kollimalai Arapaleeshwarar temple history
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் இயற்கை அழகையும் வளங்களையும் ஏராளமாக தன்னகத்தே கொண்டு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும் வரலாற்றுச் சிறப்பும் உடைய கொல்லிமலை பற்றியும் அங்கு எழுந்தருளி இருக்கும் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் பற்றியும் விரிவாக காணலாம்.

கொல்லிமலையின் சிறப்புகள்
கொல்லிமலையின் மூலிகை வனங்கள்
சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘மதுவனம்’ எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன. கொல்லி மலை, கருநெல்லி, கருநொச்சி ஜோதிப்புல் போன்ற எண்ணற்ற மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சித்த மருத்துவர்கள் இந்த மலைக்கு குறிப்பிட்ட நாட்களில் மூலிகைகளை சேகரிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் முதலில் கொல்லி பாவை கோயிலுக்குச் சென்று அவளிடம் அனுமதி பெற்று மந்திரம் சொல்லி பின்னரே மூலிகைகளைச் சேகரிக்கின்றனர் . அவ்வாறு சேகரித்த மூலிகைகளை கொல்லி பாவை சன்னதியில் வைத்து வழிபடுகின்றனர்.
கொல்லிமலையின் ஜீவ நதிகள்
அறப்பளீஸ்வரர் கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் நன்மைகளையெல்லாம் அள்ளி வந்து கொட்டுகிறது. இந்த அருவி பின் ஆறாக ஓடி உறையூரில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.
கொல்லிப்பாவை கோயில்
தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர் எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு ‘கொல்லிப்பாவை’ என்ற பெயர் ஏற்பட்டது அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, “எட்டுக்கை அம்மன்” என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோயில் உள்ளது.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் பெயர் காரணம்
சுமார் 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியான இம்மலையில் கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மலைக்கு கொல்லிமலை என்று பெயர் ஏற்பட்டது.

கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பட்ட பகுதியாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கிய வல்வில் ஓரி தன் ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை ஒரே சமயத்தில் வீழ்த்திய வல்லமை பெற்றவன். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் என பொருள்படும். கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளல்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் பாடி உள்ளார். ஓரி அரசு செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறைப்பளி” எனப் பெயர். பிற்காலத்தில் அப்பெயர் மருவி அறப்பள்ளி என வழங்கலாயிற்று. அங்கு சுயம்பு மூர்த்தியாக தோன்றிய சிவனுக்கு வல்வில் ஓரி திருத்தலம் அமைத்தான். எனவே அறப்பள்ளியில் எழுந்தருளிய ஈஸ்வரன் என்ற பொருளில் “அறப்பள்ளி ஈஸ்வரன்” என்று மக்கள் வழங்கினர். இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் ‘அறை’ என்றால் மலை என்றும் பள்ளி என்றால் தங்கியிருத்தல் என்றும் பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் “அறைப்பள்ளீஸ்வரர்” என்று இத்தல இறைவன் அழைக்கப்பட்டு காலப்போக்கில் இப்பெயர் அறப்பளீஸ்வரர் என்று மாறி இருக்கலாம்.
இத்தல இறைவிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. அறம் வளர்த்த இறைவி பள்ளிகொண்ட தலம் என்பதால் புராண காலத்தில் இத்தலம் அறமலை மற்றும் சதுரகிரி என்றழைக்கப்பட்டுள்ளது. எனவே இத்தல இறைவன் அறப்பளீஸ்வரர் என்றும் திருவரப்பள்ளியுடையார் என்றும் அழைக்கப்பட்டார்.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் தலவரலாறு
சித்தர்கள் நிர்மாணித்த ஆருஷி லிங்கம் – உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற இறைவழிபாடே ஒரே வழி என்று உணர்ந்த சித்தர்கள், ஆங்காங்கே நதிக்கரைகளிலும் மலைகளிலும் குகைகளிலும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் மேற்கொண்டனர். அவ்வாறு தவம் செய்ய சித்தர்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். அறத்தை (தர்மத்தை) மையமாக கொண்ட வாழ்வியலை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு “அறப்பளீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இயற்கை மாற்றங்களினால் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்து விட்டது.
ஏர்க்கலப்பையில் தட்டிய லிங்கம்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொல்லி மலையில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததையும் கலப்பை பட்ட இடத்தில் இரத்தம் வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி அரசனிடம் சென்று தெரிவிக்க, லிங்கம் கிடைத்த இடத்தில் வல்வில் ஓரி சிவாலயம் நிர்மாணித்தான். லிங்கத்தின் மீது ஒரு சிறு காயம் இன்றும் காணப்படுகிறது.
“அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’
ஒருசமயம் அறப்பளீஸ்வரரைத் தரிசிக்க வந்த பக்தர்கள், கோயில் அருகே ஓடும் பஞ்சநதி தீர்த்தத்திலுள்ள மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவதரிசனத்திற்கு பிறகு அதை சாப்பிடலாம் என்றெண்ணி, மீன்குழம்பை தீர்த்தக்கரையில் வைத்தனர். அப்போது சமைக்கப்பட்ட மீன்கள் உயிர்பெற்று நதிக்குள் குதித்தன. அப்போது அசரீரி ஒன்று ஒலித்து மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவனே வசிப்பதாக கூறியது. அன்றுமுதல் சுவாமிக்கு “அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. தினமும் காலையில் சுவாமிக்கு படைத்த நைவேத்யம் இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் சிறப்புகள்
• 1400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற கோவிலாகும். “கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார். மேலும் அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
• சங்ககால புலவர்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய நூல்களில் கொல்லிமலையைக் குறித்து பாடியுள்ளனர். மேலும் கொல்லிமலை ஆண்ட குடவர் கோவே எனும் சிலப்பதிகார வரிகளிலிருந்து இம்மலை சேரர் ஆட்சிபுரிந்த பகுதி என்பதும் புலனாகிறது.
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு இன்றும் காணப்படுகிறது.
• பொதுவாக சிவனின் அம்சமான அஸ்திரதேவர் தான், தீர்த்தவாரி காண்பார். ஆனால், இங்குள்ள பஞ்சநதி தீர்த்தத்தில் நடராஜர் தீர்த்தவாரி காண்கிறார்.

