சூரசம்ஹாரம் | கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை
சூரசம்ஹாரம்/கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை
பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ,கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு உலகெங்கும் உள்ள பக்தர்களால் விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இது மகா சஷ்டி என்றும் சூரசம்ஹாரம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரபத்மன் முதலான அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வைக் கொண்டாடவே இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக சூரசம்ஹார விரதம் இருப்பவர்கள் மிளகு விரதம் இருக்க வேண்டும். ஏனெனில் இது சிவனிடம் வரம் பெற்ற சூரனை அழிக்க சிறப்பு ஆயுதம் சக்தி வேல் வேண்டி முருகப்பெருமானே கடைபிடித்த விரதம் என நம்பப்படுகிறது. இயலாதவர்கள் இளநீர் விரதம், பால் விரதம், பழ விரதம் அல்லது ஒருவேளை உணவு விரதம் என அவரவர் உடல்நலம் மற்றும் வசதியைப் பொருத்து கடைபிடிக்கலாம்.
சஷ்டி விரதம் துவங்கும் முறை
ஐப்பசி மாத அமாவாசை அதாவது தீபாவளிக்கு அடுத்த நாள் மகா சஷ்டி விரதம் துவங்கும். அமாவாசை திதியில் எண்ணெய் தேய்த்து நீராடி மதியம் அல்லது மாலை தலை வாழை இலையில் முழு சைவ விருந்து சாப்பிடவேண்டும். பின் இரவு ஆகாரம் எதுவும் உட்கொள்ள கூடாது. பால் பழம் அருந்தலாம். அடுத்த நாள் பிரதமை திதியில் விரதம் துவங்க வேண்டும். அதிகாலை எழுந்து நீராடி வீட்டில் ஆறுமுக சக்கரம் மாக்கோலம் இட்டு மத்தியில் மஞ்சள் பரப்பி குங்குமத்தால் ‘ஓம்’ எழுதி ஆறு கோணங்களில் ஆறு அகல் விளக்கு நெய் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகன் திரு உருவச்சிலை அல்லது படத்தை சிவப்பு நிறமலர்களால் அலங்கரித்து வாசனை திரவியங்கள் மற்றும் கற்பூரம் ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மிளகு விரதம் கடைபிடிப்பவர்கள் தீபாவளிக்கு மறுநாள் காலை முதலே உபவாசம் இருக்க வேண்டும். ஆனால் அமாவாசை திதி முடிந்து பிரதமை துவங்கியதும் தான் மிளகு சாப்பிட வேண்டும்.
சஷ்டி முதல் நாள் விரதம்
மிளகு விரதம் மேற்கொள்பவர்கள் பிரதமை திதி துவங்கியதும் ஆறு மிளகு மென்று சாப்பிட்டு துளசி தீர்த்தம் அல்லது இளநீர் அருந்த வேண்டும். சிலர் முதல் நாள் 1 மிளகு இரண்டாம் நாள் 2 மிளகு என ஐந்தாம் நாள் 5 மிளகு சாப்பிடுவர். சிலர் முதல் 5 நாட்களும் தலா 6 மிளகு சாப்பிடுவர் இடையில் தேவைப்பட்டால் நீர் அருந்தலாம். இது கடுமையான உபவாச முறையாகும். இவ்வாறு இருக்க இயலாதவர்கள் 5 நாடகளும் பால் மட்டுமோ பழங்கள் மட்டுமோ இளநீர் மட்டுமோ அல்லது ஒருவேளை உணவு சாப்பிடும் விரதமோ கடைபிடிக்கலாம். ஆனால் ஆறாம் நாளான சூரசம்ஹாரம் அன்று மட்டுமாவது மறுநாள் காலை வரை முழு உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதமை திதி துவங்கியதும் முருகன் கோவில்களில் கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கும். விரதம் இருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளலாம். ஆலயங்களில் சிறப்பு யாகம் நடத்தி பின் முருகனுக்கு காப்பு கட்டப்படும். அதன்பிறகு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். உபவாசம் கடைபிடிப்பவர்கள் கட்டாயம் காப்பு கட்டிக்கொள்ள வேண்டும். அதிகாலை உபவாசம் துவங்கி விட்டு பின்பு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொள்ளலாம்.
சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
இந்த ஐந்து நாட்களும் முருகனும் அவரது சேனைகளும் போரிட்டதாக கந்த புராணம் கூறுகிறது. எனவே சதா சர்வகாலமும் முருகனை நினைத்து துதி பாடுதல், திருப்புகழ், கந்தபுராணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களை படிப்பதோ கேட்பதோ கோடி புண்ணியம்.
முதல் நாள் கடைபிடிக்கும் விரத முறையை 5 நாட்களும் கடைபிடிக்க வேண்டும். காலை மாலை இரண்டு வேளையும் நீராடி திருநீறு பூசி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபட்ட வேண்டும். முடிந்தால் தினமும் ஆலயத்திற்கு சென்று வரலாம். அதேபோல் ஒரு முறை கடைபிடிக்கும் விரதத்தை அப்படியே 12 ஆண்டுகள், 24 ஆண்டுகள் அல்லது 48 ஆண்டுகள் கடைபிடிக்க வேண்டும். இதை கால், அரை மற்றும் முழு மண்டலம் என்று அழைப்பர்.
இன்றைய ககாலகட்டத்தில் 48 ஆண்டுகள் விரதம் இருப்பது மிக மிக அரிது. ஆனால் முருகன் அருளால் 12 ஆண்டுகள் நிறைவு செய்து கொள்ளலாம். இடையில் ஓராண்டு மரணம் ஏதேனும் நிகந்து விட்டால் அந்த ஆண்டை தவிர்த்துவிட்டு அடுத்த ஆண்டை கணக்கில் கொண்டே மண்டலத்தை நிறைவு செய்ய வேண்டும். அதன் பிறகும் விரதத்தை தொடர விரும்பினால் சற்று எளிமையான விரத முறையை மேற்கொள்ளலாம். பெண்களுக்கு விரதம் துவங்கியபின் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டாலும் வீட்டில் இருந்தே விரதத்தை தொடரலாம்.
சஷ்டி விரதத்தின்போது என்ன செய்யலாம் செய்ய கூடாது?
விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தீய எண்ணங்கள் இருக்க கூடாது. ஆசை, கோபம், ஆணவம் என மூன்று மலங்களும் இருக்கவே கூடாது. இரவு உபயோக படுத்தாத பாய் அல்லது படுக்கை விரிப்பில் உறங்க வேண்டும். மெத்தையில் உறங்க கூடாது. தலையணை வைத்துக்கொள்ளக் கூடாது. முற்காலத்தில் நம் முன்னோர் உபவாசத்தோடு உறங்காமலும் இருந்து விரதம் கடைபிடித்தனர். நாம் இயன்றவரை பகலிலாவது உறங்காமல் இருக்கலாம். வன்சொற்கள் பேசக்கூடாது. இறைவன் திருநாமங்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். திருமணம் வளைகாப்பு, பிறப்பு இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது. விரதத்தை பாதியில் விடக்கூடாது.
ஆறாம் நாள் சூரசம்ஹாரம் – தண்டு விரதம்
ஆறாம் நாள் அதிகாலை எழுந்து நீராடி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபட வேண்டும். மிளகு விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று மிளகு சாப்பிட கூடாது. அதற்கு பதிலாக பச்சை வாழைத்தண்டு பிரசாதம் தயாரித்து தலைவாழை இலையில் முருகனுக்கு படையல் இட்டு புளிக்காத தயிர் மற்றும் கரும்பு சர்க்கரையுடன் நைவேத்தியம் செய்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக தந்து பின்னர் அருந்தலாம். பால் பழம் போன்ற பிற விரதங்களை கடைபிடித்தவர்கள் ஆறாம் நாளான சூரசம்ஹாரம் அன்று மட்டுமாவது மறுநாள் காலை வரை முழு உபவாசம் இருக்க வேண்டும்.
