மருதமலை முருகன் மருதாசலமூர்த்தி திருக்கோவில்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் கோவையில் மாவட்டம் மருதமலையில் அமைந்துள்ள, சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மருதாசல மூர்த்தி திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம்.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் வரலாறு: Maruthamalai Murugan
முற்காலத்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒருவர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரைப் பாம்பாட்டி என்று அழைத்தனர். ஒருசமயம் இவர், மிக நீண்ட காலம் வாழ்ந்து தன விஷத்தை நாகரத்தினமாக மாற்றும் தன்மையுடையது என நம்பப்படும் பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அங்கு பதினென் சித்தர்களுல் ஒருவரான சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, விஷப்பாம்புகளை பிடிப்பது பெரிய விஷயமல்ல “உடலுக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!” என்றார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகன் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கின்றனர்
இவருக்கு முருகன் காட்சியளித்த திருவுருவம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியராக ஆதிமூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார். பாம்பாட்டி சித்தர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முருகன் தண்டாயுதபாணியாக கருவறையில் அருள்புரிகிறார்.
காயகல்ப மூலிகை: Maruthamalai Murugan
சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பது போல் முருகப்பெருமானே மருதமலையாக இருப்பதால் இம்மலை குறையோடு வரும் பக்தர்களின் உடல் மற்றும் மன உளைச்சல்கள், பாசவினைகள் இரண்டையும் நீக்குவதாக நம்பப்படுகிறது. புனிதமான இந்த மருதமலையில் மருத்துவ மூலிகைகள் நிறைந்திருப்பதால் இதன் இதமான காற்றும், அமைதியான சூழலும் பக்தர்களின் மனதில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருகிறது. சித்தராளும் முனிவர்களும் இந்த மலையை நாடிவந்து தவம் புரிந்ததோடு தெய்வீக அருமருந்தான ‘காயகல்பம்’ தேடி இங்கு வந்தனர். மேலும் கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் புராணத்தின்படி, ‘காமதேனு’ என்ற விண்ணுலகப் பசு இம்மலையின் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து வந்ததாகவும், மருதம் மரத்தடியில் உள்ள ஊற்றுகளில் நீர் அருந்தியதாகவும் கருதப்படுகிறது. இங்குதான் சூரபத்மாவால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சுப்பிரமணியரை அணுகி அசுரனை அழிக்கும்படி வேண்டினர். தேவரைக்காக்கும் பொருட்டே முருகப்பெருமான சுயம்பாக தோனறினார் என்பது ஐதீகம்.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் பெயர்க் காரணம்:
மருதம் – ஒருவகை மரம், அச்சலம் – மலை, பதி – தலைவன் எனவே மருதாசலபதி என்ற சொல்லுக்கு மருத மரங்கள் நிறைந்த மலைகளின் அரசன் என்று பெயர் பெற்றார்.
ஒருமுறை மருத மலையில் உலவிய சித்தர் ஒருவர் கோடையின் தாக்கத்தால் அதிக களைப்பாலும் தாகத்தாலும் தவித்து அங்கிருந்த மருதமரம் ஒன்றின் நிழலில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் தண்ணீர் வேண்டினார். முருகனின் அருளால் அதிசயம் போல, அவர் அமர்ந்திருந்த மருதமரத்தின் வேர்களில் இருந்து நீர் வெளியேறியது. சித்தர் மனமகிழ்ந்து முருகனை, மருதம் மற்றும் ஜலத்தின் (நீர்) இறைவன் என்று போற்றினார். காலப்போக்கில் மருதஜலபதி மருதாசலபதி ஆனது.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் சிறப்புகள்: Maruthamalai Murugan
• பேரூர் புராணம் கொங்கு நாட்டில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலை நீலிமலை மற்றும் மருதமலை ஆகியவற்றை முறையே சிவன், பார்வதி மற்றும் சுப்ரமணியரின் வெளிப்பாடுகளாகவும், மூன்று மலைகளும் சோமாஸ்கந்தத்தின் வடிவில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானே மலை ரூபத்தில் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகம்.
• இத்திருத்தலத்தில் இரண்டு முருகன் சன்னதிகள் உள்ளன.
• இத்திருத்தலம் முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படுகிறது.
• இத்தலத்து ஆதி மூலவரும் வள்ளி தெய்வானையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
• கருவறை மூலவர் பாம்பாட்டி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
• அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமாகும்.
• இத்திருத்தலம் பேரூர் புராணத்திலும் ஸ்கந்தபுராணத்திலும் முருகப் பெருமானால் சம்காரம் செய்யப்பட்ட சூரபத்மனின் காலகட்டத்திற்கும் முந்தையது என்றும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் கி.பி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது.