• இத்திருத்தலத்தில் முருகன் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இல்லாமல் தென்கிழக்கு மூலையில் ஆறுமுகங்கள் பன்னிரு கரங்களுடன் மயில் மேல் அமர்ந்தபடி வள்ளி தெய்வானை சமேதராய் அன்னை தாயம்மையை நோக்கி வீற்றிருக்கிறார்.
• ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, கணபதி, முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

• தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பரகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டதற்கான சான்றுகளுடன் 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 கல்வெட்டுக்கள் சோழ மன்னர்களின் காலகட்டத்தைச் சார்ந்தவையாகும்.
• ராசிபுரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் ரகசிய பாதை அறப்பளீஸ்வரர் கோவிலில் இருப்பதாக கருதப்படுகிறது.
• ஆகாய கங்கை தீர்த்த அருவி – கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மலைப்பகுதியின் மத்தியில் ஆகாய கங்கை தீர்த்தம் அருவியாகக் கொட்டுகிறது. ஆகாயத்திலிருந்து விழுவது போல இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். அருவிக்குச் செல்ல 1500 படிக்கட்டுகள் உள்ளது.
• சித்தர் குகைகள் -ஆகாய கங்கை அருவியிலிருந்து சற்று தூரத்தில் கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் தங்கிய குகைகள் உள்ளன. அடர்ந்த வனத்திற்குள் இருப்பதால் இக்குகைகளுக்கு தக்க பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும். இத்தலத்தில் தற்போதும் பல சித்தர்கள் சிவனை பூஜிப்பதாக நம்பப்படுகிறது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கு அதிகளவில் தரிசிக்கின்றனர்.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் அமைப்பு
அறப்பளீஸ்வரர் ஆலய நுழைவாயில்
அருவியில் நீராடி அறப்பளீஸ்வரரை தரிசனம் செய்ய ஆலயத்தில் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். இறைவன் சன்னதிக்கு எதிரே கொடிமரமும் நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. கோவில் மதில் சுவரில் காவல் நந்தியோடு பதினெண் சித்தர்களின் சுதைச் சிற்பங்களும் அமைத்துள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில் பிரகாரம்
இடமிருந்து வலமாக கோவில் பிரகாரத்தை சுற்ற முதலில் வீற்றிருப்பது சூரிய பகவான். அடுத்ததாக ஆறு முகப்பெருமான் துணைவியருடன் மயில் மேல் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரை வழிபட்டு முன்னேற இடதுபுறம் மற்ற சிவாலயங்களில் இருப்பது போன்று பிரகார சுற்றுப் பாதையில் நாயன்மார்களின் திரு உருவங்கள் இல்லை. மாறாக விழாக்கால உலாவுக்காக குதிரை, மயில், நந்தி போன்ற சுதை வாகனங்கள் உள்ளன. மேலே முன்னேற கன்னி மூலையில் கணபதி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
கொல்லி மலையில் காசி தரிசனம்

கோயில் பிரகாரத்தில் அடுத்ததாக காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாய கங்கை, பஞ்சநதி தீர்த்தங்களில் புண்ணிய நீராடி விஸ்வநாதரையும் பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆஞ்சநேயருடன் அருள் புரியும் மகாலட்சுமி
பொதுவாக பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் எழுந்தருளும் பக்த ஆஞ்சநேயர் இங்கு மகாலட்சுமி தாயார் சன்னதியில் வீற்றிருக்கிறார்.
அருகே சரஸ்வதி தேவி தனி சன்னதி கொண்டுள்ளார். திருக்கரங்களில் அட்சர மாலை, ஏடு, வீணையுடன் வீற்றிருக்கிறார்.

