Siddheswara swamy temple kanjamalai – salem
அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் – கஞ்சமலை, சேலம்
Siddheswara swamy temple kanjamalai – salem |
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! அடியவர்களுக்கு வணக்கம். இப்பதிவில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் குடிகொண்டிருக்கும் கி.மு. 5ம் நூற்றாண்டு காலத்தில் உருவான சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தேஸ்வர சுவாமி திருக்கோவில் பற்றி விரிவாக காணலாம்.
கஞ்சமலை பெயர் காரணம்
அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள இடம் கஞ்சமலைத் தொடரின் அடிவாரமாகும். கஞ்சம் என்ற சொல்லுக்கு பொன், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உண்டு. அதன்படி…
வேதகாலத்தில் ‘தாமரை’
கஞ்சம் என்றால் தாமரை என்று பொருள். தாமரைமலரில் உதித்ததால் பிரம்மனுக்கு கஞ்சன் என்ற பெயரும் உண்டு. இந்த மலை கஞ்சனால் (பிரம்மனால்) உண்டாக்கப்பட்டது என கரபுரநாத புராணம் விரிவாக கூறுகின்றது. எனவே இம்மலை கஞ்சமலை என்றாயிற்று.
புராண காலத்தில் ‘பொன்’
சித்தேஸ்வர சுவாமி திருத்தலம் அமைந்துள்ள மலையில் அருவி ஒன்று உள்ளது. அது ஆறாக பெருகி பொன்னிநதி என்ற பெயரில் ஓடியது. முற்காலத்தில் இந்நதியில் உள்ள மணலை சலித்து பொன்தாது எடுத்துள்ளனர். மலையிலிருந்து கொட்டிய அருவியில் பொன் இருந்ததால் இம்மலை பொன்மலை என்ற பொருளில் கஞ்சமலை என்றும் அந்த நதி பொன்னி என்னும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நதியின் அருகில் பொன் செய்த இடம் பொன்னகர் என்றும் இப்பொன்னை மாற்றுரைத்து (தரப்பரிசோதனை) பார்த்த இடம் ஏழுமாத்தானூர் என்றும் வழங்கப்பெற்றுள்ளது. இவற்றுள் ஏழுமாத்தானூர் என்னும் ஊர் இன்றளவும் அதே பெயரில் இருந்து வருகிறது.
பராந்தக சோழன் சிதம்பரம் நடராஜர் கோவிலிலுக்கு கஞ்சமலைப் பொன்னைக் கொண்டே பொன் ஓடு வேய்ந்து அதனை பொன்னம்பலம் ஆக்கினான் என்பதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன.
கஞ்சமலையில் தங்கம் விளைந்த தகவலை கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் 36ம் பக்கத்தில் 29-வது பாடலான பற்றறுத்தாளும் என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடுகிறார்.
நிகழ்காலத்தில் ‘இரும்பு’
கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாது மிகுந்துள்ளது. இம்மலைப் பாறைகளில் கருத்த இடங்கள் அனேகம் உள்ளன. இவற்றில் காந்தத்தை வைத்தால் ஒட்டிக்கொள்கிறது. இக்கஞ்சமலையின் இரும்புத் தாதுவை அடிப்படையாகக் கொண்டுதான் சேலம் இரும்பாலை (உருக்காலை) இத்திருத்தலத்திற்கு மிக அருகில் அமைக்கப்பட்டது என்பது அண்மைக்கால வரலாறு. மாவீரன் அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) மன்னன் பரிசளித்த வாள் இக்கஞ்சமலை இரும்பினால் செய்யப்பெற்றது என்ற ஒரு வரலாற்றுச் செய்தியும் உண்டு
சஞ்சீவி மலை
அனுமான் சஞ்சீவி மலையுடன் தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் கருதப்படுகிறது. குறைந்த அளவில் விழுந்ததால் “கஞ்சம்” என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம். அல்லது மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். உடலை விட்டகன்ற உயிரை மீட்கும் அமுத கரணி மூலிகை இம்மலையில் இருந்ததால் சஞ்சீவி மலை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் விதமாக ஒரு செவிவழிக் கதையும் கூறப்படுகிறது. அதாவது,
குழம்பு மீன்கள் உயிர் பெற்ற அதிசயம்
கஞ்சமலையில் உள்ள காட்டில் கொள்ளையன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது காதலி அவனுக்கு தினமும் உணவு கொண்டு செல்வாள். அப்படி ஒரு முறை மீன் குழம்பு செய்து கொண்டு சென்ற போது மழை வந்துவிட்டது. அதனால் மலையில் இருந்த ஒரு புதருக்கடியில் உணவுக் கூடையை இறக்கி வைத்தாள். சிறிது நேரம் கழித்து மழை நின்ற பிறகு இந்த உணவுக் கூடையை தூக்கிச் சென்று தனது காதலனுக்கு பரிமாற பிரித்தபோது குழம்பில் இருந்த மீன்கள் உயிர்பெற்று துடித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான் கொள்ளையன்.