• இத்திருத்தலத்தில் மூலவருக்கு வலதுபுறம் மற்றொரு மூலவர் சன்னதி அமைந்துள்ளது. இது ஆதிமூலவர் சன்னிதி என அழைக்கப்படுகிறது.
• இந்த சன்னதியின் முருகப்பெருமான வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியராக காட்சிளிக்கிறார்.
• சுயம்பு வடிவான வள்ளி அன்னையின் திருவுருவம் தெய்வானையின் திருவுருவத்தைவிட உயரமாக அமைந்துள்ளது.
• பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகர் சன்னிதி இத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.
• பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இத்திருதாதலத்தில் சிலகாலம் தங்கியிருந்து தவம் செய்தாகவும் மூலிகை ஆராய்ச்சிகள் செய்ததாகவும் அறியப்படுகிறது. அதற்கு சான்றாக முருகன் சன்னிதிக்கு வலதுபுறம் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை அமைந்துள்ளது.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் அமைப்பு:
மலைப்பாதை:
மருதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 873 படிகள் ஏறி மருதமலை முருகன் சன்னிதியை அடையலாம். முற்காலத்தில் இருந்து இன்றுவரை இந்த நடைபாதை வழியாகத்தான் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மருதாசல மூர்த்தியை தரிசிக்கின்றனர். இந்த மலைப்பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் ‘தான்தோன்றிப் பிள்ளையார்’ அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலுக்கு படி வழியாகச் செல்லும் பக்தர்கள் மட்டுமே இவரை வணங்கிச் செல்கிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள், இவரை வணங்காமல் சென்றுவிடுகிறார்கள். வாகனத்தில் வந்தாலும். அடியாரத்திலுள்ள இவரை வணங்கியபிறகே செல்ல வேண்டும் என்பது நியதி.
‘பதினெட்டாம் படி’ – சாஸ்தா என்னும் ஐயப்பன் வழிபாடு
சாஸ்தா என்னும் ஐயப்பன் வழிபாடு இத்திருத்தலத்தில் ஒரு அங்கமாக உள்ளது. சபரி மலைக்கு கடுமையான நடைபயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் மருதமலை மலைப்பாதையின் முதல் 18 படிகளில் ஏறி சுவாமி ஐயப்பனை வழிபட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இது சபரிமலைக்கு சென்ற புண்ணியத்தை தருகிறது என்பது ஐதீகம். இது பதினெட்டாம் படி வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. ஐயப்பனான சாஸ்தா தமிழகத்தில் கருப்பசாமி என்ற பெயரால் வழங்கப்படுகிறார். இதன் சான்றாக பழமையான சிவாலயங்களில் தென்மேற்கு மூலையில் சப்த கன்னியர் சாஸ்தா சன்னிதி அமைந்துள்ளதை காணலாம். எனவே பக்தர்கள் 18ஆம் படியில் காவல் தெய்வமான கருப்பு சாமியை வேண்டி கற்பூரம் ஏற்றி வழிபட்டு மலை ஏறுவதைத் தொடர்கினறனர்.
தான்தோன்றி பிள்ளையார்:
மலை அடிவாரத்தில் உடல் இல்லாமல் யானைத்தலை மட்டும் உள்ள சுயம்பு விநாயகர் சன்னதி உள்ளது. இவர் மலையிலுள்ள முருகள் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி பக்தர்களுக்கு வழிகாட்டுவது போல் காட்சி தருகிறார். சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் தான்தோன்றி பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மற்றொரு விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, இந்த விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. இவரை, ‘தம்பிக்கு உகந்த பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதிகம்,
குதிரைக் குளம்புபடி அமைந்த பாறை:
மயில் வாகனம் கொண்ட முருகனுக்கு யானை ஆடு குதிரை ஆகி வாகனங்களும் உண்டு. அந்த வாகனங்களில் விசேஷ நாட்களில் முருகப்பெருமான் எழுந்தருள்வார். அந்த வகையில் இத்திருத்தலத்தில் குதிரை குளம்பு பதிந்த பாறை ஒன்று உள்ளது. இது முருகப்பெருமானின் குதிரையின் குழம்படி என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு ஒருகாலத்தில் திருக்கோயில் செல்வங்களை சில திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது, முருகப்பெருமான் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து பொருட்களை மீட்டு வந்து கோயிலில் சேர்த்தார். அதோடு அவர்களை பாறையாக மாற்றி விட்டார்; முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, மலைப்பாதையில் குதிரை மிதித்த இடத்தில் அதன் காலடி உள்ளது இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்‘ என்கிறார்கள். அருகே உள்ள மண்டபத்தில் முருகப்பெருமான குதிரை மீது வந்த சிற்பம் அமைத்துள்ளனர்.
