கந்த சஷ்டி என்றால் என்ன? கந்த சஷ்டி விரத பலன்கள் என்ன?
சஷ்டி என்பது முருகக் கடவுளை கொண்டாடும் மிகப்பெரிய விழாக்களில் மிக முக்கியமான ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறாம் நாள் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து வரும் ஆறாம் நாள் சஷ்டி திதியாகும். இதில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் கந்தக்கடவுள் சூரபத்மன் எனும் அசுரனை அழித்து தேவர்களை சிறை மீட்டதால் இது கந்த சஷ்டி என்றும் சூரசம்ஹாரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் குறிப்பாக திருச்செந்தூர் பழநி ஆகிய அறுபடை வீடுகளிலும் பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏழு நாட்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள். இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் விழா மற்றும் ஏழாம் நாள் முருகன் திருக்கல்யாணம் நிகழ்வுடன் விழா நிறைவு பெரும்.
சூரசம்ஹாரம் நிகழ்ந்த கதை | யாரிந்த சூரபத்மன்?
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களுள் மூத்த மகனான தட்சன் கதை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். தட்சன் சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றான். இமயமலைக்கு அரசனாக ஆட்சி செய்த போது அவன் மகளாக அவதரித்த பார்வதி தாட்சாயணி என்ற பெயரில் தவமிருந்து சிவபெருமானை மணமுடித்தார். சிவனுக்கு மாமனாராகியும் ஆணவத்தால் நிலைதவறி சிவரூபமான வீரபத்திரரால் தடசன் கொல்லப்பட்டான். தட்சன் மறுபிறவியில் சூரபத்மனாக பிறந்தான் என்றும் கூறப்படுகிறது.
தட்சனின் இளைய சகோதரனான காசிபன்
காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். காசிபனும் மாயையும் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மன், சிங்கமுகமுடைய சிங்கமுகன், யானை முகமுடைய தாரகன் எனும் மூன்று புத்திரர்களையும் ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண் குழந்தையும் பெற்றனர். வளர்ந்து காசிபனின் அறிவுரைப்படி வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று பலசாலிகளாயினர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நால்வரும் ஆணவம், கன்மம், மாயை எனப்படும் அதீத தீய சக்திகளாலும் அதர்மங்கள் புரிந்தனர்.
சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம்
இவர்களுள் காசிபனின் மூத்த மகனான சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டங்களை அரசாளவும் வரம் பெற்றான். அதோடு இந்திர-ஞாலம் எனும் மாயத்தேரையும் சாகாவரமும் வேண்டினான்.
பிறந்தோர் இறந்தாக வேண்டும் என்று சிவன் சூரபத்மன் கேட்ட கடைசி வரத்தை மறுத்தார் வேறு ஏதேனும் கேட்குமாறு கூறினார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, எனில் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என வரம் வேண்டி பெற்றான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனது இளவல்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போலவே பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களைச் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
முருகன் அவதாரம் | சிவனின் கோபாக்னி
சூரபத்மன் முதலான அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று அன்னை பார்வதியிடம் முறையிட்டனர். சிவனிடம் பெற்ற வரங்களை கொண்டு அதர்மங்கள் செய்பவர்களை சிவனால் தான் அழிக்க இயலும் என்று எண்ணி, பல யுகங்களாக தவத்தில் இருந்த சிவபெருமானின் தவத்தை கலைக்கும்படி மன்மதனுக்கு கட்டளையிட்டார் பார்வதி.
தவம் கலைந்த கோபத்தில் சிவன் தன் ஆறு முகங்களின் (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், அதோ முகம்) நெற்றிக்கண்களையும் திறக்க அவற்றிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின.
சரவணப்பொய்கை எனும் நதியில் சண்முக கடவுள்
சிவனின் கோபாக்னி வெப்பம் தாங்காமல் ஏழு உலகங்களும் தவிக்க, அன்னை பார்வதியின் அறிவுரைப்படி அவற்றை வாயு பகவான் கொண்டு சென்று சரவணப்பொய்கை எனும் நதியில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக வளர்ந்தன.அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. அந்த ஆறு குழந்தைகளும் வளர்ந்தபின் அன்னை பார்வதி கட்டி அணைக்க ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். ஆறுமுகங்கள் கொண்டதால் சண்முகம் (ஆறுமுகம்) என்று அழைத்தனர். மேலும் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக சேர்த்ததால் ‘ஸ்கந்தம்- சேர்த்தல்’ என்ற பொருளில் ஸ்கந்தன் என்றும் சரவணப்பொய்கையில் அவதரித்ததால் சரவணன் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்பட்டார்.
முருகனின் சகோதரர்கள் | கந்தக் கடவுளின் படைத்தளபதிகள்
சிவனின் கோபாக்னியை கண்டு அன்னை பார்வதி மருண்டு ஓடியபோது அவரின் காற்சிலம்பில் இருந்து வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம் ஆகிய நவ மணிகள் சிதறி விழுந்தன. அவற்றின் மேல் அன்னையின் நிழல் விழுந்து நவ சக்திகள் அவதரித்தனர். அவர்கள் மேல் ஈசனின் கடைக்கண் பார்வை பட மாணிக்க வல்லியிடம் வீரவாகு முதலாக, முத்து வல்லியிடம் வீரகேசரி, புஷ்பராக வல்லியிடம் வீரமகேந்திரர், கோமேதக வல்லியிடம் வீர மகேசுவரர் வைடூரிய வல்லியிடம் வீரபுரந்தர், வைர வல்லியிடம் வீரராக்கதர், மரகத வல்லியிடம் வீரமார்த்தாண்டர், பவள வல்லியிடம் வீராந்தகர் இந்திரநீல வல்லியிடம் வீரதீரர் என ஒன்பது சிவாம்ச வீரர்கள் அவதரித்து ஆறுமுகப்பெருமானை வணங்கி நின்றனர். பின் கந்நக் கடவுளின் படைத்தளபதிகளாயினர்.