கள்வனைக்காத்த கல்பெரமி மூலிகை
தனது காதலியிடம் மீன்கள் உயிருடன் இருக்கும் வினோதம் பற்றி விசாரித்தபோது, அவள் உணவு கூடையை புதருக்கு அடியில் இறக்கி வைத்ததைப்பற்றிக் கூறினாள். உடனே கொள்ளையன் அந்தப்புதருக்கு அருகில் சென்று பார்த்தான். அங்கே மழையில் நனைந்து எல்லாச் செடிகளும் தலைகவிழ்ந்து இருக்க ஒரே செடி மட்டும் தலைநிமிர்ந்து இருந்ததை கண்டு வியந்தான். இந்தச் செடியை அறுத்துச் சுருட்டி தனது தொடையைக் கத்தியால் கிழித்து காயத்தின் உள்ளே வைத்து அழுத்தினான். உடனே கிழிந்த இடம் தானாக இணைந்துவிட்டது. கள்வன் நீண்ட காலம் பிணியின்றி வாழ்ந்தான். இந்தச் செடியின் பெயரை மூலிகை ஆய்வாளர்கள் ‘கல்பெரமி’ என்று கூறுகின்றனர்.
கொள்ளையன் தூக்கு தண்டனை – கல்பெரமி மூலிகையால் கள்வனின் உடல் வலிமை கூடியது. அவன் குற்றங்கள் பெருகின. ஒருசமயம் அவன் செய்த குற்றங்களுக்காக அவனைப் பிடித்து அரசங்காத்தார் தூக்கில் போட்டபோது அவன் சாகவில்லை. அப்படிப் பலமுறை தூக்கில் போட்டும் அவன் சாகாததால் அவனிடம் காரணம் கேட்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்த மூலிகச்செடியை அகற்றிய பிறகு தூக்கிலிட்டனர்.
வாழைப்பழம் சாப்பிடாத குரங்குகள்
இத்திருத்தலத்தில் உள்ள குரங்குகள் எல்லா நேரங்களிலும் வாழைப் பழங்களை உண்பதில்லை. வியப்பாக உள்ளதா. சித்தேசுவர சுவாமி திருத்தலத்தில் நவக்கிரக பரிகாரம் செய்த வாழைப்பழங்களை குரங்குகளுக்கு கொடுத்தால் அவை எல்லா நேரங்களிலும் அதை வாங்கிக்கொள்வதில்லையாம். அவ்வாறு அவை வாங்கினால் தோஷங்கள் நீங்கி விட்டது என்றும் , குரங்கு பழங்களை வாங்கவில்லை என்றால் இன்னும் நீங்க வில்லை என்றும் பொருள் கொள்ள வேண்டுமாம். அவ்வாறு குரங்குகள் பழங்களை வாங்கவில்லை என்றால் 3 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறைகள் அதேபோல் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறனர் பக்தர்கள்.
சித்தேஸ்வர சுவாமி திருக்கோவில் தல வரலாறு
பிரம்மனால் படைக்கப்பட்ட மூலிகை மலை
முன்னொரு காலத்தில் கோரக்கர், கருவூர்ச்சித்தர், கொங்கணர், மலைவாய்மலைச் சித்தர், நவநாதர், அகப்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், ஆதியூர்சித்தர் என பல சித்தர்கள் கற்ப மூலிகையை தேடி அலைந்தனர். அம்மூலிகை எங்கு தேடியும் கிடைக்காததால் பிரம்மதேவனை நோக்கித் தவம் செய்தனர். அத்தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மன் சித்தர்கள் முன் தோன்றி சகலவிதமான மூலிகைகளும் நிறைந்திருக்கும் ஒரு மலையைச் சிருட்டித்துத் தருகிறேன்.
அம்மலையில் உள்ள காட்டிற்கு கருங்காடு என்று பெயர் விளங்கும். இக்கருங்காட்டில் கருநெல்லிமரம், கருநொச்சி, வெள்ளைச்சாரணச் செடி, சாயா(நிழல்)மரங்கள், இரவில் ஒளி வீசம் ஜோதி விருட்சங்கள், உரோமத்தருக்கள், ககை மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவிகள் காணப்படும். மற்றும் ஆயுதங்களால் உண்டான காயத்தை ஆற்றும் சல்லியகரணியும், ஒடிந்த உறுப்புகளை இணைக்கும் சந்தான கரணியும், புண்களை ஆற்றுவித்துச் சிறந்த உருவம் வழங்கும் சாவல்யகரணியும், உடலை விட்டகன்ற உயிரை மீட்கும் அமுத சஞ்சீவி கரணியும் மேலும் எண்ணற்ற மூலிகைகள் இருக்கும் என்று அருளிச் செய்தார் என கரபுரநாதர் புராணச்செய்தி கூறுகிறது.
ஔவைக்கு அதியமான் அளித்த நெல்லிக்கனி
தற்போதைய தர்மபுரியாகிய தகடூரை தலைமையிடமாகக் கொண்டு அதியமான் என்ற சேரமன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு நரை, திரை, மூப்பு நீக்கும் சாவா மருந்தான அரிய வகை கருநெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. மிகவும் புத்திசாலியான அந்த மன்னன் தான் நீண்ட காலம் வாழ்வதை விட ஒரு தமிழ் புலவர் வாழ்ந்தால் மனித குலத்துக்கு மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும் என்று உணர்ந்து தன் தோழியான ஒளவைக்கு அக்கனியைப் பரிசளித்தான். அத்தகைய பெருமைவாய்ந்த நெல்லிக்கனி இந்த மலையில் தான் விளைந்தது என சமீபத்திய வரலாறுகள் கூறுகின்றன.