சன்னிதி பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் ஜேஷ்டா தேவி தனி மண்டபத்தில் சிறப்பாக காட்சியளிக்கிறார். வடகிழக்கு மூலையில் காலபைரவர் சன்னதி உள்ளது. அடுத்து நவகிரகங்களையும் மூலவரை நோக்கி வீற்றிருக்கும் சந்திரனையும் தரிசிக்கலாம்.
மூலவர் சன்னதி கோஷ்டம்
மூலவர் சன்னதி சுவரில் தெற்கு முகம் நோக்கியபடி குரு தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சண்டிகேஸ்வரர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மூலவர் – பிரகாரத்தை சுற்றி வந்து மூலவரை தரிசிக்க உள்மண்டப்பத்தில் நுழைகையில் இருபுறமும் துவார பாலகர்கள் அமைந்துள்ளனர். உள்ளே இடப்புறம் கணபதி வீற்றிருக்கிறார். மூலவர் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட “ஆருஷ லிங்கம்’ ஆகும். லிங்க திருமேனியில் ஏர் பட்ட தழும்புடன் மீன்களுக்கும் இறங்கிய இறைவன் கருணையின் சிகரமாக மலையின் மேல் காட்சியளிக்கிறார்.
அஷ்டலட்சுமி ஸ்ரீ சக்கரத்துடன் அறம் வளர்த்த நாயகி
அறப்பளீஸ்வரர் உடனமர் தேவியான அன்னை அறம் வளர்த்த நாயகி தனி மண்டபத்தில் தெற்கு நோக்கி இறைவனின் இடப்புறம் சுப்பிரமணிய சுவாமியை பார்த்தபடி நிற திருக்கோலத்தில் அருள் புரிகிறார். அன்னையின் மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லஷ்மிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வவளம் தரும் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. சித்தர்கள் மேற்கொண்ட யோக முறைகளை அம்பாள் சன்னதி சுற்றுச்சுவரில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.
மன்னனுக்கு விழா
சேர வள்ளல் வல்வில் ஓரி மன்னன்னுக்கு அறப்பளீஸ்வரர் திருத்தலத்திலிருந்து 11 கி.மீ., தூரத்திலுள்ள செம்மேடு என்ற இடத்தில் சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று மன்னனுக்கு ஓரி விழா விமரிசையாக நடக்கும் மன்னனுக்கு மரியாதை செய்யும் விதமாக நடக்கும் இவ்விழாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை சிறப்பை வெளிப்படுத்தும்படியான கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் திருவிழாக்கள்
ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 18 விழா, ஆடி 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு, கொடியிறக்கம் என ஐந்து நாட்கள் விசேஷமாக நடக்கும். இந்நாட்களில் சுவாமி மாலையில் வீதி உலா புறப்படுவார். ஆடிப்பெருக்கன்று பஞ்சமூர்த்தி உலா உண்டு.
அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, கார்த்திகை ஜோதி, ஆருத்ரா தரிசனம், நவராத்திரி உற்சவம் போன்ற விழாக்களும் மாதாந்திர பிரதோஷம், சிவராத்திரி, சஷ்டி, கிருத்திகை சோமவார சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வழிபாடுகள்
அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் பஞ்சநதி ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன் பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.
சுவாமிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு. பிரதோஷ காலத்தில் ஈசனுக்கும் நந்திகேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடப்பதும் பிரதோஷ மூர்த்தி மூன்றுமுறை உட்பிரகாரத்தில் வலம் வருதலும் சிறப்பு அம்சமாகும்.
சுவாமி அறத்தின் வடிவமாக உள்ளதால் பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
அறப்பளீஸ்வரர் வழிபாட்டு பலன்கள்
சித்தர் வழிபாட்டு தலம் என்பதால் இத்தல இறைவன் ஆன்ம கடைத்தேற்றம் அருள்கிறார். மேலும் திருமணத்தடை விலக, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்க அருள்புரிகிறார்.
அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
இத்தலத்தில் அறம்வளர்த்த நாயகிக்கு எதிராக வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் ஆறுமுக் கடவுள் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இவர் எதிரில் தாயை பார்த்துக்கொண்டும் அருகில் தேவியருடனும் இருப்பதால் குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்ள சிக்கல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 7 மணி முதல் 1 மணி வரை,
பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 அடி உயரத்தில் 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 13 கிமீ,
சேந்தமங்கலத்தில் இருந்து சுமார் 42 கிமீ,
நாமக்கல் ரயில் நிலையத்திலிருந்து 53 கிமீ,
ராசிபுரத்தில் இருந்து 58 கிமீ,
கரூரில் இருந்து 88 கிமீ,
சேலத்தில் இருந்து 92 கிமீ,
திருச்சியில் இருந்து 129 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையங்கள்: நாமக்கல் மற்றும் சேலம்.
அருகில் உள்ள விமான நிலையம்: சேலம், திருச்சி.
கொல்லிமலை நாமக்கல், கரூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கு சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது
அடிவாரத்திலிருந்து பஸ்சில் கோயிலுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும்.
கோயில் வாசல் வரை வாகனங்கள் செல்ல வசதி உண்டு.
அறப்பளீஸ்வரர் திருக்கோவில் முகவரி
அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில்,
கொல்லிமலை,
சேலம் மாவட்டம்.
தொலைபேசி: +91- 97866 45101