வாழைத்தண்டு பிரசாதம் செய்யும் முறை
இளம் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து அத்துடன் சப்போட்டா பப்பாளி தவிர எல்லாவகை பழங்களும் ஒன்று அல்லது இரண்டு துண்டு நறுக்கி சேர்த்து பச்சை மாங்காய், பெரிய நெல்லிக்காய், ஊரவைத்த பச்சை பயறு 2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய், இஞ்சி எலுமிச்சை சாறு மற்றும் மல்லி இலை சேர்த்து வாழைத்தண்டு பிரசாதம் தயார் செய்ய வேண்டும்.
மிளகு விரதம் இருந்தவர்கள் இந்த பிரசாதத்தை புளிக்காத தயிர் மற்றும் கரும்பு சர்க்கரையுடன் சேர்த்து மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
மனத்தூய்மையோடு உடல் தூய்மையும்!
வாழைத்தண்டு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மிளகு சாப்பிட்டு உபவாசம் இருந்தவர்களுக்கு மட்டும் வயிறு சுத்தமாகும். ஐந்து நாட்கள் உட்கொண்ட மிளகு மொத்தமும் வெளியேற வேண்டும். வயிறு சுத்தமாகத் துவங்கியதும் புளிக்காத மோர் பச்சை மிளகாய் இஞ்சி சாறு கலந்து இடைவெளி விட்டு ஆறு அல்லது ஏழு முறை பருக வேண்டும். உடல் முழுவதும் தூய்மையானபிறகு நீராடி முடிந்தால் புத்தாடையோ அல்லது தூய்மையான ஆடை உடுத்தி அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று சூரசம்ஹாரம் பார்க்க வேண்டும். படைவீடுகள் ஏதவது ஒன்றுக்கு செல்வது மேலும் சிறப்பு.
சூரசம்ஹாரம் – நான்கு அசுரர்களை முருகன் வதம் செய்யும் நிகழ்வு
சூரசம்ஹாரம் அந்தந்த கோவில் முறைப்படி நிகழும். மாலை ஆரம்பித்து இரவுக்குள் நான்கு அசுரர்களையும் முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடந்து முடியும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தேவயானையை வெற்றி வீரனான முருகப்பெருமானுக்கு தாரை வார்த்து தரும் நிகழ்வு நடக்கும். மணமக்கள் மாலைமாற்றும் இந்த தருணத்தில் தம்பதி சமேதராய் மூவரூம், முப்பத்து முக்கோடி தேவரும், முனிவர்களும், ரிஷிகளும் அங்கு கூடி மணமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.
(பழநியில் சூரசம்ஹாரம் நிகழும்போது மலைமேல் பூஜைகள் எதுவும் நடக்காது நடை சாத்தப்பட்டிருக்கும் உற்சவர் கீழே இருப்பார். முருகன் மலைவிட்டு இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளிப்பதாக ஐதீகம்.) அந்த தருணத்தில் உபவாசம் இருந்த பக்தர்கள் வேண்டியதெல்லாம் நிறைவேறும். பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்து இந்த பூஜையில் கலந்து கொண்டால் தான் நிறைவு.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதம் நிறைவடைவதில்லை. பிறகு வீட்டிற்கு சென்று சூரனை வதைத்த தோஷம் நீங்க எண்ணை வைத்து நீராட வேண்டும். இரவு தேங்காயுடன் பொரிகடலை, காரம் அதிகம் இல்லாத சுண்டல் சாப்பிடலாம். ஆறு நாட்கள் உபவாசம் இருந்ததால் ஏற்படும் புண் குணமாகும். முடியாதவர்கள் கோதுமை உப்புமா அல்லது இட்லி காரமின்றி எடுத்துக் கொள்ளலாம்.
ஏழாம் நாள் முருகன் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெரும். சூரசம்ஹாரம் நடக்காத முருகன் கோவில்களில் கூட திருக்கல்யாணம் கட்டாயம் நடக்கும். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகன் அருள் பெறலாம். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் கட்டாயம் கலந்துகொண்டு
என மணமக்களை வாழ்த்தி மொய்வைத்து பின் திருக்கோயில் கல்யாண விருந்து உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். கோவில் அன்னதானத்தில் காத்திருந்து சாப்பிட முடியாதவர்கள் வீட்டி விருந்து தயாரித்து ஏழைகளுக்கு அளித்து பிறகு உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். முருகன் அருளால் அவனை நினைத்து துதித்து அருள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.