மூலன் கதை- கருத்துப்போன உணவு
மூலன் என்ற பெயர் கொண்ட யோகி தன் உடலை இளமையாக்கும் எண்ணத்தில் கருங்காடு வந்தடைந்தார். பல காலம் தங்கியிருந்து மூலிகை தேடி வந்தார். ஒரு நாள் அவ்வாறு மூலிகை தேடி சென்ற போது மூலன் தன்னுடன் அழைத்து வந்திருந்த வயது முதிர்ந்த உதவியாளரிடம் சமையல் செய்யச் சொல்லி சென்றார். உதவியாளர் சமைக்கும்போது உலை நன்கு கொதித்துப் பொங்கியது. வயதில் முதிர்ந்த உதவியாளர் அடுப்பு அணைந்துவிடும் என்ற பதட்டத்தில் அகப்பைக்கு பதிலாக அருகில் இருந்த ஒரு குச்சியால் உணவைத் துழாவிவிட்டார். இதனால் உணவு மொத்தமும் கருத்ததுப் போய்விட்டது. இதனால் அஞ்சிய அவர் கருத்த உணவைத் தான் உண்டுவிட்டு மூலனுக்கு வேறு உணவு சமைத்து வைத்தார்.
மூலனின் குழப்பம்
மூலிகை தேடிச் சென்ற மூலன் குடிலுக்கு திரும்பினார். உதவியாளர் இருந்த இடத்தை அடைந்தார். அவரை அங்கே காணவில்லை. குடிலில் ஒரு இளைஞன் இருப்பதைக் கண்டு அவனிடம், நீ யார்? இங்கிருந்த முதியவர் எங்கே? என்று கேட்டார். அப்பொழுதுதான் தன் உடலை கவனித்து உதவியாளர் ஐயனே நான் தான் தங்கள் உதவியாளன் என்று கூறி நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தார்.
இளம்பிள்ளை பெயர்காரணம்
எந்த மூலிகையைத் தேடி அலைந்தோமோ அது அருகிலேயே இருக்கின்றது என அறியாமல் போனோமே என்று மகிழ்ந்த மூலன் எங்கே அந்தக் குச்சி என வினவினார். தங்களுக்கு அஞ்சி அதனை அடுப்பில் போட்டு விட்டேன் என்றார் உதவியாளர். அதிர்ச்சி அடைந்த மூலன் செய்வதறியாது திகைத்தார். பின் வேறு வழியின்றி உதவியாளர் உண்ட உணவை கக்கவைத்து அதை தானும் சாப்பிட்டு மூலனும் இளமையைப் பெற்றனர். இத்தலத்தில் முதியவர் இளம்பிள்ளை ஆனதால் அந்த இடம் இளம்பிள்ளை என்றே அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த பெயர் மறையாது உள்ளது. இந்த குறிப்புகள் சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் குடிகொண்டிருக்கும் கரபுர நாதர் சுவாமி தல புராணம் – கஞ்சமலைச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சித்தேஸ்வர சுவாமி திருத்தல சிறப்பு
கஞ்சமலையின் சிறப்பு
கருமை நிற மூலிகைள் மற்ற மூலிகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உள்ளவை. இவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது என தாவர இயல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இக்கஞ்சமலையில் கருமை நிற மூலிகைகள் ஏராளமாக உள்ளதால் அதற்கு கருங்காடு என்றே பெயர் என அறிந்தோம். இங்கு காணப்படும் கருநெல்லி மூலிகையால் பதினைந்து வகை உபாதைகளும், மயக்கமும், மனோவியாதியும் நீங்கும், இளமை உண்டாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
திருத்தல நாதரின் சிறப்பு
ஈசனின் மூன்றாவது மகனாக சிறப்பு பெற்ற சித்தர்
இத்திருத்தல இறைவன் கலிங்க தேசத்தில் வேதமங்கலம் என்னும் ஊரில் வசித்த சித்தர். சுந்தரர் என்னும் திருப்பெயர் கொண்டவர். உள்ளத்தில் ஈசன் சிந்தனை கணப்பொழுதும் நீங்காதவர். நாடெங்கும் உள்ள சிவ தலங்கள் தோறும் சென்று தரிசித்தவர். இவர் கொங்கு நாடு வந்து பஞ்சாக்கர நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் கரபுரீசனை காதலாய்க் கசிந்து கண்ணீர் மல்க வணங்கினார். இவர் பக்தியில் உருகிய கரபுரீசர் மான், மழு, திருநீலகண்டம், யானைத்தோல் போர்வை இவைகளுடன் காட்சி தந்து கணபதிக்கும் கந்தனுக்கும் நிகராக உன்னை மூன்றாவது மகனாகக் கொண்டோம் என்று அருளினார்.