மலைப்பாதையின் மத்தியில் காவடி சுமக்கும் இடும்பன் சன்னதியும் அதன் எதிரே புலி வாகனமும் அமைந்துள்ளது. ஆதி மூலவர் சன்னதிக்கு சற்று கீழே மடப்பள்ளியும் அன்னதான மண்டபமும் காணப்படுகிறது.
இந்த பழமையான மலைப்பாதை ஆதிமூலஸ்தானத்தில் முடிவடைகிறது.
ஆதி மூலவர் சன்னதி:
மலைப்பாதை வந்தடையும் சன்னிதியே பழமையான மருதாசல மூர்த்தி சன்னதியாகும். அதனாலேயே இது ஆதிமூலஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்தபிறகே தண்டாயுதபாணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த சன்னதியின் உள்ளே பாம்பாட்டி சித்தர் குகைக்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதன் வழியாகத்தான் பாம்பாட்டி சித்தர் முருகனை வந்து தரிசனம் செய்தார் என்றும் கூறப்படுகிறது. முருகனின் திருஉருவத்திற்குப் பின்புறம் பாறையில் பிளவு இருப்பதைக் காணலாம். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியராக அருள்புரியும் சுயம்பு வடிவில் விளங்கும் முருகப்பெருமானின் இந்த சன்னதியில் வள்ளி அன்னையின் திருவுருவம் தெய்வானையின் திருவுருவத்தைவிட உயரமாக அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை திருவுருவங்களும் சுயம்பு மூர்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சவிருட்ச பஞ்சமுக விநாயகர்:
ஆதிமூலவர் சன்னதி முன்மண்டபத்திற்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளது இத்தலத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். கவடிசுமந்து மலையேறி வரும் பக்தர்கள் தங்கள் காவடியை மட்டுமின்றி தங்கள் வேண்டுதல்களையும் இந்த பஞ்ச விருட்ச பஞ்சமுக விநாயகரிடம் இறக்கிவைக்க எண்ணியதெல்லாம் ஈடேரும் என்பது ஐதீகம். இந்த விநாயகரைத் தரிசித்த பிறகே தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.
பாம்பாட்டி சித்தர் சன்னிதி
ஆதி மூலவர் சன்னதிக்கு பின்புறம் உள்ள படிகளில் இறங்கி சென்றால் வலதுபுறம் சப்த கன்னியர் சன்னிதி உள்ளது. அதை தாண்டி மீண்டும் சென்றால் பாம்பாட்டி சித்தர் தவம் செய்த குகை மலைப்பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு வலது கையில் மகுடி இடது கையில் தடியுடன் பாம்பாட்டி சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாறையில் நாக வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு நாகத்தின் வடிவில் முருகன் பாம்பாட்டிச்சித்தருக்கு காட்சி தந்தார் என்பதால் இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து பூஜைகள் செய்யப்படுகின்றனர்.
முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டிச்சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக சொல்கிறார்கள். நாகத்தின் பின்புறம் சிவன், கணபதி, அம்பிகை திருவுருவ பீடங்கள் அமைந்துள்ளது. பொதுவாக முருகன்தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இந்த பீடத்தில் விநாயகர் பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
தண்டாயுதபாணி சன்னிதி:
இராஜகோபுரம்:
மலைப்பாதை படி ஏறாமல் மலைச்சாலை வழியாக வாகனங்களில் மேலே வந்தால் புதிதாக அமைக்கப்பட்ட படிகளில் ஏறி ஏழுநிலைகள் கொண்ட இராஜகோபுரத்தை அடையலாம். இந்த இராஜ கோபுரம் தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்களுடன் 2013 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத் துறையால் அமைக்கப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த பிம்மாண்டமான இராஜகோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால் நேரே பாம்பாட்டி சித்தர் அமைத்த தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.
மருதமலை பிரகாரம்:
இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் நேரே வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு வலதுபுறம் தேர்நிலையும் இடதுபுறம் பஞ்சவிருட்ச பஞ்சமுக விநாயகர் சன்னிதியும் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு நேர் எதிரே மூலவருக்கு முன்பாக கல்லால் ஆன கொடிமரம், அடிப்பாகத்தில் ஆமைவடிவமும் அதன் மேல் அமைந்துள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கும் வெண்கல கொடிமரமும் தனி மண்டபத்தில் மயில்வாகனமும் காணப்படுகின்றன.