அஞ்சேல் | அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் !
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் ‘அஞ்சேல்! ‘ என வேல் தோன்றும் – நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ‘முருகா! ‘ என்று ஓதுவார் முன்.”
என்பது நக்கீரர் வாக்கு.
அதன்படி சூரபத்மனிடம் சிறைபட்டு துயர்பட்டுக் கலங்கி நின்ற தேவர்களின்முன் திருக்கரத்தில் வேலேந்தி நின்று இந்திராதி தேவர்களே, அஞ்சேல்! என்றுரைத்தார். உங்கள் துயர் தீர்ப்பதே வேலின் வேலை என்றார் தேவசேனாபதியான குமரக்கடவுள்.
வீரவாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி..
தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்துகொண்டு அவர்களின் அதர்மங்களை அழிக்க தொடுப்பது என முடிவு செய்ததும் முருகன் தனது படைத்தலைவரான வீரவாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.
அன்னையிடம் சக்திவேல் வாங்கி தன் தம்பியரைத் தளபதிகளாக கொண்டு முருகப்பெருமான் பெரும் படையுடன் சூரபத்மன் மேல் போர் தொடுத்தார்.
சூரபத்மனின் பரிகாசம்
சிவபாலன் போருக்கு படையுடன் வந்திருக்கும் செய்சியை கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற மாய நகரை எழுப்பி வாழ்ந்து வந்த சூரபத்மனிடம் நாரதர் தெரிவித்தார். சூரன் அதக்கேட்டு ஏளனம் செய்தான். ஒரு சிறுவனா என்னைக் கொல்ல வந்திருப்பது என நகைத்தான். பாலகன் பாவம் பச்சை பிள்ளைகளுடன் பூதகணங்களை படைதிரட்டி அண்டசராசரங்களை ஆளும் அசுரனை வீழ்த்த போர்க்களம் புகுந்திருக்கிறான். அவனை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. அந்த பாலகனை இங்கே நிற்கவேண்டாம், ஓடி விடும்படி கூறு என்று பரிகாசம் செய்தான். இந்த தகவலை நாரதர் சிவபாலனிடம் சேர்த்தார். அவனது நகரில் பெருமானின் திருவடி பட வேண்டாம் என வேண்டி கடலுக்கு மறுபுறம் இருந்து போர்புரிய வேண்டும் என நாரதர் வேண்டிக்கொண்டார். அவ்வாறு இறைவன் நின்று போர் புரிந்த இடமே திருச்செந்தூராகும்.
ஆறுநாள் கடும் போர்
அய்யனின் எச்சரிக்கையை நிராகரித்த சூரபத்மன் மீது முருகன் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து போர்புரியத்துவங்கினார். முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் சூரபத்மன் போருக்கு வந்தான். தன் உருவத்தைப் பெரிதாக்கி பாலமுருகனை பயமுறுத்தினான். அவன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் கந்தன். கடல் பயந்து பின்வாங்கியது. சிவகுமாரனை கொல்லும் எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார்.
முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம்
சிறுவன் என நகைத்த சூரனுக்கு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. அவன் பெருமானின் பாதத்தில் இருக்கும் வரம் வேண்டினான். அவன் வேண்டிய வரம் அளித்து பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு மீண்டும் ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய சக்தி வேலை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம்- சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேல் வாங்கினார். சஷ்டியின் ஐந்தாம் நாள் வேல் வாங்கும் உற்சவம் நடைபெரும். அப்போது முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை காண கண்கோடி வேண்டும்) வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து அதன் ஒருபாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறி முருகன் வாகனமாகவும், கொடியாகவும் ஆனது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு என இன்றும் உள்ளது. இங்கு மாமரம் தழைப்பதேயில்லை. பகைவனுக்கும் அருளும் அருட்கடலான இறைவன் வைதாரையும் வாழவைப்பவன் சிறப்பிக்கப்படுகிறார் செந்தூர் வேலன்.
திருச்செந்தூர் – முருகன் போர் நிகழ்ந்த இடத்திலேயே ஆலயம்
சூரசம்ஹாரம் முடிந்தபின் சிவபூஜை செய்ய விரும்பிய முருகன் போர் நிகழ்ந்த இடத்திலேயே ஆலயம் ஒன்றை எழுப்பினார். அதுவே திருச்செந்தூர் கோவிலாகும். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தைக் காணலாம். போரில் வென்று தேவர்கள் சிறை மீட்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்து வைத்தான். ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெரும். கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏழாம் நாள் முருகன் தேவயானி திருக்கல்யாணம் முடிந்து விருந்து உண்டு விரதத்தை நிறைவு செய்வர். முருகனின் ஆறுபடை வீடுகளில் கோபம் தனிந்து அமர்ந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை. பழனியில் தைப்பூசம் மிகசிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும் கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி விரத பலன்கள்
பொதுவாக சஷ்டியில் இருக்க அகப் பையில் வரும் என்ற பழமொழி உண்டு. அதாவது குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் கண்டிப்பாக முருகனைப்போன்ற ஆற்றலுடன் குழந்தை பாக்கியம் பெருவர் என்பது நம்பிக்கை. இருப்பினும் கலியுக தெய்வம் கந்தனை நினைத்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் எண்ணியதெல்லாம் கிட்டும், எமபயம் அகன்றோடும், மூவுலகும் பூஜிக்கும், முருகன் அருள் முன்னிற்கும் எனவே இத்தனை சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து கார்த்திகேயன் கருணை மழையில் நனைவோம்.