இறவாத வரம் பெற்ற சித்தர்
ஈசன் சுந்தரரை நோக்கி என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்க, ஐயனே இப்பிறப்பில் இளமையுடன் இறவாதிருக்க வரம் அருள்க என வேண்டினார். அதற்கு ஈசனும், நீ முக்தி அடைந்து சாகாவரம் பெற்றக் கலியுகத்தில் யாவரும் அறியாதபடி அரூபியாய் (உருவம் இல்லாமல்) இருந்து எம்மைப் பூசிப்பாய். கஞ்சமலைச் சித்தர் எனும் பெயர் உனக்கு நிலைக்கும். நின்னைச் பூசித்தவர் என்னை பூசித்தவர் என்று ஈசன் அருளிச்செய்தார் என கரபுர நாதர் புராணம் கூறுகிறது.
பறக்கும் சித்தி பெற்ற காலங்கிநாதர்
அருள்மிகு சித்தேசுவரராகிய காலங்கிநாதர் பற்றி மெய்ஞானவிழிப்பு என்னும் நூலில், இவர் தான் பறக்கும் சித்தி பெற்ற சித்தர் என்று கூறப்பட்டுள்ளது. தன் உடலை இரும்புத் தாதுவாக்கி அதை காந்தநீர் சுழற்சியில் இட்டு, சுழற்சியின் வேகத்தில் ஏற்படும் மின்காந்த சக்தியை, உயரிய ஒளிமின்காந்த சக்தியாக மாற்றி, உடலுக்குள் அதை கொண்டுவந்து தன் ஆத்மாவை மண்டலமாகச் சுழலச் செய்கிறார். இவ்வாரே இன்னும் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட குறிப்புகளுக்கு ஏற்ப இத்திருத்தலத்து இறைவன் வீராசனத்தில் (தவக்கோலத்தில்) அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவரின் கருவறைக்கு அருகில் ஒரு வற்றாத நீரூற்று பெருக்கெடுத்து ஓடுகிறது.
கஞ்சமலை தீர்த்தச் சிறப்பு
கனிம வளம் மிக்க கஞ்சமலை நீர்வளமும் மிக்கதாகும். இத்திருத்தலத்தில் உள்ள நீரில் மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளன. சுமார் 60 ஏக்கர் பரப்பளவுள்ள இத்திருத்தல வளாகத்தில் எங்கு தோண்டினாலும் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்தில் நீர் ஊற்று பெருகும். இதே போல் மலையின் முகட்டில் ஒரு ஓடையும் மலையின் தென்மேற்குப் பகுதியில் ஒரு சுனையும் உள்ளது. அவற்றிலும் நீர் வற்றுவதே இல்லை.
தல தீர்த்தம்
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் கருவறை இடுக்கிலிருந்து பாறைகளுக்கிடையில் உள்ள இடைவெளி வழியாக ஒரு நீருற்று வற்றாது பெருக்கெடுத்து ஓடி கொண்டேயுள்ளது. இந்த நீரூற்றிலிருந்து வரும் நீர்தான் சித்தேஸ்வர சுவாமி கருவறைக்குப் பின்புறம் உள்ள தல தீர்த்தமான காந்த தீர்த்தகுளத்தில் சேமிக்கப்படுகிறது. இத்திருக்குளத்து நீர்தான் இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்யம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
திருக்குளத்திலிருந்து உபரிநீர் வெளியேறுவதற்கு திருத்தலத்தின் தென்புறம் கிழக்கு மேற்காக ஒரு சிற்றோடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் வற்றாத ஜீவநதிபோல் ஆண்டுதோறும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். கடுமையான வறட்சி காலத்திலும் நீர் வற்றுவது இல்லை. இது இத்தலத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
நாழிக்கிணறுகள்
இத்திருக்கோயிலுக்கு அருகில் ஓடும் சிற்றோடையின் கரைகளில் பலநாழிக் கிணறுகள் (சிறு கிணறுகள்) உள்ளன. இக்கிணறுகளில் கைக்கெட்டும் உயரத்தில் நீர் உள்ளது. இக்கிணறுகளில் இருந்து வாளிகள் மூலம் நீர் எடுத்து பக்தர்கள் குளிக்கின்றனர். இத்திருக்கோயிலுக்கு அருகில் சுற்றுப்புற ஊர்களில் உள்ள மக்கள் நாள்தோறும் அதிகாலையிலேயே இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிகாலை முதல் இருட்டும் வரை இங்கு நீராடுவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்திருக்கோயில் காந்த தீர்த்தக் குளத்தில் வேண்டுதலுக்காக உப்பும், மிளகும் வெல்லமும் போடப்படுகிறது. உப்பும் வெல்லமும் கரைவது போல துன்பங்களும், துயரங்களும் கரைந்து விடுகின்றன என்பது ஐதீகம். எவ்வளவு உப்பு போட்டாலும் தீர்த்தக் குளத்தில் உள்ள நீர் கரிப்பதில்லை.
மேலும் இத்தலதீர்த்தத்தில் வந்து நீராடினால் நோய்கள் பல நீங்குகின்றன என்பது உறுதி.
சித்தேசுவர சுவாமி திருக்கோயில் வடிவமைப்பு
இத்திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு முன்பு பல நாழிக்கிணறுகள் இருக்கின்றன. அருகே ஒரு கல் மண்டபம் உள்ளது. அதில் வித்தியாசமான பல நாகர்கள் சிலைகள் அமைந்துள்ளன.
