Uvari SuyambulingaSwamy temple
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து, உவரி என்னும் ஊரில் இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக அமைந்துள்ள சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக காணலாம்.
சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்:
சுமார் 1000 வருடங்களுக்கு பழமையான இதிதிருத்தலம்
முன்பு வீரைவளநாடு என்று வழங்கப்பட்டிருக்கிறது. மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்த இந்த இடத்தில் கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது.
இத்திருத்தல இறைவனான சிவபெருமான் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இத்தல மூலவர் சுயம்பு லிங்கேஸ்வரர் என்றும் இத்தலம் சுயம்பு லிங்கேஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்படுகிறது.
சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தல வரலாறு
தவறாமல் இடறி விழும் வியாபாரி
உவரிக்கு அருகில் உள்ள கூட்டப்பனை என்னும் சிற்றூரில் இருந்து ஒருவர் பால் விற்க தினமும் கரைசுத்து உவரி வழியாக செல்வார். அப்படி செல்லும்போது தற்பொழுது மூலவர் இருக்கும் இடத்தருகே வருகையில் எப்போதும் கால் இடறி விழுந்து கொண்டே இருந்தார். விற்பனைக்காக அவர் கொண்டுவந்த பால் எல்லாம் தரையில் கொட்டி வீணாகிக் கொண்டே இருந்தது.
லிங்கத்திலிருந்து பீறிட்ட இரத்தம்
கால் இடறக் காரணமாக இருந்த கடம்ப மரத்து வேரை பால் வியாபாரி வெட்ட முயற்சி செய்த போது வேரிலிருந்து ரத்தம் பீறிட்டது. இறைவன் அசரீராக தான் இந்த இடத்தில் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் படியும் அருளினர்.
பனை ஓலைக் கோயில்
முதன் முதலாக சுயம்பு லிங்கேஸ்வரருக்கு பனை ஓலையில் கோயில் கட்டினர். நாளடைவில் பெரிய அளவில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோயில் கட்டினர்.
ஆயர் குலத்தோர் வழிபாடு
குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர் முற்காலத்தில் இங்கு நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப்பாறுவார்கள். ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமையாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், ‘எங்கள் சுயம்புலிங்க சுவாமி, உன்னைக் கைவிட மாட்டார்’ எனக்கூறி, உவரிக்கு வந்து தரிசனம் செய்து அவருக்காக வண்டிக்கொண்டனர். விபூதி பிரசாதத்துடன் மீண்டும் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர். சுயம்புலிங்க ஸ்வாமியின் அருளை நினைத்து, நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங்கினாராம். அன்று முதல், ‘பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாம்!
சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் சிறப்புகள்
• இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.
• கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம் இதுவாகும்.
• மார்கழி மாதம் முழுவதும் காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுயம்புலிங்க திருமேனியின் மீது விழவது இக்கோவிலின் சிறப்பாகும். இக்காட்சியை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
• இக்கோவிலுக்கு அருகே உள்ள கடற்கரையில் நான்கு நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன. இறைவனின் அபிஷேகத்திற்கு இந்நீரையே பயன்படுத்துகின்றனர்.
• இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக கிராம தேவதை ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக்கிறாள். இவளுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.
சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தல அமைப்பு:
சுயம்பு லிங்கேஸ்வரர் திருக்கோவில் நுழைவாயில்
திருக்கோவிலில் அழகிய சுதைச் சிற்பங்களுடன் கூடிய பிரம்மாண்ட நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயில் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நுழைவாயின் வலது புறம் வாகன நிறுத்துமிடம் செல்ல தனப்பாதை உள்ளது.
இராஜகோபுரம்
இந்த ஆலயத்தில் மூலவர் சன்னதிக்கு எதிரே 108 அடி உயரம் கொண்ட கருங்கல் ராஜகோபுரம் அமைக்கும் பணி 2016 ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது.
