விளக்குத் திரிகள் மற்றும் அவற்றின் பலன்கள்
• பஞ்சு திரி
• தாமரை தண்டு திரி
• வெள்ளை எருக்குப்பட்டை திரி
• வாழைத்தண்டு திரி
• வெள்ளை நூல் திரி
• மஞ்சள் நூல் திரி
• பச்சை நூல் திரி
• சிகப்பு நூல் திரி
என எட்டு வகையான திரிகளை பக்தர்கள் விளக்கேற்ற பயன்படுத்துகின்றனர்.
அவற்றின் பலன்களை முறையே காண்போம்.
பஞ்சுத்திரி விளக்கு
இந்தத் திரியானது இலவம் காயில் இருந்து இழைகளை எடுத்து விதை மற்றும் மாசு நீக்கி மென்மையாக திரிக்கப்பட்டு விளக்குத் திரியாகத் தயாரிக்கப்படுகிறது. திங்கட்கிழமைகளில் இந்த இலவம்பஞ்சுத் திரியைக் கொண்டு பசு நெய் விளக்கேற்றி சந்திரனை வழிபாடு செய்வதன் மூலம் இல்லத்தில் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மன மகிழ்ச்சி உண்டாகும். வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி சுக்கிரனை வழிபாடு செய்வதன் மூலம் உலக சுகங்கள் கூடும். பௌர்ணமி அன்று விக்கேற்றி குல தெய்வத்தை வணங்க குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அமாவாசையன்று வழிபட்டால் முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். மேலும் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் இந்த திரியைக்கொண்டு விளக்கேற்றலாம்.
தாமரைத்தண்டுத்திரி விளக்கு
தாமரைத் தண்டை வெயிலில் காயவைத்து அதன் மத்தியில் உள்ள இழைகளைப் பிரித்து எடுத்து விளக்கு திரியாக தயாரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் தாமரை தண்டுத் திரியில் விளக்கேற்றி மகாலட்சுமி தாயாரை மனமுருகி வழிபாடு செய்வதன் மூலம் அவரின் தரிசனமும் அருளும் பரிபூரனமாகக் கிடைக்கும். இப்பிறவியில் வறுமை தரும் முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். செல்வம் பெருகும். பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக தாமரை தண்டு திரியில் விளக்கேற்றும்போது ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி அதில் நன்கு மலர்ந்த செந்தாமரை மலரை வைத்து அதன் மத்தியில் அகல் விளக்கில் நெய் நிரப்பி தாமரைத் தண்டுத்திரியில் விளக்கேற்றி வர வற்றாத செல்வமும் வளமான வாழ்வும் அடையலாம்.
Buy lotus stem wicks here - தாமரைத் தண்டுத்திரி வாங்க இங்கு சொடுக்கவும்
வாழைத்தண்டுத்திரி விளக்கு
வாழைத்தண்டில் உள்ள நாரிழைகளை எடுத்து உலர்த்தி விளக்குத் திரியாகத் தயாரிக்கப்படுகிறது. இந்த வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றும்போது முருகப்பெருமானின் முழு அருளையும் பெறலாம். குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் நல்லெண்ணெய்யில் வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றி முருகனை வழிபட்டுவர தீராத கடன்களும் தீரும். சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வாழைத்தண்டு திரியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு மழழைச் செல்வம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் ஆயுள் அனைத்தும் மேமேபடும். வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
விளக்கு வகைகள், விளக்கேற்றும் எண்ணெய்கள், தீபங்களின் பலன்கள்
வெள்ளெருக்குப்பட்டைத்திரி விளக்கு
வெள்ளை எருக்கு செடியின் பட்டையை உரித்து அதன் மெல்லிய இழைகளை எடுத்து விளக்குத் திரியாகத் தயாரிக்கப்படுகிறது. சதுர்த்தி தினத்தில் இலுப்பை எண்ணெயில் வெள்ளை எருக்குப்பட்டை திரியால் விளக்கேற்றுவதால் பிள்ளையாரின் பரிபூரண அருள் கிடைக்கும். வளர்ச்சியை தடுக்கும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகும். கண்திருஷ்டி, கெட்ட கனவு, ஏவல் பில்லி சூனியம் மற்றும் செய்வினைகள் நீங்கும். ஆயுள் நீடிக்கும். விஷப் பூச்சிகள் தீய சக்திகள் எதுவும் வீட்டிற்குள் நுழையாது.