நாழிக்கிணறுகளின் தென்புறம் சித்தர்கள் ஆசிரமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து தங்கி தியானம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் பிரகாரம்
இத்திருத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை. மாறாக கருங்கற்களாலான நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் கல்லால் ஆன விளக்குத்தூண், பலிபீடம், அதிகார நந்தி ஆகியவை காணப்படுகின்றன.
மூலவர் கோஷ்டம்
மூலவர் சன்னதி கோஷ்டத்தில் வழக்கமாக உள்ளது போல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் பிரம்மன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற கோஷ்ட தெய்வங்கள் இல்லை.
தென்மேற்கு மூலையில் கன்னி மூல கணபதி அருள் புரிகிறார். அவருக்கு நேர் பின்புறம் தல தீர்த்தம் அமைந்துள்ளது. குரு தட்சிணாமூர்த்தி இருக்கும் இடத்தில் சிவ யோகி திரு உருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. மூலவர் சன்னதி பிரகாரத்தின் சுற்றுப் பாதையின் முடிவில் நவக்கிரகங்கள் சன்னதி அமைந்துள்ளது.
அதையடுத்து சுவாமிக்கு எதிரில் தனி மண்டபத்தில் பிரதோச நந்தி வீற்றிருக்கிறார். இவரைக் கடந்தால் கல்மண்டபத்தில் கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். உற்சவ மூர்த்திகளுள் காளியின் திருஉருவச் சிலையும் அமைந்துள்ளது.
மூலவர் சன்னதி
இத்திருத்தல நாதர் சித்தேசுவர சுவாமி என்றழைக்கப்படுகிறார். கருவறை அழகிய விமானத்துடன் காட்சியளிக்கிறது. கருவறையில் இளம் யோகி சின்முத்திரையுடன் வீராசனத்தில் (தவக்கோலத்தில்) மிகக் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் அன்பர்களுக்குச் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார். இது சித்தர் கோவில் என்பதால் அம்மன் சன்னிதி இல்லை.
காலாங்கி சித்தர், திருமூலர் சன்னதி இருக்கும் மலை உச்சிக்கோயிலுக்கு செல்ல இத்திருத்தலத்திலிருந்து பாதை இருக்கிறது. நடந்து மட்டுமே இந்த மலை உச்சிக்கு செல்ல முடியும்.
காளி தேவி சன்னதி
திருக்கோயிலில் அம்மன் சன்னதி இல்லாவிட்டாலும் திருக்கோவிலை ஒட்டி தென்புறமாக உள்ள ஓடையைத் தாண்டினால் காளி தேவியின் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. தனி விமானம் சிம்ம வாகனம் மற்றும் பலி பீடத்துடன் காளி தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். துவார பாலகிகள் இருபுறமும் காவல் புரிய கருவறையில் தேவி எட்டுக் கரங்களுடன் திரிசூலம் கையிலேந்தி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அம்மன் சன்னிதியின் வாயிலின் வலதுபுறம் ஒரு நாழிக்கிணறு உள்ளது. இடதுபுறம் கோவில் நந்தவனம் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய குன்றின் மேல் முருகன் கோயில் உள்ளது. ‘ஞானசற்குரு பாலமுருகன்’ என இவரை அழைக்கின்றனர்.
அருள்மிகு சித்தேசுவரர் நிகழ்த்திய அற்புதங்கள்
பொய்யுறைத்த காடன்
அருள்மிகு சித்தேசுவரர் திருக்கோயில் கொண்டுள்ள இந்த கஞ்சமலை என்னும் மலைத்தொடரின் தென்புறத்தில் உத்தமசோழபுரம் எனும் ஊர் உள்ளது. இங்கு கரபுர சுவாமி திருத்தலம் அமைந்துள்ளதால் இதைக் கரபுர நகர் என்றும் வழங்குவர். இந்நகரில் காடன் என்பவன் வசித்துவந்தான். காடனுக்கு நான்கு பெண்கள். காடனின் தங்கைக்கு ஒரு மகன் இருந்தான். இவ்விருவரது பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். காடன் தனது மூத்த குமாரியை உனக்கு மணம் செய்து வைக்கிறேன் என்று கூறித் தங்கையின் மகனை தன்னிடத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
ஒரு சமயம் காடனின் உறவினர்கள் அவனது மூத்த மகளுக்கு மணம் பேச வந்தனர். அதனால் காடன் தன் தங்கை மகனிடம் அடுத்தவளை உனக்கு மணமுடித்து தருகிறேன் என்று கூறினான். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். திருமணம் இனிதே நடந்தேறியது.
இவ்வாறு தனது தங்கை மகனிடம் காடன் முன்னர் உரைத்த பொய்யான உறுதிமொழிகளைக் கூறியே தனது இரண்டாவது மற்றும் பெண்ணுக்கும் வேறு இடங்களில் மணமுடித்தான்.
