 27 நட்சத்திர மகள்களை சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அதோடு தன் 27 மகள்களிடமும் சமமாக அன்பு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்தார். ஆனால் சந்திரனோ ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தினான். எனவே மற்ற 26 பெண்களும் தந்தையிடம் மனம் வருந்தி முறையிட்டனர். இதனால் கோபமுற்ற பிரஜாபதி தட்சன், சந்திரனின் ஆணவத்திற்கு காரணமான அழகும் கலைகளும் நாளொன்றாகக் குறைந்து மங்கும்படி சாபித்தார். இந்த சாபத்திலிருந்து விடுபட சந்திரன் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி, ஈசனை நோக்கி நீண்ட காலம் தவம் செய்தான். சந்திரனின் தவத்தில் மனமகிழ் சிவபெருமான் ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியன்று மனமிரங்கி சந்திரனின் சாபத்தைப் போக்கினார். என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் பங்குனி பௌர்ணமியன்று இத்தல மூலவர் மீது சந்திரன் ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது.
2.பாம்பு தீண்டி இறந்த பிள்ளை உயிர் பெற்ற வரலாறு:
திங்களூர், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக அமைய காரணமான வரலாற்றை இனி காண்போம்.
அப்பூதி அடிகள்: திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில், இத்திருத்தலத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் தோன்றி வாழ்ந்து வந்தார். அவர் திருநாவுக்கரசரின் மீது மிகுந்த பக்தி கொண்டு அவரின் பெயரிலேயே சிவத்தொண்டு செய்து வந்தார்.
மனம் நெகிழ்ந்த திருநாவுக்கரசர்:
திருநாவுக்கரசர் ஒரு முறை திங்களூர் சென்றபோது, அங்கு யாரோ ஒருவர் தன்னுடைய பெயரால் தர்மங்கள் செய்வதைக் கேள்வியுற்றார். எனவே அவரது இல்லத்துக்குச் சென்று தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் ஒரு சிவனடியாரைப் போல அவரை சந்தித்தார். எதற்காக திருநாவுக்கரசரின் பெயரில் சிவ சேவை செய்கிறீர்கள்? என அப்பூதியடிகளை விசாரித்தார். சமண சமயத் துறவியாக இருந்து பின் ஈசனின் திருவருளால் சைவ மதத்தை தழுவி அளப்பறிய சிவ தொண்டுகளை செய்துவரும் திருநாவுக்கரசர் பற்றி கேள்விப்பட்டு அவர்மீது அன்பு கொண்டு அவரின் பெயரிலேயே தானும் சேவை செய்வதாக விளக்கமளித்தார் அப்பூதியடிகள். மேலும் இறைவனின் மீது அன்பு கொள்வதை விட, அவரது அடியார்கள் மீது அன்பு கொள்ளுதல் மேலும் சிறந்தது என்று கூறினார். அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த திருநாவுக்கரசர் தான் யார் என்பதை வெளிப்படுத்தினார்.
அரவம் தீண்டி இறந்த மூத்த திருநாவுக்கரசர்:
தான் இத்தனை காலமாக யாரை மானசீகமாக குருவாக ஏற்றுப் பூசித்து அவர் பெயரால் சிவப்பணி செய்து வந்தோமோ அந்த திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் தேடி தன்னை காண வந்திருப்பதை அறிந்து பரவசமடைந்த அப்பூதி அடிகள் அவருக்கு அமுது படைக்க விரும்பினார். அமுது சமைத்து முடித்ததும் அப்பூதி அடிகளின் மகனான மூத்த திருநாவுக்கரசரை புழக்கடை தோட்டத்தில் வாழை இலை அறுத்துவர அனுப்பினார். அப்போது அச்சிறுவன் பாம்பு தீண்டி இறந்தான். அதனை கண்டு அப்பூதி அடிகளும் அவரது மனைவியும் கடும் துயரடைந்தனர்.
திருநாவுக்கரசருக்கு அமுது படைத்தல்:
பிள்ளை இறந்த சோகத்தை விட திருநாவுக்கரசருக்கு அமுது படைக்கும் போது தனது மகன் இறந்து போனதால், எங்கே அவர் விருந்துண்பது தடையாகி விடுமோ என்ற அச்சம் அப்பூதி அடிகள் தம்பதியரை மேலும் வாட்டியது. எனவே தங்கள் புத்திர சோகத்தை மறைத்துக்கொண்டு அவருக்கு அமுது பறிமாரினர். ஆனால் விதிவசமாக திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் மகனையும் தன்னுடன் உணவருந்த அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அப்பூதி அடிகள் சோகம் தாங்காமல் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததைக் கூறி கதறி அழுதார். மேலும் தடையின்றி தங்கள் விருந்தை ஏற்க வேண்டும் என வேண்டினார்.
திருநாவுக்கரசர் பதிகத்தால் உயிர் மீண்ட பிள்ளை:
அப்பூதி அடிகளின் அன்பை கண்டு ஆச்சரியம் அடைந்த திருநாவுக்கரசர் தலை மகனை இழந்த துயரத்தை கூட பொருட்படுத்தாமல் தன்மேல் கொண்ட அன்பால் தனக்கு அமுது படைத்த அன்பருக்கு உதவ எண்ணினார். எனவே அரவம் தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனின் உடலை அருகிலிருக்கும் கயிலைநாதர் கோயிலுக்கு எடுத்து வரக்கட்டளையிட்டார். அச்சடலத்தை கயிலாய நாதர் சன்னதியின் முன்வைத்து பதிகம் பாடினார். உடனே அப்பூதி அடிகளாரின் மகன் மூத்த திருநாவுக்கரசர் உறக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல் எழுந்தான். அதைக் கண்ட அப்பூதி அடிகளாருக்கும், அவரது மனைவியும் பேரானந்தம் அடைந்து பக்தியோடு நாவுக்கரசர் பாதத்தில் பணிந்து வணங்கினர்.
பதிகத்தில் இடம்பெற்ற அப்பூதி அடிகள்:
பிள்ளை பிழைத்து வந்த மகிழ்ச்சியை விட திருநாவுக்கரசர் உணவருந்துவதற்குத் தடையாக இச்சம்பவம் நடந்துவிட்டதே என்ற வேதனையில் கண்ணீர் பெருக்கினர் . அப்பூதி. அவரது அன்பை கண்டு வியந்த திருநாவுக்கரசர் அவர் மனம் மகிழ அமுதேற்றார். சிவனடியார் மேல் உயர்ந்த பற்றுக் கொண்ட அடியாரை எண்ணி வியந்தார். பின் விடைபெற்று செல்லும் வழியில் திங்களூர் அருகில் உள்ள திருப்பழனம் என்ற ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், ஆப்தசகாயேஸ்வரரை சென்று வணங்கி அக்கோயில் இறைவன் மேல் மேலும் ஒரு பதிகம் பாடினார். அதில் அப்பூதி அடிகளாரின் தொண்டின் பெருமையைக் குறிப்பிட்டு சிறப்பித்துப் பாடினார்.
தல விருட்சம்: வில்வ மரம்
தல தீர்த்தம் : சந்திர புஷ்கரணி
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் அமைப்பு:

இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. எனினும் ஐந்துநிலை இராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் திருக்கோயில் உள்மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மகன் மூத்த திருநாவுக்கரசு, மற்றும் திருநாவுக்கரசர் பெருமான் ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இராஜ கோபுர நுழைவாயிலின் நேர் எதிரே இத்தல இறைவி பெரியநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
கிழக்கு நுழைவாயிலில் நுழைந்தால் ஆலய இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சன்னதிக்கு எதிரில் சந்திரன் உருவாக்கி பூஜித்த சந்திரதீர்த்தம் மற்றும் யாகசாலை அமைந்துள்ளது.

சுவாமியை தரிசனம் செய்து வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, விஷம் தீர்த்த விநாயகரும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, பைரவர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரி சமேத சண்டிகேஸ்வரர் சன்னதி இத்தல சிறப்பாகும். பிரகார வலம் முடியும் இடத்தில் இத்தலத்தின் ஷேத்திரபாலகர் சந்திரபகவான், இத்தல மூலவர் கைலாசநாதரைப் பார்த்தபடி மேற்கு திசைநோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் சிறப்புகள்:
* தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்து பராமரிக்கப்பட்டுள்ளது.
*சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
*இத்தல மூலவர் பிறைசூடியாக அருள்பாலிக்கிறார்.
*இத்திருத்தலம் நவகிரக பரிகார தலஙங்களில் சந்திரன் பரிகார தலமாகும்.
*63 நாயன்மார்களில் ஒருவனான அப்பூதி அடிகள் அவதார திருத்தலம்.
*அரவம் தீண்டி இறந்த பிள்ளை திருநாவுக்கரசர் பதிகத்தால் உயிர் பெற்ற அதிசயம் நிகழ்ந்த தலமாகும்.
*இத்தல மூலவர் மீது பங்குனி மற்றும் புரட்டாசி மாதப் பௌர்ணமியில் ஆண்டு தோறும் காலை 6 மணிக்கு சூரிய ஒளியும் மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரனின் ஒளியும் விழுவது மிகவும் சிறப்பாகும்.
*குழந்தைகளுக்கு முதல் முறையாக அன்னம் ஊட்டும் அன்னபிரசன்னம் செய்யும் திருத்தலமாக விளங்குகிறது.

அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:
ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் திருநாளில் சந்திரன் ஒளியும் முந்தைய நாள் சூரியன் ஒளியும் மூலவர் மேல் விழுவதால் பங்குனி உத்திரம் மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெறும். மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய சிவாலயங்களின் முக்கிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் சிறப்பு வழிபாடுகள்:
இத்தலத்தில் வாராந்திர திங்கள், வெள்ளி கிழமை வழிபாடுகள், பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக சந்திர தோஷம் இருப்பவர்கள் இத்தலம் வந்து தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகள், யாகங்கள், அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை செய்து வழிபடுகின்றனர். மனநலம் மேம்பட இத்தல தீர்த்தமான சந்திர புஷ்கரணியில் நீராடி இத்தல இறைவன் கைலாசநாதரை வழிபடுகின்றனர்.
மேலும் பக்தர்கள் இத்திருத்தலத்தில் குருவாயூர் கோவில் போலவே குழந்தைகளுக்கு முதன்முதலில் அமுதூட்டும் அன்னபிரசன்னம் செய்தல் நடைபெருகிறது.

அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்:
இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் அமைவிடம்:
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் திருப்பழனம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்தை அடுத்து திங்களூர் என்ற அழகிய சிறு கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
அருகில் உள்ள விமான நிலையம்: திருச்சி விமான நிலையம்.
அருகில் உள்ள இரயில் நிலையம்: திருவையாறு, கும்பகோணம் இரயில் நிலையங்கள்.
அருகில் உள்ள பேருந்து நிலையம்: கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம். திருவையாறு பேருந்து நிலையம்.
அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்:
ஜாதகத்தில் சந்திரன் குறைபாடுகள் உள்ளவர்கள் இத்தல இறைவனையும் இத்தல ஷேத்திர பாலகரான சந்திரனையும் வழிபட தாயாருடன் ஒற்றுமை, தாயார் உடல் நலம் மேம்படுதல், மன ஆரோக்கியம் மேம்படுதல், மன வசியம், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படுதல், முக வசீகரம் கூடுதல், நீரால் ஏற்படும் கண்டத்தில் இருந்து விடுபடுதல் போன்ற நன்மைகளை அடையலாம். மேலும், கலைகளில் முன்னேற்றம், வெளிநாட்டு பயணம் செய்வதில் இருந்த தடைகள் நீங்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சந்திரன் பரிகார தலமாக விளங்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் பெரிய நாயகி அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டுகிறோம்.

அருள்மிகு பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் திருக்கோயில் முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
திங்களூர், திருப்பழனம் அஞ்சல் வழி
திருவையாறு, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் 613 204.
தொலைபேசி:
04362-262 499
9344589244
9443586453