வெள்ளைநூல்திரி விளக்கு
திங்கட்கிழமைகளில் துய வெண்மை நிறப் பருத்தி நூல் அல்லது துணியில் சுத்தமான தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றி விநாயகரை வழிபட்டு வர சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். சந்திர தரிசனத்தன்று சந்திரபகவானை தியானித்து தேங்காய் எண்ணெயில் வெண் நூல் விளக்கேற்றி வழிபட தீராத உடற்பிணிகள் தீரும். மனநலம் மேம்படும். மன உறுதி உண்டாகும். அதுவே நெய்விளக்கேற்றி வழிபட பணவசியம், ஜன வசியம், மன வசியம் உண்டாகும். மேனி எழில் கூடும். பொது வாழ்வில் புகழ் கூடும்.
மஞ்சள்நூல்திரி விளக்கு
மஞ்சள் தூளை நீரில் கரைத்து அதில் வெண்மையான பருத்தி நூல் அல்லது துணியை நனைத்து உலர்த்தி விளக்குத் திரியாக தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் சாயமிட்ட நூல் அல்லது துணியை தவிர்ப்பது நல்லது. சுத்தமான பசு நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் திரியில் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி சிவகுரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதன் மூலம் அவரின் பரிபூரண அருளும் ஆசியும் கிடைக்கும். கல்வி கலைகளில் வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். அறிவாற்றல் மட்டுமின்றி செல்லும் இடமெல்லாம் புகழும் செல்வமும் உண்டாகும்.
பச்சைநூல்திரி விளக்கு
மூலிகை இலைகளை அரைத்து சாரெடுத்து அதில் வெண்மையான பருத்தி நூல் அல்லது துணியை நனைத்து உலர்த்தித் தயாரிக்கப்பட விளக்குத் திரியில் திருவோணம் மற்றும் ஏகாதசி அன்று சுத்தமான பசு நெய்யில் விளக்கேற்றி வழிபட்டு வர மகாவிஷ்ணுவின் அருள் உண்டாகும். விவசாயம் மற்றும் கால்நடைகள் சிறக்கும். புதன் கிழமைகளில் பச்சை திரியிட்டு தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றி புதனை தியானித்து வழிபாடு செய்வதன் மூலம் கல்வி கலைகளில் வளர்ச்சியும் வெற்றியும் உண்டாகும். ஞானம் மற்றும் புகழ் உண்டாகும். வெள்ளி செவ்வாய் கிழமைகளில் வேப்பெண்ணெய் விளக்கேற்றி மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு வர மண்ணாளும் யோகம் உண்டாகும். அரசியலில் வெற்றி உண்டாகும். செல்வாக்கும் சொல்வாக்கும் சிறக்கும்.
சிவப்புநூல்திரி விளக்கு
சுத்தமான குங்குமத்தை நீரில் கரைத்து அதில் வெண்மையான பருத்தி நூல் அல்லது துணியை நனைத்து உலர்த்தி விளக்குத் திரியாக தயாரிக்கப்படுகிறது. அஷ்டமி தினங்களிலும், ஞாயிற்று கிழமை இராகு காலத்திலும் பைரவருக்கு வெண் பூசனி, தேங்காய் அல்லது எலுமிச்சையில் சிவப்புநூல் திரியிட்டு வழிபட்டு வர எமபயம் அகலும். முற்பிறவி வினை மறைமுகப்பகை மற்றும் கடன் தீரும்.(பைரவர் வழிபாடு பற்றிய மற்றொரு கட்டுரையில் இதுபற்றி விரிவாக பதிவிட்டுள்ளோம்) செவ்வாய் கிழமை இராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிவப்புத் திரியில் நல்லெண்ணெயில் எலுமிச்சை விளக்கேற்றிவர துஷ்ட சக்திகள் விலகும். திருமண தடை நீங்கும். உடல் பிணிகள், பகை மற்றும் வறுமை நீங்கும். செல்வம் பெருகும்.