தங்கை மகனின் வருத்தம்
காடனின் வார்த்தைகளை நம்பி ஏமாந்த அவனது மருமகன் நாள்காவது மகளுக்காகக் காத்திருந்தான். ஒரு நாள் மாமனும் மருமகனும் காட்டுவழியாக சென்றுகொண்டிருக்கையில் எனது நான்காம் மகள் உனக்கே உரிமை என்றான் காடன். தன் மாமனின் வார்த்தைகளை நம்பாத மருமகன், மாமனே உன் வார்த்தைகள் பொய் என்று அறிவேன். என்னிடம் சாட்சியா உள்ளது? உன் பெண் எனக்குத் தேவையில்லை. நானும் வேறு இடம் செல்கிறேன். உனக்கு விருப்பமான இடத்தில் அவளையும் மணமுடித்து கொடு என்று வருந்திக் கூறினான்.
கரடி சாட்சியாக பெண் உனக்கே
காடன் தனது மருமகனின் உழைப்பை இழக்க விரும்பவில்லை. அதனால் மருமகனின் உழைப்பைப் பெற்றுக் கொண்டு வாய்ப்பு கிடைத்தால் மகளை வேறு நல்ல இடத்தில் மணம் முடிக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தில் அப்போதைக்கு மருமகனைத் தக்கவைத்துக்கொள்ள, எதிரில் வந்த கரடியைச் சாட்சியாக வைத்து, இக்கரடி சாட்சியாக என் நான்காம் மகளை உனக்கே தருகிறேன் என்றான். கரடியும் தலை அசைத்தது.
சில நாட்கள் கழிந்தபின் காடன் வழக்கம்போல் தன் மகளுக்கு வேறு மணமகன் பார்த்தான் காடன். கோபம் கொண்ட மருமகன் தன் உறவினர்களைக் கூட்டி வழக்குரைத்தான். ஒரு முறையல்ல மாமன் நான்கு முறை சத்தியம் தவறினான் என்று வாதிட்டான். அவையோர் காடனை விசாரித்தனர். அவனோ மருமகனே பொய் கூறுகின்றான் நான் வாக்கு தவறவில்லை என்றான். காட்டுவழியில் கரடியை சாட்சி வைத்து நான்காவது பெண்ணை எனக்குச் தருவதாக கூறினான் மாமன் என்றான் மருமகன். மாமன் மறுத்தான்.
பொய்யின் கொடுமை
மாமனே, வாய்மையே சிறந்தது. பொய் உரைத்தல் பாவமாகும். பொல்லாத நரகத்தைத் தரும். பொய் உரைத்த தாழம்பூ ஈசனின் கோபத்திற்கு ஆளானது. ஆசிரியரிடம் வேதம் அறியாது பொய் உரைத்த தருர் நரகத்தை அடைந்தார்.
பொய்மை, கொலை, திருட்டு, கள்ளுண்ணல், குரு நிந்தை செய்தல் என்னும் இவ்வைந்துமே பஞ்சமா பாவங்கள். உண்மையின் உயர்ந்த பயனை அறியாதவர்தான் பயனின்றிப் பொய் பேசுவார் என்று எடுத்துரைத்தான்.
சாட்சி சொல்ல வந்த கரடி
தனது தரப்பு நியாயத்தை ஒரு சாட்சியைக் கொண்டு நிரூபிக்கிறேன் என்று சபையோரிடம் அனுமதி பெற்று, உமாபதியின் திருவருளால் அன்று தலையசைத்த கரடி சத்தியம் தவறாது வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்று ஈசனை தியானித்தான்.
காடன் தன் மருகனை ஏமாற்ற எண்ணி சாட்சியாக வைத்த கரடி காட்டு விலங்கு அல்ல அடியாரின் இதயக் கமலத்தில் வாசம் செய்யும் அருள்மிகு சித்தேசுவரர் என்பதை அவன் அறியவில்லை. அன்று கரடி உருவில் கரபுரநாதனைப் பூசிக்க வந்த காலங்கிச் சித்தர் ஆற்றாமனத்துடன் ஏழை வாலிபன் நெஞ்சில் நினைக்கவே. கமலமுனி என்றழைக்கப்படும் காலங்கி சித்தர் கரடி உருக்கொண்டு அவையில் உள்ள அனைவரும் தரிசிக்கும்படி தோன்றினார். கரடியாக உருக்கொண்ட சித்தர் மூன்று முறை தலை அசைத்தார். அறம் வென்றது. காடன் தலை கவிழ்ந்தான். காடனின் மகளுக்கும் காடனின் தங்கை மகனுக்கும் குல முறைப்படித் திருமணம் இனிது நிறைவேறியது.
இத்திருக்கோயிலில் எழுந்தருள் பாலித்துவரும் அருள்மிகு சித்தேசுவரர் இதுபோல் பல திருவிளையாடல்களைப் புரிந்து வந்தார் என்று கரபுரநாதர் புராணம் கூறுகிறது.