கன்னி விநாயகர் சன்னிதி
நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் வலது புறத்தில் கன்னிவிநாயகர் தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அவரை வணங்கி விநாயகர்
சுயம்பு லிங்கேஸ்வரர் கோவில் பிரகாரம்
சன்னதிக்கு எதிரில் உள்ள பிரகார சுற்றுப் பாதையில் இடதுபுறமாக ஒரு நீண்ட மண்டபம் அமைந்துள்ளது. வலது புறமாக சுவாமி அபிஷேகத்திற்கான நன்னீர் கிணறும் மூலவர் சன்னதிக்கு எதிரே தெப்பக்குளமும் அமைந்துள்ளது.
மூலவர் சன்னதிக்குள் நுழைகையில் வாசலில் விளக்கு ஸ்தபம் ஓன்று உள்ளது.
சிவன் சன்னிதிக்கு இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சன்னதி உள்ளது. அதற்கடுத்தபடியாக பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பேச்சியம்மன் சன்னதியில் பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களைக் காணமுடியும்.
தல விருட்சம்- கடம்ப மரம் தல விருட்சமாக உள்ளது.
சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.
சன்னிதி கோஷ்டம்
கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை – புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள்.
சுயம்பு லிங்கேஸ்வரர் கோவில் திருவிழா
இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது 3 நாட்கள் சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.
மேலும் மாதப்பிறப்பு மாதாந்திர பௌர்ணமி, அம்மாவாசை, சதுர்த்தி, சிவராத்திரி, பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களிலும் பிரதி திங்கட்கிழமைகளிலும் இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர்.
சுயம்பு லிங்கேஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடுகள்
பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேடமான வழிபாடாக உள்ளது.
இங்கே உவரி கடலில் நீராடி கடற்கரை மணலெடுத்து வந்து வேண்டிக்கொண்டால், நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்கிறார் உவரி சுயம்புலிங்கேஸ்வரர்.
சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள தீராத நோய்களெல்லாம் தீருகின்றன.
சுயம்பு லிங்கேஸ்வரர் பலன்கள்
இக்கோவிலுக்கு வந்து கடற்கரையில் நீராடி சுயம்புலிங்க ஸ்வாமியை மனமுருக வழிபடுவதாலும், இந்த ஊற்று நீரை பருகுவதாலும் தீராத வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் மற்றும் மனநிலை சம்பந்தமான நோய்களை கொண்டவர்களின் நோய் பாதிப்புகள் நீங்குவதாகவும் கிரக தோஷங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கை மேபடுவதாகவும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும் அருள் பெற்ற பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
41 நாட்கள் கடலில் நீராடி சுயம்புலிங்கநாதரை தரிசித்து வந்தால் நொண்டி கூண் குருடு குஷ்டம் போன்ற தீராத வியாதிகளும் பில்லி சூனியம் பேய் பிசாசு போன்ற தீய சக்திகளால் வரும் தொல்லைகளும் தீருகின்றன.
மேலும் மன அமைதி இழந்து தவிர்த்து வருபவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் மன அமைதி அடைகின்றனர்.
ஸ்ரீபிரம்மசக்தி அம்மனுக்கு மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால் வீடு – வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.
சுயம்பு லிங்கேஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம்,
பகல் 11.30 மணிக்கு உச்சிக் காலம்,
இரவு 7 மணிக்கு சாயரட்சை,
8.30 மணிக்கு அர்த்தஜாம
என நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
சுயம்பு லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்
உவரி சுயம்பு லிங்கேஸ்வரர் திருக்கோவில் தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், கன்னியாகுரி
அருகிலுள்ள விமான நிலையம் : தூத்துக்கூடி, மதுரை.
மாவட்டத்தின் முக்கிய இடங்களிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுயம்பு லிங்கேஸ்வரர்- திருக்கோவில் முகவரி
அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில்,
கரைசுத்து உவரி – 628 658,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி எண்:
9962569495
9384728151
9443722885
திருச்சிற்றம்பலம்