மூலவர் சன்னதிக்கு முன் அழகிய முன்மண்டபம் தூண்களுடன் அமைந்துள்ளது. அதில் வரதராஜப் பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் வீரபத்திரரும் எழுந்தருளியுள்ளனர். நுழைவாயிலின் மேற்புறத்தில் இராசிக்கட்டம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
பட்டீஸ்வரர், மரகதாம்பிகை சன்னதிகள்:
பிரகார சுற்றுப்பாதையில் மூலவருக்கு வலதுபுறம் நந்தி தேவர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் பட்டீஸ்வரர் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இடதுபுறம் நந்தியுடன்
மரகதாம்பிகை தனிச்சன்னதியில் அருள் புரிகிறார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மேலும் கோஷ்டத்தில் குரு தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் சன்னிதிகள் உள்ளன.
சோமஸ்கந்த மூலவர்:
பிரகார வலம் வந்து துவார பாலகர்களைக் கடந்து உள்ளே சென்றால் பட்டீஸ்வரர் மரகதாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் பாம்பாட்டிச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் ஐந்தடி உயரத்தில் காலில் தண்டையணிந்து சிரசில் குடுமியுடன் வலது கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி இரண்டு கரங்களுடன் பழநி முருகனைப் போலவே தண்டபாணியாக காட்சியளிக்கிறார். இந்த மூலவர் சிவன், பார்வதி சன்னதிகளுக்கு நடுவில் இருப்பது சோமாஸ்கந்த அமைப்பு எனப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் இத்திருத்தலத்து மூலவர் தண்டாயுதபாணிசுவாமியை பட்டீசுவரர் மற்றும் மரகதாம்பிகைக்கு நடுவில் சோமாஸ்கந்தராக அமைந்துள்ளார் .
தல விருட்சம்: மருதமரம்
தீர்த்தம்: மருத தீர்த்தம்.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் அமைவிடம்:
கோவைக்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், பசுமையான சூழலில் அமைந்துள்ளது மருதமலை திருக்கோயில்.
அருகிலுள்ள விமான நிலையம்: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்.
அருகிலுள்ள இரயில் நிலையம்: கோவை மத்திய இரயில் நிலையம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்.
மருதமலை முருகன் மருதாசலமூர்த்தி திருக்கோவில் நடைதிறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் முகவரி:
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை 641046
கோயம்புத்தூர் மாவட்டம்.
தொலைபேசி: +91-422-2422 490.
மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள்:
வைகாசி விசாகம் தைப்பூசம் ஆகிய தினங்களில் முருகனுக்கு பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திகடன்கள் நிறைவேற்றுகின்றனர். விசாகத்திற்கு சிறப்பாக 108 பால் குட அபிஷேகம் நடக்கிறது. தைப்பூசத்தை ஒட்டிய 10 நாட்கள் முருகனுக்கு நடைபெரும் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு தைப்பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும் மாலையில் தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.
அன்றைய தினத்தில் முருகப்பெருமான் யானை வாகனத்தில் எழுந்தருள்வார். மாதாந்திர சஷ்டி, கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பஞ்சமுக விநாயகர் வீற்றிருக்கும் பஞ்சவிருட்சத்தில் திருமாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். மேலும் நேர்த்திக்கடனாக தினமும் மாலையில் சுவாமி சன்னிதியைச் சுற்றி தங்க ரதம் ஓட்டுகின்றனர்.
பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் உள்ள சப்தகன்னியருக்கு ஆடிப்பெருக்கின்போது விசேஷ வழிபாடு நடக்கிறன.
மருதமலை மருதாசலமூர்த்தி வழிபாட்டு பலன்கள்:
நாகதோஷம் உள்ளவர்கள் தோஷங்கள் நீங்க பாம்பாட்டி சித்தர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வெண்ணிற மலர் சமர்ப்பித்தும் இனிப்பான நைவேத்யம் படைத்தும் வழிபடுகின்றனர். பாம்பாட்டிச்சித்தர் திரு உருவத்தில் பூசிய விபூதி பிரசாதமாக வழங்கப்படும். இந்த விபூதியை விஷப்பூச்சி கடிபட்டவர்கள் நீரில் கரைத்து சாப்பிட்டாலும் உடம்பில் பூசிக்கொண்டாலும் விஷக்கடி மற்றும் தோல் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. நாக தோஷத்தால் திருமணம் ஆகாதவர்கள் புத்திரபாக்கியம் கிடைக்காதவர்கள் இத்தல இறைவனை வணங்கி பின் பாம்பாட்டி சித்தரரையும் வணங்க தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மனக்குறை தீர்க்கும் மருதமலையானை வணங்கி மேன்மை பெறுவோமாக.
திருச்சிற்றம்பலம்