சித்தேஸ்வர சுவாமி திருத்தல சிறப்பு வழிபாடுகள்
அருள்மிகு சித்தேசுவர சுவாமிக்குத் தினசரி சுத்த அன்னத்துடன் உச்சிகால பூஜை சிறப்புற நடைபெறுகிறது. பூஜை ஆகம் முறைப்படி நடைபெறுகிறது. உச்சிகால பூஜை சிவாச்சாரியார்களால் தலதீர்த்தத்தில் நீராடி உலராத ஆடையுடன் செய்யப்பட்டு வருகிறது. தினசரி பூஜைக்கு அரைத்த சந்தனமே பயன்படுத்தப்படுகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அமாவாசை நாட்களில் சித்தர்கள் பலரும் இங்கு திரளுகின்றனர் என்பது நம்பிக்கை. அமாவாசைக் கோயில் என்றே இத்திருக்கோயிலுக்கு சிறப்புப் பெயர் உண்டு. குறிப்பாக உடலில் பருக்கள் உள்ளோர் கஞ்சமலைச் சித்தரை இருந்த இடத்தில் இருந்தே மூன்று அமாவாசைகளுக்கு தரிசிக்க வருவதாக வேண்டிக் கொள்கின்றனர். பருக்கள் மறைந்து விடுகின்றன. இவ்வாறு குணடைந்தோர் இந்திருக்கோயிலுக்கு வந்து நீராடி உப்பையும், மிளகையும் வெல்லத்தையும் வாங்கி காந்த தீர்த்த குளத்தில் இட்ட சித்தரை வழிபட்டுச் செல்கின்றனர். அமாவாசை தோறும் பல்லாயிரக்க கணக்கான மக்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து நீராட்டி இத்தலத்து இறைவன் அருள்மிகு சித்தோரை சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். ஆடி அமாவாசை வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்பானதாகும்.
இத்திருக்கோயில் காந்த தீர்த்தக் குளத்தில் உள்ள தீர்த்தத்தில் உப்பும், மிளகும் வெல்லமும் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்தேசுவர சுவாமி திருத்தல விழாக்கள்
இத்திருக்கோயிலில் எழுந்து அருள்பாலித்துவரும் அருள்மிகு சித்தேசுவரரைப் பற்றி செவிவழிக் கதை ஒன்று சொல்லப்பட்டு வருகின்றது. இக்கதையின் அடிப்படையிலேயே இத்திருக்கோயிலின் பெருந்திருவிழாவான சித்தர் சிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.
“சித்தர் சிறப்பு” என்பது சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமைகளில் இருந்து தொடங்கி நடைபெறும் பெருந்திருவிழா ஆகும். இவ்விழாவுக்கு ஆதாரமான கதையை அறிந்து கொள்ளலாம்.
மாடு மேய்க்கும் சிறுவர்கள்
இத்திருக்கோயில் அமைந்துள்ள கஞ்சமலை அடிவாரத்தில் நல்லணம்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் வாழும் மக்கள் தங்கள் மாடுகளை மேய்க்க இம்மலையில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்செல்வது வழக்கம். அவ்வாறு இம்மலையில் கூடும் மாடு மேய்க்கும் சிறுவர்கள் பொழுதுபோக்காக விளையாடுவது வழக்கம்.
விளையாட்டில் எப்போதும் வெல்லும் புதிய சிறுவன்- விளையாட்டில் தோற்றவர் தலையில் வென்றவர் குட்டுவது வழக்கம். இவ்வாறு பொழுதுபோக்குக்காக விளையாடும் சிறுவர் கூட்டத்தில் தினந்தோறும் ஒரு புதிய சிறுவன் கலந்து கொள்வான். அந்த புதிய சிறுவனே தினந்தோறும் விளையாட்டில் வெல்வான். தோற்ற சிறுவர்கள் தலையில் குட்டுவான். மேலும் விளையாடும் சிறுவர்கள் சாப்பிடும் நேரத்தில் புதிய சிறுவன் மாடுகளின் மடிகளில் பால் குடித்து வந்தான். நாள்தோரும் குட்டுப்பட்ட சிறுவர்கள் இந்த விவரங்களை தனங்கள் வீட்டில் சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்குச் செல்வார்கள். ஆனால் மறந்துவிடுவார்கள்.
வீட்டில் முறையிட்ட சிறுவன் – ஒருநாள் குட்டுப்பட்டவர்களில் ஒரு சிறுவன் இந்த விவரங்களை அனைவரிடமும் கூறியே தீருவதென எண்ணி தன்னுடைய ஆடையில் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டு வீட்டிற்குச் சென்றான். வீட்டில் உள்ளவர்கள் ஆடையில் உள்ள முடிச்சு என்ன என்று கேட்ட போது மேற்கண்ட விவரங்களைக்கூறி முறையிட்டான். அவன் தந்தை அடுத்த நாள் மலைக்குச் சென்று ஒளிந்து இருந்து நடப்பதை கவனித்தான். வழக்கம்போல் விளையாட்டு நடைபெற்றது. புதிய சிறுவன் அனைவரையும் வென்றான். வழக்கம்போல் தோற்றவர் தலையில் குட்டினான். பின்னர் அனைவரும் சாப்பிடச் சென்றதும் புதிய சிறுவன் மாடுகளின் மடிகளில் பால் குடித்தான். இவற்றை கண்காணித்த ஒளிந்திருத்த தந்தை மாட்டிடம் பால் குடித்த சிறுவனை மாடு கட்டும் கயிற்றினால் அடித்ததார். அடிதாங்க முடியாத சிறுவன் தற்போது கருவறை அமைந்துள்ள இடத்தில் இருந்த சங்கலைச் செடிப்புதரினுல் சென்று அமர்ந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
அடிபட்ட சித்தர்
குட்டுப் பெற்றவன் தந்தையிடம் அடிபட்டவர் சித்தர் என்பதையும் அடிபட்ட பின்னர் சித்தர் இத்திருக்கோயில் கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் (வீராசனத்தில்) அமர்ந்து விட்டதைப் பற்றியும் அவரது சிறப்புகள் பற்றியும் பின்னர் தாரமங்கலம் கெட்டி முதலியார் ஒருவர்தான் கனவில் கண்டு கூறியதை கேட்டு உணர்ந்த நல்லணம்பட்டி மக்கள் தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இத்தலத்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டி சித்தரை அடித்தவர் சித்தர்போல் அலங்கரித்துக் கொள்கிறார். இவரை சித்தர் சிறப்பு பெருந்திருவிழாவின்போது மற்றொருவர் சந்தனக்கட்டை மற்றும் பூட்டாங்கயிற்றால் அடிக்கிறார்.
சித்தரை அடித்தாக கூறப்படும் நல்லணம்பட்டி திருமலைக்கவுண்டர் வகையறாவினர் ஓராண்டு முழுவதும் முடி எடுத்துக்கொள்ளாமல் இருந்து சித்தர் சிறப்பின்போது முடி எடுத்து, நீராடி உடலெங்கும் சந்தனம்பூசி, உருளுதண்டமிட்டு அருள்மிகு சித்தேசுவர சுவமி முன் அமர்வார்கள். அவரை நல்லணம்பட்டி முத்து வைத்திக்கவுண்டர் வகையறாவினர் தங்களை சித்தரின் அடிமைகளாக பாவித்து சந்தனக்கட்டை மற்றும் பூட்டாங்கயிற்றால் (நூலாடையினால் பூட்டாங் கயிறுபோல் செய்து) அடிப்பர். இவ்விழாவில் அடிபடுபவரிடம் மழை எப்போது பெய்யும் என்பன போன்ற பல செய்திகள் கேட்கப்படும். அவரும் பதில் சொல்வார். அவர் சொல்லும் நேரப்படி இப்பகுதி மழை பெறுகிறது என்பது வியப்பு.
சித்தேசுவர சுவாமி வழிபாட்டு பலன்கள்
இத்திருக்கோயில் இறைவனை மனதில் தியானித்து தங்கள் இன்னல்கள் நீங்கி இன்பமாய் வாழ்ந்திட மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் விரும்பியவாறு, வேண்டியவாறு பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. காரியங்கள் கைகூடுகின்றன என்பது பக்தர்கள் அனுபவம்.
இத்திருக்கோயிலில் மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை செய்தபடி மகப்பேறு அடைந்தவுடன் இத்திருக்கோயிலுக்குக் குழந்தையுடன் வந்து குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருமணம் ஆகாதவர்கள் மற்றும் திருமணம் தடைபட்டவர்கள் திருமணம் வேண்டியும் வேலை கிடைக்காதவர்கள் வேலை வேண்டியும், விவசாயிகள் விளைச்சல் பெருக வேண்டியும், மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டியும், தொழிலதிபர்கள் தொழில் சிறக்க வேண்டியும், வணிகர்கள் தங்கள் வணிகம் செழித்து வளர வேண்டியும், உடல் நலம் குன்றியவர்கள் உடல் நலம் பெற வேண்டியும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அவர்கள் வேண்டியன வேண்டியவாறே நிறைவேற பெறுகின்றனர்.
தங்கள் பிரார்த்தனை காணிக்கைகளை தாங்கள் விரும்பியவாறு செலுத்துகின்றனர். மேலும் பசுமாடு, பசுங்கன்று, காளைக்கன்று, சேவல் முதலியவைகளையும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை காணிக்கையாக செலுத்துகின்றனர். இத்திருத்தலத்து இறைவனுக்கு பெருமளவில் பக்தர்கள் முடிகாணிக்கையும் செலுத்துகின்றனர்.
சித்தேசுவர சுவாமி திருக்கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 6.30 முதல் 1.00 வரை
மாலை 4.00 முதல் 8.00 வரை
வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் நாள் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
சித்தேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைவிடம்
கஞ்சமலை சேலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இளம்பிள்ளை எனும் சிற்றூருக்கு அருகே அமைந்துள்ளது.
அருகில் இருக்கும் விமான நிலையம்– சேலம் விமான நிலையம்
அருகில் இருக்கும் இரயில் நிலையம்– சேலம் இரயில் நிலையம்
அருகில் இருக்கும் பேருந்து நிலையம்– சேலம் பேருந்து நிலையம்.
இத்திருக்கோயிலுக்கு சேலம் மற்றும் இளம்பிள்ளையிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அமாவாசை தினத்தன்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றது.
சித்தேசுவர சுவாமி திருக்கோயில் முகவரி
அருள்மிகு சித்தேசுவர சுவாமி திருக்கோயில்
கஞ்சமலை, சேலம் மேற்கு வட்டம்,
சேலம் மாவட்டம். 637502
தொலைபேசி எண்: +91 – 427- 249 1389
திருச்சிற்றம்பலம்